Thipaan / 2016 ஓகஸ்ட் 04 , மு.ப. 04:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகலிங்கம் கோபிகிருஷ்ணா
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின் முக்கியமான கட்டம் வந்திருக்கிறது. பிரதான இரு கட்சிகளினதும் தேசிய மாநாடுகள் இடம்பெற்று, தங்கள் கட்சிகளின் சார்பில் முன்னிலை வகித்த வேட்பாளர்கள், உத்தியோகபூர்வ வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். இதன்மூலமாக, அரசியல் கேலிக்கூத்தானது, முடிவுக்கு வந்திருப்பதாக ஒரு தரப்பினரும், இனிமேல் தான் உண்மையான கேலிக்கூத்து ஆரம்பிக்கவுள்ளதாக மற்றைய தரப்பினரும் தெரிவிக்கின்றனர். அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலும் அதன் முடிவுகளும், அமெரிக்காவை மாத்திரமல்லாது, லிபியாவுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவை இலக்குவைத்த தாக்குதல்களை அமெரிக்கா ஆரம்பித்திருக்கும் நிலையில், ஒட்டுமொத்த உலகையும் பாதிக்கக்கூடிய நிலை காணப்படுகிறது. எனவே தான், அதனைப் பற்றி ஆராய்வது அவசியமானது.
இந்தத் தேர்தலில், ஏனைய கட்சிகளைச் சேர்ந்த சில வேட்பாளர்களும் இருக்கின்ற போதிலும், குடியரசுக் கட்சியின் டொனால்ட் ட்ரம்ப்புக்கும் ஜனநாயகக் கட்சியின் ஹிலாரி கிளின்டனுக்கும் இடையிலான போட்டியே, கவனிக்கப்பட வேண்டிய, கவனிப்பதற்கு அவசியமான போட்டியாக இருக்கின்றது.
முதலில் இடம்பெற்றது, குடியரசுக் கட்சியின் தேசிய மாநாடு தான். எதிர்பார்க்கப்பட்டதைப் போன்றே, அக்கட்சியின் உத்தியோகபூர்வ வேட்பாளராக ட்ரம்ப் அறிவிக்கப்பட்டார். ஆனால், ட்ரம்ப்பின் கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அக்கட்சியைச் சேர்ந்த உயிர்வாழும் முன்னாள் ஜனாதிபதிகளான ஜோர்ஜ் எச்.டபிள்யூ. புஷ், ஜோர்ஜ் டபிள்யூ புஷ் ஆகியோர் கலந்துகொண்டிருக்கவில்லை. கட்சியின் முக்கியஸ்தர்களான ஜோன் மக்கெய்ன், மிற் றொம்னி, ஜோன் கேசிச், மார்க்கோ றூபியோ, ஜெப் புஷ், லின்ட்ஸி கிரஹாம் உட்படப் பலர் கலந்துகொண்டிருக்கவில்லை.
1960களின் இறுதிக் காலப்பகுதியில் வாழ்ந்தவர்களுக்கு அல்லது அப்போதைய வரலாற்றைக் கவனித்தவர்களுக்கு, அமெரிக்க ஜனாதிபதி றிச்சர்ட் நிக்ஸனின் பிரசாரம் ஞாபகமிருக்கலாம். ‘அமெரிக்கா பற்றி எரிகிறது. இதோ, உலகின் காலில் வீழ்கிறது அமெரிக்கா’ என்றவாறான பிரசாரங்களே, அவரது பிரதான ஆயுதங்களாகும். 1969ஆம் ஆண்டு ஜனாதிபதியாகப் பதவியேற்ற அவர், 1973இல் மீண்டும் பதவியேற்ற போதிலும், அடுத்தாண்டே பதவி விலக வேண்டியேற்பட்டது. அதே மாதிரியான பயப்படுத்தும் பிரசாரங்களையே, குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில் காணக்கூடியதாக இருந்தது. ட்ரம்ப்பும் அதையே செய்தார். இதில் குறிப்பிடத்தக்கதாக, மாநாட்டின் முன்னர் வெளியிடப்பட்ட அறிக்கையொன்றில், நிக்ஸனின் உரைகளால் தூண்டப்பட்ட உரையொன்றையே ட்ரம்ப் ஆற்றுவார் எனத் தெரிவிக்கப்பட்டமை, எவ்வாறான தூண்டல் என்பதை, மாநாட்டின் பின்னரே அறியக்கூடியதாக இருந்தது.
இவ்வாறான குழப்பங்களை குடியரசுக் கட்சி சந்திக்க, ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாட்டின் பணி இலகுவானது. ஆனாலும், அக்கட்சியின் தலைவி வாஸெர்மான் உள்ளிட்ட அதிகாரிகள் சிலர், கட்சியின் வேட்பாளர்களில் பேர்ணி சான்டர்ஸை விட ஹிலாரி கிளின்டனுக்கு ஆதரவை வெளிப்படுத்தியதாகவும் பேர்ணி சான்டர்ஸுக்குப் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய திட்டங்களை வகுத்தார் என, விக்கிலீக்ஸால் வெளியிடப்பட்ட மின்னஞ்சல்கள் தெரிவித்தன. ஹிலாரிக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார்கள் என்பது வெளிப்படுத்தப்பட்டாலும், நடுநிலை தவறிய செயற்பாடுகளை மேற்கொண்டார்களா என்பது உறுதிப்படுத்தப்படாத போதிலும், ஜனநாயகக் கட்சிக்கு பெருத்த அவமானமாக அமைந்தது. கட்சியின் தலைவியும், பதவி விலக வேண்டியேற்பட்டது.
ஆகவே, ஒப்பீட்டளவில் குடியரசுக் கட்சியை விட மோசமான ஆரம்பத்தையே ஜனநாயகக் கட்சி பெற்றுக் கொண்டது. ஆனால், முதற்பெண்மணி மிச்செல் ஒபாமா, பின்னர் பேர்ணி சான்டர்ஸ், மைக்கல் புளூம்பேர்க், ஜோ பைடன், ஜனாதிபதி பராக் ஒபாமா, முஸ்லிம் இராணுவ வீரனின் தந்தை என, ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட உரைகள், நேர்முகமான எண்ணங்களை ஏற்படுத்தும் நோக்கில் வழங்கப்பட்டன.
வழக்கமாக, குடியரசுக் கட்சி தான் ‘தேசப்பற்று’ அதிகமான கட்சியாகக் கருதப்படும். ஜனநாயகக் கட்சியில் தேசப்பற்று கிடையாது என்பது அர்த்தம் கிடையாது, ஆனால் தேசப்பற்று என்றால் குடியரசுக் கட்சி தான் என்பது, அக்கட்சிக்குக் காணப்படும் ஒரு வகையான பெருமை. ஆனால், குடியரசுக் கட்சியில் இம்முறை இடம்பெற்ற தேசிய மாநாட்டில் முழுக் கவனமும் ட்ரம்ப் மீது காணப்பட்டதோடு, அமெரிக்கா மீது கவனம் செலுத்தப்பட்ட சந்தர்ப்பங்களில், எதிர்மறையான நோக்கிலேயே அந்தக் கவனம் காணப்பட்டது. மறுபக்கமாக ஜனநாயகக் கட்சியில், நாட்டின் ஒற்றுமை, அமெரிக்கா எவ்வாறு சிறந்த நாடு, எவ்வாறு அதை முன்னேற்ற வேண்டுமென, தேசத்தை முன்னிலைப்படுத்திய ஒன்றாகக் காணப்பட்டது.
இப்போது, ஹிலாரி கிளின்டனும் டொனால் ட்ரம்ப்பும் மோதப் போகிறார்கள். ட்ரம்ப் மீது ஏராளமான விமர்சனங்கள் காணப்படுகின்றன. இனவாதத்தையும் பிரிவினைவாதத்தையும் தூண்டுகிறார், சிறுபான்மையினரைக் கேவலப்படுத்தும் அல்லது கீழ்த்தரப்படுத்தும் கருத்துகளைச் சொல்கிறார், உச்சநிலைப் பணக்காரர்களுக்கு மாத்திரம் ஆதரவாக இருக்கிறார், உறுதியான கொள்கைகள் இல்லை, பயங்கரவாத ஒழிப்பு என்ற பெயரில் போர்க் குற்றங்களைச் செய்யப் போவதாகச் சொல்கிறார் என, அவர் மீதான குற்றச்சாட்டுகள் நீண்டு செல்கின்றன. ஹிலாரி கிளின்டன் ஒன்றும் சுத்தமானவர் கிடையாது. மின்னஞ்சல் விடயத்தில் அவர் பொய் சொன்னார் என்பது, தெட்டத்தெளிவான ஒன்று. அத்தோடு, நாட்டின் அரசியலே, உயர்மட்டத்தினரால் கட்டுப்படுத்தப்படுகின்றது என்ற குற்றச்சாட்டு இருக்கும் நிலையில், அந்த உயர்மட்டத்தைச் சேர்ந்த ஒருவரான ஹிலாரியால், உண்மையாகவே மாற்றத்தைக் கொண்டுவர முடியுமா என்பது கேள்வி தான். ட்ரம்ப்பா அல்லது ஹிலாரியா என்பதை, படுமோசமான ஒருவருக்கும் மோசமான ஒருவருக்கும் இடையிலான தெரிவென்றே, ஒரு தரப்பினர் சொல்கின்றனர்.
ஆனால், நவம்பரில் இடம்பெறவுள்ள தேர்தலில், ஏனையோரின் உரிமைகளை மதிக்கும், சிந்திக்கும் திறனுள்ள மக்களுக்கான வெளிப்படையான தெரிவு ஒருவர் தான். அவர் தான் ஹிலாரி கிளின்டன். அவர் மீதான தவறுகள் எவ்வாறு இருந்தாலும், மக்களின் சேவைகளுக்காக அர்ப்பணித்த ஒருவர் அவர் என்பதில் மாற்றுக் கருத்துகள் இல்லை. ஹிலாரியின் போட்டியாளரான பேர்ணி சான்டர்ஸ், முதன்மைத் தேர்தல் காலத்தில் சொன்னது போன்று, ‘ஹிலாரி கிளின்டன், தனது மோசமான (முடிவெடுக்கும்) நாளில், டொனால்ட் ட்ரம்ப்பை விட 1,000 தடவைகள் சிறந்தவர்’.
