Shanmugan Murugavel / 2016 ஓகஸ்ட் 01 , பி.ப. 05:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்குமிடையிலான டெஸ்ட் போட்டி, சிம்பாப்வே அணியும் நியூசிலாந்து அணிக்குமிடையிலான டெஸ்ட் போட்டி ஆகியனவின் நிறைவில், வீரர்களுக்கான தரப்படுத்தல்களை, சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது. இதில், இலங்கையின் குசால் மென்டிஸ், ரங்கன ஹேரத் ஆகியோர் சிறப்பான முன்னேற்றத்தைப் பெற்றுள்ளனர்.
இப்போட்டியில் சதம்பெற்று, போட்டியின் நாயகனாகத் தெரிவான குசால் மென்டிஸ், 48ஆவது இடத்திலிருந்து 21ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். அறிமுக வீரரான தனஞ்சய டி சில்வா, 76ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளார்.
முதலிடத்தில், அவுஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித் காணப்படுகிறார். தொடர்ந்து ஜோ றூட், கேன் வில்லியம்ஸன், ஹஷிம் அம்லா, அடம் வோஜஸ் (6ஆவது இடத்திலிருந்து 5ஆவது இடத்துக்கு), ஏ.பி. டி வில்லியர்ஸ், மிஸ்லா உல் ஹக், அலஸ்டெயர் குக், யுனிஸ் கான், விராத் கோலி ஆகியோர் தரப்படுத்தப்பட்டுள்ளனர். 11ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டிருந்த இலங்கையின் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ், 13ஆவது இடத்துக்குப் பின்தள்ளப்பட்டுள்ளார்.
பந்துவீச்சாளர்களுக்கான தரப்படுத்தலில், 13ஆவது இடத்தில் காணப்பட்ட ரங்கன ஹேரத், 9ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். புதுமுக வீரர் லக்ஷான் சந்தகன், 58ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளார்.
முதலிடத்தில் இரவிச்சந்திரன் அஷ்வின் காணப்பட, தொடர்ந்துவரும் இடங்களில் ஜேம்ஸ் அன்டர்சன், ஸ்டுவேர்ட் ப்ரோட், டேல் ஸ்டெய்ன், யாசீர் ஷா, ரவீந்திர ஜடேஜா, ஜொஷ் ஹேஸல்வூட் (8இலிருந்து 7க்கு), ட்ரென்ட் போல்ட், ரங்கன ஹேரத், மோர்னி மேர்க்கல் ஆகியோர் தரப்படுத்தப்பட்டுள்ளனர்.
12ஆவது இடத்தில் காணப்பட்ட நேதன் லையன் 14ஆவது இடத்துக்கும், 14ஆவது இடத்தில் காணப்பட்ட மிற்சல் ஸ்டார்க், 15ஆவது இடத்துக்கும் பின்தள்ளப்பட்டுள்ளனர். 33ஆவது இடத்தில் காணப்பட்ட நுவான் பிரதீப், 31ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .