2024 மார்ச் 28, வியாழக்கிழமை

வெற்றிக்காக காய் நகர்த்த தொடங்கிய ஜே.ஆர்

Thipaan   / 2016 ஜூலை 04 , மு.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்.கே.அஷோக்பரன் LLB (Hons)

 

 

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 46)

பதவி விலகிய ஜே.ஆர்

ஜே.ஆர் என்று பிரசித்தமாக விளிக்கப்படும் ஜூனியஸ் ரிச்சர்ட் ஜெயவர்த்தன, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப்பதவிக்கு வந்ததிலிருந்து, சிறிமாவோ தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசாங்கத்துக்கு எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி கடும் சவாலைக் கொடுக்கத் தொடங்கியது. 1977இல் ஆட்சியைப் பிடிப்பதற்கு பகீரதப் பிரயத்தனம் புரிந்துகொண்டிருந்த ஜே.ஆர், 1975ஆம் ஆண்டு மே மாதம் தேசிய அரசுப் பேரவையிலிருந்து (சட்டவாக்கசபை) பதவி விலகினார். கொழும்பு தெற்கு தேர்தல் தொகுதியிலிருந்து தேசிய அரசுக் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த ஜே.ஆர் பதவி விலகியதன் காரணமாக, இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டிய தேவை உண்டானது. அன்றிருந்த சூழலில் இடைத்தேர்தல்கள், அரசாங்கத்துக்குச் சாதகமாக இருக்கவில்லை. இடைத்தேர்தல் தோல்விகள் அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் குரலாகப் பார்க்கப்பட்டன. இதுபோன்ற மக்கள் எதிர்ப்பை பதிவு செய்யும் நோக்கில்தான் ஜே.ஆரும் பதவி விலகியிருந்தார்.

ஜே.ஆர் பதவி விலகலின் காரணத்தை உணர்ந்திருந்த சிறிமாவோ அரசாங்கம், அதனையோர் அரசியல் நாடகம் என்று கூறியது. ஆனால், ஜே.ஆர் தன்னுடைய கொழும்பு தெற்கு தொகுதி மக்களுக்கு தான் பதவி விலகியமைக்கான காரணம் பற்றி விரிவானதொரு விளக்கத்தை வழங்கினார். அதில் அவர் 'ஒரு ஜனநாயக நாடொன்றில் மக்களே உயர்வானவர்கள். மக்கள் தம்மில் பொதிந்துள்ள இறைமையினூடாக தமது பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து குறிப்பிட்ட காலத்துக்கு தம்மை ஆள்வதற்கு ஆட்சியில் அமர்த்துகிறார்கள். மக்கள் சில புரிந்துணர்வுகளின் அடிப்படையிலேயே வாக்களிக்கிறார்கள். 17 மே 1970இல் மக்கள் வாக்களித்தபோது, மக்கள் தமது மக்களாணையை குறிப்பிட்ட காலத்துக்கு, அதாவது அடுத்த ஐந்து வருடத்துக்கு ஐக்கிய முன்னணிக்கு வழங்கினார்கள். ஐந்து வருடம் அவர்கள் ஆள்வது என்பதே அந்தப் புரிந்துணர்வு. மீண்டும், 1975இல் அல்லது அதற்கு முதல் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதே அந்தப் புரிந்துணர்வு.  ஏனெனில், மக்கள் 1970இல் ஐந்து வருடங்களுக்கே ஆளும் வாய்ப்பை ஐக்கிய முன்னணிக்கு வழங்கியிருந்தனர். ஐக்கிய முன்னணியின் நிலைப்பாடு எதுவாக இருந்தது? அவர்களது புரிதல் சிம்மாசன உரையிலேயே தெளிவாகத் தெரிந்திருந்தது. சிம்மாசன உரையில் 'அடுத்த ஐந்து வருடங்களில் குறித்த நடவடிக்கைகளை எடுக்க முனைகிறோம்' என்று குறிப்பிட்டார்கள். இங்கு 'அடுத்த ஐந்து வருடம்' என்பதை நான் அழுத்திக்கூற விரும்புகிறேன். ஏனெனில், 1970ஆம் ஆண்டில் மக்களுக்கும் மக்கள் வாக்களித்த அரசாங்கத்துக்குமிடையிலான புரிந்துணர்வும் மக்களாணையும் இந்தக் காலவரைக்குட்பட்டது. பிரதமரும், சிம்மாசன உரை மீதான விவாதத்தில் நாம் ஐந்து வருடகாலத்தில் இந்நாட்டை மாற்றியமைக்க முயல்வோம் என்று குறிப்பிட்டிருந்தார். ஆகவே, ஐக்கிய முன்னணி அரசாங்கமும் மக்களிடமிருந்து பெற்ற மக்களாணையை நன்கறிந்திருந்தது. அதன்படி பார்த்தால், இந்த நாடாளுமன்றம் ஐந்து வருட நிறைவில் 1975ஆம் ஆண்டு கலைக்கப்பட்டு, மக்களுக்கு மீண்டும் புதிதாக தமது பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் உரிமையைப் பயன்படுத்தும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும். இது மக்கள் தீர்மானித்த காலத்தின்படி நடக்கவேண்டுமேயன்றி ஆட்சியிலுள்ளவர்கள் தாமாகத் தீர்மானித்துக்கொண்ட காலத்தின்படி நடக்க முடியாது. ஜனநாயகத்தை பாதுகாக்கவும், ஜனநாயக விழுமியங்களை விரிவாக்கவும், அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கவும் புதிய அரசியல் யாப்பொன்றை இயற்ற மக்களாணையை ஐக்கிய முன்னணி அரசாங்கம் பெற்றிருந்தது. ஆனால், நாடாளுமன்றத்தின் பதவிக்காலத்தை தாம் விரும்பியபடி நீட்டிப்பது ஜனநாயகத்துக்கு இயைபான செயலா, இது ஜனநாயகவிரோதமானது என்பதுடன் மக்களாணைக்கும் விரோதமானது. புதிய குடியரசு யாப்புருவாக்கத்தின் போது நாடாளுமன்றத்தின் பதவிக்காலத்தை நீட்டிப்பது பற்றிய தீர்மானம் அரசியலமைப்புப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட போது, அதனை ஐக்கிய தேசியக் கட்சி எதிர்த்தது. புதிய அரசியலமைப்பை இயற்ற ஐக்கிய முன்னணி அரசாங்கத்துக்கிருந்த மக்களாணையை நாம் ஏற்றுக்கொண்டோம், அந்த யாப்பு மூன்றில் இரண்டு பெரும்பான்மையால் மாற்றப்பட முடியும். ஆனால், நாடாளுமன்றத்தின் ஆயுட்காலத்தை ஐந்து வருடத்திலிருந்து ஏழு வருடமாக்கியமை மக்களின் நம்பிக்கைக்கு விரோதமான செயலாகும். இது சட்டப்பிரச்சினை அல்ல, இது மக்களின் உரிமை மற்றும் நம்பிக்கை சார்ந்த பிரச்சினை. மே 27 1975க்குப் பின்னர், தேசிய அரசுப் பேரவை உறுப்பினர்கள் மக்களாணைப்படி பதவியிலிருக்க மாட்டார்கள். மாறாக, தமக்காக தாம் உருவாக்கிய சட்டங்களின்படியே பதவியில் நீடிப்பார்கள். ஒரு பொதுத்தேர்தலில் மக்களாணையைப் பெற்றதனடிப்படையிலோ அல்லது சர்வஜனவாக்கெடுப்பினடிப்படையிலோ அல்லது யுத்தகாலத்திலேயோ அல்லது தேசிய அவசரகாலநிலையொன்றிலோதான் அதுவும் எதிர்க்கட்சிகளோடு கலந்தாலோசித்தே நாடாளுமன்றத்தின் பதவிக்காலத்தை நீட்டிக்க முடியும். இந்நாட்டின் குடிமகனின் பிறப்புரிமையில் தலையிட எந்தச் சுதந்திர ஜனநாயக நாடாளுமன்றத்துக்கும் உரிமை இல்லை. இது இங்கே நடக்கிறது. என்னால் இந்த ஜனநாயக விரோத நடவடிக்கையில் ஒரு பங்காளியாக முடியாது. எனது கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில் ஜனநாயகத்தின் அடிப்படை விழுமியமொன்றை நான் மீளுணர்த்த விரும்புகிறேன், மக்களே இறைமையுடையவர்கள். அந்த இறைமை அவர்களது வாக்களிக்கும் உரிமையினூடாகவே இயக்கம்பெறுகிறது. அந்த உரிமை மறுக்கப்படுதல், இறைமையைப் பாதிக்கும் செயலாகும். இதற்கு எந்தச் சட்ட வியாக்கியானம் சொன்னாலும் அது அர்த்தமற்றதாகும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றமானது மூன்றிலிரெண்டு பெரும்பான்மையால் மக்களின் இறைமையை இல்லாது செய்யுமானால் அது வல்லாட்சியாகும். இது நெப்போலியன் உயர் அதிகாரம் பெற்றதை அல்லது அடல்‡ப் ஹிட்லர் சர்வாதிகாரியானதைப் போன்றது. நான், எனது பதவியிலிருந்து விலகுவதன் மூலம் ஐந்து வருடங்களில் 1975ஆம் ஆண்டு மீண்டும் தமக்குரிய பிரதிநிதியைத் தேர்ந்தெடுக்கும் ஜனநாயக உரிமையை எனது தொகுதி மக்களுக்கு வழங்குகிறேன். எனது பதவி விலகலானது, மக்கள் இறைமையின் உயர்வைச் சுட்டிக்காட்ட அவசியமானதாகும். ஆகவே, நான் மீண்டும் மக்களின் ஆணையைக் கோருகிறேன்' என்று குறிப்பிட்டார்.

ஜே.ஆர் எனும் அரசியல் தந்திரி

இந்தச் சூழ்ச்சியும் தந்திரமும் தான் ஜே.ஆர். இதனை சிலர் நரித்தனம் என்பதுமுண்டு. ஜே.ஆரின் அரசியல் ஒரு குறித்ததொரு தத்துவத்தின் அல்லது கொள்கையின்பாற்பட்டதல்ல. அது அதிகாரத்தைக் கைப்பற்றும் அதிகார அரசியலின் பாற்பட்டது. முதன்முதலாக சிங்கள மொழியை மட்டும் உத்தியோகபூர்வ மொழியாக்க வேண்டும் என்று சொன்னதே ஜே.ஆர்-தான். எஸ்.டபிள்யூ.ஆர்.டீ.பண்டாரநாயக்க 'தனிச்சிங்கள' சட்டத்தின் மீதேறி அரசியலதிகாரத்தைக் கைப்பற்ற முதலே, அன்றைய காலகட்டத்தில் அதிகாரத்தைக் கைப்பற்ற இதுதான் வழி என்பதை ஜே.ஆர் அறிந்திருந்தார்.

ஆனால், அன்று கட்சியின் அதிகாரம் ஜே.ஆரிடம் இருக்கவில்லை. சிங்களத்தை ஆட்சி மொழியாக்க ஜே.ஆர் முன்மொழிந்தமைக்கு அர்த்தம் ஜே.ஆர் 'சுதேசிய' அல்லது 'தனிச்சிங்கள' கொள்கையுடையவர் என்பதல்ல. ஜே.ஆரைப் பொறுத்தவரையில் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற அது இலகுவான, பலமான வழி. 'அதிகார' அரசியலே ஜே.ஆரின் பாதையாக இருந்தது, அதன் விளைவாகத்தான் ஜே.ஆர் 1978லே சர்வ வல்லமைமிக்க, அதிகாரக் குவியமாக நிறைவேற்றதிகாரம் மிக்க ஜனாதிபதி முறையை கொண்டுவருகிறார். இதனாலேயே சில அரசியல் அறிஞர்கள் ஜே.ஆரை 'மாக்கியாவலியன்' என்று குறிப்பிடுவதுமுண்டு, அதாவது மாக்கியாவலியின் 'இளவரசன்' என்ற நூலில் வரும் சர்வ வல்லமை பொருந்திய இளவரசனாக ஜே.ஆர் நடந்துகொண்டார் என்பதே அந்த விமர்சனமாகும்.

ஜே.ஆரைப் பொறுத்தவரை 1973வரை அவருக்கிருந்த சவால், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியைக் கைப்பற்றுவது, 1973இலிருந்து அது ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதை நோக்கி மாறியது. அதற்காக மக்களைத் தயார்ப்படுத்தவும், சிறிமாவோ ஆட்சிக்கெதிரான மக்களலையொன்றை உருவாக்கும் முயற்சியில் அவர் இருந்தார். ஒரு சாதாரண வெற்றி அவருக்குப் போதுமான அதிகாரத்தை பெற்றுத்தராது, ஆகவே, பிரமாண்டமான வெற்றியொன்றுக்காக தனது காய்களை நகர்த்தத் தொடங்கியிருந்தார்.

1975 ஜூலை 18ஆம் திகதி, கொழும்பு தெற்கு இடைத்தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில் சிறிமாவோ தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசாங்கம் போட்டியிடாது புறக்கணித்தது. ஏனெனில், இதில் போட்டியிட்டு தோல்வியடைந்தால், அது அரசாங்கத்தின் மீதாக அழுத்தத்தை மேலும் அதிகரிக்கும் என்று அவர்கள் உணர்ந்தார்கள். அத்தோடு, ஜே.ஆரின் அரசியல் நாடகத்தில் தாம் பங்குபற்ற விரும்பவில்லை என்ற நிலைப்பாட்டை உடையவர்களாக இருந்தார்கள். ஜே.ஆரை எதிர்த்து சில சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தார்கள். 50,264 பேர் வாக்களித்திருந்த தேர்தலில் 36,919 வாக்குகள் பெற்று 25,801 பெரும்பான்மை வாக்குகளில் ஜே.ஆர் வெற்றி பெற்றிருந்தார். இதனை தனது கொள்கைக்கு கிடைத்த வெற்றியாக மட்டுமல்லாது, அரசாங்கத்துக்கு எதிரான மக்களாணையாக ஜே.ஆர் காட்டினார். இடைத்தேர்தல்கள் ஐக்கிய முன்னணி அரசாங்கத்துக்குச் சாதகமாக இருக்கவேயில்லை.

ஐக்கிய முன்னணி ஆட்சியில் நடந்த 13 இடைத் தேர்தல்களில் 10இல் ஐக்கிய தேசியக் கட்சியும் 1இல் தமிழ் ஐக்கிய முன்னணியும் (தமிழரசுக் கட்சி) வெற்றியீட்டியிருந்தது. ஐக்கிய முன்னணி அரசாங்கம் வெறும் 2 இடைத் தேர்தல்களையே வென்றிருந்தது. 1977 தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வருவதற்கான சமிஞ்ஞைகள் பிரகாரசமாக இருந்தன. ஆனால், அந்தப் பிரகாசம் தமிழர்களைப் பொறுத்தவரையில் தீச்சுவாலையாக மாறியமைதான் கொடுமையான வரலாறு. தந்திரத்தில் மட்டும் ஜே.ஆர் 'மாக்கியாவல்லியனல்ல', ஈவிரக்கமற்ற கொடுங்கோல் தன்மையிலும் மாக்கியாவல்லியன் தான் என்பது நிரூபணமாக அதிக காலம் தேவைப்பட்டிருக்கவில்லை. சிறிமாவோவின் காலத்தில் தமிழ் மக்களின் உரிமைகள் பறிபோயின, ஜே.ஆரின் காலத்தில் உரிமைகள் மட்டுமல்ல, உயிர்களும் உடமைகளும் பறிபோயின. அந்த வரலாற்றை புரிந்துகொள்ள ஜே.ஆரையும், ஜே.ஆரின் அரசியலையும் புரிந்துகொள்ளுதல் அவசியமாகும். ஏனென்றால், மேசைக்கு மேலே கைகொடுத்துக்கொண்டு, மேசைக்குக் கீழே காலைவாரும் தந்திரக்கலையில் ஜே.ஆர் ஒரு சாணக்கியன்.

ஐக்கிய முன்னணியின் ஐக்கியம் குலைந்தது

ஐக்கிய தேசியக் கட்சியின் எழுச்சி ஏற்பட்டுக்கொண்டிருந்த சமயத்தில் சிறிமாவோவுக்கும் அவரது 'தோழர்களுக்குமிடையிலான' உறவு விரிசலடையத் தொடங்கியிருந்தது. 1975 ஓகஸ்ட்டிலே கலாநிதி என்.எம்.பெரேரா, கொழும்பிலே அவரது கட்சியால் நடத்தப்பட்ட கூட்டமொன்றில் பேசிய விடயமொன்று தொடர்பில் ஐக்கிய முன்னணி தலைவர் சிறிமாவோவால் விளக்கம் கோரப்பட்டிருந்தது. அதாவது வெளிநாட்டவருக்குச் சொந்தமான பெருந்தோட்டங்கள் அனைத்தும் முழுமையாகத் தேசியமயமாக்கப்படாவிட்டால், அரசாங்கத்திலிருந்து லங்கா சமசமாஜக் கட்சி விலகும் என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் நாங்கள் தனிப்பட்ட நலனுக்காக பதவிகள் பெறவில்லை. சோசலிஸக்

கொள்ளைகளை முன்னிறுத்தவும் அதன்வாயிலாக நாட்டை அபிவிருத்தி செய்யவுமே நாம் பதவிகள் பெற்றுள்ளோம் அது நடக்காவிட்டால், நாம் பதவி விலகுவதோடு அரசாங்கத்திலிருந்தும் விலகுவோம் என்று பேசியிருந்தார். இது பற்றி கேட்கப்பட்ட விளக்கத்துக்கு பதிலளித்த அன்றைய நிதியமைச்சரான கலாநிதி என்.எம்.பெரேரா 'நான் சொன்னவற்றிலேதும் உங்கள் மனதைப் புண்படுத்தியிருந்தால் அதற்கு வருந்துகிறேன். நான், வாயாடி அரசியல் செய்வதில்லை. கட்சிகளிடையோன ஒற்றுமையைப் பாதுகாக்க நானும் எனது கட்சியும் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம். ஐக்கிய முன்னணியினூடாக நாங்கள் நிறையவே சாதித்துள்ளோம்' என்று கூறியிருந்தார். ஆனால் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் 'தோழர்களுக்கு' எதிரான நிலைப்பாடு வலுவடையத் தொடங்கியதுடன் 'தோழர்களை' கழற்றிவிடுவதென்ற முடிவுக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் வந்திருந்தனர். இதன் முதல் நடவடிக்கையாக பிரதமர், லங்கா சமசமாஜக் கட்சி அமைச்சர்களை பதவி விலகக் கோரியிருந்தார். அதனை அவர்கள் நிராகரித்ததன் பின் பிரதமரின் பரிந்துரையின்பேரில் 1975 செப்டெம்பர் 2ஆம் திகதி ஜனாதிபதி, லங்கா சமசமாஜக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களான கலாநிதி என்.எம்.பெரேராவையும் கலாநிதி கொல்வின் ஆர்.டீ.சில்வாவையும் லெஸ்லி குணவர்த்தனவையும் பதவியிலிருந்து நீக்கினார். இதற்கான பதிலடியை கொடுக்க லங்கா சமசமாஜக் கட்சி தயாரானது.

(அடுத்த வாரம் தொடரும்...)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X