2026 ஜனவரி 17, சனிக்கிழமை

அடிப்படைக் கோட்பாடுகளை உயர்நீதிமன்றுக்கு மீறும் உரிமை கிடையாது: பிரதமர்

Kanagaraj   / 2016 ஜூலை 08 , மு.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை அரசியலமைப்பின் அடிப்படையான கோட்பாடுகளை மீறுவதற்கான அதிகாரம், உயர்நீதிமன்றத்துக்குக் கிடையாது எனத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 2006ஆம் ஆண்டு சிங்கராசா வழக்குத் தொடர்பில் உயர்நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட வியாக்கியானம் தொடர்பில், சபாநாயகர் தீர்ப்பளிக்க வேண்டுமெனக் கோரினார்.

நாடாளுமன்றத்தில் வைத்து, ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். சல்மான் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே, பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கையின் கட்டாயப்படுத்தப்படாத நெறிமுறையைப் பின்பற்றுவதற்கு, நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை தேவைப்படுகிறது எனவும் சர்வஜன வாக்கெடுப்பு மூலம் அங்கிகாரமும் தேவைப்படுகிறது என, 2006ஆம் ஆண்டு ஆண்டில் உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. அதையே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கேள்விக்குட்படுத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழுவில், இலங்கைப் பிரஜைகள் தொடர்ந்தும் முறைப்பாடுகளை மேற்கொண்டுவந்த போதிலும், 2006ஆம் ஆண்டு „சிங்கராசா வழக்கு... என அழைக்கப்படும் வழக்கில் வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பைக் காரணங்காட்டி, தொடர்ந்துவந்த அரசாங்கங்கள், அந்த முறைப்பாடுகளைத் தட்டிக்கழித்து வந்ததாக, சல்மான் எம்.பி குறிப்பிட்டிருந்தார்.

இதற்குப் பதிலளித்த பிரதமர், குறித்த தீர்ப்பு, அரசியலமைப்பின் பிறழ்வான வியாக்கியானம் எனத் தெரிவித்ததோடு, உயர்நீதிமன்றத்தின் குறித்த கருத்து, அரசியலமைப்பின் உறுப்புகள் 3, 4, 5 ஆகியவற்றை மீறுவதாகவும் தெரிவித்தார். அத்தோடு, அரசியலமைப்பின் அடிப்படையான கொள்கைகளை மீறும் உரிமை, உயர்நீதிமன்றத்துக்குக் கிடையாது எனவும் அவர் தெரிவித்தார்.

'உயர்நீதிமன்றத்துக்குரிய விடயதானங்களில் தன்னை மட்டுப்படுத்துவதை விடுத்து, சம்பந்தப்படாத விடயத்தில் நுழைந்து, கட்டாயப்படுத்தப்படாத நெறிமுறைகளை ஜனாதிபதி ஏற்றுக் கொள்வது குறித்த ஜனாதிபதியின் அரசியலமைப்பு ஏற்புடைமைக்குள் உயர்நீதிமன்றம் பிரகடனங்களை மேற்கொண்டுள்ளது' என அவர் தெரிவித்தார். அத்தோடு மேலும் கருத்துத் தெரிவித்த அவர், இது தொடர்பான முடிவெடுத்தல், கலந்தாலோசிப்பின் பின்னர் சபாநாயகரிடம் விடப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.

தேசிய நல்லிணக்க அரசாங்கத்தின் அடிப்படையான அம்சங்களாக நல்லாட்சி, சட்டத்தின் ஆட்சியும் மனித உரிமைகளும், வெளிப்படைத் தன்மை, பொறுப்புக் கூறுதல் ஆகியன காணப்படுவதாகத் தெரிவித்த பிரதமர், மனித உரிமைகள் குழுவின் தொடர்பாடல் நடைமுறையில், இலங்கையின் பங்குபற்றுகை குறித்து, மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரிடம், இவ்வாண்டு ஜனவரியில் அரசாங்கம் அறிவித்ததாகவும் குறிப்பிட்டார்.

கட்டாயப்படுத்தப்படாத இந்த நெறிமுறைக்கு, 1997ஆம் ஆண்டில், இலங்கை இணக்கம் தெரிவித்திருந்தது.
இதேவேளை, இவ்விடயம் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் தினேஷ் குணவர்தன, இது பாரதூரமான விடயம் என்பதால், இது தொடர்பில் சபாநாயகர் தீர்ப்பளிக்க முன்னர், இது குறித்த விவாதம் இடம்பெற வேண்டுமெனத் தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த பிரதமர் ரணில், சபை அமர்வு என்ற அடிப்படையில், நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் சபாநாயகர் கலந்தாலோசிக்கலாம் எனத் தெரிவித்ததோடு, தனது தீர்ப்பை வழங்குவதற்கு முன்னர் 2 நாட்கள் கூட இது நீடிக்கக்கூடும் எனவும் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X