George / 2016 ஜூலை 25 , மு.ப. 09:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழகத்தின் தாரமங்கல பிரதேசத்தில் நடக்கும் தங்கநகை பறிப்பு சம்பவங்களில், இலங்கை தமிழர் முகாமில் வசிப்பவர்கள் ஈடுபடுகின்றனரா என்ற சந்தேகத்தில், அவர்கள் பயன்படுத்தும் மோட்டார் சைக்கிள்களை, தாரமங்கலம் பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை ஆய்வுசெய்தனர்.
தாரமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், இரு மாதங்களில், பத்துக்கும் மேற்பட்ட திருட்டு மற்றும் தங்கநகை பறிப்பு சம்பவங்கள் நடந்தன. அதில், ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை.
அதில், இலங்கை தமிழர் முகாமில் வசிப்பவர்கள் யாரேனும் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம், பொலிஸாருக்க ஏற்பட்டுள்ளது. அதையடுத்து, பவளத்தானூர், குருக்கப்பட்டி, அத்திக்காட்டானூர் ஆகிய முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களில், மோட்டார் சைக்கிள்களை வைத்துள்ளவர்களை, வாகனங்களுடன் பவளத்தானூர் முகாமுக்கு வரவழைத்து, ஆய்வு செய்தனர்.
நூற்றுக்கும் மேற்பட்டவர்களின் வாகனங்களை ஆய்வு செய்ததில், சிலர் மட்டுமே சாரதி அனுமதிப்பத்திரம் வைத்துள்ளதும், ஒரு வாகனம் கூட, இலங்கை தமிழர் பெயரில் பதிவு செய்யப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் இலங்கை தமிழர் முகாமை சேர்ந்தவர்கள் கருத்து தெரிவிக்கையில், 'இலங்கையை விட்டு தமிழகத்துக்கு வந்து, 26 ஆண்டுகள் ஆகிவிட்டன. அரசு சார்பில், பல்வேறு உதவிகள் செய்தாலும், புதிய வாகனம் வாங்கும்போது, அதை எங்கள் பெயரில் பதிவு செய்ய, அரசு தடை விதித்துள்ளது.
அதனால், நாங்கள் இலங்கை தமிழர் அல்லாத வேறொருவர் பெயரில், பதிவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. வாகனங்களில் வெளியூர் செல்லும்போது, சோதனையில் சிக்கி, அபராதம் கட்ட வேண்டிய நிலை உள்ளது. அதிகாரிகள், நாங்கள் வாங்கும் வாகனங்களை, எங்கள் பெயரிலேயே பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும்' என்று கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .