2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

புளுமெண்டால் விவகாரம்: அமைச்சர் மனோ, அமைச்சரவையில் விவாதம்

Princiya Dixci   / 2016 ஜூன் 28 , மு.ப. 08:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடகொழும்பு, புளுமெண்டால் ரயில் பாதையோரத்தில் வாழும் ஏழை மக்களின் வீடுகளை எந்தவித மாற்று ஏற்பாடுகளும் செய்யாமல் உடைத்தெறிய எடுக்கப்பட்ட முயற்சி தொடர்பில் கொழும்பு மாவட்ட எம்.பியும்,  அமைச்சருமான மனோ கணேசன், இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் பிரஸ்தாபித்துள்ளார்.

இதையடுத்து அமைசர் மனோ கணேசன், போக்குவரத்து துறை அமைச்சர் நிமல் சிறிபால சில்வா, கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் சுசில் பிரேமஜயந்த, மேல்மாகாண மெகாபொலிஸ் அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஆகியோர் இடையில் வாத பிரதிவாதங்கள் ஏற்பட்டன.

இறுதியில் மாற்று ஏற்பாடுகள் செய்யாமல் வீடுடைப்பதை நிறுத்தி, இப்பிரச்சினையை கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கொழும்பு மாவட்ட அமைச்சர்களும், எம்.பிக்களும், கலந்துபேசி மாற்று ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

இன்றைய அமைச்சரவை கூட்டம் தொடர்பில் தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான அமைச்சர் மனோ கணேசன் கூறியுள்ளதாவது,

'வடகொழும்பு, புளுமெண்டால் ரயில் பாதையோரத்தில் வாழும் ஏழை மக்கள், கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது உங்களை ஆட்சிபீடத்தில் அமர்த்த நூற்றுக்கு நூறுவீதம் எமக்கு வாக்களித்தவர்கள். பின்னர் ஒகஸ்ட் பொதுத் தேர்தலின் போதும் மீண்டும் எம்மை முழுமையாக ஆதரித்தவர்கள்.

எனவே, இம்மக்களை நடு வீதியில் நிறுத்திவிட்டு எனக்கு ஒரு அரசியல் பயணம் கிடையாது. இவர்களுக்கு மாற்று வீடுகள் வழங்கப்பட வேண்டும். அதன்பின்னர் இவர்களை இப்போதைய இடத்தில் இருந்து அகற்றவேண்டும். அதற்கு இந்த மக்களும் தயார்', எனக் கூறியுள்ளார்.

புகையிரதத் திணைக்களம் உள்வரும் போக்குவரத்து துறை அமைச்சர் நிமல் சிறிபால சில்வா, ஒரு குடும்பத்துக்கு இரண்டரை இலட்சம் ரூபாய் வழங்கி வீடுகளை அகற்ற முடிவு செய்யப்பட்டதாகத் தெரிவித்தார்.

ஆனால், அத்தகைய எந்த ஒரு மாற்று ஏற்பாடும் செய்யப்படவில்லை என்றும், எப்படியிருந்தாலும் ஒரு கழிவறை கூட கட்ட முடியாத இரண்டரை இலட்சம் ரூபாவில் மாற்று வீடுகள் ஒருபோதும் கட்ட முடியாது என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தர்.

இதையடுத்து தனது அமைச்சு மூலம் மாற்று வீடுகள் கட்டி தர முடியும் என்றும், அதற்கான நிதியை ஒதுக்கி தர பெற்றோலிய துறை அமைச்சும், போக்குவரத்து துறை அமைச்சும் முன்வர வேண்டும் என மேல்மாகாண மெகாபொலிஸ் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தர்.

இந்த நிதியை ஒதுக்கி தருவது யார் என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மாற்று ஏற்பாடுகள் செய்யாமல் வீடுடைப்பதை நிறுத்தி, இந்த பிரச்சினையை கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கொழும்பு மாவட்ட அமைச்சர்களும், எம்பிக்களும், கலந்துபேசி மாற்று ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .