2024 மே 03, வெள்ளிக்கிழமை

Brexit: ஜனநாயகமும் தலையில் மண்வாரிப் போடுதலும்

Thipaan   / 2016 ஜூன் 30 , மு.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகலிங்கம் கோபிகிருஷ்ணா

சரியாக ஒரு வாரத்துக்கு முன்னர் இடம்பெற்ற மாபெரும் சர்வஜன வாக்கெடுப்பில், ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த மக்கள், தங்கள் எதிர்காலம் குறித்த மிகப்பெரிய முடிவொன்றை எடுத்திருக்கிறார்கள். 1967ஆம் ஆண்டு ஐரோப்பிய சமுதாயம் என்ற பெயரில் உருவாக்கப்பட்ட அமைப்பில், 1973ஆம் ஆண்டு இணைந்த பிரித்தானியா, 2016ஆம் ஆண்டு இடம்பெற்ற வாக்கெடுப்பில், ஐக்கிய இராச்சியமாக வெளியேறுகிறது. யாருமே எதிர்பார்த்திருக்காத இந்த முடிவுகள், ஐக்கிய இராச்சியத்தில் மாத்திரமல்லாது உலகம் முழுவதிலுமே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தனஃ ஏற்படுத்தியிருக்கின்றன.

ஐக்கிய இராச்சியப் பிரதமர் டேவிட் கமரோனின் கட்சியான பழைமைவாதக் கட்சியிலும் இன்னும் சில தரப்புகளிலும், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் வெளியேற வேண்டுமென்ற குரல் எழுந்துவந்தது. நாடாளுமன்றத்தையோ அல்லது அரசாங்கச் செயற்பாடுகளையோ சீர்குலைக்குமளவுக்கு அந்தக் குரல்கள் காணப்பட்டிருக்கா விட்டாலும், கட்சிக்குள்ளே அது குழப்ப நிலையை ஏற்படுத்துமென, டேவிட் கமரோன் கருதினார். அதனால் தான், 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில், தனது கட்சி வெற்றிபெறுமானால், இதுகுறித்த சர்வஜன வாக்கெடுப்பை நடத்தப் போவதாக, கமரோன் உறுதியளித்தார்.

தனது கட்சிக்குள்ளிருந்த எதிர்ப்பாளர்களின் வாயை அடைப்பதற்காகவே அந்த வாக்குறுதியை அவர் வழங்கினாலும், தான் சொன்னது போலவே, சர்வஜன வாக்கெடுப்பை கமரோன் அறிவித்தார். வெளியேறுவதற்குப் போதுமான ஆதரவு இருக்காத நிலையில், அந்தக் கட்சி தோற்கப்போகிறது என்பது அவரைப் பொறுத்தளவில் உறுதியாக இருந்தது. எனவே, வெளியேற வேண்டுமென்ற குரல்களை அடைத்தல், கட்சியின் ஒற்றுமையைப் பாதுகாத்தல் என, ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடிக்கப் போவதாக கமரோன் எண்ணினார். அவரது எண்ணத்திலும் தவறிருக்கவில்லை.

ஆனால், வெளியேற வேண்டுமென்ற பிரிவின் பிரசாரத்தாலும் இன்னும் சில காரணங்களாலும், கமரோனின் நினைப்புத் தவறாகிப் போனது. மாங்காய்களை வீழ்த்துவதற்காக அவர் எறிந்த கல், அவரது மண்டையையே தாக்கியது. இவை அனைத்துமே இடம்பெற்றமைக்கு ஒரே காரணம், ஜனநாயகம் என்ற ஒற்றைச் சொல் தான்.

இந்த வாக்கெடுப்பில், பிரதான கட்சிகளான பழைமைவாதக் கட்சி, தொழிலாளர் கட்சி இரண்டுமே, தொடர்ந்தும் ஒன்றியத்தில் இருப்பதற்கு ஆதரவு தெரிவித்தன. ஆனால், பழைமைவாதக் கட்சியின் சில உறுப்பினர்கள் - அமைச்சர் உட்பட - வெளியேறுவதற்கு ஆதரவளித்தனர். வெளியேறும் தரப்பின் முக்கியஸ்தர்களாக, பழைமைவாதக் கட்சியைச் சேர்ந்தவரும் இலண்டனின் முன்னாள் மேயருமான பொரிஸ் ஜோன்சனும், யுகிப் என அழைக்கப்படும் ஐக்கிய இராச்சிய சுதந்திரக் கட்சியின் தலைவரான நைஜல் ‡பராஜும் காணப்பட்டனர். ஆனால், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், முக்கிய அமைச்சர்கள் என இருந்த 'தொடர்ந்திருப்போம்' பகுதியைப் பார்க்கும் போது, மற்றைய தரப்பு, வெறுமனே கத்துக்குட்டிகள் போலவே தென்பட்டது.

ஆனால், வெளியேற வேண்டுமென்ற பகுதியின் பிரசாரங்கள், மிகவும் கடும்போக்கானவையாகக் காணப்பட்டன. இனவாதம், வெளிநாட்டு எதிர்ப்பு, பல்கலாசாரத்துக்கு எதிர்ப்பு, பொய்கள் என, அப்பகுதியின் பிரசாரங்களுக்கு ஈடுகொடுக்க, மற்றைய பகுதிக்கு முடியவில்லை. ஆரம்பத்தில் சிறிய இயக்கமாக ஆரம்பித்த இந்தப் பகுதி, வாக்கெடுப்பு நெருங்க நெருங்க, தவிர்க்க முடியாத பகுதியாக மாறியது.

இதில் குறிப்பிடத்தக்கதாக, வெளியேறும் பகுதியால் முன்வைக்கப்பட்ட பல கருத்துகள் அல்லது பிரசாரங்கள், பொய்யானவை அல்லது தவறானவை என, நிபுணர்களாலும் ஊடகங்களாலும் மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டப்பட்டது. ஆனால், அந்தப் பகுதியை அது பாதிப்பதாகத் தெரியவில்லை. இவர்களது பிரசாரம், ஒரு வகையில் அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப்பின் பிரசாரங்களைப் பிரதிபலித்தது.

டொனால்ட் ட்ரம்ப் தெரிவிக்கும் கருத்துகளில் 71 சதவீதமானவை 'படுபொய்', 'பொய்' அல்லது 'அனேகமாகப் பொய்' என்ற வகைகளுக்குள் அடங்குவதாக, அரசியல்வாதிகளது கருத்துகளை ஆராயும் பக்கச்சார்பற்ற இணையத்தளமான PolitiFact தெரிவிக்கிறது. ஆனால், ட்ரம்ப்பின் ஆதரவு, குறைவடைவதாகத் தெரியவில்லை.

நாடொன்றின் பெரும்பான்மையினரைச் சிறுபான்மையினராகவோ அல்லது ஆபத்துக்கு உள்ளாகியுள்ளவர்களாகவோ உணரவைத்துவிட்டால், எந்தவொரு தவறான விடயத்தையும் ஆளும் தரப்பினரால் அல்லது அரசியல்வாதிகளால் செய்துவிட முடியுமென்று வழக்கமாகச் சொல்வார்கள். இலங்கையில் அண்மைக்காலத்தில் பொது பல சேனா எழுப்பிய சிங்களவர் - முஸ்லிம் பிரச்சினையில், பொது பல சேனாவை சிங்கள மக்களில் கணிசமானோர் நேரடியாக எதிர்க்காமைக்கு, இது தான் காரணமாக அமைந்தது.

அதே விடயத்தைத் தான், வெளியேற வேண்டுமென்ற பிரிவினர் செய்தனர். 'அகதிகள் நாட்டுக்குள் இலகுவாக வந்து, உங்களது வரிப் பணத்தில் வாழப் போகிறார்கள்', 'வெளிநாட்டவர்கள் வந்து, உங்களின் வேலைகளைப் பறிக்கிறார்கள்', 'உங்களது வரிப்பணம், உங்களுக்கன்றி, வேறு யாருக்கோ செலவாகிறது', 'உங்கள் நாட்டை, உங்களுக்கென்று மீட்டெடுங்கள்' ஆகியன தான், வெளியேற வேண்டுமென்ற பிரிவினரின் வாதமாக இருந்தது. மக்களை அச்சமூட்டினார்கள், மக்கள் அஞ்சினார்கள். தங்களது ஜனநாயக உரிமையைப் பயன்படுத்தி, தங்களுக்குத் தாங்களே வேட்டு வைத்துக் கொண்டார்கள், ஏனெனில், விலக வேண்டுமென்ற தரப்பினரின் கருத்துகளில், பெருமளவுக்கு உண்மையிருந்திருக்கவில்லை.

இந்த வாக்கெடுப்பு முடிவுகள் வெளியானமையைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்திருந்த எட்வேர்ட் ஸ்னோடன் (அமெரிக்க இரகசியங்களை வெளியிட்டுச் சர்ச்சைக்குள்ளானவர்) தெரிவித்திருந்த கருத்து, மிக முக்கியமானது. 'பிரெக்ஸிற் வாக்கெடுப்புகளில் என்ன முடிவு வந்தாலும், சனத்தொகையில் பாதிப்பேர், தங்களின் நலனுக்கெதிராக வாக்களிக்க வைக்கப்பட எவ்வளவு இலகுவாக இயலுமென்பதைக் காட்டுகிறது. முக்கியமான பாடம்'. அவர் சொன்னதை இலகுவான முறையில் சொல்வதானால், 'சனத்தொகையில் பாதிப்பேரை, தங்களில் தலையில் மண்ணை வாரிப் போட வைத்துக் கொள்வது, எவ்வளவு இலகுவானது என்பதை இது காட்டுகிறது'. அது தான் ஜனநாயகம்.

ஜனநாயகத்தின் மிகப்பெரிய பலம் என்னவென்றால், அனைவருமே தேர்தல் முடிவுகளில் தாக்கத்தைச் செலுத்தலாம். ஆனால், ஜனநாயகத்தின் மிகப்பெரிய பலவீனமும் அது தான். இந்த முடிவுகள் வெளியான பின்னர், வெளியேற வேண்டுமெனத் தெரிவித்து வாக்களித்த பிரிவினர் சிலரை, இங்கிலாந்து ஊடகங்கள் பேட்டி கண்டிருந்தன. அவர்கள் தெரிவித்த கருத்துகள், ஒரு பக்கம் கோபத்தையும் மறுபுறத்தில் இயலாமையையுமே ஏற்படுத்தின. அவர்கள் சொன்னதன் சாராம்சமாக 'வெளியேற வேண்டுமென நான் வாக்களித்தேன். எனது வாக்கு, இந்தத் தேர்தலில் தாக்கம் செலுத்தாது என்று நினைத்தேன். தற்போது வெளியேறி விட்டோம் என்பதைத் தொடர்ந்து, எதிர்காலம் குறித்த அச்சம் ஏற்பட்டுள்ளது' என்பதே அமைந்தது. இவ்வாறு சொன்னோர், ஏராளமானோர்.

அதிலும், வாக்கெடுப்பு முடிவுகள் வெளிவந்த அன்றைய தினம் காலையிலேயே, வெளியேற வேண்டுமென்ற பிரிவின் முக்கியஸ்தரான நைஜல் ஃபராஜ், 'நாளொன்று 350 ஸ்டேர்லிங் பவுண்ட்ஸ்களை ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஐக்கிய இராச்சியம் வழங்குகிறது. அதை, தேசிய சுகாதார சேவைகளுக்குச் செலவளிப்போம்' என்ற, அவர்களது முக்கியமான பிரசாரத் தொனிப்பொருள், தவறானது என ஏற்றுக் கொண்டார். அது தவிர, வெளிநாட்டவர்களின் வரவைத் தடுப்போம், நாட்டின் கட்டுப்பாட்டை உடனடியாகத் திருப்பியெடுப்போம், பொருளாதாரத்தில் எந்தவிதத் தாக்கமும் ஏற்படாது ஆகிய மூன்று பிரசாரத் தொனிப்பொருட்களும், பொய்யென ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன அல்லது பொய்யாக மாறியுள்ளன.

இந்த முடிவு காரணமாகப் பதவி விலகவுள்ள பிரதமர் டேவிட் கமரோனும், முக்கியமான இழப்பாக அமையவுள்ளார். கமரோன் மீதான விமர்சனங்களும் அவரது பலவீனங்களும் பரவலாகப் பேசப்பட்டவை தான். ஆனால், பாரிய பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுத்ததோடு மாத்திரமல்லாது, வலதுசாரி பழைமைவாதியாக இருந்தாலும் சமபாலுறவாளர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் உரிமைகளை மதித்த ஒருவர் என்ற பெயர் காணப்படுகிறது. ஆனால், அடுத்த பிரதமராக வருவதற்கு அதிக வாய்ப்பைக் கொண்டவரான பொரிஸ் ஜோன்சன், கடும்போக்கு வலதுசாரி. இனவாதத்தையும் பிரிவினைவாதத்தையும் ஊக்குவிக்கிறார் என்ற குற்றச்சாட்டுக் காணப்படுகிறது. ஆகவே, கமரோன் என்பவரின் பிரதமர் ஆட்சி சட்டியாக இருந்தால், பொரிஸ் ஜோன்சனின் ஆட்சி, அடுப்பாக அமையுமென்ற அச்சம் காணப்படுகிறது.

இந்நிலையில் தான், ஜனநாயகம் என்ற மாபெரும் கருவியைப் பயன்படுத்தி, அவசரமான முடிவொன்றை ஐக்கிய இராச்சிய மக்கள் எடுத்திருக்கிறார்கள் என்பதைத் தவிர, வேறொன்றையும் கூற முடியாதுள்ளது. அதுவும், வெளியேற வேண்டுமென வாக்களித்தோரில், 50 வயதுக்கு மேற்பட்டோரே, வெளியேற வேண்டுமென்பதற்கான பெரும்பான்மை ஆதரவை வழங்கியிருக்கிறார்கள். அதாவது, இந்த முடிவால் பாதிக்கப்படவுள்ள இளையோரின் விருப்பத்துக்கு மாறான முடிவையே, இந்த ஜனநாயகச் செயல் தந்திருக்கிறது.

ஆனால், ஜனநாயகமென்பது வெறும் கருவி தான். அது, கோப்பை போன்றது. அந்தக் கோப்பையைப் பயன்படுத்தி, நீர் அள்ளுவதா அல்லது மண்ணை வாரித் தலையில் போடுவதா என்பது, எமது கையில் தான் உள்ளது என்பதை ம(ற)றுக்க முடியாது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .