2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

சாதனையைத் தவற விட்டார் சந்திமால்

Shanmugan Murugavel   / 2016 ஓகஸ்ட் 24 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் இரண்டாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில், குமார் சங்கக்கார, சனத் ஜயசூரிய, திலகரட்ன டில்ஷான் ஆகியோரின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை மயிரிழையில் இலங்கையணியின் உப தலைவர் தினேஷ் சந்திமால் தவறவிட்டுள்ளார்.

குமார் சங்கக்கார, சனத் ஜயசூரிய, திலகரட்ன டில்ஷான் ஆகியோருடன் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் தொடர்ச்சியாக ஐந்து அரைச்சதங்கள் பெற்றிருந்த சந்திமால் இப்போட்டியில் அரைச்சதம் பெற்றால் அவர்களின் சாதனையை முறியடிக்கலாம் என்ற நிலையிலேயே, அடம் ஸாம்பாவின் பந்துவீச்சில் எல்.பி.டபில்யு முறையில் 48 ஓட்டங்களுடன் சற்று முன்னர் ஆட்டமிழந்தார்.

இங்கிலாந்தில் இடம்பெற்றிருந்த ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச போட்டித் தொடரின் இறுதி நான்கு போட்டிகளிலும் அரைச்சதம் பெற்றிருந்த சந்திமால், இத்தொடரின் முதலாவது போட்டியிலும் அரைச்சதம் பெற்றிருந்தார்.

ஓட்டுமொத்தமாக இப்பட்டியலில் ஒன்பது அரைச்சதங்களுடன் ஜாவீட் மியான்டாட் முதலிடத்தில் காணப்படுகின்றார்.  மார்க் வோ, கேன் வில்லியம்ஸன், மொஹமட் யூசுஃப் , அன்ரூ ஜோன்ஸ், ஆசிஃப் இக்பால் ஆகியோர் ஆறு அரைச்சதங்களுடன் இரண்டாமிடத்தில் உள்ளனர். 

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கையணி  25 ஓவர்கள் முடிவில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 141 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. குசல் மென்டிஸ் 67, அணித்தலைவர் அஞ்செலோ மத்தியூஸ் மூன்று ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X