2026 ஜனவரி 17, சனிக்கிழமை

ஐக்கிய இராச்சியத்துக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்குமிடையில் தயாராகிறது விவாகரத்து

Shanmugan Murugavel   / 2016 ஜூன் 26 , மு.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கு, ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த மக்கள், கடந்த வியாழக்கிழமையன்று வாக்களித்து, அதன் முடிவுகள் வெள்ளிக்கிழமையன்று வெளியாகியிருந்த நிலையில், Brexit என அழைக்கப்படுகின்ற ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் விலகுவது குறித்த கருத்துப் பரிமாற்றங்கள் ஆரம்பித்துள்ளன.

ஐக்கிய இராச்சியத்தில் இலண்டன் மாநகர் தவிர்ந்த இங்கிலாந்தும் வேல்ஸூம் விலகுவதற்கு விருப்பத்தை வெளிப்படுத்த, ஸ்கொட்லாந்தும் வட அயர்லாந்தும், ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ச்சியாக இருப்பதற்கு வாக்களித்திருந்தன. ஆனால், ஒட்டுமொத்தத்தில் விலகுவதற்கு 52 சதவீத ஆதரவும் தொடர்ந்தும் இருப்பதற்கு 48 சதவீத ஆதரவும் கிடைத்திருந்தது.

இதையடுத்து, இவ்வாண்டு ஒக்டோபருக்குள் பதவி விலகுவதாக, தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்ற அணியின் முக்கியஸ்தராக இருந்த பிரதமரான டேவிட் கமரோன் அறிவித்திருந்தார். அத்தோடு, புதிய பிரதமரே, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வார் எனத் தெரிவித்திருந்தார்.

எனினும், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆரம்பகட்ட ஆறு நாடுகளான ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, பெல்ஜியம், லக்ஸம்பேர்க் ஆகிய நாடுகளின் அமைச்சர்கள், பேர்ளினில் ஒன்றுகூடியதோடு, பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த ஜேர்மனியின் வெளிநாட்டு அமைச்சர் பிராங்-வோல்ட்டர் ஸ்டெய்மியர், ‘நீடிக்கப்பட்ட காலத்துக்குத் திரிசங்கு சொர்க்க நிலை ஏற்படுவதைத் தடுக்குமுகமாக, (வெளியேறும்) இந்தச் செயற்பாடுகள் உடனடியாகவே ஆரம்பிக்க வேண்டுமெனக் கோருவதில், நாங்கள் அனைவரும் ஒன்று சேர்கிறோம்” எனத் தெரிவித்தார்.

கருத்துத் தெரிவித்த பிரான்ஸின் வெளிநாட்டு அமைச்சர் ஜீன் மார்க் அய்ரௌல்ட், ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் டேவிட் கமரோன், உடனடியாகவே பதவி விலக வேண்டுமெனக் கோரினார். ‘புதிய பிரதமரொருவர் நியமிக்கப்பட வேண்டும். அதற்குச் சில நாட்கள் எடுக்கலாம், ஆனால் குறிப்பிடத்தக்க அவசர நிலைமை ஒன்று காணப்படுகிறது” என்றார்.

ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த நாடுகளின் முக்கியஸ்தர்கள் பலரும், இந்தப் பிரிவு தொடர்பாக அதிர்ச்சி வெளியிட்டுள்ள போதிலும், இது தொடர்ந்தும் இழுபடக்கூடாது என்பதில் தமது கவனத்தைச் செலுத்தி, இந்த நடைமுறைகள் உடனடியாகவே ஆரம்பிக்க வேண்டுமென்ற கருத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஆனால், ஜேர்மனியின் சான்செலர் அங்கெலா மேர்க்கெல், தனது வழக்கமான பொறுமையை வெளிப்படுத்தியுள்ளார். விலகும் பேச்சுவார்த்தைகள், தொடர்ந்தும் இழுபட்டுவிடக்கூடாது என்பதை ஏற்றுக்கொண்ட அவர், ஆனால், அவை முடிவடையும் வரை, ஐரோப்பிய ஒன்றியத்தின் முழுமையான உறுப்பினராக ஐக்கிய இராச்சியம் தொடர்ந்தும் இருக்கும் எனத் தெரிவித்தார். அத்தோடு அவர், ‘பேரம்பேசல்களில் வஞ்சகமாக அல்லது அருவருப்பான முறையில் இருக்கத் தேவையில்லை. விளையாட்டின் விதிகளை நாம் பின்பற்ற வேண்டும்” எனவும் தெரிவித்தார்.

ஐக்கிய இராச்சியத்தின் அடுத்த பிரதமர் யார் என்பது குறித்த விவாதங்கள் இடம்பெற்றுவருகின்ற போதிலும், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது குறித்த பேச்சுவார்த்தைகளை உடனடியாக ஆரம்பிப்பது குறித்த சமிக்ஞைகள் எவையும், அந்நாட்டிலிருந்து வெளியிடப்பட்டிருக்கவில்லை. ஆனால், மறுதரப்பான ஐரோப்பிய ஒன்றியமோ, இவ்விடயத்தில் அதிகமான கவனத்தை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X