Shanmugan Murugavel / 2016 ஓகஸ்ட் 10 , மு.ப. 03:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
நவ்ருவிலுள்ள அகதிகளுக்கான அவுஸ்திரேலிய தடுப்பு நிலையத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளில், பாலியல் துன்புறுத்தல், தாக்குதல் மற்றும் முயற்சிக்கப்பட்ட தானாக தாக்கிக் கொள்ளுதல் உட்பட 2,000க்கு மேற்பட்ட சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பத்திரிகையொன்று நேற்றுப் புதன்கிழமை (10) தெரிவித்துள்ளது. மேற்கூறப்பட்ட சம்பவங்களில், அரைவாசிக்கும் மேலானவை, சிறுவர்களுடன் தொடர்புடையவை எனக் கூறப்பட்டுள்ளது.
கார்டியன் அவுஸ்திரேலியாவால் பிரசுரிக்கப்பட்டுள்ள கசிந்த ஆவணங்களின் மூலம், அவுஸ்திரேலியாவினால், அயலிலுள்ள தென் பசுபிக் தீவுகளில் நடாத்தப்படும் இரண்டு அகதிகள் தடுப்பு நிலையங்களில் ஒன்றான நவ்ருவில் மேற்கொள்ளப்பட்ட துன்புறுத்தல்களின் அளவு மீண்டுமொரு முறை வெளிக்காட்டப்பட்டுள்ளதுடன், சிறுவர்கள் பேரதிர்ச்சியானால் பாதிக்கப்பட்டுள்ளதும் மேலுமொரு முறை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், நவ்ரு பொலிஸாருடன், மேற்கூறப்பட்ட அனைத்து அறிக்கைகளையும் உறுதிப்படுத்த எதிர்பார்ப்பதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
2013ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்திலிருந்து 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வரையான காலப்பகுதி வரையில் இடம்பெற்ற 2,000க்கு மேற்பட்ட கசிந்த அறிக்கைகளை கார்டியன் பிரசுரித்துள்ளது.
நவ்ருவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, ஏறத்தாழ 500 பேரில், 20 சதவீதத்துக்கு குறைவானோரே சிறுவர்கள் என்ற நிலையில், மேற்கூறப்பட்ட காலப்பகுதியில், சிறுவர்கள் மீது ஏழு, பாலியல் தாக்குதல்கள் உட்பட 59 தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. சிறுவர்களுக்கெதிராக காவலர்களினால் துன்புறுத்தல்கள் நிகழ்த்தப்பட்டுள்ளது என சில அறிக்கைகள் தெரிவிக்கின்ற நிலையில், பாலியல் தாக்குதல்கள் அடையாளந் தெரியாத நபர்களினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று சில அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, சிறுவர்களில், தானாக துன்புறுத்தப்படும் 30 சம்பவங்கள் காணப்படுவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்ற நிலையில், பராயமடையாதவர்களில், 159, தானாக துன்புறுத்தப்படும் சம்பவங்கள் காணப்படுகின்றன.
கடுமையாக பாதுகாக்கப்படும் முகாம்களும் சட்டவிரோதமான படகு வருகைகளுக்கு எதிரான அவுஸ்திரேலியாவின் கடுமையான குடியேற்றக் கொள்கையும் ஐக்கிய நாடுகளாலும் மனித உரிமை குழுக்களாலும் பரவலாக விமர்சிக்கப்படுகிறது.
அவுஸ்திரேலியாவின் கொள்கையின்படி, நடுக்கடலில் மறிக்கப்படும் அகதிகள், நவ்ரு அல்லது பப்புவா நியூ கினியிலுள்ள மனுஸ் தீவிலுள்ள இன்னொரு முகாமுக்கு அனுப்பப்படுவதோடு, அவர்கள் ஒருபோதும் அவுஸ்திரேலியாவில் குடியமர்த்தப்படமாட்டார்கள் என்று கூறப்படுகிறது.
ஐரோப்பாவுடன் ஒப்பிடுகையில், அவுஸ்திரேலியாவை அடைய முயற்சிக்கும் அகதிகளின் எண்ணிக்கை மிகச் சிறியது என்றபோதும், குடியேற்றமானது பாரிய பிரச்சினையாகவே தொடர்ந்தும் காணப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .