2026 ஜனவரி 04, ஞாயிற்றுக்கிழமை

ஜேர்மனியில் வெளிநாட்டவரை இலக்குவைத்துப் புதிய சட்டம்

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 07 , பி.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலியல் குற்றங்களின் வரைவிலக்கணத்தை விரிவாக்குவதோடு, அவ்வாறான குற்றங்களை மேற்கொள்ளும் வெளிநாட்டவரை நாட்டை விட்டு வெளியேற்ற வழிவகுக்கும் புதிய சட்டமொன்று, ஜேர்மனியில் இன்று இயற்றப்பட்டுள்ளது.

ஜேர்மனியில் பாலியல் குற்றங்கள் தொடர்பான சட்டங்கள், கடுமையாக்கப்பட வேண்டுமெனப் பல்லாண்டுகளாகக் கோரிக்கைகள் காணப்பட்ட போதிலும், 2016ஆம் ஆண்டுப் பிறப்பு இரவில், கொலோனில் இடம்பெற்ற பாலியல் குற்றங்களே, இந்தச் சட்டமூலத்தைக் கொண்டுவருவதற்கு வழிவகுத்தது.

ஜேர்மனியின் முன்னைய சட்டங்களின்படி, வன்புணர்வுக்கு உள்ளாகிய ஒருவர், அதை வன்புணர்வு என நிரூபிப்பதற்கு, அந்த உடலுறவுக்குச் சம்மதம் தெரிவிக்க அவர் மறுத்திருக்க வேண்டுமென்பதோடு, அதற்கெதிராக உடல்ரீதியாகப் போராடியிருக்க வேண்டும். ஆனால், "இல்லை என்றால் இல்லை" என ஊடகங்களால் அழைக்கப்படும் இந்தப் புதிய சட்டத்தின்படி, அந்த உடலுறவை அவர் மறுத்தாலே போதுமானது.

அத்தோடு, பாலியல் குற்றங்களில் ஈடுபடும் வெளிநாட்டவர்களை, நாட்டை விட்டு இலகுவாக அனுப்பவும், இது வழிவகுக்கிறது. முன்னைய சட்டங்களின்படி, பாலியல் குற்றங்களோடு, வன்முறை, அச்சுறுத்தல் அல்லது உடல்ரீதியாக ஆபத்தை விளைவிக்கும் நிலைமை காணப்பட்டாலே, வெளிநாட்டவர் ஒருவர் நாட்டை விட்டு வெளியேற்றப்பட முடியும்.

கொலோனில் இடம்பெற்ற புத்தாண்டுக் கொண்டாட்டங்களின்போது, 1,000க்கும் மேற்பட்ட பெண்கள், பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகியிருந்தனர். உடல்ரீதியான தொடுகை தொடக்கம் வன்புணர்வு வரை அங்கு குற்றங்கள் இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டதோடு, அதில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலானோர், அரேபிய ஆண்களாகவும் வட ஆபிரிக்க ஆண்களாகவும் காணப்பட்டனர் என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்தே, இந்தச் சட்டமூலத்தில், ஜேர்மனியின் சான்செலர் அங்கெலா மேர்க்கெல், கையெழுத்திட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X