Kanagaraj / 2016 ஜூன் 27 , மு.ப. 02:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
சட்டரீதியில், மது விற்பனை செய்து அரசாங்கத்துக்கு அதிக வருமானம் ஈட்டித்தரும் மாவட்டங்களின் முதலாம் இடத்தை யாழ்ப்பாணமும் இரண்டாம் இடத்தை நுவரெலியாவும், மூன்றாம் இடத்தை மட்டக்களப்பும் பெற்றுள்ளன. இந்த நிலைமை மாற வேண்டும். இது ஓர் ஆரோக்கியமான செயற்பாடு அல்ல' என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
' நுவரெலியா மாவட்டத்தில் வாழ்ந்து வருகின்ற பெருந்தோட்டத் தொழிலாளர்கள், தமது உழைப்பின் அதிகமான பகுதியை, மதுபானத்துக்கே செலவு செய்கின்றார்கள். இதன் காரணமாக, சமூக, பொருளாதார சீரழிவுகள் அதிகளவில் ஏற்படுகின்றன.அது மட்டுமல்லாமல், பெண்களும் இந்த விடயத்தில் ஈடுபடுவதால் இந்த பாதிப்புகள் இன்னும் அதிகமாக காணப்படுகின்றன' என்றும் அவர் குறிப்பிட்டார்.
'மதுவற்ற நாடு' எனும் வேலைத்திட்டத்தின் ஆறாவது நிகழ்ச்சித்திட்டம், ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன தலைமையில், நுவரெலியா புதிய நகர மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) நடைபெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயேஅவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 'எமது நாட்டில், சட்டவிரோத மதுபான விற்பனை மற்றும் சட்டரீதியான மதுபான விற்பனை என இரண்டு வகை இருந்தாலும், இவை இரண்டாலும் ஏற்படுகின்ற பாதிப்பு ஒன்று என்பதை அனைவரும் புரிந்துக்கொள்ள வேண்டும்' என்றார்.
'மது விற்பனையில் பல அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஈடுபட்டு வருகின்றார்கள். எனக்கு அவர்களை சுட்டிக்காட்ட முடியாது.
மாவட்டங்களில் மாதம் தோறும் நடைபெறுகின்ற மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டங்களிலும், பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டங்களிலும், மது ஒழிப்பு தொடர்பில் கட்டாயமாக நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட வேண்டும். அதற்கு எமது அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தலைமை தாங்க வேண்டும். தனி ஒருவரால் மட்டும் இதனை சாதிக்க முடியாது. நாம் அனைவரும் ஒன்றுபட்டால் மாத்திரமே இது சாத்தியமாகும்.
நான் பல சர்வதேச மாநாடுகளில் கலந்துகொண்டு உரையாற்றும் பொழுது, எமது நாட்டில் 18 சதவீதமானவர்கள் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டிருப்பதை எனது வாயால் சுட்டிக்காட்டும் போது, நான் வெட்கித் தலைகுனிந்திருக்கின்றேன். இந்த நிலையை மாற்ற வேண்டும்' என்றார்.
'அதற்காக, அதிக போசாக்கு குறைந்த மாவட்டமாக திகழும் நுவரெலியா மாவட்டத்திலிருந்து அந்த செயற்றிட்டத்தை ஆரம்பிக்க வேண்டும்.அதற்காக நீங்கள் ஒவ்வொருவரும் எனக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
அரசாங்கத்தின் அனைத்து அலுவலகங்களிலும் போதை ஒழிப்பு தொடர்பாக விசேட பிரிவு ஒன்றை ஏற்படுத்தி, அதில் இந்த செயற்றிட்டம் தொடர்பாக செயற்பட வேண்டும். இதற்கான விசேட சுற்றறிக்கைகளை நாம் கடந்த வருடத்தில், எல்லா திணைக்களங்களுக்கும் அனுப்பி வைத்துள்ளோம். அதற்கான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். தங்களுடைய அலுவலகங்களில் மதுபானத்தை பாவிப்பவர்களை, அதில் இருந்து மீட்பதற்கான நடவடிக்கைகளை முதலில் மேற்கொள்ள வேண்டு;ம்' என தெரிவித்தார்.
'மதுவற்ற ஒரு சமூகமாக நாம் மாற்றம் பெற்றால், பல மாற்றங்களை எமது நாட்டில் ஏற்படுத்த முடியும். நாட்டுக்கு சிறந்த தலைவர்களாக குடும்பத்தின் நல்ல தலைவனாக, பிள்ளைகளுக்கு ஒரு சிறந்த தந்தையாக சமூகத்துக்கு ஒரு வழிகாட்டியாக முன்னோக்கிச்செல்ல முடியும். இந்த வேலைத்திட்டத்தை வெற்றிப் பாதையில் இட்டுச் செல்லும் ஒரு பாரிய பொறுப்பு, மாணவர்களிடமும் இருக்கின்றது. நீங்கள் உங்கள் சூழலில் இதுபோன்ற செயற்பாடுகள் நடைபெறுகின்ற பொழுது, அது தொடர்பாக உரியவர்களுக்கு அறிவிக்க முன்வரவேண்டும்' என்று அவர் மேலும் கூறினார்.
இந்நிகழ்வில், மது ஒழிப்புக்காக பங்களிப்பு செய்த பொலிஸ் உத்தியோகஸ்தர்கள், மது வரி திணைக்கள அதிகாரிகள், ஊடகவியாலாளர்கள், பொது மக்கள் ஆகியோருக்கான சான்றிதழ்களும் ஜனாதிபதியினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .