2026 ஜனவரி 02, வெள்ளிக்கிழமை

இங்கிலாந்துச் சம்பியன்களை வீழ்த்திய பிரெஞ்சுச் சம்பியன்கள்

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 31 , மு.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்தின் கால்பந்தாட்டச் சம்பியன்களான லெய்செஸ்டர் சிற்றி அணியை எதிர்கொண்ட பிரான்ஸின் சம்பியன்களான பரிஸ் செய்ன்ட் ஜேர்மைன் அணி, மிக இலகுவான வெற்றியொன்றைப் பெற்றுக் கொண்டது.

லொஸ் ஏஞ்சலஸில் இடம்பெற்ற கண்காட்சிப் போட்டியொன்றில், 25,667 இரசிகர்கள் மைதானம் முழுவதும் காணப்பட, இரு நாட்டுச் சம்பியன்களும் மோதினர்.

ஆரம்பத்திலிருந்தே ஆக்ரோஷமாக விளையாடிய பரிஸ் செய்ன்ட் ஜேர்மைன் அணி, 26ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டியூடாக, கோல் எண்ணிக்கை ஆரம்பித்தது. எடின்சன் கவானியினால் அந்தக் கோல் பெறப்பட்டது. பின்னர், முதற்பாதி முடியும் நேரத்தில், நானிடாமோ இகோனால் இன்னொரு கோல் பெறப்பட்டது. இதனால், முதற்பாதி முடிவில் 2-0 என்ற அவ்வணிக்கு முன்னிலை கிடைத்தது.

பின்னர் 64ஆவது நிமிடத்தில் லூகாஸ் மௌரா, 90ஆவது நிமிடத்தில் ஒட்சோன் எடோர்ட் ஆகியோர் பெற்ற கோல்களின் உதவியுடன், 4-0 என்ற கோல் கணக்கில் அவ்வணி வெற்றிபெற்றது.

இங்கிலாந்து பிறீமியர் லீக் சம்பியன்களாக, யாரும் எதிர்பாராத வகையில் தெரிவாகிய லெய்செஸ்டர் சிற்றி அணி, ஐரோப்பியச் சம்பியன் தொடரான சம்பியன்ஸ் லீக்கில் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் சவால்களை வெளிப்படுத்துவதாக, இந்தப் போட்டி அமைந்திருந்தது.

இதேவேளை, செல்சி அணியை 3-2 என்ற கோல் கணக்கில் றியல் மட்ரிட் அணியும் இன்டெர் அணியை 4-1 என்ற கோல் கணக்கில் பயேர்ண் மியூனிச் அணியும் ஏ.சி மிலான் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் அணியும் வெற்றிகொண்டன.

இதேவேளை, தனது பருவகாலத்துக்குத் தயார்படுத்துமுகமாக அவுஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ள ஸ்பெய்ன் அணியான அத்லெட்டிக்கோ மட்ரிட் அணி, அங்குள்ள ஏ லீக் அணியான மெல்பெண் அணியை எதிர்கொண்டது. அதில், 0-1 என்ற கணக்கில், அத்லெட்டிக்கோ மட்ரிட் அணி அதிர்ச்சித் தோல்வியடைந்தது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X