2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஜே.பி.எல்: சென்றலைட்ஸ், கொக்குவில் மத்தி, சென்றல் வெற்றி

Shanmugan Murugavel   / 2016 ஜூன் 26 , மு.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்தின் அண்மைக்கால கிரிக்கெட் வரலாற்றில் மிக முக்கியமான தொடர்களில் ஒன்றான யாழ்ப்பாண பிறீமியர் லீக் (ஜே.பி.எல்) கடந்த வாரயிறுதியில் ஆரம்பித்திருந்த நிலையில், முதல் வாரப் போட்டிகளில், சென்றலைட்ஸ், கொக்குவில் மத்தி, சென்றல் ஆகியவை வெற்றி பெற்றுள்ளன.

சென்றலைட்ஸ் விளையாட்டுக் கழகத்துக்கும் பற்றீசியன்ஸ் விளையாட்டுக் கழகத்துக்குமிடையிலான முதலாவது போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற சென்றலைட்ஸ், பற்றீசியன்ஸை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தது.

அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய பற்றீசியன்ஸ், 19.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 100 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், அவ்வணி சார்பாக நோபேர்ட் 28, டானியல் 20 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், சென்றலைட்ஸ் சார்பாக கோகுலன் மூன்று விக்கெட்டுகளையும் வதூசனன், மயூரன், கிருபா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பதிலுக்கு 101 என்ற வெற்றி இலக்கோடு ஆடிய சென்றலைட்ஸ், 12.3 ஓவர்கள் முடிவில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக, ஜனோசன் 34, ஜூலியஸ் 24, வதூசனன் 22 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், பற்றீசியன்ஸ் சார்பாக, அஜித், மொறிஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினை கைப்பற்றினர். போட்டியின் நாயகனாக ஜனோசன் தெரிவானார்.

இரண்டாவது போட்டியில், கொக்குவில் மத்தி கிரிக்கெட் கழகத்தை எதிர்த்து ஸ்கந்தா ஸ்டார்ஸ் விளையாட்டுக் கழகம் மோதியிருந்த நிலையில், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற கொக்குவில் மத்தி, ஸ்கந்தா ஸ்டார்ஸை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தது.

அத்ந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்கந்தா ஸ்டார்ஸ், 19.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 103 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக, விஷ்ணு 29, சுயந்தன் 27 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், கொக்குவில் மத்தி சார்பாக, உத்தமன் நான்கு விக்கெட்டுகளையும் இராகுலன், ஜெயரூபன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு, 104 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கோடு ஆடிய கொக்குவில் மத்தி, எதுவித விக்கெட் இழப்புமின்றி 9.3 ஓவர்களில் அதிரடியாக வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக, ஜெயரூபன் ஆட்டமிழக்காமல் 76 ஓட்டங்களையும் சசிகரன் ஆட்டமிழக்காமல் 14 ஓட்டங்களையும் பெற்றனர். போட்டியின் நாயகனாக ஜெயரூபன் தெரிவானார்.

சென்றல் விளையாட்டுக் கழகத்துக்கும் யூனியன்ஸ் விளையாட்டுக் கழகத்துக்குமிடையிலான மூன்றாவது போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய யூனியன்ஸ், 19.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 102 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக ஆகீஸன் 12, கனிஸ்ரன், மகதீரன் ஆகியோர் தலா 11 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் சென்றல் சார்பாக, காலஸ், திருக்குமரன், உல்ஹப், சலிஸ்ரன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் ரஜீவ்குமார் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு, 103 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய சென்றல், 12.3 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை மாத்திரமே இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக, ரஜீவ்குமார் ஆட்டமிழக்காமல் 40, கலிஸ்ரன் 22 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், யூனியன்ஸ் சார்பாக அருண்ராஜ் இரண்டு விக்கெட்டுகளையும் சுஜந்தன், தயாளன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். போட்டியின் நாயகனாக ரஜீவ்குமார் தெரிவானார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .