2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கவலையையும் மகிழ்ச்சியையும் உணர்ந்தேன்: ரொனால்டோ

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 11 , மு.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

2004ஆம் ஆண்டு, அப்போது பதின்ம வயதானவராக இருக்கும் போது, கிரேக்க அணிக்கெதிரான இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த போர்த்துக்கல் அணியில் இடம்பெற்றிருந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ, இந்த இறுதிப் போட்டிக்கு முன்பு கருத்துத் தெரிவிக்கும் போது, போட்டியின் முடிவில் மகிழ்ச்சியால் அழ விரும்புவதாகத் தெரிவித்திருந்தார்.

அவரது விருப்பம், நிறைவேறியிருந்தது, ஆனால் வேறு விதமாக.
தனது நாட்டுக்கான முதலாவது சர்வதேசப் பட்டத்தை வென்று கொடுப்பதற்குத் தயாராகக் நட்சத்திர வீரராகவும் அணித்தலைவராகவும் களமிறங்கிய ரொனால்டோ, 24ஆவது நிமிடத்தில் காயம் காரணமாக வெளியேற வேண்டியேற்பட்டது.

அணித்தலைவருக்கான கைப்பட்டியைக் கழற்றிய ரொனால்டோ, கண்ணீருடன் தூக்குப்படுக்கையில் மைதானத்துக்கு வெளியே கொண்டு செல்லப்பட்டார். போட்டியில் பங்குபற்றி, நேரடியான பங்களிப்பை வழங்க முடியாத நிலையில், மைதானத்துக்கு வெளியே இருந்து, ஊக்குவிப்பு வழங்க வேண்டியேற்பட்டது.

90ஆவது நிமிடத்தில், மேலதிக நேரத்துக்கு முன்னரான இடைவெளியில், களைப்படைந்த தனது சக வீரர்களிடம் சென்று, அவர்களை ஊக்கப்படுத்திய ரொனால்டோ, போட்டியில் கோல் பெறப்பட்டு, இறுதி விசில் அடிக்கப்பட்டதும், மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார்.

இறுக்கமாகக் கட்டப்பட்டிருந்த அவரது கால்கள், அவரது மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தைத் தடுத்து நிறுத்தியிருக்கவில்லை. தனது அணியின் வெற்றிக் கிண்ணத்தை, அவரே தூக்கியிருந்தார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த ரொனால்டோ, "கவலையையும் மகிழ்ச்சியையும் நான் இன்று உணர்ந்தேன். எனது வாழ்வின் மிக மகிழ்ச்சியான தருணங்களில் இது ஒன்று என்பதை நான் உறுதியாகச் சொல்ல முடியும். நான் அழுதேன்" என்றார்.

எதிர்பாராத விதமாக, மாற்று வீரரான ஈடரே, போர்த்துக்கல்லின் நாயகனாக மாறியிருந்த நிலையில், அதை எதிர்பார்த்திருந்ததாகவும் ரொனால்டோ தெரிவித்தார். "மேலதிக நேரத்தில் போட்டியை முடிக்கக்கூடியவர் அவரே என நான் உணர்ந்தேன். நான் மந்திரவாதியோ அல்லது எதிர்காலத்தைக் கணிக்கக்கூடியவனோ அல்லன், ஆனால் எனது உணர்வுகளை நான் எப்போதும் பின்பற்றுபவன்" எனத் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X