2026 ஜனவரி 03, சனிக்கிழமை

'யாருக்கும் அஞ்சேன்'

Kogilavani   / 2016 ஜூலை 05 , மு.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய வங்கியின் ஆளுநராகத் தனது கடமைகளை நேற்றுப் பொறுப்பேற்றுக் கொண்ட கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, யாருக்கும் அஞ்சாமல் செயற்படவுள்ளதாகத் தெரிவித்தார்.

'ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நான் சந்தித்த போது, வெளிப்படையாகவும் யாருக்கும் அஞ்சாமலும் செயற்படுமாறு ஆலோசனை வழங்கினார். அவருடைய ஆலோசனையை நான் பின்பற்றி, வெளிப்படையாகவும் யாருக்கும் அஞ்சாமலும் பணிபுரிவேன்' என, கலாநிதி இந்திரஜித் தெரிவித்தார்.

மேலும் கருத்துத் தெரிவித்த கலாநிதி இந்திரஜித், நாடு சுதந்திரமடைந்ததிலிருந்து, பொருளாதாரத்தில் அரசியல் கலக்கப்பட்டுவிட்டதாகத் தெரிவித்தார். 'நாடு எப்போது சுதந்திரமடைந்ததோ, அப்போதிருந்து பொருளாதாரத்தில் அரசியல் கலக்கப்பட்டுவிட்டது. எந்தக் கட்சி மீதும் விரலை நீட்ட விரும்பவில்லை, ஆனால் எல்லா அரசாங்கங்களிலும் அரசியலும் பொருளாதாரமும் கலக்கப்பட்டுவிட்டது என்பதை வலியுறுத்த விரும்புகிறேன். ஆனால், சிறந்த பொருளாதாரக் கொள்கைகளால், சிறந்த அரசியல் விளைவாகக் கிடைக்கப்பெறும் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்' என்றார்.

செயற்கையான பொருளாதார செழிப்புகளை ஏற்படுத்துவதற்கு மாறாக, பொருளாதாரம் ஸ்திரமாக இருப்பதை மத்திய வங்கி உறுதிப்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார்.

இதன்போது அவர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பையும் ஞாபகமூட்டினார்.

'பிரதமரை நான் சந்தித்தபோது, நாட்டுக்கான அவரது தொலைநோக்கை அவர் வாசித்துக் காட்டினார். அதில், மிகப்பெரிய பங்கு, மத்திய வங்கிக்குக் காணப்படுகிறது. நாங்கள் பணியாற்ற வேண்டிய வழியில் நாங்கள் பணியாற்றாவிட்டால், நாடு செல்ல வேண்டிய இடத்துக்குச் செல்லாது. பலமான பேரினப் பொருளியல் ஸ்திரத்தன்மை அவசியமானது. அது இல்லாவிட்டால், எதையும் செய்ய முடியாது' என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும் கருத்துத் தெரிவித்த கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, தனது ஊழியர்களின் ஆதரவும் தனக்கு முக்கியமானது எனக் குறிப்பிட்டார். 'அணியின் தலைவர் எவ்வளவு திறமையானவராக இருந்தாலும், அணியானது திறமையாக இல்லாவிட்டால், அதில் திறமைகள் இல்லாவிட்டால், வெற்றியை உருசிக்க முடியாது. அதன்காரணமாக, மத்திய வங்கியின் ஊழியர்கள் அனைவரினதும் ஒத்துழைப்பை நான் கோருகிறேன்' என்று அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X