அத்தோடு, ஹிலாரியைத் தோற்கடிப்பதொன்றும், ட்ரம்ப்புக்கு இலகுவானதாக அமையப் போவதில்லை. ஹிலாரி கிளின்டனும் அவரது கணவரான பில் கிளின்டனும், பழுத்த அரசியல்வாதிகள். தேவையான காய்களை, எங்கே நகர்த்த வேண்டுமென்ற அனுபவம் கொண்டவர்கள். யாரை, எங்கே எதிர்க்க வேண்டுமென்பதையும் அறிந்தவர்கள் அவர்கள். 2007ஆம் ஆண்டில் பராக் ஒபாமாவுக்கு எதிராக ஜனநாயகக் கட்சியில் போட்டியிட்ட போது, ஒபாமா மீது கொள்கை ரீதியான விமர்சனங்களை முன்வைத்தாலும், அவரை ஒட்டுமொத்தமாக எதிர்ப்பதிலிருந்து, ஹிலாரி தவிர்த்திருந்தார். பின்னர், ஒபாமாவின் ஆட்சியில் இராஜாங்கச் செயலாளராகவும் பணியாற்றியிருந்தார். பேர்ணி சான்டர்ஸுக்கு எதிராக இவ்வாண்டிலும், எவ்வளவு எதிர்ப்புகள் இருந்தாலும், தனிப்பட்ட ரீதியில் தாக்குவதிலிருந்து விலகியிருந்தார் ஹிலாரி. ஏனெனில், அவர்களிருவரும் மக்களால் நேசிக்கப்படுபவர்கள் என்ற உண்மை, அவருக்குத் தெரியும். ட்ரம்ப் விடயத்தில் அவ்வாறில்லை. அதனை நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறார் ஹிலாரி.
தேசிய மாநாட்டில், இறந்த முஸ்லிம் படைவீரர் ஒருவரின் தந்தையை உரையாற்ற அழைத்தமை, அவ்வாறானதொன்றே. அமெரிக்காவில் (ஏனைய நாடுகளிலும் தான்), படைவீரர்களுக்கென உச்சபட்ச மரியாதை உள்ளது. அதுவும், நாட்டுக்காக உயிரை விட்டவர்களின் குடும்பங்களுக்கு, உயர் மரியாதை வழங்கப்படுகிறது. ஆனால், முஸ்லிம்களைக் கண்மூடித்தனமான எதிர்க்கும் ட்ரம்ப், இந்தக் குடும்பத்தையும் எதிர்ப்பாரென்பது, ஹிலாரிக்கு (பில் கிளின்டனுக்கும்) தெரிந்திருந்தது. அவர்கள் வீசிய தூண்டிலில் மாட்டிக் கொண்டார் ட்ரம்ப். சிறிது சிந்திந்திருந்தால், ‘எல்லா முஸ்லிம்களையும் நான் எதிர்க்கவில்லை. அடிப்படைவாதிகளையே எதிர்க்கிறேன். இறந்த அந்த வீரனின் குடும்பத்தின் உணர்வுகளை நான் மதிக்கிறேன். ஆனால், ஈராக் போருக்கு ஆதரவாக, ஹிலாரி கிளின்டன் வாக்களித்திருக்காவிட்டால், அந்த இளைஞன் இன்னமும் உயிருடன் இருப்பான்’ என, ட்ரம்ப்பால் பதில் வழங்கியிருக்க முடியும். ஆனால், அவரது முஸ்லிம் வெறுப்புணர்வு காரணமாக, அவர்களை அவமானப்படுத்தினார் ட்ரம்ப். அதன் விளைவாக, தனது கட்சிக்குள்ளேயே பலத்த எதிர்ப்பை எதிர்கொள்கிறார் அவர்.
இதனால் தான், இந்தத் தேர்தல், குடியரசுக் கட்சியின் முதன்மைத் தேர்தல் போன்று, டொனால் ட்ரம்ப்புக்கு இலகுவானதாக இருக்கப் போவதில்லை. ஹிலாரி கிளின்டனை வெல்வதொன்றும் அவ்வளவு இலகுவானதாக அமையாது. ஆனால், ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷை, இரண்டு தடவைகள் ஜனாதிபதியாகத் தெரிந்தவர்களும் டொனால்ட் ட்ரம்ப்பை பிரதான கட்சியொன்றின் வேட்பாளராகத் தெரிந்தவர்களும் உள்ள நாடு என்ற அடிப்படையில், இந்த நவம்பரில் நடக்கப்போவதை எதிர்வுகூறுவது, மிகவும் கடினமானதே.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .