2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

"இலங்கைத் தாய்க்கு தமிழர்கள் பாரமில்லை"

Menaka Mookandi   / 2016 ஜூன் 26 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

நடந்து முடிந்த 30 வருட யுத்தத்தில் யாரும் வெற்றிபெறவில்லை. இதனால், மக்கள் அனுபவித்தது வேதனை மட்டுமே. தற்போது நாட்டில் சமாதானம் மலர்ந்துள்ளது. இலங்கை உங்களுடைய சொந்த பூமி. நீங்கள் பிறந்து வளர்ந்து வாழும் பூமி. உங்கள் காணி உங்களுக்கு வழங்கப்படவேண்டுமென வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் பாதுகாப்பு தலைமையகத்தினால், உயர்பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் கையகப்படுத்தப்பட்டிருந்த காணிகளில் 201.3 ஏக்கர் காணியை விடுவிக்கும் நிகழ்வு, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சியின் தலைமையில், காங்கேசன்துறையில், சனிக்கிழமையன்று (26) இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் தொடர்ந்து கூறியதாவது,

'நடந்து முடிந்த 30 வருட யுத்தத்தில் வெற்றிபெற்றவர்கள் யார்? தோற்றவர்கள் யார்? மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றாரா? சிங்களவர்களா? தமிழர்களா? எவரும் வெல்லவில்லை. இன்று நல்லகாலம். நல்ல தினம். யுத்தம் முடிந்தது. முப்பது வருட யுத்தத்தில் நடந்தது என்ன என்று எல்லோருக்கும் தெரியும். நடந்தது மிக மோசமான அநியாயம் மட்டுமே. இதனால் மக்கள் அனுபவித்தது சோதனை, வேதனை, வருத்தம், அநியாயம் மட்டுமேயாகும். தற்போது நாட்டில் சமாதானம் மலர்ந்துள்ளது.

இலங்கை உங்களுடைய சொந்த பூமி. நீங்கள் பிறந்து வளர்ந்த பூமி, உங்கள் காணி உங்களுக்கு வழங்கப்படவேண்டும். அதற்காகத் தான், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நல்லெண்ண அடிப்படையில், இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட காணிகள், தற்போது மீளவும் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டு வருகின்றன.

தற்போது நல்லகாலம் பிறந்துள்ளது. யுத்தகாலத்தில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட பொதுமக்களுடைய காணிகளை மீண்டும் வழங்குவதற்கு தற்போது அரசாங்கம் படிப்படியாக நடவடிக்கை எடுத்துள்ளது. இன, மத, குல பேதமில்லாமல் ஒரு தாயின் பிள்ளைகள் போல் நாம் எல்லோரும் இருக்கவேண்டும். இலங்கைத் தாய்க்கு மக்கள் பாரமில்லை. இரு இனத்தவரும் ஒன்று சேர்ந்து நல்லதை செய்யவேண்டும். அதற்கு நல்ல எண்ணங்கள் மனதில் பிறக்க வேண்டும். நல்ல சிந்தனை மனதில் இருந்தால் செய்யப்படும் காரியங்களும் நல்லதாகவே இருக்கும். அதனால், நல்ல சிந்தனையுடன் நீங்கள் பணியாற்றவேண்டும்.

சிலர், 'சிங்க லே' என கூறுகின்றனர். அதாவது, சிங்கள இரத்தம் என்று அர்த்தப்படும். அப்படியாயின், தமிழ் மக்கள், 'தமிழ் இரத்தம்' எனக் கூறமுடியுமா? ஒவ்வொரு இனத்தவர்களும் தங்கள் இரத்தத்தினை சுட்டிக்கூற முடியும். ஆனால், அதன் அர்த்தம் ஒன்றுமே இல்லை. காயமடைந்து வைத்தியசாலைக்கு ஒருவரை கொண்டுசென்று இரத்தம் ஏற்றும் நிலை வந்தால், எந்த சிங்களவரும் தமிழ் இரத்தம் வேண்டாம் எனக் கூறுவதில்லை.

எல்லோருக்கும் இரத்தம் ஒன்றே. அதே போல் பௌத்த விகாரைக்கு சென்று பாருங்கள் அங்கே இந்து தெய்வங்களான கணபதி, விஸ்ணு, சிவன் போன்ற தெய்வங்கள் ஒன்றுமையாக இருக்கின்றன. ஆனால், குப்பிடப் போனவர்கள் வெளியில் நின்று சண்டை போடுகிறார்கள். நாம் ஒற்றுமையாக வாழப் பழகிக்கொள்ளவேண்டும். நல்லெண்ணத்துடன் இந்நாட்டினை கொண்டுசென்று, எதிர்வரும் சந்ததிக்கு வழிசமைத்து கொடுக்கவேண்டியது எல்லோருடைய கடமையாகும்' என ஆளுநர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X