நமது நாய்க்கும் நன்றியிருக்கிறது
23-08-2016 11:05 AM
Comments - 0       Views - 478

மிருக இனத்தில், நாய்தான் மனிதர்களின் உற்ற தோழர்கள் என்று கூறப்படுகின்றது. இவை புத்திசாலித்தனமானவையாகவும் நன்றியுணர்வுள்ளனவாகவும் இருந்து நம்மை வியக்க வைக்கின்றன.

சொகுசுக்காக வாழும் பல செல்லப்பிராணிகள் வீட்டில் இருந்தாலும் எப்போதும் நன்றியுணர்வுடன் இருப்பது நாய் என்றவொரு இனம் மாத்திரமே.

நம்முடைய நாய்க்கும் நன்றியுணர்வு இருக்கின்றது என்பதை, யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் இடம்பெற்ற நெகிழ்ச்சியான சம்பவம் எடுத்தியம்பியுள்ளது.

தனது எஜமானை தீண்ட முயன்ற நாகபாம்புடன் போராடி தனது உயிரைக்கொடுத்து எஜமானின் உயிரை காப்பாற்றியுள்ளது வளர்ப்பு நாய். இந்தச் சம்பவம், ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கல்வியங்காடு- விளையாட்டரங்கு வீதியில் உள்ள வீட்டின் முற்றத்தில் வீட்டின் உரிமையாளரான செல்வரத்தினம் பிரசாத் என்பவர் அன்றிரவு ஓய்வெடுத்து கொண்டிருந்துள்ளார்.

இதன்போது எங்கிருந்தோ வந்த சுமார் 7 அடி நீளமான நாகபாம்பு அவரைத் தீண்ட முற்பட்டுள்ளது. இதனை அவதானித்த நாய், பாய்ந்துசென்று நாகத்துடன் போராடியது. ஏஜமானின் உயிரைக் காப்பதற்காக பாம்புடன் சுமார் 10 நிமிடங்கள் போராடியுள்ளது. கடுமையான போராட்டத்தின் போது, அந்த பாம்பு, நாயை 10 தடவைகளுக்கு மேல் கொத்தியுள்ளது.

சம்பவத்தை அறிந்து விரைந்து செயற்பட்ட அயலவர்கள் பாம்பை பிடித்து, கூடையொன்றில் அடைத்ததுடன் நாய்க்கு முதலுதவியளித்தனர். எனினும், அந்நாய் மரணித்துவிட்டது. அந்த துயரமான சம்பவத்தை பார்த்த வீட்டார் உள்ளிட்ட அயலவர்கள் அனைவரும் கண்கலங்கிவிட்டனர்.

இவ்வாறான சம்பமொன்றே, அமெரிக்காவிலுள்ள மிகப்பெரிய நகரமான பால்ட்டிமோர் என்ற நகரத்தில் இடம்பெற்றுள்ளது.

தன்னுடைய உரிமையாளரின் 8 மாத குழந்தைக் காப்பாற்றுவதற்காக தனது உயிரையே தியாகம் செய்த செல்லப்பிராணி 'போலோ' குறித்தான தகவல்களை வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவிலுள்ள மிகப்பெரிய நகரமான பால்ட்டிமோர் என்ற நகரத்திலுள்ள வீடொன்றில் எரிக்கா என்ற தாயும் அவருடைய 8 மாதக் குழந்தையும் போலோ என்ற அவர்களுடைய செல்லப்பிராணியான நாயும் வாழ்ந்து வந்துள்ளனர்.

சம்பவ தினத்தன்று, தன்னுடைய 8 மாதக் குழந்தையை மேல் மாடியில் விட்டு விட்டு, ஏதோவொரு காரணத்துக்காகத் தன்னுடைய காருக்கருகில் வந்த தாய், தன்னுடைய வீடு திடீரென்று தீப்பிடித்து எரிவதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

வீடு முழுவதும் புகை சூழ்ந்துக்கொண்டதால், வீட்டுக்குள் இருந்த தன்னுடைய குழந்தையையும் நாயையும் எப்படிக் காப்பாற்றுவது என்று தெரியாமல் குழம்பிப்போயுள்ளார்.

அயலவர்கள் எவ்வளவு முயற்சி செய்த போதிலும், எவராலும் வீட்டுக்குள் செல்வதற்கு முடியாமல் போயுள்ளது. தீயணைப்புப் படையினர் வரும் வரை காத்திருந்தே ஆக வேண்டும் என்ற நிலையில், தீயணைப்புப் படையினரால் குறித்த வீடு உடைக்கப்பட்ட போது, 8 மாதக் குழந்தையும் போலோ என்ற செல்லப்பிராணியும் இருந்த காட்சி சகலரையும் உறையச்செய்து விட்டது.

தன்னுடைய உடம்பால், 8 மாதக் குழந்தையை அப்படியே அரவணைந்த படி, தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் போலோ காணப்படடுள்ளது. குழந்தையின் முகம், தொடை மற்றும் கைகளில் சிறிய தீக்காயங்கள் காணப்பட்ட போதும் குழந்தையின் உயிரைக் காப்பாற்றிக்கொடுத்த போலோ, தன்னுடைய உயிரை துச்சமாக நினைத்து குழந்தைக்காகத் தீக்கிரையாகி உயிரிழந்திருந்தது.

'போலோ நினைத்திருந்தால், தன்னைப் பாதுகாத்துக்கொள்வதற்காக மாடியிலிருந்து கீழே ஓடி வந்து தப்பியிருக்கலாம். ஆனால், அது எனது குழந்தைக் காப்பாற்றுவதற்காகவே வீட்டுக்குள்ளேயே இருந்தது. விவியானா (குழந்தை) பிறப்பதற்கு முன்னர் எனது முதல் குழந்தை போலோதான்' என்று குழந்தையின் தாயார் தெரிவித்துள்ளார்.

"நமது நாய்க்கும் நன்றியிருக்கிறது" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty