2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

பிரெக்ஸிட் வாக்கெடுப்பு: பிரித்தானியா வெளியேறுமா?

Thipaan   / 2016 ஜூன் 30 , மு.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

தீர்மானிக்கும் சக்தியாக, மக்கள் எப்போதும் இருப்பதில்லை. ஆனால், அவர்கள் தீர்மானமான சக்தியாகும்போது, பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் மாயத்தை நிகழ்த்துவார்கள். ஐனநாயகம் என்ற அழகிய முகமூடி, தேர்தல் என்ற கவசத்தினூடு முழுமையாக மறைத்திருக்கின்றபோதும்,

அக்கவசத்தையை ஆயுதமாக்கி மக்கள் நிகழ்த்தும் மாயம், ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை அல்ல, மக்கள் மீதான நம்பிக்கைக்கு எடுத்துக்காட்டாயுள்ளது. 

நடக்கும் என்பார் நடக்காது, நடக்காது என்பார் நடந்துவிடும் என்ற பாடல் வரிகள், அண்மைய பிரித்தானிய நிலைவரங்களை விளக்கப் பொருத்தமானவை. பிரெக்ஸிட் வாக்கெடுப்பு எனப் பரவலாக அறியப்பட்ட, ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா தொடர்ந்தும் உறுப்பு நாடாக இருப்பதா விலகுவதா எனத் தீர்மானிக்கக் கடந்த வாரம் நடந்த பிரித்தானிய சர்வஜன வாக்கெடுப்பு முடிவுகள் உலகத்தை உலுக்கின. ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியதுடன், பிரித்தானியாவின் இருப்பையும் சிக்கலுக்குள்ளாக்கிய வகையில் இவ்வாக்கெடுப்பின் முடிவுகள் முக்கியமானவை.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து மேலதிக சலுகைகளைப் பெற, பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரோன் ஆடிய சூதாட்டமான இந்த சர்வஜன வாக்கெடுப்பு, இறுதியில் சொந்தச் செலவில் சூனியம் வைத்த கதையாயிற்று.

உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமான பிரித்தானியா, ஐரோப்பாவில் ஜேர்மனிக்கு அடுத்த பெரிய பொருளாதாரமாகும். இவ்விலகல், பிரித்தானியாவையும் ஐரோப்பிய ஒன்றியத்தையும் மட்டுமன்றி, ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக, குடிவரவு உறவுகளைப் பேணும் ஏனைய நாடுகளையும் பாதிக்கும். 1957இல் உருவாக்கிய ஐரோப்பிய பொருளாதாரச் சமூகத்தில், பிரித்தானிய உறுப்புரிமையை 1973 வரை பிரான்ஸ் மறித்தது. பிரெஞ்சு ஜனாதிபதி சார்ள் டி கோலின் மறைவின் பின்பே, பிரித்தானியா அதில் இணைய முடிந்தது. 1975இல் ஆட்சிக்கு வந்த பிரித்தானிய தொழிற் கட்சி, பிரித்தானியா- ஐரோப்பிய பொருளாதாரச் சமூகத்தில் தொடர்வதா இல்லையா எனத் தீர்மானிக்கும் சர்வஜன வாக்கெடுப்பை நடாத்தியபோது, 67 சதவீதம் பேர் இணைந்திருப்பதை ஆதரித்தனர். அதன் பின் அத்தகைய சர்வஜன வாக்கெடுப்பை நடாத்தும் முயற்சிகள் பலனளிக்கவில்லை.

1993இல், ஐரோப்பிய பொருளாதார சமூகத்தின் புதிய வடிவமாக ஐரோப்பிய ஒன்றியம் உருப்; பெற்றது. ஆறு நாடுகளுடன் தொடங்கிய ஐரோப்பிய பொருளாதாரச் சமூகம், 12 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியமாகி, இன்று 28 உறுப்பு நாடுகளுடன் உலகின் முக்கியமானதொரு பொருளாதார வல்லரசாயுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடாகிய போதும், ஐரோப்பியப் பொது நாணயமான யூரோவை, பிரித்தானியா தனது நாணயமாக்காததுடன், ஐரோப்பிய நாடுகட்குப் பொதுவான குடிவரவு, குடியகல்வு உடன்பாடான ஷென்ஜென் நடைமுறைகளையும் ஏற்கவில்லை.     

பிரித்தானியாவின் பகுதிகளான இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, வேல்ஸ், வட அயர்லாந்து ஆகிய நான்கும் இவ்வாக்கெடுப்பில் வௌ;வெறுவிதமாக வாக்களித்துள்ளன. இவ்வேறுபாடுகள், ஏலவே முரண்பாடான சகவாழ்வை நடத்தும் இந்நான்கு பகுதிகளின் எதிர்காலத் திசைவழி பற்றிய கேள்விகளை எழுப்பியுள்ளன.

இங்கிலாந்தில், 54 சதவீதம் பேர் வெளியேற்றத்தை ஆதரித்து வாக்களித்துள்ளனர். எனினும், தலைநகர் இலண்டனிலும் அண்டிய பகுதிகளிலும் ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்வதற்காக வாக்களித்துள்ளனர். இங்கிலாந்தின் கிராமப்புறங்களும் புறநகர்ப்பகுதிகளிலும் வெளியேறுவதற்கு ஆதரவாக பெரும்பாலோர் வாக்களித்துள்ளனர். வேல்ஸ்ஸும்

வெளியேற்றத்தை ஆதரித்து வாக்களித்துள்ளது. இங்கிலாந்தையொத்தவாறு, 53 சதவீதம் பேர் வெளியேற்றத்தை ஆதரித்து வாக்களித்தபோதும் தலைநகரான கார்டி‡ப்; வாக்காளர்களில் 60 சதவீதம் பேர் தொடர்ந்தும் இருப்பதை ஆதரித்துள்ளனர். இங்கிலாந்தும் வேல்ஸும் வெளியேறலை ஆதரித்த போதும், இவ்விரு பகுதிகளதும் தலைநகரங்களும் பெருநகரங்களும் தொடர்ந்திருப்பதை ஆதரித்தமை வாக்கெடுப்பின் சமூகப் பொருளாதாரக் காரணிகளைச் சுட்டுகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுதை பிரித்தானியர்கள் ஆதரித்த ஒரு காரணம், அங்கு எழுச்சி காணும் தேசியவாத நிலைப்பாடும் குடியேறிகட்கும் அகதிகட்கும் எதிரான மனநிலை எனச் சிலர் வாதிப்பர். ஆனால், வாக்களிப்பின் பின்னுள்ள சமூகப் பொருளாதாரக் காரணிகள் பற்றி எந்த நாளேடும் சொல்லவில்லை. வாக்களிப்பை மூன்று அடிப்படைகளில் விளங்கலாம். முதலாவது, ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்ததன் விளைவாக உள்வாங்கிய திறந்த சந்தையும் அதன் பொருளாதாரமும். இரண்டாவது, 2008இல் ஏற்பட்ட உலகப் பொருளாதார நெருக்கடியும் அது முடிவுறாமையும். மூன்றாவது, கடந்த ஐந்து ஆண்டுகளாக பிரித்தானிய அரசாங்கம் கடைப்பிடிக்கும் சிக்கன நடவடிக்கைகளும் சமூக நல உதவி வெட்டுக்களும்.

இம் மூன்றும் பிரித்தானியாவின் உழைக்கும் மக்களை மிகப் பாதித்துள்ளன. திறந்த சந்தையும் கட்டற்ற குடிவரவும் சாதாரண உழைக்கும் பிரித்தானியர்களின் அன்றாட வாழ்வில் செலுத்திய தாக்கம் பெரிது. 2008இல் ஏற்பட்ட உலகப் பொருளாதார நெருக்கடியில் இருந்து பிரித்தானியா மீண்டுள்ளதாகச் சொல்லப்படினும், அம்மீட்சி முழுமையானதல்ல. பொருளாதாரத்தின் மையங்களாகத் திறந்த வணிகமும் தாராளவாத நடைமுறைகளின் ஊற்றுக்கண்களான தலைநகரங்களுமே மீட்சியடைந்தன. ஏனெனில், அங்குதான் நாட்டின் உயர்குடிகளும் செல்வர்களும் அரசியல்வாதிகளும் வசிக்கிறார்கள். அரசாங்கம், அவர்களது நலன்கட்கு முன்னுரிமை வழங்குகிறது. பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியத்துடன் தொடர்ந்திருப்பதை இலண்டன், கார்டிவ் ஆகியன ஏன் ஆதரித்தன என்பதை விளங்க இது போதுமானது.  

இவ் வாக்கெடுப்பு முடிவுகளைப் பகுத்து நோக்கின், குறைந்த மாத வருமானம் பெறுபவர்கள், உயர் கல்வியறிவு பெறாதவர்கள், வேலைவாய்ப்பற்றவர்கள் எனச் சமூக அடுக்குகளில் தாழ்நிலையில் உள்ளவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறுவதை ஆதரித்துள்ளனர். வேறு வகையிற்; சொன்னால், திறந்த சந்தையாலும் நவ-தாராளவாதப் பொருளாதாரத்தாலும் மோசமாக உறிஞ்சப்பட்டோரும், சமகாலப் பொருளாதார முறையால் ஒதுக்கப்பட்டுப் பொருளியல் முடிவுகளைத் தீர்மானிக்கத் தகுதியற்றோர் எனக் கருதப்படும் சாதாரணமாக மக்கள் வரலாற்றைத் திருப்பும் இச்செயலைச் செய்திருக்கின்றனர். 

இளையோர், குறிப்பாக 18 முதல் 24 வயதுக்கு உட்பட்டோரில் 73 சதவீதமானோரும் 24 முதல் 34 வயதுக்குட்பட்டவர்களில் 62 சதவீதமானோரும் தொடர்ந்தும் நிலைக்க வாக்களித்துள்ளனர். மாறாக, 65 வயதுக்கு மேற்பட்டோரில் 60 சதவீதமானோரும் 45 முதல் 64 வரையான வயதையுடையோரில் 57 சதவீதமானோரும் வெளியேறுதற்காக வாக்களித்துள்ளனர். நவ தாராளவாதம் எவ்வாறு இயங்குகிறது என இது மேலுந் தெளிவாக்குகிறது. கல்வி கற்றுப் பாடசாலையில் இருந்தோ அல்லது பல்கலைக்கழகங்களில் இருந்தோ தொழிற் சந்தைக்குள் நுழையும் இளையோர், மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். நடைமுறையிலுள்ள சுரண்டலும் தீய பொருளாதாரக் கட்டமைப்பும் தமக்கு நன்மைதரும்; எனக் கல்விமுறை அவர்களை நம்பவைக்கிறது. ஆனால், இப்பொருளாதார அமைப்புக்குள் இருபது ஆண்டுகளுக்கு மேல் வேலை செய்தோர் இந்த நச்சுவட்டத்தின் மோசமான விளைவுகளை நன்கறிவர்;. திறந்த சந்தையும் ஐரோப்பிய ஒன்றியக் கூட்டிணைவும் அவர்களின் வாழ்வை எவ்வாறு பாதித்துள்ளது என அனுபவவாயிலாக அறிந்ததன் விளைவை அவர்களின் வாக்களிப்புக் கோலம் காட்டுகிறது.

தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் இருப்பதை ஸ்கொட்லாந்தினதும் வட அயர்லாந்தினதும் பெரும்பான்மையோர் ஆதரித்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகின்;, அது இவை இரண்டினதும் விருப்புக்கும் மாறான முடிவாகும். இந் நிலையில் அவை பிரித்தானியாவில் தொடர்ந்திருப்பதா பிரிந்து தனிநாடுகளாக ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதா என்ற முடிவை எட்டும் நிலையிலுள்ளன. இது பிரித்தானியா என்ற நாட்டின் எதிர்காலத்தைச் சிக்கலாக்கி, ஒரு கூட்டிணைவாக நான்கினதும் இருப்பை நிச்சயமற்றதாக்கியுள்ளது.

ஐரோப்பா எங்கும் செல்வாக்குப் பெற்றுவரும் தீவிர வலதுசாரிக் கட்சிகளின் எழுச்சி இன்னொரு எதிர்காலத்தைக் கோருகிறது. அதற்கு பிரித்தானியாவும் விலக்கல்ல என வாக்கெடுப்பு முடிவுகள் சுட்டுகின்றன. பிரித்தானியாவின் பெரிய இரண்டு கட்சிகளான பழமைவாதக் கட்சியும் தொழிற் கட்சியும் பிரித்தானியா தொடர்ந்தும் இருப்பதற்காகப் பிரசாரம் செய்தபோது குடியேறிகட்கு எதிரான தீவிர வலதுசாரிக் கட்சியான ஐக்கிய இராச்சிய சுதந்திரக் கட்சி வெளியேறுவதை ஆதரித்துப் பிரசாரம் செய்தது. வாக்கெடுப்பு முடிவுகள் இக் கட்சியையும் அதன் தலைவர் நைஜல் ‡பராஜையும் முன்னிலைக்குக் கொண்டுவந்துள்ளன.

பிரித்தானியாவின் வாக்கெடுப்பைத் தொடர்ந்து பிரான்ஸ், நெதர்லாந்து, ஒஸ்திரியா, ஃபின்லாந்து, ஹங்கேரி, இத்தாலி, போர்த்துக்கல், ஸ்லோவாக்கியா ஆகிய எட்டு நாடுகள் சர்வஜன வாக்கெடுப்புக்குத் தயாராகின்றன. 

இப் பின்னணியில் பிரித்தானியாவின் அடுத்தகட்ட நடவடிக்கையை நோக்கல் தகும். ஐரோப்பிய ஒன்றிய நாடொன்று அங்கத்துவத்தில் இருந்து விலகும் அடிப்படைகளை லிஸ்பன் உடன்படிக்கை கூறுகிறது. அதன்படி ஐரோப்பிய ஒன்றிய பட்டயத்தின் 50ஆவது உறுப்புரையை நடைமுறைப்படுத்தி வெளியேறவியலும். ஆனால், அவ்வுறுப்புரைப்படி, ஒரு நாடு அதன் அரசியலமைப்புத் தேவையின் அடிப்படையிலேயே விலகலாம். எனவே, அதைத் தீர்மானிக்கும் அதிகாரம் நாடாளுமன்றினது.

மக்கள் வாக்கெடுப்பின் அடிப்படையில் பிரித்தானியா பிரிந்து போக வேண்டும் என்பது கட்டாயமல்ல. ஏனெனில், இந்த சர்வஜன வாக்கெடுப்பின் அடிப்படைகளை உருவாக்க நாடாளுமன்றில் நிறைவேற்றிய சட்டம்,

இம்முடிவுகளைக் கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றோ அல்லது முடிவுகள் கட்டுப்படுத்த வல்லவை என்றோ சொல்லவில்லை. 

மக்கள் எவ்வாறு வாக்களித்தாலும் இறுதியில் முடிவை எடுப்பது நாடாளுமன்றமே. எனவே, பிரித்தானிய வெளியேற்றம் முடிந்த முடிவல்ல. இதை நன்கறிந்தே பிரித்தானியப் பிரதமர் உடனடியாக விலகாமல் ஒக்டோபர் மாதம் விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும் பிரிவு நிகழ இரண்டு ஆண்டுகள் வரை எடுக்கும் எனவும் சொல்லியுள்ளார். 

பிரித்தானியாவின் விலகல் உலகப் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்துவோரின் நலன்கட்கு நல்லதல்ல. வாக்கெடுப்பு முடிவு ஒரு பாரிய சூறாவளியை ஏற்படுத்தியுள்ளது. இது எதிர்பாராதது. இப்போது அதைச் சமாளிக்கும் வேலைகள் துரித கதியில் நடக்கின்றன. ஊடகங்கள் பிரித்தானியா தொடர்ந்திருக்க வேண்டிய தேவையை வலியுறுத்துகின்றன. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதை ஆதரித்து வாக்களிக்க வேண்டும் எனக் கோருகின்றன.

இன்னொருபுறம் ஸ்கொட்லாந்து பிரிவதைத் தடுக்க ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்திருப்பதற்காக நாடாளுமன்றம் வாக்களிக்க வேண்டும் எனக் கேட்கப்படுகிறது. அனைத்தையும் உணர்ந்த ஜேர்மனிய சான்செலர் அங்கெலா மேர்க்கல், பிரித்தானியா விடயத்தில் பொறுமை காக்கும்படி வேண்டுகிறார்.  

பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிந்து செல்ல வாக்களிக்காது என்றார்கள். ஆனால் வாக்களித்தது. அதேபோற் பிரிந்து போகிறது என்பார், ஆனால் பிரியாது.

சுருங்கச் சொன்னால்:

நடக்காது என்பார் நடந்துவிடும், நடக்கும் என்பார் நடக்காது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .