2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கசாப்புக் கடைக்காரனின் ஜீவகாருண்யப் பேச்சு

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 26 , பி.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகலிங்கம் கோபிகிருஷ்ணா

அவுஸ்திரேலிய அணியின் சுழற்பந்துவீச்சு ஆலோசகராக, இலங்கையின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் நியமிக்கப்பட்டமையைத் தொடர்ந்து, அவ்விடயம் தொடர்பான சர்ச்சைகளுக்குக் குறைவில்லை. இதற்கு முன்னரே, மஹேல ஜெயவர்தன, இங்கிலாந்துக்கான துடுப்பாட்ட ஆலோசகராகச் செயற்பட்ட போதும்கூட, இவ்வாறான நிலைமை தான் ஏற்பட்டிருந்தது.

இலங்கை கிரிக்கெட் சபையைப் பொறுத்தவரை, குறிப்பாக அதன் தலைவர் திலங்க சுமதிபாலவைப் பொறுத்தவரை, இலங்கை அணியின் முன்னாள் வீரரான முரளி, இலங்கைக்கெதிரான தொடருக்கு முன்பாக, அவுஸ்திரேலிய அணியுடன் இணைந்து செயற்படுவது, நெறிமுறைகளுக்கு எதிரானது.

இந்தத் தொடருக்காக முரளி, அவுஸ்திரேலியாவின் ஆலோசகராகச் செயற்படும் செய்தி, எப்போதோ வெளியாகிவிட்டது. அப்போதே, இலங்கை கிரிக்கெட் சபையின் சார்பில் புறுபுறுப்பு வெளியாகியிருந்தது. ஆனால், தொடர் ஆரம்பிப்பதற்கு ஓரிரு நாட்கள் இருக்கையில், அந்தப் புறுபுறுப்பை மீள ஆரம்பித்து வைத்திருந்தார் திலங்க சுமதிபால.

உலகமெங்கிலும், தேசப்பற்று என்ற ஒன்றைக் கிளறிவிட்டால், தேசியவாதிகள் பலருக்கும் இரத்தம் புரண்டோடத் தொடங்கிவிடும். முட்டாள்தனமான தேசியவாதத்தைப் பின்பற்றாத எவருமே, துரோகிகள் தான். அரசியலிலும் சரி, ஏனைய விடயங்களிலும் சரி, இவ்வாறு துரோகிகள் ஆக்கப்பட்டோர் ஏராளம் ஏராளம்.

இங்கும்கூட, நாட்டுப் பற்றையும் தேசியவாதத்தையும் கிளறிவிட்டு, முரளியைத் துரோகியாக்கும் பணியே இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தத் தொடருக்கு முன்பாக, இலங்கைக்குப் பயிற்சி வழங்குமாறு கோரப்பட்டு, அதை முரளி மறுத்துவிட்டு, பின்னர் அவுஸ்திரேலியாவுக்குப் பயிற்சி வழங்கினால், சுமதிபால குழுவினரின் கோபத்தில் ஓரளவு நியாயமிருக்கும். தொழில்முறையான வாழ்வில், அவ்வாறானதொரு முடிவை முரளி எடுத்திருந்தால், அதைத் தவறு என்று கூற முடியாது, ஆனால், இலங்கையின் பக்கமாக எழக்கூடிய கோபத்துக்கு, ஓரளவு நியாயம் இருக்கும். ஆனால், முரளியை அழைத்து, அவரின் சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் எந்த நோக்கத்தையும் கொண்டிருக்காத இலங்கை கிரிக்கெட் சபை, அவுஸ்திரேலியா அவரைப் பணிக்கமர்த்தியதுமே, துள்ளிக் குதிப்பதில் எந்தவிதமான நியாயமும் கிடையாது.

ஒருவர் விரும்பும் பெண்ணை நெருங்கி, தனது காதலை வெளிப்படுத்துவதற்குத் தைரியமோ, விருப்பமோ அல்லது நோக்கமோ இல்லாத ஒருவர், அந்தப் பெண்ணை இன்னொருவர் நெருங்கி, அப்பெண்ணின் விருப்பத்தைப் பெற்ற பின்னர், அப்பெண்ணின் மீது கோபம் கொள்வதைப் போன்றது தான், இலங்கை கிரிக்கெட் சபையின் இந்தக் கோபம். அடிப்படையான நியாயமற்றது.

இதில், திலங்க சுமதிபாலவும் அவரின் தரப்பினரும் கவனிக்க மறக்கும்/மறுக்கும் முக்கியமான விடயம், இதற்கு முன்னரும் கூட, அவுஸ்திரேலிய அணியோடு இணைந்து, முரளிதரன் பணியாற்றியுள்ளார். ஆகவே, அவ்வணியோடு சிறப்பான உறவைப் பேணுகின்றார் எனவும் அவரது பணியை அவுஸ்திரேலியர்கள் உயர்வாக எண்ணுகிறார்கள் என்பது வெளிப்படையாது. ஆனால், இலங்கை அவ்வாறு எண்ணுகிறதா?

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், சுழற்பந்து வீச்சாளர்களோடு இணைந்து பணியாற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும், அப்போது இணைந்து செயற்பட்டதன் பின்னர், இலங்கை கிரிக்கெட் சபையால் எந்தவிதமான அழைப்பும் விடுவிக்கப்படவில்லை எனவும் முரளி தெரிவிக்கிறார். அத்தோடு, அவுஸ்திரேலியாவின் இந்த அழைப்பு, ஒரு மாதகாலத்துக்கு விடுக்கப்பட்டதாகவும், ஆனால் இலங்கையில் வைத்து, இலங்கையின் எதிரணியொன்றின் அணி அறையில் இருப்பதற்கு விரும்பாத நிலையில், 10 நாட்களுக்கு அதை மட்டுப்படுத்தியதாகவும் முரளி தெரிவிக்கிறார். ஆக, இந்த விடயத்தை, நன்றாகச் சிந்தித்தே செய்திருக்கிறார் முரளி.

"அவ்வாறு இல்லை, முரளியொன்றும் பெரிய பயிற்றுநர் கிடையாது, இலங்கையின் இரகசியங்களைச் சொல்லிக் கொடுப்பார் என்று தான் அஞ்சுகிறோம்" என்று சுமதிபால பிரிவினர் சொல்வார்களாயின், ஒன்றில் அவர்களது தரப்பில் சிந்திக்கும் திறன் கிடையாது, இல்லாவிடில் இலங்கை கிரிக்கெட் சபையின் பாரிய தவறுகள் உள்ளன.

இலங்கைக்காக முரளி விளையாடியது, இறுதியாக 2011ஆம் ஆண்டில். 5 ஆண்டுகளாக, ஒரே மாதிரியாக இலங்கை விளையாடிவருமாயின், இலங்கையின் விளையாட்டு முறையில் பாரிய தவறு உள்ளது. 5 ஆண்டுகளுக்கு முன்னர் மத்தியூஸ் விளையாடிய அதே முறையில் தான் அவர் விளையாடுகிறார் என்றால், அவரின் விளையாட்டில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்று அர்த்தம். அத்தோடு, சக வீரரொருவர், மற்றைய வீரரின் துடுப்பாட்ட நுட்பங்களைப் பார்த்து, எதிரணிக்குச் சொல்வதை விட, தற்போதுள்ள நவீன நுட்பங்களின் உதவியுடன், மிக மிக மெதுவான காணொளிகள், நவீன கருவிகள் என்பவற்றைப் பயன்படுத்தி, வீரர்களின் நுட்பங்களை அக்குவேறு, ஆணிவேறானப் பிரித்தறிய முடியும்.

இதில் அடுத்ததாக, "முரளியை இதற்கு முன்னர் கடினமான சூழ்நிலைகள் பலவற்றிலிருந்து காப்பாற்றியிருக்கிறோம். அதற்கு அவர் செய்யும் கைமாறு இதுவா?" என்றவாறான உணர்வைத் தூண்டுகின்ற கேள்விகளும் எழுப்பப்பட்டுள்ளன. முரளி பந்தை எறிகிறார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டபோது, முரளிக்கு ஆதரவாக இலங்கை கிரிக்கெட் இருந்ததைத் தான் அவர் அவ்வாறு குறிப்பிட்டார். ஆனால், அதற்குக் கைமாறாகத் தான், இலங்கைக்காக 1,331 விக்கெட்டுகளை (டெஸ்ட்களில் 795, ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 523, இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளில் 13 விக்கெட்டுகள்) கைப்பற்றிக் கொடுத்திருக்கிறார் முரளி. பல போட்டிகளை வென்று கொடுத்திருக்கிறார். இதை விட என்ன கைமாறை எதிர்பார்க்கிறார் சுமதிபால? இலங்கை கிரிக்கெட் சபையொன்றும், தனக்கு நன்மை கிடைக்காது என்று தெரிந்து, முரளிக்கு உதவவில்லை. அப்பிரச்சினைகளிலிருந்து முரளியை மீட்டால், இலங்கைக்காக பல விக்கெட்டுகளை அவர் கைப்பற்றிக் கொடுப்பார் என்பதால் தான் உதவியது.

இதையெல்லாவற்றையும் விட்டுவிட்டால், முரளியின் நன்னெறிகள் தொடர்பாகக் கேள்வியெழுப்புவதற்கு திலங்க சுமதிபாலவுக்கு என்ன அருகதை இருக்கிறது என்ற விடயம் இருக்கின்றதல்லவா? சூதாட்ட நிறுவன வலையமைப்பொன்றை உரிமைப்படுத்தியிருக்கின்ற சுமதிபால; தேர்தலுக்கு முன்னர் ஒருவரையும், தேர்தலின் பின்னர் வென்றவரையும் ஆதரிக்கின்ற சுமதிபால, நன்னெறி பற்றியெல்லாம் பாடமெடுப்பது, சிரிப்பையே வரவழைக்கிறது. கசாப்புக் கடைக்காரர் ஒருவர், ஜீவகாருண்யம் பற்றிப் பாடமெடுப்பது எவ்வாறோ, அவ்வாறு தான் சுமதிபாலவின் நன்னெறி பற்றிய பேச்சுகள். உயிர்வாழ்வதற்காக உயிர்களை வென்று பிழைக்கின்றவர் மீது எந்தத் தவறும் கிடையாது, ஆனால், ஜீவகாருண்யம் பற்றியும் அவர் கதைப்பது சிறப்பாக அமையாது. அதேபோல் தான், இலங்கையில் சூதாட்டமென்பது சட்டரீதியாக உள்ள நிலையில், அந்நிறுவனத்தைக் கொண்டு நடத்துகின்ற சுமதிபால, தொழில்ரீதியாகச் சட்டரீதியான செயற்பாட்டிலேயே ஈடுபடுகிறார். ஆனால், நன்னெறிகளின்படி? அவர், நிறத்தை மாற்றும் அரசியல்வாதியாக இருப்பதே, நன்னெறி பற்றிக் கருத்துக் கூறுவதற்கான அவரது தகுதியை இல்லாது செய்கிறதே?

மறுபக்கமாக, தனது அறக்கட்டளை மூலமாக, இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் பாரியளவு அறக்கட்டளை நடவடிக்கைகளில் ஈடுபட்டு, நாட்டின் நல்லிணக்கத்துக்காகவும் பல்வேறு செயற்பாடுகளிலும் ஈடுபட்டுவரும் முரளி, தன்னைத் தானே நியாயப்படுத்த வேண்டிய தேவை, கிடையவே கிடையாது.

இலங்கையின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்ததைப் போன்று, இலங்கையின் சுழற்பந்து வீச்சாளரொருவர், முரளியிடம் சென்று சுழற்பந்து வீச்சுப் பற்றிக் கேட்டால், எந்தவிதமான கட்டணத்தையும் பெறாது, தன்னால் முடிந்தளவு நேரத்துக்கு கதைக்கக்கூடியவர் முரளிதரன் என்பதை, அவருக்குத் துரோகிப் பட்டத்தைச் சூட்ட முயலும் சுமதிபால உள்ளிட்ட "தேசியவாதிகள்"புரிந்துகொள்ள வேண்டும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .