2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

டிஜிட்டல் மயமாகும் வங்கித்துறை

Gavitha   / 2016 ஓகஸ்ட் 25 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையைப் பொறுத்தமட்டில் வங்கி ஒன்றுடன் கொடுக்கல் வாங்கலொன்றை மேற்கொள்வது என்பதை எடுத்துக்கொண்டால், உடனே அனைவருக்கும் நினைவில் வருவது நீண்ட வரிசைகளில் காத்திருப்பது என்பதாகும்.

அதுவும், நீண்ட வார விடுமுறைக்கு முன்னதான வங்கி இயங்கும் தினத்தை எடுத்துக்கொண்டால், வாடிக்கையாளர்கள் வங்கியிலிருந்து பணத்தை பெற்றுக் கொள்ளவும், வைப்புச் செய்யவும், காசோலைகளை மாற்றிக் கொள்ளவும் வங்கிக்கு வெளியிலிருந்து கூட, வரிசையில் காத்திருப்பதைக் காண முடியும்.
சில நாட்களில் வங்கிகளில் போதியளவு கருமபீடங்கள் காணப்பட்ட போதிலும், அங்கு ஒருவர் மட்டுமே கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டுக்கொண்டிருப்பார். இதுபோன்ற நிலைமைகளை நாம் அதிகளவில் அரச வங்கிகளில் காணக்கூடியதாக உள்ளது.

இந்த நெரிசலைக் குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்திய வங்கிகள், நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பண வைப்பு இயந்திரங்களை அறிமுகம் செய்த வண்ணமுள்ளன. புகழ்பெற்ற தனியார் வங்கிகள் சில இந்த முறையை தலைநகரிலும், பிரதான நகரங்களிலும் அறிமுகம் செய்துள்ளதைக் காணமுடிகின்றது. இந்த முறை உண்மையில் சர்வதேச தனியார் வங்கியொன்றின் மூலமாக பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

அதாவது, காசோலைகளைப் பொறுத்தமட்டில், எந்தநேரத்திலும் கணக்கில் காசோலைகளை வைப்பிலிடக்கூடிய வசதி இந்த இயந்திரத்தினால் வழங்கப்படுகிறது. காசோலை வைப்புக்கான விவரங்களை பதிய வேண்டிய கடிதவுறை குறித்த இயந்திரங்களுக்கு அருகில் வைக்கப்பட்டிருக்கும், காசோலை வைப்புப் படிவத்தை நிரப்புவதைப் போன்றே, இந்த கடிதவுறையின் மேற்பகுதியில் கேட்கப்பட்டிருக்கும் விடயங்களைப் பூரணப்படுத்தி, குறித்த இயந்திரத்தில் கணக்கு பற்றிய விவரங்களைப் பதிவு செய்து காசோலையை வைப்புச் செய்யலாம்.

பண வைப்புக்கும் இது போன்ற தன்னியக்க இயந்திரக் கட்டமைப்பு வசதிகளைத் தனியார் வங்கிகள் ஏற்படுத்தியுள்ளன. தனது சொந்தக் கணக்குக்கும், மூன்றாம் தரப்பினர் கணக்குக்கும் பணத்தை ஆகக்கூடியது 200,000 ரூபாய் வரை வைப்புச் செய்யக்கூடிய வசதி வழங்கப்படுகிறது. இந்த இயந்திரங்களைப் பயன்படுத்தி பண வைப்புகளை மேற்கொள்ளுமாறு அறிவுத்தல்கள் வங்கிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதையும், அதிகாரிகள் அறிவுறுத்துவதையும் காணக்கூடியதாகவுள்ளது.

தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப, நவீனமயமாதலின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு சௌகர்யங்களை வங்கிகள் அறிமுகம் செய்து வரும் அதேவேளை, அந்த தொழில்நுட்பத்தினால் பாதுகாப்புக்கு ஏற்படக்கூடிய இடர்களும் அதிகரித்த வண்ணமுள்ளன. குறிப்பாக டெபிட் கார்ட்களை எடுத்துக் கொண்டால், ஏரிஎம் இயந்திரங்களிலிருந்து பணத்தை மீளப்பெறுவதற்கு இரகசிய குறியீட்டு எண்ணை பதிய வேண்டிய தேவை காணப்படுகிறது. அதே அட்டையை சுப்பர் மார்கெட் ஒன்றில் சமர்ப்பித்து பொருட்களை கொள்வனவு செய்யும் போது, எவ்வித இரகசிய குறியீடுகளையும் பதிய வேண்டியதில்லை. இந்த முறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய தேவை காணப்படுகிறது. ஏனெனில், களவாடப்பட்ட டெபிட் கார்டை கொண்டு, பணத்தை மீளப்பெறுவதுக்கு பதிலாக, கார்டை சமர்ப்பித்து பொருட்களைக் கொள்வனவு செய்தால் அதன் பாதிப்பும் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளரைத் தாக்குவதாக அமைந்துள்ளது.

தனியார் வங்கிகளில் மட்டுமே பெருமளவுக் காணப்பட்ட டிஜிட்டல் மயமாதல், தற்போது அரச வங்கிகளிலும் அவதானிக்கக்கூடியதாகவுள்ளது. குறிப்பாக வங்கிக்குச் செல்லாமலே கணக்கொன்றை ஆரம்பித்துக் கொள்ளக்கூடிய வசதி, இணையத்தினூடான கொடுக்கல் வாங்கல் போன்ற வசதிகள் அரச வங்கிகளிலும் வழங்கப்படுகின்றன.

மனிதன் பணத்தைக் கொண்டு செல்லும் நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தி பிளாஸ்டிக் அட்டைகளினூடாக கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் நிலையை உருவாகிக்கொடுத்த வங்கிகள் தொடர்ந்து மனிதனின் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மனிதனின் நிதிசார் தேவைகளை இலகுபடுத்துவது தொடர்பில் கவனம் செலுத்துவதுடன், இது தொடர்பில் எழக்கூடிய நிழல்சார் பிரச்சினைகளையும் தீர்ப்பது பற்றி கவனம் செலுத்த வேண்டும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .