Kanagaraj / 2016 ஜூலை 07 , மு.ப. 02:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
தடைசெய்யப்பட்டோர் இலங்கைக்கு வர ஏற்பாடு
இரண்டு ஆண்டுகளில் இராணுவ நீக்கம்
நீதிப் பொறிமுறை தொடர்பில் முடிவில்லை
செப்டெம்பருக்குள் உண்மையை கண்டறியும் பொறிமுறை
ஐ.எஸ்.ஐ.எஸ் குழுவால் ஆபத்தில்லை
இலங்கையில் நடந்த இறுதி யுத்தத்தில், கொத்தணிக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டிருந்தால், அந்தப் பயன்பாடு சட்டரீதியற்றது அல்ல என, காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்த கருத்துகள் குறித்து, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர, கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
கொழும்பிலுள்ள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பிரதான மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே, அமைச்சர் மங்கள சமரவீர, இவ்விடயம் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்தார்.
மக்ஸ்வெல் பரணகமவின் கருத்துக் குறித்துக் கேட்கப்பட்டபோது பதிலளித்த அமைச்சர் மங்கள, 'அவை (கருத்துகள்) உதவிகரமானவை என்று நான் நினைக்கவில்லை. பரணகம போன்ற அனுபவமுடைய ஒருவர், அவ்வாறான கருத்துகளை முன்வைக்க விரும்புகிறார் என்பது குறித்து நான் ஆச்சரியமடைகிறேன்' என்றார்.
கொத்தணிக் குண்டுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளைப் பொய்யென நிரூபிப்பதற்கான வழி, இவ்வாறான குற்றச்சாட்டுகளை ஆராய்வதற்கான நம்பத்தகுந்த பொறிமுறையொன்றை உருவாக்குவதே எனத் தெரிவித்த அமைச்சர், அது தொடர்பாக முழுமையாக ஆராய்ந்த பின்னரே அது தொடர்பில் கருத்துத் தெரிவிக்க முடியுமெனத் தெரிவித்தார்.
அத்தோடு, மக்ஸ்வெல் பரணகமவின் கருத்துகளை „பண்டிதப் பேச்சு... (ஒரு விடயத்தில் தேவையற்று, அவ்விடயத்தில் பண்டிதர் போன்று கருத்துக் கூறுதல்) என வர்ணித்த அமைச்சர், அவ்விடயம் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்திருக்க வேண்டிய தேவை, அவருக்குக் கிடையாது எனவும் தெரிவித்தார்.
தடைசெய்யப்பட்டோர் இலங்கைக்கு வர ஏற்பாடு
ஜெனீவாவில் சிவில் சமூகக் குழுக்களை அமைச்சர் மங்கள சந்தித்திருந்ததோடு, மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றும் போது, இலங்கை தொடர்பாக அக்கறை கொண்ட அனைவரையும், இலங்கைக்கு வருமாறு அவர் அழைத்திருந்தார். இவை அனைத்தும், முன்னேற்றகரமான சமிக்ஞைகளை ஏற்படுத்தினவா எனக் கேட்கப்பட்டமைக்குப் பதிலளித்த அமைச்சர், 'ஆம் என்று சொல்வேன். அவர்களில் (சிவில் சமூகத்தினர்) பெரும்பான்மையானோர், தங்களது பதில்களில் நேர்முறையான எண்ணத்தைக் கொண்டிருந்தனர்' என்று தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அமைச்சர், 'உலகத் தமிழ்ப் பேரவையைச் சேர்ந்த திருத்தந்தை இமானுவேலுடன் நான், நீண்ட கலந்துரையாடலொன்றை மேற்கொண்டிருந்தேன். அங்கு கலந்துகொள்வதற்காக அவர், ஜேர்மனியிலிருந்து அங்கு வந்திருந்தார். உலகம் முழுவதிலும் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களில் மாபெரும் மாற்றமொன்று ஏற்பட்டிருப்பதாக நான் நினைக்கிறேன். ஆனால், அறியாமை காரணமாகவோ அல்லது போதியளவிலான தகவல்கள் இல்லாமை காரணமாகவோ அல்லது ஈழத்தைத் தவிர வேறொன்றும் வேண்டாம் என்ற அர்ப்பணிப்புக் காரணமாகவோ இன்னும் சில குழுக்கள் தொடர்ந்தும் பார்வையற்றவர்களாகவே இருக்கின்றன. அவர்களிடம் கூட நான் சென்று, „அவ்வாறான குற்றச்சாட்டுகளை நீங்கள் முன்வைக்க முன்பு, தயவுசெய்து இலங்கைக்கு வாருங்கள். அவர்களில் சிலர் பட்டியற்படுத்தப்பட்டுள்ளார்கள் அல்லது தடை செய்யப்பட்டுள்ளார்கள். ஆனால், அவர்கள் உண்மையில் வர விரும்பினால், தேவையான நடவடிக்கைகளை எடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைப் பாருங்கள்... என்றேன். அந்த அழைப்பை அவர்கள் ஏற்றுக் கொள்வார்களா என எனக்குத் தெரியவில்லை' என்றார்.
2 ஆண்டுகளில் இராணுவ நீக்கம்
ஜெனீவாவில் வைத்து, இராணுவ நீக்கம் தொடர்பாகவும் அமைச்சர் கருத்துகளை வெளியிட்டிருந்த நிலையில், அது தொடர்பாகவும் அவர் மேலதிகமாக விளக்கங்களை வழங்கினார்.
'இராணுவத்தை நீக்கும் பணியை நாங்கள் ஏற்கெனவே ஆரம்பித்துள்ளோம். தேர்தலுக்குப் பின்னர், சிவிலியன் ஆளுநர்கள் இருவரை நியமித்ததன் மூலம், அதை நாங்கள் ஆரம்பித்தோம். அடுத்த 2 ஆண்டுகளில் - 2018ஆம் ஆண்டுக்கு முன்னர் - இராணுவத்தை நீக்கும் பணியை நிறைவுசெய்ய எதிர்பார்க்கிறோம்' என்று அவர் குறிப்பிட்டார்.
அவ்வாறான இராணுவ நீக்கமென்பது, இராணுவத்தை வெளியேற்றுவதா எனக் கேட்கப்பட்டபோது, 'இல்லை. நாட்டின் ஏனைய பகுதிகளில் காணப்படுவது போன்று இராணுவத்தைப் பழைய நிலைக்குக் கொண்டு வருவது. உண்மையில், இராணுவத்தை நீக்குதலென்பது வடக்குக்கு மாத்திரம் உரியதன்று. ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தின் இரண்டாவது பாகத்தில், இலங்கையில் எல்லா மாவட்டங்களிலும் இராணுவ முகாம்களை வைக்க அவர்கள் ஆரம்பித்தார்கள். ஆகவே, இராணுவத்தை நீக்குதலென்பது, நாடு முழுவதும் இடம்பெற வேண்டும்' என்றார்.
அத்தோடு, வர்த்தக நடவடிக்கைகளிலிருந்து நீங்குவதற்கு ஆரம்பிக்குமாறு, இராணுவத்தினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், அவ்வாறு செய்ய அவர்கள் ஏற்கெனவே ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
நீதிப் பொறிமுறை தொடர்பில் முடிவில்லை
இலங்கையின் நீதிப் பொறிமுறை தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்படப் பலரும் கருத்துகளை வெளியிட்டுவருகின்ற போதிலும், அந்தப் பொறிமுறை தொடர்பாக முடிவேதும் எட்டப்படவில்லை என, அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட அனைவருடனும் கலந்துரையாடியே, நீதிப் பொறிமுறை உருவாக்கப்படுமென வெளிநாட்டு அலுவல்கள் தெரிவித்துள்ள போதிலும், ஜனாதிபதியும் பிரதமரும் தெரிவித்துவரும் கருத்துகள், அந்தப் பொறிமுறையின் சில விடயங்கள் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டுவிட்டன என்ற எண்ணத்தையே தருகின்றன என எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போதே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
'இல்லை, தீர்மானிக்கப்படவில்லை. அவர்களது கருத்துகளை அவர்கள் வெளிப்படுத்தியுள்ளார். ஜனாதிபதி கூட தனது கருத்தை வெளிப்படுத்துவதற்கான உரிமையைக் கொண்ட ஜனநாயகக் குடியரசு தான் இலங்கை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவர் அவ்வாறு சொல்லியுள்ளார். அவரது பார்வையை நாம் மதிக்கிறோம். ஆனால், இருக்கின்ற எல்லா வாய்ப்புகளையும் ஜனாதிபதி சிறிசேனவும் பிரதமரும் பார்வையிட்டு, சம்பந்தப்பட்ட தரப்பினரில்
பெரும்பான்மையானோரால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய முடிவை அவர்கள் எடுப்பார்கள்' எனத் தெரிவித்தார். அத்தோடு, கிடைக்கக்கூடிய எல்லா மாற்று விடயங்களையும் ஆராயவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
செப்டெம்பருக்குள் உண்மையைக் கண்டறியும் பொறிமுறை
உண்மையைக் கண்டறியும் பொறிமுறை தொடர்பில் பணியாற்றுவதே அடுத்த கட்ட நடவடிக்கை எனத் தெரிவித்த அமைச்சர் மங்கள, செப்டெம்பருக்கு முன்னர் அது தொடர்பான முன்மொழிவைச் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார். அது தொடர்பான கலந்துரையாடல்களை அடுத்து, அமைச்சரவைக்கு அதைக் கொண்டுசெல்லவுள்ளதாகத் தெரிவித்தார். அத்தோடு,
விசேட பொறுப்புக் கூறலுக்கான விசேட பொறிமுறை நீதிமன்றத்தின் கட்டமைப்பையும் அடுத்தாண்டு ஆரம்பத்தில், கலந்துரையாடலுக்குத் தயாராக இருக்குமெனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
ஐ.எஸ்.ஐ.எஸ் குழுவால் ஆபத்தில்லை
பங்களாதேஷ், துருக்கி உட்படப் பல நாடுகளில் அண்மைக்காலமாக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அமைச்சர், 'உலகின் வௌ;வேறான இடங்களில் அண்மைக்காலத்தில் இடம்பெற்றுள்ள தாக்குதல்கள் தொடர்பாக நாங்கள் மிகவும் கவனமெடுத்துள்ளோம். அத்தோடு, சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு எங்களுடைய அனுதாபங்களை நாங்கள் ஏற்கெனவே பகிர்ந்துள்ளோம். இலங்கையில் புலனாய்வுப் பிரிவுகள், எச்சரிக்கையுடன் இருக்கின்றன.
எங்களிடமுள்ள தகவல்களின் அடிப்படையில், இலங்கையில் எங்களுடைய பாதுகாப்புக்கு, ஐ.எஸ்.ஐ.எஸ் ஆபத்தாக அமையுமென நினைக்கவில்லை. ஆனால், நாங்கள் எச்சரிக்கையாக இருக்கிறோம்' என அமைச்சர் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .