2026 ஜனவரி 02, வெள்ளிக்கிழமை

'எவரையும் நான் பலவந்தமாக வெளியேற்றவில்லை'

Niroshini   / 2016 ஜூலை 04 , மு.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

“எங்கள் கட்சி ஒரு குடும்பம். இந்த குடும்பத்தில் இருந்து எவரையும் நான் பலவந்தமாக வெளியேற்றவுமில்லை. எவரையும் உள்ளே வர வேண்டாம் என நான் தடுக்கவும் இல்லை. ஆனால், எவரும் எனக்கு நிபந்தனைகள் போட்டு கட்சிக்குள் இருக்கவும் முடியாது. உள்ளே வரவும் முடியாது' என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், ஜனநாயக மக்கள் முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

ஜனநாயக இளைஞர் இணையம் கொழும்பில் நடத்திய 'வாழும்போதே வாழ்த்துவோம்' எனும் நிகழ்ச்சி தொடரில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,   

“இங்கு உரையாற்றிய வடமாகாண முதல்வர் தாம் எது சொன்னாலும், எது செய்தாலும் அவற்றை ஆராயாமல், வெறுமனே தூற்றி திரியவே ஒரு கூட்டம் வடக்கில் திரிவதாக சொன்னார். அது அவருக்கு மட்டுமல்ல, எனக்கும் பொருத்தமானது. என்னை தூற்றுவதையே முழு நேர தொழிலாக கொண்ட ஒரு சிறு கூட்டம் இங்கும் இருக்கிறது. இவர்களில் இருந்து நமது புதிய தலைமுறை இளைஞர்கள் இன்று மாறுபடுகிறார்கள்.

தூற்றி திரிவோர் மத்தியில், போற்றி திரியும் வேலையை இன்று ஜனநாயக இளைஞர் இணைய இளைய தலைமுறை ஆரம்பித்துள்ளது. எதிர்காலத்தை நோக்கிய புதிய தலைமையை நான் இந்த இளைஞர் இணையத்தின் ஊடாக உருவாக்கி வருகிறேன்.  இவர்கள் இன்று இந்த மேடையில் நாற்றப்படும் நாற்றுகள். நாடு முழுக்க இந்த இணையம் வளர வேண்டும். பெருந்தொகையில் நம் இளைஞர்கள் இதில் இணைய வேண்டும்” என்றார்.

“எங்கள் கட்சி ஒரு  குடும்பம். இதன் மூத்த உறுப்பினர் வேலணை வேணியன். அவரிடம் இருந்து கட்சி என்ற இந்த குடும்பத்துக்கு துரோகம் செய்யாத, கட்சி தலைமை மீது விசுவாசம் கொண்ட கொள்கையை அனைவரும் கற்று அறிய வேண்டும். இந்த குடும்பத்தில் இருந்து எவரையும் நான் பலவந்தமாக வெளியேற்றவில்லை. எவரையும் உள்ளே வர வேண்டாம் என நான் தடுக்கவும் இல்லை.

ஆனால், எவரும் எனக்கு நிபந்தனைகள் போட்டு கட்சிக்குள் இருக்கவும் முடியாது. உள்ளே வரவும் முடியாது. கட்சிக்குள் நட்பு, பாசம், எளிமை  ஆகியவற்றைப்போல், கடமை, கட்டுப்பாடு, ஒழுங்கு ஆகியவற்றையும் நான் பேணி வருகிறேன்” எனவும் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X