2024 மே 02, வியாழக்கிழமை

இலங்கை-இங்கிலாந்து ஒ. நா.ச.போ. தொடர்

Shanmugan Murugavel   / 2016 ஜூன் 20 , பி.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ச.விமல்

இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடர், டெஸ்ட் போட்டிகளிலும் பார்க்க அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கும் என நம்பலாம்.

டெஸ்ட் போட்டிகளிலும் பார்க்க ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் இலங்கை அணி பலமானது. இங்கிலாந்து அணிக்கு மிகப்பெரிய சவாலை வழங்கும் என எதிர்பார்க்க முடியும். ஆனால் இங்கேயும் துடுப்பாட்டம் இலங்கை அணி சார்பாக  கேள்விக்குறியாக உள்ளது. குஷால் பெரேரா மீண்டும் அணிக்குள் வந்துள்ளமை ஆரம்ப துடுப்பாட்டத்தில் பலம்.

டில்ஷான் இந்தத் தொடரில் விளையாடவில்லை. இது இலங்கை அணிக்கு பின்னடைவை உருவாக்கலாம். தனுஷ்க குணதிலக அடுத்த ஆரம்ப துடுப்பாட்ட வீரர். குஷால், குணதிலக ஜோடி எதிர்காலத்தில் சாதிக்கும் ஜோடியாக வலம் வரும் என நம்பலாம். அதிரடி மற்றும் நிதானம் கலந்த கலவை. குணதிலகவின் மித வேகப்பந்து வீச்சு மேலதிக பலம்.

அயர்லாந்து தொடரில் லஹிரு திரிமான்ன விளையாடவில்லை. குஷால் மென்டிஸ் மீது மத்தியூஸ் நம்பிக்கை வைத்துள்ளார். அயர்லாந்துடனான முதற் போட்டியில் அறிமுக அரைச்சதமடித்து  நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார். இதே போன்று இங்கிலாந்து அணியுடன் தொடர முடியுமா? பார்க்கலாம். லஹிரு திரிமான்ன வெளியே இருக்கும் போது குஷால் மென்டிஸ், உபுல் தரங்க ஆகியோர் அணிக்குள் இருப்பது வேடிக்கையாக உள்ளது. அதிலும் தரங்க பின் மத்திய வரிசை வீரர். சீக்குகே பிரசன்ன சரியாக பந்து வீசாவிட்டாலும் அதிரடி மூலம் மீண்டும் அணிக்குள் இடம் பிடித்துள்ளார்.  தினேஷ் சந்திமால், அஞ்சலோ மத்தியூஸ் ஆகியோர் நம்பிக்கையானவர்கள்.

அடுத்த இடத்தில் இருந்த நம்பிக்கையான சகலதுறை வீரரான மிலிந்த சிரிவர்தன அணியால் நீக்கப்பட்டுள்ளார்.  நம்பிக்கையூட்டும் விதமாக அணியில் செயற்பட்டமை இவர் செய்த தவறா? முக்கிய துடுப்பாட்ட வீரர்கள் ஆட்டமிழந்த வேளைகளில் பின் வரிசை வீரர்களுடன் இணைந்து அணிக்கான ஓட்ட்ங்களை பெற்றுக் கொடுத்துள்ளார். பந்து வீச்சில் வாய்ப்புக்கு கிடைத்த வேளைகளில் விக்கெட்டுகளை கைப்பற்றியுளார். 13 போட்டிகளின் 10 இனிங்ஸில் 262 ஓட்டங்களை 29.11 என்ற சராசரியிலும், 40.4 ஓவர்களில் 8 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுளார். ஆறாம், ஏழாமிடங்களில் களமிறங்கும் வீரர் ஒருவருக்கு மோசமான பெறுதியா? முன் வரிசையில் விளையாடும் வீரர்களுக்கே இவ்வாறுதான் பெறுதிகள் இங்கே காணப்படுகின்றன. இவர் அணியால் நீக்கப்பட்டமைக்கான காரணம் சனத் ஜெயசூர்யாவுக்கே வெளிச்சம்.

தசுன் சானக அறிமுக ஒருநாள் சர்வதேசப் போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி நல்ல ஆரம்பத்தை பெற்றுள்ள போதும் இங்கிலாந்து அணிக்கு எதிராக இவரின் வேகம் போதாது என அணியால் நீக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதுக்கில்லை. சுழற் பந்து வீச்சாளர்கள் ஏற்கனவே இலங்கை அணிக்காக விளையாடியுள்ள போதும் இந்த அணியில் உள்ளவர்கள் மீண்டும் வாய்ப்பை பெற்றவர்கள். எனவே புதியவர்கள்தான். உள்ளூர் போட்டிகளில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக விளையாடும் தனஞ்ய டி சில்வா ஒன்பதாவது இடத்தில் களமிறங்கினார். ஒரு ஓவர் மாத்திரம் பந்து வீசினார். அடுத்த போட்டியில் அணியில் இல்லை. அடடா இதுவல்லோ அறிமுகம்.

பர்வீஸ் மஹ்ரூப் அடுத்த போட்டியில் களமிறங்கினார். துடுப்பாட்டம் அதிரடியாக அமைந்தது. பந்து வீச்சு எதிர்பார்த்த அளவுக்கு அமையவில்லை. ஷமின்ட ஏரங்க தடை செய்யப்பட்டுள்ள நிலையில் மஹ்ரூப் விளையாடும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. நுவான் பிரதீப், சுரங்க லக்மால் ஆகியோரே வேகப் பந்துவீச்சில்    நிச்சயம் விளையாடவுள்ள வீரர்கள். சீக்குகே பிரசன்ன முழு நேர சுழற் பந்து வீச்சாளராக களமிறங்குவார் என நம்பலாம். சகலதுறை வீரர்கள் அணியில் அதிகம் உள்ளமையினால் 50 ஓவர்கள் பந்து வீசுவது என்பது சமாளிக்க கூடியளவில் இருக்கும்.

அணியாக பார்த்தால் புதிய அணி. பலமான இங்கிலாந்து அணியை இந்த அணியால் எதிர்கொள்ள முடியுமா?

இங்கிலாந்து அணி இந்த வருடத்தில் விளையாடும் இரண்டாவது தொடர் இது. தென்னாபிரிக்கா தொடரில் 2-3 என்ற தொடரில் தோல்வியடைந்துள்ளது. அதற்கு முதலில் பாகிஸ்தான் அணியை 4-1 என வென்றுளள்து. பலமான சமபலம் கொண்ட புதிய அணி. ஒய்ன் மோர்கனின் தலைமையில் சிறப்பாக வெற்றிகளைப் பெற்று வருகின்றது.

ஆரம்ப ஜோடி மிகப் பலமானது என கூற முடியாது என்றாலும் அலெக்ஸ் ஹேல்ஸ் அண்மைக்காலமாக ஓட்டங்களை அபாரமாக பெற்று வருகின்றார். ஜோ ரூட் மூன்றாமிலக்க வீரர். சமகால சிறந்த துடுப்பாட்ட வீரர்களுக்கன போட்டியில் உள்ளவர்களில் இவரும் ஒருவர். தலைவர் மோர்கன். அண்மைக்காலமாக  நல்ல போர்மில் இல்லை. ஆனால் இவர் மத்திய வரிசையில் சிறந்த வீரர். அடுத்தவர் ஜோஸ் பட்லர். ஜோ ரூட், ஜோஸ் பட்லர் ஜோடி இணைந்தால் இங்கிலாந்து அணிக்கு ஓட்ட மழை பொழியும். பென் ஸ்டோக்ஸ் காயம் காரணமாக அணியால் நீக்கப்பட்டுள்ளமையினால் ஜொனி பெயர்ஸ்டோ அணியில் இடம் பிடிப்பார் என நம்பலாம். டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணிக்கு எதிராக அடித்தாடிய விதம் போர்ம் என்பன இவருக்கான வாய்ப்புகளை வழங்கும்.

மொயின் அலி அடுத்த இடத்தை பிடிப்பார். இவரின் அதிரடி   துடுப்பாட்டம், சுழற் பந்து வீச்சு என்பன நிச்சயம் கை கொடுக்கும். கிறிஸ் வோக்ஸ் சகலதுறை வீரர். டேவிட் வில்லியும் சகலதுறை வீரர். இவர்களுக்கான போட்டி ஒன்று நிச்சயம் இருக்கும். ஸ்டீபன் பின், கிறிஸ் ஜோர்டான் ஆகியோர் முழு நேர வேக்கப்பந்து வீச்சாளராக களமிறங்குவார். ஜோர்டானின் துடுப்பாட்டம் மேலதிக பலம்.

இங்கிலாந்து அணி மிக நீண்ட துடுப்பாட்ட வரிசையை கொண்டுள்ளது. இதை தகர்க்கும் பலமான பந்து வீச்சு இலங்கை அணியிடம் உண்டா? சிறப்பான இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை எதிர்கொண்டு இங்கிலாந்து அணியை வெற்றி பெறும் அளவுக்கு இலங்கை அணியின் துடுப்பாட்டம் நிலைத்து நின்று அதிரடியாக துடுப்பாட்ட கைவரிசையை காட்டுமா? இந்த ஒப்பீடுகளில் இலங்கை அணி பலவீனமாகவே உள்ளது. புதிய வீரர்கள். யார் விளையாடப் போகின்றார்கள் என்பதை இங்கிலாந்து அணி கணிக்க இயலாத நிலை உண்டு. இந்த பலவீனத்தை பலமாக மாற்றினால் தொடரைக் கைப்பற்றாவிடடாலும் போட்டிகளில் வெற்றி பெற முடியும்.

ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் இலங்கை அணியே இங்கிலாந்து அணியிலும் பார்க்க பலமானது. 64 போட்டிகளில் இலங்கை அணி 34 வெற்றிகளையும்  இங்கிலாந்து அணி 30 வெற்றிகளையும் பெற்றுள்ளன.

 

இங்கிலாந்தில் சம பலம்.  26 போட்டிகளில் இரு அணிகளும் தலா 13 வெற்றிகளை பெற்றுள்ளன. 2014ஆம் ஆண்டு இலங்கை அணி இங்கிலாந்தில் வைத்து 3-2 என்ற வெற்றியைப் பெற்றுக் கொண்டது. பின்னர் இலங்கையில் வைத்து 5-2 என்ற தொடர் வெற்றியைப் பெற்றது. வெற்றிகள் தொடருமா? இங்கிலாந்து அணி பழி தீர்க்குமா?

குழு விபரம்

இலங்கை

அஞ்சலோ மத்தியூஸ் (தலைவர் ), லஹிரு திரிமான்ன, தினேஷ் சந்திமால், குஷால் பெரேரா, தனுஷ்க குணதிலக, உபுல் தரங்க, தனஞ்சய டி சில்வா, நுவான் பிரதீப், சுரங்க லக்மால், குஷால் மென்டிஸ், தசுன் சானக, பர்வீஸ் மஹ்ரூப், சுராஜ் ரந்தீவ், சீக்குகே பிரசன்ன

 

இங்கிலாந்து

ஒய்ன் மோர்கன், (தலைவர்), மொயின் அலி, ஜொனி பெயர்ஸ்டோ, ஜோஸ் பட்லர், ஸ்டீவன் பின், கிறிஸ் ஜோர்டான், அலெக்ஸ் ஹேல்ஸ், லியாம் பிளங்கட், அடில் ரஷீத், ஜோ ரூட், ஜேஸன் ரோய், ஜேம்ஸ் வின்சென்ட், டேவிட் வில்லி, கிறிஸ் வோக்ஸ்

முதற் போட்டி

ஜுன் 21, செவாய்க்கிழமை  மாலை 6.30 - ரென்ட் பிரிட்ஜ், நொட்டிங்ஹாம்

இரண்டாவது போட்டி

ஜுன் 24,  வெள்ளிக்கிழமை  மாலை 6.30 - எட்ஜ்பஸ்டன், பேர்மிங்ஹாம்

மூன்றாவது போட்டி

 ஜுன் 26,  ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 - கவுண்டி கிரவுண்ட், பிரிஸ்டல்

நான்காவது போட்டி

ஜுன் 29, புதன் கிழமை மாலை 5.30 - கென்னிங்டன் ஓவல், லண்டன்

ஐந்தாவது போட்டி

ஜூலை 02, சனிக்கிழமை   மாலை 3.00  - சோபியா கார்டின்ஸ், கார்டிப்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .