2025 டிசெம்பர் 27, சனிக்கிழமை

நிர்வாணம்

Suganthini Ratnam   / 2016 ஜூன் 24 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-முகம்மது தம்பி மரைக்கார்

பாலியல் துஷ்பிரயோகம் பற்றி ஒவ்வொரு நாளும் வருகின்ற செய்திகள் கவலையளிக்கின்றன. அதிலும் குழந்தைகள், சிறுவர்கள் மற்றும் மாணவர்கள் மீது புரியப்படும் பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்பில்  கேள்வியுறும்போது அச்சமாக உள்ளது. ஒவ்வொரு பெற்றோரும் வெளியில் செல்லும் தமது பெண் பிள்ளைகள் வீடு திரும்பும்வரை மடியில் நெருப்பைக் கட்டிக்கொண்டவர்கள் போல் அவஸ்தையுறுகின்றனர்.
 
இலங்கையில் ஒவ்வொரு 90 நிமிடத்திலும் ஒரு பெண் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகிறாள். இது அதிர்ச்சியானதொரு தகவலாகும். 2015ஆம் ஆண்டு இந்தத் தகவலை, அப்போது அமைச்சராகப் பதவி வகித்த ரோசி சேனநாயக்க தெரிவித்திருந்தார்.

இன்னொருபுறம் 2012ஆம் ஆண்டு தொடக்கம் 2014ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் பாலியல் வன்புணர்வு நடவடிக்கைகள் 20 சதவீதத்தால் அதிகரித்திருந்ததாக 2015ஆம் ஆண்டு பொலிஸார் வெளியிட்ட அறிக்கையொன்றில் கூறப்பட்டிருந்தது.

இலங்கையில் நாளொன்றுக்கு பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகின்றவர்களில் 03 தொடக்கம் 05 பேர் சிறுவர்களாக உள்ளனர். இவை அனைத்தும் பொலிஸாரிடம் மேற்கொள்ளப்படும் முறைப்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்படும் தகவல்களாகும். ஆனால், உண்மையில் இந்த எண்ணிக்கைகள் இவற்றை விடவும் அதிகமானவையாக உள்ளன. பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகின்றவர்களில் கணிசமானோர் அவை தொடர்பில் முறைப்பாடு செய்வதில்லை.

இன்னொருபுறம், விருப்பத்துடனும் கணிசமான பாலியல் வன்புணர்வுகள் இடம்பெறுகின்றன.
'விருப்பத்துடனான பாலியல் வன்புணர்வு' என்பது முரண்பாடானதொரு வாக்கியமாக உங்களுக்குத் தெரியக்கூடும். விருப்பத்துடன் நிறைவேறும் உடலுறவு என்பது எவ்வாறு பாலியல் வன்புணர்வாகக் கூடும் என்ற கேள்வி உங்களுக்கு ஏற்படலாம். சட்டத்தின் அடிப்படையில் இந்தச் சொல்லாடல் கையாளப்படுகிறது.

16 வயதுக்குட்பட்ட பெண் ஒருவர், இலங்கை சட்டத்தின் அடிப்படையில் சிறுமி என்ற வரையறைக்குள்ளேயே நோக்கப்படுகின்றார். அந்த வகையில் 16 வயதுக்குட்பட்ட சிறுமியொருவரின் சம்மதத்தோடு அவருடன் உடலுறவு கொண்டாலும், அந்தச் செயற்பாடானது சட்டத்தின்படி பாலியல் வன்புணர்வு என்ற குற்றச்செயலாகவே கணிக்கப்படும்.

இலங்கையில் 2015ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் இடம்பெற்ற பாலியல் வன்புணர்வுகளின்போது, பாதிக்கப்பட்டவர்களில் 80 சதவீதமானோர் 16 வயதுக்குட்பட்ட பெண் பிள்ளைகளாவர். கடந்த வருடத்தின் 11 மாதங்களில் பாலியல் வன்புணர்வு தொடர்பில் 1,854 முறைப்பாடுகள் பொலிஸாருக்குக் கிடைத்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான  ருவன் குணசேகர தெரிவித்திருந்தார். 16 வயதுக்குட்பட்ட சிறுமிகள் மீது புரியப்பட்ட மேற்படி வன்புணர்வுளில் 80 சதவீதமானவை பாதிக்கப்பட்ட சிறுமிகளின் விருப்பத்துடன் அவர்களுக்கு நெருக்கமானவர்களுடன் நிகழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சட்டத்தின் பிரகாரம் 16 வயதுக்குட்பட்ட சிறுமியொருவருடன் உடலுறவு கொள்வது குற்றமாகக் கொள்ளப்படுகின்றபோதிலும், முஸ்லிம் திருமணச் சட்டமானது இந்த வரையறைக்குள் வராது. இலங்கை முஸ்லிம் திருமணச் சட்டத்தின் கீழ், 16 வயதுக்குட்பட்ட பெண் பிள்ளையொருவருக்கு திருமணம் செய்து கொடுப்பதும் அவ்வாறு திருமணம் செய்து கொடுக்கப்பட்ட பெண்ணுடன் அவரின் கணவர் உடலுறவு கொள்வதும் குற்றமாகாது.

இலங்கையை விடவும், உலகளவில் பாலியல் வன்புணர்வுக் குற்றச்செயலின் தீவிரம் இன்னும் அதிகமாக உள்ளது. ஒவ்வொரு இரண்டரை நிமிடத்துக்கும் ஒரு பெண் வன்புணர்வுக்கு உள்ளாகிறாள் என புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. சிறுவர்கள் தொடர்பில் இது இன்னும் மோசமாக இருக்கின்றது. உலகளவில் ஒவ்வொரு நிமிடத்துக்கும் ஒரு சிறுவர் மீது பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெற்று வருகிறது.

யுத்த காலங்களிலும் யுத்தம் முடிந்து  முகாம்களில் மக்கள் இடம்பெயர்ந்து வசித்து வந்த காலப்பகுதிகளிலும் பாலியல் வன்புணர்வுகளும் துஷ்பிரயோகங்களும் அதிகளவில் நடைபெற்று வந்தன. இடம்பெயர்ந்த மக்கள் மிக நெருக்கமாக முகாம்களில் வசிக்கும் சூழ்நிலைகளின்போது, பாலியல் வன்புணர்வுகள் அதிகமாக இடம்பெற்றன.
ஆயினும், தற்போது முகாம் வாழ்க்கை குறைவடைந்து வருகின்றபோதிலும், பாலியல் வன்புணர்வு மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் ஆகிய குற்றச்செயல்களின் தீவிரம் இன்னும் குறையவில்லை. போதைப்பொருள் பாவனை மற்றும் தாய்மார் தமது குழந்தைகளை விட்டும் வெளிநாடுகளுக்கு வீட்டுப்பணிப் பெண்களாகச் செல்லுதல் போன்ற நடவடிக்கைகளும் பாலியல் குற்றச்செயல்கள் அதிகரிக்கின்றமைக்கு முக்கிய காரணங்களாக உள்ளன.

பாலியல் குற்றங்களைப் புரிகின்றவர்களில் கணிசமானோர் உள ரீதியில் பாதிப்புக்குள்ளானவர்களாக உள்ளனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

மத நம்பிக்கை மற்றும் அவை தொடர்பான கலாசார விழுமியங்களைக் கொண்ட நாடுகளை விடவும், அவை குறைவான நாடுகளில் பாலியல் குற்றங்கள் அதிகமாக நிகழ்கின்றமையை தரவுகளை வைத்துப் பார்க்கின்றபோது, புரிந்துகொள்ள முடிகிறது. உதாரணமாக, அமெரிக்காவில் நாளொன்றுக்கு 600 பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகின்றனர். அதாவது, இரண்டு நிமிடங்களுக்கு ஒரு பெண்  பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகிறாள்.

பாலியல் குற்றங்களைப் புரிந்தவர்களில் அதிகமானோர் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பி விட்டனர் என்பது மிகவும் ஏமாற்றமளிக்கும் தகவலாகும். இலங்கையில் பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட சுமார் 03 இலட்சம் முறைப்பாடுகளில் 600 பேருக்கு மட்டுமே சிறைத்தண்டனை கிடைத்துள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராக ரோசி சேனநாயக்க பதவி வகித்தபோது, கடந்த வருடம் தெரிவித்திருந்தார். அதாவது, பாலியல் குற்றங்களைப் புரிகின்றவர்களில் இரண்டு சதவீதமானோர் மட்டுமே சிறைத்தண்டனைக்கு உள்ளாகின்றனர்.

பாலியல் வன்புணர்வு நடைபெறுவதற்கான சந்தர்ப்ப சூழ்நிலைகள் தொடர்பில் பெண்களும் குறிப்பாக, சிறுவர்களின் பெற்றோர்களும் விழிப்புணர்வு பெற்றிருப்பது அவசியமாகும். பாலியல் குற்றங்களைப் புரிந்தவர்களில் 65 தொடக்கம் 85 சதவீதமானோர் பாதிக்கப்பட்டவர்களுக்கு தெரிந்தவர்களாக உள்ளனர் என்று ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. அதிலும், சிறுவர்கள் மீதான கணிசமான பாலியல் குற்றங்கள், குடும்ப உறவினர்களாலேயே புரியப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. சிறுமியொருவர் மீது பாலியல் குற்றம் புரிந்தார் எனும் குற்றச்சாட்டில் அந்தச் சிறுமியினுடைய தாயின் தந்தை (தாத்தா) கைதுசெய்யப்பட்டதாக வெளிவந்த செய்தி இதற்கு ஓர் உதாரணமாகும். குறித்த தாத்தாவுக்கு 64 வயது. சிறுமியின் தாயார் வெளிநாடு சென்றபோது, தனது தந்தையிடம் மகளை ஒப்படைத்திருந்தார். அந்தச் சிறுமி மீதே தாத்தா இந்த அசிங்கத்தைப் புரிந்திருந்தார்.

பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகின்றவர்களில் பெரும்பான்மையானோர் பெண்களாக உள்ளபோதும், ஆண்களும் வன்புணர்வுக்கு உள்ளாகின்றனர். உலகளவில் இடம்பெறும் பாலியல் வன்புணர்களில் பாதிக்கப்படுவோரில் 09 சதவீதமானோர் ஆண்களாவர்.
பாலியல் வன்புணர்வை சில நாடுகள் யுத்த கால ஆயுதங்களாகப் பயன்படுத்திய வரலாறுகளும் உள்ளன. சேர்பியா - பொஸ்னியா யுத்தத்தின்போது, சேர்பிய இராணுவத்தினர், பொஸ்னிய பெண்களை மிகத் திட்டமிட்ட வகையில் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தினர். பொஸ்னியர்களின் தூய்மையைக் கெடுக்க வேண்டுமெனில் அந்த இனப் பெண்கள் மீது பாலியல் வன்புணர்வு புரிந்து, அதன் மூலம் குழந்தைகளைப் பெறவைத்து, இனக் கலப்பொன்றை உருவாக்க வேண்டுமென சேர்பியர்கள் திட்டமிட்டனர். இதன் விளைவாக 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொஸ்னியப் பெண்கள், சேர்பியர்களால் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டனர்.

இலங்கையிலும் யுத்த காலங்களில் சிங்கள இராணுவத்தினர் இவ்வாறானதொரு மனநிலையுடன் தமிழ்ப் பெண்களை பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கினார்கள் என்கிற குற்றச்சாட்டுக்கள் உள்ளமையும் இங்கு நினைவுகொள்ளத்தக்கது.
எவ்வாறாயினும், பாலியல் குற்றங்களைப் புரிகின்றவர்களில் பெரும்பான்மையானோர் போதைப்பாவனைக்கு ஆளானவர்களாக உள்ளனர். பாலியல் குற்றங்களைப் புரிகின்றவர்களில் அதிகமானோர் போதையில் இருக்கும்போதே, குற்றத்தைச் செய்ததாக விசாரணைகளின்போது கூறுகின்றனர். போதைப்பொருள் மற்றும் மதுபானங்களைப் பாவிப்பதற்கும் பாலியல் குற்றத்துக்கும் இடையில் தவிர்க்க முடியாத தொடர்புகள் இருப்பதை மறுதலிக்க முடியாது.
பெண்ணொருவரை, அவரைப் பாலியல் வன்புணர்வு செய்தவருக்கே திருமணம் செய்து கொடுக்கும் ஒரு வழக்கம் உலகிலுள்ள கணிசமான நாடுகளில் உள்ளன. பழைய மற்றும் இடைக்கால தமிழ்ப் திரைப்படங்களில் இதுபோன்ற காட்சிகளை நாம் காண முடியும். கதாநாயகியை வன்புணர்வு செய்த கதாநாயகனுக்கே, அவளைத் திருமணம் செய்து கொடுத்த எத்தனையோ தமிழ்ப் திரைப்படங்கள் உள்ளன.

திரைப்படங்கள் எல்லாமே கற்பனையானவை அல்ல. இந்தியாவில் இப்போதும் பல கிராமங்களில் இந்த முறைமை உள்ளது. வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்கும் நீதியாக, அவளுக்கு வன்புணர்வு செய்தவனையே திருமணம் செய்து கொடுக்கும் வழங்கத்தை இந்தியக் கிராமங்களிலுள்ள பஞ்சாயத்துக்கள் இன்னும் பேணி வருகின்றன.
 
மொரக்கோவைச் சேர்ந்த அமினா அல் பிலாலி என்ற 16 வயதுப் பெண் ஒருவரை, அந்தப் பெண்ணை விடவும் 10 வயது மூத்த ஒருவன் பாலியல் வன்புணர்வு செய்துவிட்டான். அவனின் பெயர் முஸ்தபா பலக். இது தொடர்பில், பாதிக்கப்பட்ட அமினாவின் பெற்றோர் நீதிமன்றத்துக்குச் சென்றிருந்தனர். விசாரணைகளின் பின்னர், முஸ்தபாவை குற்றவாளியாகக் கண்ட நீதிமன்றம், பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்யுமாறு குற்றவாளிக்கு உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பினால் மனமுடைந்துபோன அமினா தற்கொலை செய்து கொண்டார். சில வருடங்களுக்கு முன்னர் இந்தச் சம்பவம் மொரக்கோவில் இடம்பெற்து.

பாலியல் தொடர்பான குற்றச்செயல்களுக்கு வழங்கும் தண்டனைகளும் அவை குறித்த அச்சமும் பாலியல் குற்றங்களைக் குறைப்பதற்கு உந்துதலாக இருக்கும் என்பது கணிசமானோரின் கருத்தாக உள்ளது. சவூதி அரேபியா போன்ற நாடுகளில் பெரும்பாலும், பாலியல் வன்புணர்வுக் குற்றங்களுக்கு மரண தண்டனையே வழங்கப்படுகிறது. ஒப்பீட்டளவில் ஏனைய நாடுகளுடன் வைத்துப் பார்க்கும்போது, சவூதி அரேபியாவில் பாலியல் வன்புணர்வுக் குற்றங்கள் பதிவாகின்றமை குறைவாகும்.

சட்டங்களின் இறுக்கம் மற்றும் தண்டனைகளின் தீவிரம் போன்றவை குற்றங்களைக் குறைப்பதற்கு உதவும் என்ற வாதம் ஒன்று உள்ளமையும் இங்கு கவனிப்புக்குரியது.

ஒரு திரைப்படத்தில் நடிகர் விவேக் சொல்கின்றமைபோல், பாலியல் வன்புணர்வுகளுக்குத் தண்டனையாக 'மைனர் குஞ்சை' சுட்டாலும் தப்பில்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X