2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

'வறுமையை ஒழிக்க முன்னர் சிந்தனையில் மாற்றம் ஏற்பட வேண்டும்'

Suganthini Ratnam   / 2016 ஜூலை 01 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

வறுமையினை இல்லாதொழிப்பதற்கு முன்னர் மனப்பாங்குகளிலும் சிந்தனைகளிலும் பாரம்பரியமான சில நடைமுறைகளிலும் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய தேவை உள்ளது என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

பல்துறைசார் போஷாக்கு அபிவிருத்தி செயல்திட்டத்தின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான மீளாய்வுக் கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இவ் மீளாய்வுக் கூட்டத்தில் பிரதேச செயலக ரீதியாக  மேற்கொள்ளப்பட்ட போஷாக்கு தொடர்பான பல்துறை சார் செயற்பாட்டுத்திட்டம் தொடர்பான வேலைத்திடட்டங்கள் மீளாய்வு செய்யப்பட்டன. அத்துடன்  எதிர்கால நடவடிக்கை தொடர்பான திட்டமிடலும் நடைபெற்றது.

இதில் மேலதிக அரசாங்க அதிபர்  எஸ்கிரிதரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜீ.கிரேஸ், கிரான் பிரNதுச சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய  கலாநிதி எஸ்.ராமச்சந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.  அத்துடன் பிரதேச செயலாளர்கள், திணைக்களத்தலைவர்களும் பிரதிநிதிகளும் பங்கு கொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில்  இளவயது திருமணம், பாடசாலை இடைவிலகல், பெற்றோர் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. இவை அனைத்துக்கும்; வறுமை  முழுமையான காரணமல்ல. வெளிநாடு செல்வதற்காக அரசாங்கம் விதித்திருக்கின்ற கட்டுப்பாடுகளை மீறியும் வெளிநாடுகளுக்குச் செல்பவர்களும் இருக்கிறார்கள். அங்கு சென்று திரும்பி வந்தவர்களும் இருக்கிறார்கள்.

வறுமையினை இல்லாதொழிப்பதற்கு முன்னர் மனப்பாங்குகளிலும் சிந்தனைகளிலும் பாரம்பரியமான சில நடைமுறைகளிலும் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய தேவை உள்ளது. பல்துறைசார் போஷாக்கு அபிவிருத்தி செயல்திட்டமானது  ஒரு பிரதேச செயலாளருக்கு மட்டும் பொறுப்பளிக்கப்பட்ட விடயமல்ல. தேசிய ரீதியானதொரு விடயம். இதற்கு அனைத்துத் துறை சார்  திணைக்களங்களும் இணைந்து செயற்பட வேண்டும். அதன் மூலமே   ஜனாதிபதியின் சிந்தனையில் உதித்த போஷனைக் குறைவற்ற நாட்டைக் கட்டியெழுப்ப முடியும்.   

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான தொழில் துறைகளான விவசாயம், மீன்பிடி உள்ளிட்ட அனைத்துத் துறைகளையும்  மேம்படுத்துவதன் மூலம் மக்கள் மத்தியில்  வருமான மட்டத்தினை உயர்த்தி மக்களது திறன்களை மேம்படுத்த முடியும்.
அத்துடன் துறை சார்ந்த திணைக்களங்கள் கிராமங்கள், குடும்பங்கள் ரீதியாக  கவனங்களைச் செலுத்தி ஏற்கனவே வழங்கப்பட்ட  வாழ்வாதார உதவிகள், பயிற்சிகள், மேலதிக நடவடிக்கைகளில் ஏற்பட்ட முன்னேற்றம் அல்லது முன்னேற்றம் ஏற்படாமை ஆகியவற்றுக்கான காரணங்கள்  கண்டறியப்பட வேண்டும்.  அதன் மூலம் தொழில் துறைகளை சிறப்பாக முன்னேற்ற முடியும்' என்றார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .