2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

துணுக்காயிலிருந்து அக்கராயன் வரை பஸ் சேவை வேண்டும்

Niroshini   / 2016 ஜூன் 29 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு - துணுக்காயிலிருந்து கிளிநொச்சி - அக்கராயன் வரை பஸ் சேவையை நடத்துமாறு மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஆலங்குளம், உயிலங்குளம், தென்னியங்குளம், அம்பலப்பெருமாள்குளம், கோட்டைக்கட்டியகுளம் மற்றும் அமதிபுரம் ஆகிய கிராம மக்கள், கடந்த ஏழு ஆண்டுகளாக பஸ் சேவை இடம்பெறாததன் காரணமாக போக்குவரத்து நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளனர்.

மீள்குடியேற்ற தொடக்கத்தில் துணுக்காயிலிருந்து அக்கராயன் வழியாக யாழ்ப்பாணம் வரை தனியார் பஸ் சேவையொன்று நடைபெற்றது. அதேபோன்று கிளிநொச்சி ஜெயபுரத்திலிருந்து வன்னேரிக்குளம், அம்பலப்பெருமாள்குளம் வழியாக வவுனியா வரை இலங்கை போக்குவரத்துச் சபை பஸ் சேவை நடைபெற்றது.

பின்பு இந்த பஸ் சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. கிளிநொச்சி அக்கராயனில், தனியார் பஸ் தரித்துச் செல்ல முடியாதென்று கிளிநொச்சி தனியார் பஸ் சங்கம் எடுத்த முடிவு காரணமாக துணுக்காயிலிருந்து யாழ்ப்பாணம் வரை நடைபெற்ற பஸ் சேவையும் இடைநிறுத்தப்பட்டது.

இதன் காரணமாக கடந்த ஏழு ஆண்டு காலமாக மேற்படி கிராம மக்கள் போக்குவரத்து நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளனர். மேற்படி வழித்தடத்தில் பஸ் சேவையை நடத்துமாறு முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர், கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் ஆகியோருக்கு கடிதங்கள் கையளிக்கப்பட்டுள்ள போதிலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு கிராம அபிவிருத்திச் சங்கங்களிடம் காணப்படுகின்றன.

இரு மாவட்டச் செயலகங்களிலும் நடைபெற்ற கூட்டங்களில் இவ்விடயம் ஆராயப்பட்டுள்ள போதிலும் பஸ் சேவைகள் இதுவரை நடைபெறவில்லை. கிளிநொச்சியிலிருந்து கொக்காவில், புத்துவெட்டுவான், ஐயன்கன்குளம் வழியாக துணுக்காய் வரை ஒரு பஸ் சேவையும் அதேபோன்று துணுக்காயிலிருந்து அக்கராயன் வழியாக யாழ்ப்பாணம் வரை ஒரு பஸ் சேவையும் நடத்துவதற்கு இரு மாவட்டங்கள் சம்பந்தப்பட்டிருப்பதன் காரணமாக கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டச் செயலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென போக்குவரத்து நெருக்கடியினை எதிர்கொண்டுள்ள கிராம அபிவிருத்திச் சங்கங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .