2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மந்திரக்கோல்

Thipaan   / 2016 ஜூன் 28 , மு.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

முகம்மது தம்பி மரைக்கார்

எதிர்பாராததொரு தருணத்தில், ஒரு பாரிய குண்டைத் திடீரெனத் தூக்கிப் போட்டிருக்கிறார் முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத். 1989ஆம் ஆண்டு தொடக்கம் 26 வருடங்கள் நாடாளுமன்றப் பிரதிநிதியாக இருந்து வந்த பஷீர் சேகுதாவூத், திடீரென 'பிரதிநிதித்துவ அரசியலில் இருந்து முற்றாக விலகிக் கொள்கிறேன்' என்று, ஓர் அறிக்கை மூலம் மேலே சொன்ன குண்டினைப் போட்டிருக்கிறார். பஷீருடைய இந்தக் குண்டின் அபாயம் குறித்து, எவர் விளங்கிக்கொள்ளாமல் போனாலும் கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் மிக நன்றாக விளங்கியிருப்பார்.

பஷீர் சேகுதாவூத், ஈரோஸ் மூலமாக நாடாளுமன்ற உறுப்பினராக அறிமுகமானவர். பின்னர் முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து, அந்தக் கட்சியினூடாக மூன்று தடவை தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்திருக்கிறார். 2010ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில், ஒரு வேட்பாளராகப் போட்டியிட்டு நாடாளுமன்றம் சென்றார். ஆயினும், இந்த முறை பொதுத் தேர்தலில் போட்டியிடாமலும் தேசியப்பட்டியல் மூலம் பதவி கிடைக்காமலும் போனமையினால், நாடாளுமன்றம் நுழையும் சந்தர்ப்பம் பஷீருக்குக் கிடைக்கவில்லை.

இவ்வாறானதொரு காலகட்டத்தில்தான் மு.காங்கிரஸின் தலைவர் ஹக்கீமுக்கும் அந்தக் கட்சியின் செயலாளர் ஹசன் அலிக்கும் இடையிலான முரண்பாடு உருவானது. இதன்போது, ஹசன் அலிக்கு பஷீர் ஆதரவளித்தார். ஹசன் அலியின் செயலாளர் பதவியின் அதிகாரங்களை மு.கா. தலைவர் ஹக்கீம் அநீதியாகப் பறித்தெடுத்து விட்டதாக பஷீர் குற்றம்சாட்டினார். ஹசன் அலிக்கு நியாயம் கிடைக்க வேண்டுமென பஷீர் குரல்கொடுக்கத் தொடங்கினார். இதனால், மு.கா. தலைவர் ஹக்கீமுக்கு ஹசன் அலி மீதான கோபத்தை விடவும், பஷீர் மீதுதான் கடுமையான கோபம் ஏற்பட்டது.

பஷீர் மீதுள்ள தனது கோபத்தை பல வழிகளிலும் ஹக்கீம் கொட்டித் தீர்த்தார். பாலமுனையில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாட்டில், பஷீர் சேகுதாவூத்தை தலைவர் ஹக்கீம் மிகவும் மோசமாகத் தாக்கிப் பேசினார். அந்த மாநாட்டுக்கு, கட்சியின்; நிறத்தில் பஷீர் சேகுதாவூத் அணிந்து வந்த ஆடை குறித்தும், தனது பேச்சில் ஹக்கீம் நையாண்டி செய்தார். அப்போது, தவிசாளர் பஷீர் மேடையில் இருக்கவில்லை என்பது வேறு கதையாகும்.

இன்னொருபுறம், முஸ்லிம் காங்கிரஸுக்குக் கிடைத்த தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இம்முறையும் தனக்கு வழங்க வேண்டுமென்று பஷீர் கோரியதாகவும் அதற்கு ஹக்கீம் உடன்படாமையினால்தான், பஷீர் இப்படி தலைவர் ஹக்கீமுக்கு எதிராக நடந்து கொள்கிறார் என்றும், ஹக்கீம் தரப்பு குற்றம்சாட்டி வருகிறது.

ஆனால், பஷீர் தரப்பு இதற்குக் கூறும் பதில் வேறானது. இம்முறை தவிசாளர் பஷீர் சேகுதாவூத்தை பொதுத் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று தலைவர் ஹக்கீம்தான் தடுத்தார். மேலும், பஷீருக்கு தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை வழங்குவதாகவும் ஹக்கீம் வாக்குறுதியளித்தார். அதனை மேலும் உறுதி செய்யும் வகையில், மு.காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் தனது தாயிடம் பஷீரை அழைத்துச் சென்று, 'இம்முறை தேசியப்பட்டியல் மூலம் உங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்குவேன்' என்று, தன் தாய்மீது ஹக்கீம் சத்தியம் செய்து, பஷீருக்கு வாக்குறுதி வழங்கியிருந்தார் என்று பஷீர் தரப்பு கூறுகிறது.

இவ்வாறானதொரு நிலையில்தான், பிரதிநிதித்துவ அரசியலில் இருந்து, தான் முற்றாக விலகிக் கொள்வதாக பஷீர் அறிவித்திருக்கின்றார். அதாவது, எந்தவொரு கட்சி ஊடாகவோ, தேசிய பட்டியலின் மூலமாகவோ அல்லது எதிர்காலத்தில் தேர்தல் சட்டங்களில் ஏற்படும் மாற்றங்களால் அல்லது வேறு ஏதேனும் முறையில் நாடாளுமன்றத்துக்கோ அல்லது மாகாண சபைக்கோ மக்கள் பிரதிநிதியாக செல்லப்போவதில்லை என்று அவர் தனது விலகலை விபரித்திருக்கின்றார்.

பஷீர் இந்த முடிவை எடுப்பதற்கு என்ன காரணம் என்று அவரே கூறுகின்றார். 'எந்தவொரு அரசியல் கட்சியிலும் எவரும் நேர்கோட்டை வரைய முற்படுகின்ற போதெல்லாம், பதவிகளை நாடிய மூன்றாந்தர நடவடிக்கைகளாக அவை சோடித்துக் காட்டப்பட்டு, நேரிய மாற்றங்களுக்கான முயற்சிகள் தோற்கடிக்கப்படுகின்றன. இதனால் புறவிமர்சனங்களை சுயவிமர்சனங்களாக மாற்றிக் கொண்டு, சோடனைக் குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுபட்டு தனிப்பட்ட அரசியல் நம்பகத்தன்மையை பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில், பிரதிநித்துவ அரசியலில் இனியொருபோதும் ஈடுபடுவதில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளேன்' என்று அவர் குறிப்பிடுகின்றார்.

அதாவது, பஷீர் சொல்ல வருவது இதுதான். 'கட்சிக்குள் தலைவரின் பிழைகளை நான் சுட்டிக் காட்டும்போதும், நியாயங்களுக்காகக் குரல் கொடுக்கும்போதும், தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கிடைக்காததால்தான் பஷீர் இப்படிக் கூப்பாடு போடுகிறார், தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைக் கொடுத்தால், பஷீர் அடங்கிவிடுவார் என்று, தலைவரும் அவருக்கு ஆதரவானவர்களும் கூறிவருகின்றனர்.

 இந்தப் பழியிலிருந்து விடுபடுவதற்காகத்தான், பிரதிநிதித்துவ அரசியலே இனி எனக்கு வேண்டாம் என்று முழுக்குப் போட்டுவிட்டேன்' என்கிறார்.

'பஷீருக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படாமையினால்தான், ஹக்கீம் - ஹசன் அலி பிரச்சினையில், ஹசன் அலிக்கு ஆதரவாக பஷீர் களமிறங்கியுள்ளார், ஹக்கீமுக்கு எதிராக பஷீர் பேசுகின்றார்' என்கிற குற்றச்சாட்டுகளுக்கு, சாதாரணமாக முற்றுப்புள்ளி வைப்பதாயின், 'எனக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தேவையில்லை' என்று, தவிசாளர் பஷீர் பகிரங்கமாக அறிவித்திருக்கலாம். மு.காங்கிரஸின்

செயலாளர் ஹசன் அலி இப்படியொரு அறிக்கையினை விடுத்திருந்தமை இங்கு நினைவுகொள்ளத்தக்கது. ஆனால், அதையும் தாண்டி, பிரதிநிதித்துவ அரசியலில் இருந்தே நான் விலகிக்கொள்கிறேன் என்று, பஷீர் அறிவித்திருப்பது, பாரதூரமானதொரு முடிவாகும்.

இது இப்படியிருக்க, முஸ்லிம் காங்கிரஸைத் தூய்மைப்படுத்த வேண்டியுள்ளதாகவும் அதற்கான தனது போராட்டம் தொடரும் என்றும், பிரதிநிதித்துவ அரசியலிலிருந்து விலகுவதாக அறிக்கை விட்ட மறுநாள், ஊடகமொன்றுக்கு பஷீர்

தெரிவித்திருக்கின்றார். அவ்வாறாயின் மு.காங்கிரஸ் தற்போது அழுக்கடைந்துள்ளதாகவே இதன்மூலம் பொருள்கொள்ள வேண்டியுள்ளது. அப்படியென்றால், முஸ்லிம் காங்கிரஸ் எந்த வகையில் அழுக்கடைந்துள்ளது என்பது குறித்தும், அதனை அழுக்கடைய வைத்த நபர்கள் தொடர்பிலும் பஷீர் சேகுதாவூத் பகிரங்கமாகப் பேச வேண்டும். கட்சியின் பொறுப்புமிக்க ஒரு பதவியில் உள்ளவர் என்கிற வகையில், பஷீர் இதைச் செய்தே ஆக வேண்டும்.

மேலும், முஸ்லிம் காங்கிரஸினுடைய தலைமையின் நம்பகத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் மேற்படி ஊடகத்திடம் பஷீர் தெரிவித்திருக்கின்றார். பஷீரின் இந்தக் கூற்றின்படி பார்த்தால், மு.காங்கிரஸ் தலைமையானது தனது நம்பகத்தன்மையினை பாதுகாக்கவில்லை அல்லது பாதுகாப்பதில் தவறிழைத்துள்ளதாகவே விளங்கிக் கொள்ள முடிகிறது. அவ்வாறெனில், எவ்வாறெல்லாம் மு.கா. தலைமை நம்பகத்தன்மையற்று செயற்பட்டுள்ளது என்பது பற்றியும் பஷீர் சேகுதாவூத் விபரிக்க வேண்டும்.

'முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் - பல சந்தர்ப்பங்களில் கட்சி நலனை அடகு வைத்து, தனது சுயநலனை முன்னிறுத்தி செயற்பட்டு வந்துள்ளார்' என்கிற குற்றச்சாட்டு மிகப் பரந்தளவில் உள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகளில் ஏராளமான உண்மைகள் உள்ளன. ஆனால், மு.கா. தலைவர் அவ்வாறு செயற்படுவதற்கு - கட்சியின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் ஒரு காலகட்டத்தில் காரணமாக இருந்தார் என்றும் கூறப்படுகிறது. அதாவது, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீமை ஒரு சூழ்நிலைக் கைதியாக மாற்றி, அதன் மூலம் தலைவரை - தவிசாளர் பஷீர் பிழையாக வழிநடத்தினார் என்கிற குற்றச்சாட்டொன்றினை ஹக்கீமுடைய ஆதரவாளர்கள் முன்வைப்பதுண்டு. இதன்படி பார்த்தால், கட்சியைத் தூய்மைப்படுத்துவதற்கான எந்தத் தகுதியும் பஷீருக்கு இல்லை என்கிற வாதமொன்றும் கட்சிக்குள் உருவாகியுள்ளது.

ஆனால், மு.காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், ஒவ்வொரு காலப்பகுதியிலும் யாரோ ஒரு நபரின் அல்லது தரப்பின் சூழ்நிலைக் கைதியாகவே இருந்து வருகின்றார். அவர் செய்கின்ற பிழைகளும், கட்சி நலனுக்கும் கொள்கைகளுக்கும் எதிரான செயற்பாடுகளுமே, ஹக்கீமை சூழ்நிலைக் கைதியாக மாற்றி விடுகிறது. எனவே, தவறுகளை செய்து வருகின்ற ஹக்கீமை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதை விடுத்து, அவரை சூழ்நிலைக் கைதியாக மாற்றியவர்களையெல்லாம் குற்றவாளிகளாகக் காட்ட முற்படுவதென்பது, ஹக்கீம் சார்பு வாதாமாகவே உள்ளது என்கின்றனர் இன்னொரு தரப்பினர்.

முஸ்லிம் காங்கிரஸுக்கு இம்முறை கிடைத்த தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை, தலைவர் ஹக்கீம் பங்கீடு செய்தமை தொடர்பாகவே, அவர் மீது கடுமையான விமர்சனங்கள் தற்போது முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த விவகாரத்தில் கட்சியின் கொள்கைகளுக்கு இணங்களும், நியாயமாகவும் ஹக்கீம் நடந்திருப்பாராயின், இன்று அவர் எதிர்நோக்கியிருக்கும் ஏராளமான பிரச்சினைகள் இல்லாமல் போயிருக்கும்.

முஸ்லிம் காங்கிரஸுக்குக் கிடைத்த தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை யார்யாருக்கு வழங்குவதென்பதை கட்சித் தலைவர் ஹக்கீம் தனியாளாகத் தீர்மானிக்க முடியாது. அந்தக் கட்சியின் உயர்பீடத்தில் - குறித்த விடயம் விவாதிக்கப்பட்டு, உயர்பீட உறுப்பினர்களில் பெரும்பான்மையானோரின் தீர்மானத்துக்கிணங்கவே தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை பங்கீடு செய்திருக்க  வேண்டும். ஆனால், கட்சியின் விதிமுறைகளை மீறி - தனது விருப்பத்துக்கு இணங்க, தலைவர் ஹக்கீம் தன்னுடைய மூத்த சகோதரர் டொக்டர் ஹபீஸ் மற்றும் நண்பர் சல்மான் ஆகியோரை தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு தற்காலிகமாக நியமிப்பதாகக் கூறி, அந்தப் பதவிகளை வழங்கினார்.

இதனையடுத்து, நான்கு மாதங்களின் பின்னர் ஹக்கீம் - தனது மூத்த சகோதரரை இராஜிநாமாச் செய்யுமாறு பணிக்க, அவரும் அதை நிறைவேற்றினார். அதன்போது ஏற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்துக்கு திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த எம்.எஸ். தௌபீக்கை ஹக்கீம் நியமித்தார். இதன்போதும், கட்சியின் உயர்பீடத்திடம் தலைவர் ஹக்கீம் கலந்தாலோசிக்கவுமில்லை, எந்தவித அனுமதிகளையும் பெறவுமில்லை. இன்னொருபுறம், தற்காலிகமாக என்று கூறி, சல்மானுக்கு வழங்கிய தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியானது, 10 மாதங்கள் கடந்தும் சல்மானிடம்தான் இருக்கிறது.

சல்மானுக்கு வழங்கப்பட்ட தற்காலிக நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதத்துடன் ஒரு வயது பூர்த்தியாகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் தீர்வையற்ற வாகன இறக்குமதிக்கான அனுமதிப்பத்திரம் உள்ளிட்;ட ஏராளமான வரப்பிரசாதங்களை தற்காலிக தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சல்மான் அனுபவித்து வருகின்றார். 'தற்காலிகம்' என்பதற்கான கால வரையறை குறித்து, தலைவர் ஹக்கீமும் சொல்லவில்லை, கட்சியிலுள்ளவர்களும் கேட்கவில்லை என்பதால், தற்போதைய நாடளுமன்றத்தின் ஆயுட்காலம் நிறைவடைவடைவதற்கு முந்திய நாள்வரை, சல்மான், நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிக்ப்பதற்கான சாத்தியங்கள் உள்ளன.

இவை குறித்து கட்சியின் உயர்பீடக் கூட்டங்களில், எந்தவொரு உறுப்பினரும் தலைவர் ஹக்கீமிடம் கேள்வியெழுப்பியதில்லை. ஆனால், தலைவரின் இந்த நடவடிக்கை தொடர்பில் உயர்பீட உறுப்பினர்களில் ஏராளமாளோர் வெளியில் வந்து விமர்சனம் செய்பவர்களாக உள்ளனர். தலைவரின் எதிரில் தட்டிக் கேட்டால், அவரின் கோபத்துக்கு தாங்கள் ஆளாக வேண்டி வரும் என்றும், அப்படி நடந்துவிட்டால், தமது அரசியல் எதிர்காலம் சூனியமாகிப் போய் விடும் என்றும், உயர்பீட உறுப்பினர்களில் சிலர் - தமக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லிக் கவலைப்பட்டுள்ளனர்.

இப்படி, அநேகமான விடயங்களில் ஒரு சர்வாதிகாரிபோலவும் தான்தோன்றித்தனமாகவும் ஹக்கீம் எடுத்து வந்த முடிவுகள்தான், இப்போது அவரை ஒரு முட்டுச் சந்துக்குள் கொண்டுவந்து நிறுத்தி விட்டதோ என எண்ணத் தோன்றுகிறது. முஸ்லிம் காங்கிரஸின் தலைவராக ஹக்கீம் பதவியேற்றுக் கொண்ட காலம் முதல் - அவருக்கு காய் வெட்டியவர்களும், கைகொடுத்தவர்களும், அவரின் மிக அருகிலேயே இருந்தனர் - இருக்கின்றனர் என்பது தனியொரு கதையாகும்.

அவ்வாறு ஹக்கீமுக்கு மிக அருகில் இருந்தவர்களில் ஒருவர்தான் தவிசாளர் பஷீர் சேகுதாவூத். முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் - அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் இடுக்குப் பொறிகளில் சிக்கிக்கொண்ட போதெல்லாம், அவற்றிலிருந்து தலைவர் தப்பிக்கொள்வதற்கு, தக்க தருணங்களில் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் தோள் கொடுத்திருக்கின்றார்.  அதனால், ஹக்கீமுடைய பல்வேறு அந்தரங்கங்களை, பஷீர் அறிந்து வைத்திருக்கின்றார் என்பது பலரும் அறிந்த உண்மையாகும். அவற்றில் சிலவற்றினை வெளியே விட்டால் கூட, ஹக்கீம் தனது கௌரவத்திலும், சமூக மதிப்பிலும் அதிகளவானவற்றினை இழக்க நேரிடலாம் என்கிற பேச்சுக்கள் இருக்கின்றன. அப்படியொரு நிலைமை உருவாகுவது, ஹக்கீமுடைய தலைமைப் பதவிக்கே ஆபத்தாக அமைந்து விடவும் கூடும். ஆனால், 'ஹக்கீமின் அந்தரங்கம்' என்கிற - தனது கையிலிருக்கும் மந்திரக்கோலை, அத்தனை எளிதில் பஷீர் சுழற்ற மாட்டார் என்பதே நமது அனுமானமாகும்.

இவற்றுக்கெல்லாம் மத்தியில், கட்சியைத் தூய்மைப்படுத்த வேண்டியுள்ளது என்றும், மு.காங்கிரஸினுடைய தலைமையின் நம்பகத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் பஷீர் கூறியுள்ளதன் உள் அர்த்தத்தினை பஷீருக்கு அடுத்ததாய் ஹக்கீம்தான் மிகச் சரியாக அறிவார்.

மந்திரக்கோல் சுழலாதவரை - தலைவருக்கு ஆபத்தில்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .