Thipaan / 2016 ஜூன் 23 , மு.ப. 03:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகலிங்கம் கோபிகிருஷ்ணா
'முட்டாள்தனமென்பது, அரசியலில் குறைபாடு அன்று' என, மாவீரன் நெப்போலியன் கூறிய கூற்று ஒன்று காணப்படுகிறது. உலகில் ஆட்சி புரிந்தோரில் குறிப்பிடத்தக்க சதவீதத்தினரை எடுத்துப் பார்த்தால், நெப்போலியனின் கூற்றுச் சரியெனப்படும். ஆனால், அண்மைக்காலத்தில் எழுந்திருக்கின்ற புதியவகை நிலைமை என்னவெனில், 'கடும்போக்குவாதமென்பது, அரசியலில் மிகப்பெரிய அனுகூலமாகும்' என்பது தான். உலகத்தின் பல பகுதிகளிலும், கடும்போக்குவாதக் கொள்கைகளுக்கு ஆதரவும் பின்தொடர்வோரும் அதிகரித்த வண்ணம் இருக்கும் நிலைமையைக் காணக்கூடியதாக இருக்கிறது.
இந்தக் கடும்போக்குவாதங்கள், முக்கியமான மாற்றங்களைக் கொண்டுவருவதற்கான மிகப்பெரிய முயற்சிகளோ அல்லது அதற்கான உறுதியான நிலைப்பாடுகளோ கிடையாது. மாறாக, வன்முறைகளையும் இனவாதத்தையும் பிரிவினைவாதத்தையும் ஊக்குவிக்கின்ற கடும்போக்குவாதங்களே இவை. இதனால் தான் இவை, அச்சத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்தியிருக்கின்றன.
உலகப் பொலிஸ்காரனாகவும் ஜனநாயகத்தை உலகெங்கும் போதிக்கின்ற மாபெரும் ஆசானாகவும் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் அமெரிக்காவின் அரசியற்களம், வருடக்கணக்காகத் துப்புரவு செய்யப்படாத கழிவுநீர்க் கான் போல துர்நாற்றமடிக்கிறது.
மிதவாதப் போக்குடையவர்களாகக் காட்டிக்கொள்ளும் அமெரிக்க அரசியல் தலைவர்கள், ஏனைய நாடுகளின் விவகாரங்களுக்குள் தலையை நீட்டி, அங்கு குழப்பத்தை ஏற்படுத்தி, தங்களுக்கு விசுவாசமான அரசியல் தலைமைகளை அங்கு ஆட்சிக்குக் கொண்டுவருவது என்பதாகத் தான், அமெரிக்காவினுடைய 'ஜனநாயகம்' என்பதாகக் காணப்பட்டது. ஆனால், இந்த ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்சிநிலைப் போட்டியோ, தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'றியலிட்டி ஷோ' போன்று ஆகிவிட்டது. அந்த நிலைமை முக்கியமாக ஏற்படுத்தியவர், டொனால்ட் ட்ரம்ப். தொழிலதிபர் என்பது அவரது விருப்பத்துக்குரிய அடையாளம் என்ற போதிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கியவர் என்பது, அவரை அதிகமாக அடையாளங்காட்டியது.
பெண்கள், முஸ்லிம்கள், மெக்ஸிக்கோவைச் சேர்ந்தோர், அங்கவீனமடைந்தோர், ஊடகவியலாளர்கள், கறுப்பின அமெரிக்கர்கள் என, அவரது பிரசார நடவடிக்கைகளின் போது அவமானப்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கை, மிக மிக அதிகம். அந்தத் தகவல்கள், பரவலாகவே பகிரப்பட்டுள்ளன.
இவ்வளவு மோசமான இயல்புகளுடைய ஒருவர், அடிமைத்தனத்தை ஒழித்த ஏபிரஹாம் லிங்கனின் அதே குடியரசுக் கட்சியில் (இருப்பினும், 1950, 1960களில், குடியரசுக் கட்சியும் ஜனநாயகக் கட்சியும் தங்களது கொள்கைகளை மாற்றிக்கொண்டு, லிபரல் கொள்கைகளை குடியரசுக் கட்சி கைவிட்டது என்பது குறிப்பிடப்பட வேண்டியது), டொனால்ட் ட்ரம்ப் போன்றதொருவர் போட்டியிடுகிறார் என்பது ஒரு பக்கம். அவ்வாறானதொருவரைக் கொல்வதற்கு, ஒருவர் முயன்றிருக்கிறார் என்பது மறுபக்கம்.
அரசியல்வாதிகள் மீதான அச்சுறுத்தலென்பது சாதாரணமென்ற போதிலும், துப்பாக்கியையெடுத்து ஒருவரைக் கொல்ல முயல்தலென்பது, சாதாரணம் கிடையாது. அதுவும், இச்சம்பவம் இடம்பெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே, பிரித்தானிய நாடாளுமன்றத்தின் உறுப்பினரான ஜோ கொக்ஸ் என்ற பெண் கொல்லப்பட்டிருந்தார்.
பிரித்தானியாவைப் பிளவுபடுத்தியுள்ள Brexit என்று அழைக்கப்படுகின்ற, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேற வேண்டுமா, இல்லையா என்ற கருத்துக்கணிப்பின் வாக்கெடுப்பு, இன்று இடம்பெறவுள்ளது. இந்த வாக்கெடுப்பு, அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் போலவே, இனவாதத்தையும் பிரிவினைவாதத்தையும் அதிகமாகக் கொண்டிருந்தது. அதில், ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா தொடர்ந்தும் இருக்க வேண்டுமென்ற கருத்தைக் கொண்டிருந்த ஜோ கொக்ஸ், அதிலிருந்து வெளியேற வேண்டுமென்ற கருத்தைக் கொண்டிருக்கும் வலதுசாரிக் கொள்கைகளையுடைய ஒருவரால் கொல்லப்பட்டார். அவரது கொலைக்கு, இந்த சர்வஜன வாக்கெடுப்பு மாத்திரமே காரணமா என்பது இன்னமும் உறுதிப்படுத்தப்படாத போதிலும், அவரது அரசியல் கொள்கைகளுக்காகவே கொஸ் கொல்லப்பட்டார் என்பது வெளிப்படையானது. குறிப்பாக, அவரைக் கொன்ற நபர், தனது பெயரை 'துரோகிகளுக்கு மரணம், பிரித்தானியாவுக்குச் சுதந்திரம்' என நீதிமன்றத்தில் தெரிவித்தமை, அவரது நோக்கத்தைத் தெளிவுபடுத்துகிறது.
இந்த இரண்டு சம்பவங்களுமே, தங்களுக்குப் புறம்பான அரசியல் கொள்கைகளைக் கொண்ட அரசியல்வாதிகளின் உயிரை எடுக்க வேண்டுமென முடிவெடுத்த இரண்டு சம்பவங்கள். இவற்றின் மூலம், அரசியல்வாதிகளின் உயிர் ஆபத்தில் இருப்பது போன்ற தோற்றம் ஏற்பட்டாலும், இவ்வாறான சூழ்நிலையை ஏற்படுத்தியமையின் முக்கிய பங்கு, அரசியல்வாதிகளுக்கு உண்டு. ஒரு கட்சியின் அல்லது கொள்கையின் ஆதரவாளர்கள், திடீரென ஒரே இரவில், இனவாதிகளாகவோ அல்லது பிரிவினைவாதிகளாவோ மாறுவதில்லை. மாறாக, தங்களது அரசியல் நோக்கங்களுக்காக அவர்களை அவ்வாறு வழிநடத்தும் அரசியல்வாதிகளின் கருத்துகளில் மாற்றமடைந்தே, இவ்வாறான நிலைமை ஏற்படுகிறது. தனது பிரசாரக் கூட்டத்தில் எதிர்ப்புக் குரல் எழுப்புவோரைப் பார்த்து, 'அவரது முகத்தில் நான்
குத்த விரும்புகிறேன்', 'அவர்கள்,தூக்குப்படுக்கையில் (stretcher) கொண்டு செல்லப்படுவர்' என்று சொன்ன போதெல்லாம் தூண்டப்பட்ட'மாற்றுக் கொள்கைகளுக்கு வன்முறையும்/வன்முறைதான் தீர்வு' என்ற உணர்வு தான், அவரையே கொல்வதற்கான முயற்சிவரை கொண்டு சென்றது.
ஆனால் மறுபுறத்தில், வன்முறைகளையும் இனவாதக் கொள்கைகளையும் ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கு, மக்கள் மாறியமை தான், ஏற்றுக் கொள்ளப்பட முடியாதது. தங்களது பிழைப்புக்காக அரசியல்வாதிகள் சொல்வதையெல்லாம் சொல்லிவிட்டுப் போனாலும், அவர்களைத் துரத்தியடிக்கும் சக்தியான வாக்குரிமை, அம்மக்களிடமே உள்ளது. ஆனால், டொனால்ட் ட்ரம்ப்பின் எழுச்சி, பிலிப்பைன்ஸில் றொட்ரிகோ டுட்டேர்ட்டேயின் வெற்றி ஆகியன, இவ்வகையான அரசியற்களத்தை ஏற்றுக்கொள்ள, மக்களும் பழகிவிட்டார்கள் என்பதைத் தான் காட்டுகிறது.
இவ்வாறான சூழல், அச்சத்தைத் தருகிறது. அரசியலென்பது குப்பைகளின் கூடாரமாக இருப்பது ஒரு விடயம். வன்முறையையும் இனவாதத்தையும் பிரிவினையையும் விதைக்கும் நிலமாக மாறுவது, இன்னொரு விடயம். அரசியலால் விதைக்கப்படும் வன்முறைகள், மிகவும் அதிகமாகப் பரவுவதற்கு வாய்ப்புகளுண்டு. அதனால் தான், உலகெங்கும் கடும்போக்கு அரசியல்வாதிகளின் எழுச்சி அல்லது முன்னேற்றம், கவனமாக நோக்கப்பட வேண்டிய ஒன்றாக இருக்கிறது. ஜேர்மனி, ஒஸ்திரியா போன்ற நாடுகளில், வலதுசாரிகளின் முன்னேற்றமென்பது, உலகெங்கிலும் நிலவும் அவ்வாறான அரசியற்களத்தின் பிரதிபலிப்பே ஆகும்.
இந்தச் சூழ்நிலையில் தான், மக்களின் பணத்தை தான் களவெடுத்தமை நிரூபிக்கப்பட்டால், தனது கழுத்தை அறுத்துக் கொள்ளவுள்ளதாக, எமது நாட்டின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ள கருத்து அமைகிறது. தான் தவறுசெய்தமை நிரூபிக்கப்பட்டால், எவ்வளவு ஆண்டுகளுக்கும் சிறைக்குச் செல்வதாகவோ அல்லது முழுக்குடும்பத்துடன் சிறைக்குச் செல்வதாகவோ அவரால் வாக்குறுதியளித்திருக்க முடியும். ஆனால் அவர் பின்பற்றிய முறைமை, வன்முறை தான்.
தேர்தலில் தோற்கடிப்பட்டாலும், நாட்டின் ஒரு பகுதி மக்களால் இன்னமும் தலைவராகக் கொண்டாடப்படும் ஒருவர், முன்னாள் ஜனாதிபதி என்ற ரீதியில் நாட்டின் அரசியற்களத்தில் இன்னமும் முக்கியமான ஒருவராக இருக்கும் ஒருவர், வன்முறையைக் கையிலெடுப்பதாகத் தெரிவிப்பது, அவரைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றும் பலருக்கும், வன்முறையே தீர்வென்ற எண்ணத்தை வழங்க முடியும்.
அரசியல்வாதிகள் வழங்கும் வாக்குறுதிகள், கொழும்பின் காலநிலை போன்றன: நிலையற்றவை. ஆகவே, மஹிந்த ராஜபக்ஷ களவெடுத்தார் என்பது நிரூபிக்கப்படின், அவர் தனது கழுத்தை அறுக்கப்போவது கிடையாது. கடந்த காலங்களில், இலங்கை அரசியல்வாதிகளால் விடுக்கப்பட்ட இவ்வாறான வீர வாக்குறுதிகள், காற்றில் பறக்கவிடப்பட்ட வரலாறு அனைவரும் அறிந்தமையே. ஆகவே, அவரது உயிரைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. மாறாக, அது சொல்லும் வன்முறை கலந்த செய்தி தான், கவனத்திற்கொள்ளப்பட வேண்டியது.
உலகெங்கிலுமே அதிகரித்துவரும் கடும்போக்குவாத அரசியல் நிலைமைக்கு மத்தியில் தான், முன்னரிருந்த அரசாங்கத்தை விட ஓரளவு மிதவாதப் போக்குடைய அரசியல் நிலைமை, இலங்கையில் ஏற்பட்டிருக்கிறது. தற்போதுள்ள அரசாங்கத்தின் குறைபாடுகள் ஒருபக்கமாக இருக்க, மிதவாத அரசியலென்பது வரவேற்கப்படத்தக்கது. அவ்வாறான நிலைமைகளைக் குழப்புவதற்கான முயற்சிகள், அனுமதிக்கப்படக்கூடாது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .