2026 ஜனவரி 02, வெள்ளிக்கிழமை

அகதியாக மாறிய சீன சுற்றுலாப்பயணி

Shanmugan Murugavel   / 2016 ஓகஸ்ட் 09 , பி.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவைச் சேர்ந்த சுற்றுலாப்பயணி ஒருவர், ஜேர்மனிக்கான சுற்றுலாப் பயணத்தை மேற்கொண்டபோது, அகதியாகக் கருதப்பட்டு, அகதி முகாமொன்றில் 12 நாட்கள் தங்கியிருந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

அவரது முழுப் பெயர் வெளியிடப்படாததோடு, "திரு. எல்" என்று மாத்திரமே அவரது அடையாளம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. மண்டரின் மொழி மாத்திரமே பேசத்தெரிந்த குறித்த சுற்றுலாப்பயணி, தன்னுடைய பணப்பையைத் தொலைத்துள்ளார். பொலிஸ் நிலையத்துக்குச் சென்று முறையிடும் நோக்கில் சென்ற அவர், அகதிகள் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அலுவலகத்துக்கு மாறிச் சென்றுள்ளார். அங்கு சென்ற அவர், அங்கு வழங்கப்பட்ட படிவத்தை நிரப்பியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அங்கிருந்து 360 கிலோமீற்றர் தொலைவிலுள்ள அகதிகள் தங்கியிருக்கும் இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அகதிகளுக்கு வழக்கமாக வழங்கப்படும் உணவும் செலவுசெய்வதற்கான பணமும் வழங்கப்பட்டுள்ளது.

எனினும், மிகவும் ஆடம்பரமான ஆடைகளை அணிந்திருந்த அவர் மீது விசேட கவனம் காணப்பட்டுள்ளது. அத்தோடு, தனது கதையைச் சொல்வதற்கு அவர் முயன்றுள்ளார். எனினும், வேறு எவருக்கும் மண்டாரின் மொழி தெரியாமையால், அவரது நிலைமை குறித்து விளங்கிக் கொள்ள முடிந்திருக்கவில்லை. இணையத்தளங்களிலுள்ள செயலிகளைப் பயன்படுத்தி, அவர் கதைத்ததை விளங்கிக் கொள்ள முயன்றபோதிலும், அது வெற்றியளித்திருக்கவில்லை.

இறுதியாக, அப்பிரதேசத்தில் காணப்பட்ட சீன உணவகமொன்றின் உதவி பெற்றுக் கொள்ளப்பட்டது. அதன் பின்னரே, அவரது நிலைமை பற்றி விளங்கிக் கொள்ளப்பட்டது. ஜேர்மனிலிருந்து பிரான்ஸூக்கும் இத்தாலிக்கும் பயணம் செய்வதற்கு அவர் விரும்புவதாகவும் அறியப்பட்டது. உடனடியாகவே அவர் விடுவிக்கப்பட்டார். ஆனால், இவையெல்லாம் நடப்பதற்கு, 12 நாட்கள் எடுத்தன.

அங்கிருந்து வெளியேறுகின்றமை குறித்து மகிழ்ச்சி வெளியிட்ட அச்சுற்றுலாப்பயணி, நடந்தவை குறித்துத் தவறாக எண்ணவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X