2026 ஜனவரி 09, வெள்ளிக்கிழமை

எதியோப்பியா: சைகை சொன்ன செய்தி

Thipaan   / 2016 ஓகஸ்ட் 25 , மு.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

ஒரு செய்தியைச் சொல்வதற்கான வழிகள் பல. சில நேரடியானவை; சில மறைமுகமானவை; இன்னும் சில செயல்களாலானவை. மொத்தத்தில் அனைத்தும் ஏதோவொரு வழியில் செய்தியைச் சொல்லவே விளைகின்றன. ஒடுக்கப்படுவோரை விட ஒடுக்குவோரின் குரல் நீண்ட தூரங்களை எட்டுவதுண்டு. அவர்களின் வலிமையும் அதற்குத் துணைபோவோரும் இக்குரல்களை உரத்து ஒலிக்கச் செய்கிறார்கள். ஒடுக்கப்படுவோரின் நிலை மோசமானது. அவர்களுக்கான குரல் மெல்லியது. ஆனால் வலிமையற்றோரின் கைகளில் ஆயுதங்கள் இல்லாமல் இல்லை. அவர்கள் தங்கள் குரல்களை உரத்து ஒலிப்பதற்கு மிகப் பொருத்தமான தருணங்களைத் தெரிவு செய்கிறார்கள். அவை மிகவும் பலம் வாய்ந்த ஆயுதங்களாக மாறிவிடும். அவை ஏற்படுத்தும் அதிர்வலைகள் புரட்சிகரமானவை.

எல்லோரையும் திரும்பிப் பார்க்கச் செய்பவை.

கடந்த வாரம் பிரேஸிலின் றியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில், இறுதித் தடகள நிகழ்வான மரதன் ஓட்டப் போட்டியின் நிறைவில் வெள்ளிப் பதக்கத்தை வென்ற எதியோப்பிய வீரரான பெயிசா லிலீசா தொடுகோட்டைக் கடக்கையில் தனது இரண்டு கைகளையும் குறுக்காகக் பிடித்து 'ஓ' என்ற சைகையைக் காட்டியமை உலகளாவிய கவனம் பெற்றது. லிலீசா ஏன் அப்படிச் செய்தார் என்பது இந்நிகழ்வைப் பார்த்துக் கொண்டிருந்த எல்லோரதும் வினாவாக இருந்தது. மரதன் ஓட்டப் போட்டியைத் தொடர்ந்த, பதக்கம் வழங்கும் நிகழ்விலும் பதக்கத்தைப் பெறுவதற்காக மேடையேறிய லிலீசா, மீண்டும் தனது கைகளைக் குறுக்காகப் பிடித்து அதே சைகையைச் செய்தார். இது ஏதோவொரு செய்தியை இவர் சொல்ல விளைகிறார் என்பதை உணர்த்தியது. அவர் சொல்ல விளைந்த செய்தி எது?

நிலத்தால் சூழப்பட்ட நாடுகளில் சனத்தொகையில் கூடிய நாடாகிய எதியோப்பியா 'ஆபிரிக்காவின் கொம்பு' என அழைக்கப்படுகின்ற பகுதியான வடகிழக்கு ஆபிரிக்காவில் அமைந்துள்ளது. இது எரிட்ரியா, சோமாலியா, ஜீபூட்டி, சூடான், தென் சூடான், கென்யா ஆகிய நாடுகளை எல்லைகளாகக் கொண்ட  சனத்தொகை ரீதியாக ஆபிரிக்காவின் இரண்டாவது பெரிய நாடாகும். ஆபிரிக்க ஒன்றியத்தின் தலைமைச் செயலகம், ஆபிரிக்காவிற்கான ஐ.நாவின் பொருளாதார ஆணைக்குழு உட்பட்ட ஆபிரிக்காவின் முக்கியமான அலுவலகங்களின் மையமாக எதியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபாபா திகழ்கிறது.

1991 ஆம் ஆண்டு மென்கிட்ஸ்சு மெரியம் தலைமையிலான இடதுசாரி ஆட்சி முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து கடந்த 25 ஆண்டுகளாக 'எதியோப்பிய மக்கள் புரட்சிகர ஜனநாயக முன்னணி' ஆட்சி செய்து வருகிறது. இவ்வாட்சியானது மேற்குலக ஆசீர்வாதம் பெற்ற சர்வாதிகார ஆட்சியாகும். கடந்த 25 ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க பொருளாதார வளர்ச்சியை எதியோப்பியா கண்டுள்ளது. இயற்கை வளங்கள் நிறைந்துள்ள எதியோப்பியா, கோப்பி உற்பத்தியிலும் முன்னிலை வகிக்கிறது. 2015 ஆம் ஆண்டு 8.7 சதவீதமான பொருளாதார அபிவிருத்தியுடன் உலகின் மிகவும் வேகமாக வளரும் பொருளாதாரமாக எதியோப்பியா மாறியுள்ளது.

இன்று ஆபிரிக்காவின் பொருளாதார மாதிரியாக எதியோப்பியா புகழப்படுகிறது. ஆனால் அதற்குக் கொடுக்கப்பட்ட விலை பெரிது. தனிமனித சுதந்திரம், அரசியல், பொருளாதார உரிமைகள் என அனைத்தும் மறுக்கப்பட்ட சர்வாதிகார ஆட்சி எதியோப்பியாவில் நடைபெறுகிறது. பல்வேறு இனக்குழுக்கள் வாழும் இந்நாட்டில் பெரும்பான்மையினரான ஒரோமோ இனத்தவர்களும் இரண்டாவது பெரிய இனக்குழுவான அம்ஹாரா இனக்குழுவினரும் மோசமான ஒடுக்குமுறைக்கு ஆளாகிறார்கள். மொத்தச் சனத்தொகையில் வெறும் ஆறு சதவீதத்தை மட்டுமே கொண்ட டிக்ரேயன் இனத்தவரே ஆட்சியில் இருக்கிறார்கள். அவர்களே ஆட்சியின் சகல அலுவல்களையும் கவனிக்கிறார்கள். நாடாளுமன்றில் ஓர் எதிர்க்கட்சி உறுப்பினர் கூடக் கிடையாது. பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வது என்ற பெயரில் அனைத்து ஜனநாயக உரிமைகளும் மெதுமெதுவாகக் குழிதோண்டிப் புதைக்கப்படுகின்றன.

1991 ஆம் ஆண்டு முதல் பெரும்பான்மை இனக்குழுவான ஒரோமோ இனத்தவர் தொடர்ச்சியான அடக்குமுறைகளுக்கும் ஒதுக்கல்களுக்கும் ஆளாகி வருகின்றனர். அவர்களது பண்பாட்டு அடையாளங்கள் மெதுமெதுவாக அழிக்கப்பட்டு, அவை எதியோப்பியத் தேசிய அடையாளத்தில் இருந்து மறையச் செய்யப்பட்டன. பொதுப்புத்தி மனநிலையில் ஒரோமோ இனத்தவர்கள் பற்றிய நினைவுகள் கவனமாகத் துடைத்தெறியப்பட்டன. ஒரோமோ இனத்தவருக்கும் அம்ஹாரா இனக்குழுவுக்கும் வரலாற்று ரீதியாக இருந்து வந்த மோதலைத் தூண்டி, இரு குழுக்களுக்கிடையில் நிரந்தரப் பகையை உருவாக்குவதன் மூலம் ஆட்சியில் உள்ள டிக்ரேயன் உயர்குடியினர் தங்கள் ஆட்சியினைத் தக்க வைத்துள்ளனர்.

அமெரிக்காவின் பயங்கரவாதத்திற்கு எதிரான போருக்கு முன்னோடியாக 1993 இல் சோமாலியாவின் தலைநகர் மொகடிசுவீல் இடம்பெற்ற மோதலில் அமெரிக்காவுக்கு ஏற்பட்ட தோல்வி, ஆபிரிக்காவில் நட்புச் சக்திகளை உருவாக்க வேண்டிய தேவையை உணர்த்தியது. இரட்டைக் கோபுரங்கள் மீதான தாக்குதல் இதற்கான தளத்தை தோற்றுவித்தது. ஆபிரிக்கக் கண்டத்தில் விரைவாக வளர்ச்சியடைந்த இஸ்லாமியப் பயங்கரவாதம் இதற்கான நியாயப்பாட்டை வழங்கியது.

இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட எதியோப்பியா, அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளியாகியது. எதியோப்பியாவின் எதேச்சாதிகார அரசாங்கத்தை எதுவித கண்டனங்களுமின்றி ஏற்றுக் கொண்ட அமெரிக்கா, எதியோப்பியாவிற்குப் பாதுகாப்பு, புலனாய்வு சார்ந்த துறைகளில் பயிற்சியளித்தது. இஸ்லாமியப் பயங்கரவாதிகளுடன் போராட ஆயுதங்களையும் வழங்கியது. இவை உள்நாட்டில் எதிர்ப்பைக் கட்டுப்படுத்த வாய்ப்பாகப் பயன்படுத்தப்பட்டன. ஓரோமோ இனத்தவர் அரசினால் பழிவாங்கப்பட்டனர். பயங்கரவாதத்திற்கெதிரான நடவடிக்கை என்ற போர்வையில் மாற்றுக் கருத்தாளர்கள் குறிவைக்கப்பட்டனர்.

கடந்த வருடம் எதியோப்பியாவின் சனத்தொகை அதிகம்கொண்ட மாநிலமான ஒரோமியாவில் அரசாங்கத்துக்கு எதிரான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் தொடங்கின. கடந்த 10 மாதங்களாகத் தொடர்ச்சியாக ஒரோமோ இனத்தவர் தங்கள் உரிமைகளுக்காகப் போராடி வருகின்றனர். இதற்குப் பதிலளிக்கும் முகமாக 'அடிஸ் அபாபா பெருந்திட்டம்' என்றவொரு திட்டத்தை நடைமுறைப்படுத்த எதியோப்பிய அரசாங்கம் முனைகிறது. இது தலைநகர் அடிஸ் அபாபாவை, அதற்கு அண்மையில் உள்ள பிரதேசங்களை உள்ளீர்த்து அபிவிருத்தி செய்வதன் மூலம் தலைநகரைப் பெருப்பிக்க முனைகிறது. இத்திட்டத்தால் தலைநகருக்கு அண்மையில் உள்ள பிரதேசங்களில் வசிப்பவர்கள் இடம்பெயரவும் வாழ்வாதாரங்களை இழக்கவும் நேரும். இங்கு வசிப்பவர்களில் பெரும்பான்மையினர் ஒரோமோ இனத்தவரே.

இத்திட்டத்தை எதிர்த்து நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களை அரசு மோசமான வன்முறையின் ஊடாக நிறுத்தியது. இதில் ஒரோமோ ஆர்ப்பாட்டக்காரர்கள் 400 பேருக்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதாகவும் அதில் பெரும்பான்மையோர் 18 வயதுக்குக் குறைந்த மாணவர்கள் என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவிக்கிறது. இதைத் தொடர்ந்து நாட்டின் பல பகுதிகளிலும் இன்றுவரை தொடர்ச்சியாகப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் கடந்தாண்டு எதியோப்பியாவிற்கு விஜயம் செய்த அமெரிக்க ஜனாதிபதி பராக் ஓபாமா, எதியோப்பிய அரசாங்கத்தை 'ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசாங்கம்' என்று பாராட்டினார்.

ஒருபுறம் இஸ்லாமியப் பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற போர்வையில் நாடுகளைத் தாக்கி, ஆபிரிக்கக் கண்டத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முனையும் அமெரிக்கத் திட்டத்துக்கு எடுபிடியாக எதியோப்பிய அரசாங்கம் செயற்படுகிறது. மறுபுறம் உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், பல்தேசியக் கம்பெனிகளின் செல்லப்பிள்ளையாக இருப்பதன் ஊடாக, பொருளாதார ரீதியான நலன்களைப் பேணி ஆபிரிக்காவின் பொருளாதார மாதிரியாகத் தன்னை உருமாற்றியுள்ளது. ஆனால் இயற்கை வளங்கள், விவசாயம், கோப்பி ஆகியன அடிமாட்டு விலைக்கு விற்கப்படுகின்றன. இச்சுரண்டல், பொருளாதார அபிவிருத்தி என்ற பெயரினால் கவனமாக மூடப்படுகிறது.

உலகில் மிகவும் தரமான கோப்பியை உற்பத்தி செய்யும் நாடு என்ற பெருமை எதியோப்பியாவுக்குண்டு. ஆனால், இக்கோப்பியை உற்பத்தி செய்யும் விவசாயிகள் இன்னமும் வறுமையிலேயே வாடுகிறார்கள். ஒரு கிலோ கோப்பிக்காக உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும் பணம் 2.2 அமெரிக்க டொலர்களாகும். இதே ஒரு கிலோ கோப்பியை விற்பனை செய்வதன் மூலம் ஈட்டப்படும் இலாபம் 320 அமெரிக்க டொலர்கள். இவ்வாறு சர்வதேசச் சந்தையில் நல்ல விலைக்கு விற்கப்படுகையில் அதனை உற்பத்தி செய்யும் விவசாயிகள் தங்கள் அன்றாட உணவுக்காக சர்வதேச உதவி நிறுவனங்களிடம் கையேந்தி நிற்கிறார்கள். பல்தேசியக் கம்பெனிகளுக்கு ஆண்டொன்றுக்கு 80 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலாபமாகப் பெற்றுக் கொடுக்கும் கோப்பியை உற்பத்தி செய்யும் விவசாயிகள், இன்னமும் மானியத்திலும் தொண்டு நிறுவனங்கள் வழங்கும் உதவிகளிலுமே உயிர் வாழ்கிறார்கள். இத்தொண்டு நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்குவது, கோப்பியை சர்வதேச சந்தையில் விற்று இலாபம் பெறும் பல்தேசியக் கம்பெனிகள் என்பது இங்கே முரண்நகை.

இதன் பின்னணியிலேயே ஒலிம்பிக்கில் பெயிசா லிலீசாவின் செயலை நோக்க வேண்டியுள்ளது. ஒரோமோ இனத்தவரான இவர், தனது இனத்துக்கு தொடர்ச்சியாக நிகழ்ந்து வரும் கொடுமைகளை உலகுக்குச் சொல்லப் பொருத்தமான ஒரு வழியைத் தேர்ந்தெடுத்துள்ளார். மரதன் ஓட்டப் போட்டியின் பின் கருத்துரைத்த லிலீசா, 'தான் நாடு திரும்பினால் கொல்லப்படுவதற்கான சாத்தியம் அதிகம் இருப்பதாகவும், அதேவேளை எதியோப்பியாவில் வசிக்கும் தனது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு உயிராபத்து இருப்பதாகவும் அவர்கள் துன்புறுத்தப்படக் கூடும் என அஞ்சுகின்றேன்' எனவும் தெரிவித்தார்.

அதேவேளை இந்த எதிர்ப்பை, தான் தனக்கு ஏற்படக் கூடிய பாதிப்புக்களை உணர்ந்தே வெளியிட்டதாகவும், தனது இன மக்கள் எதிர்நோக்கும் அவலங்கள் உலகளாவிய கவனம் பெறவில்லை என்றும் மேலும் கூறியிருந்தார்.

இதேவேளை, ஒலிம்பிக் நடத்தைக் கோவை, போட்டிகளின் போது அரசியல் ரீதியான எதிர்ப்புகளையோ, கருத்துகளையோ வெளிப்படுத்தும் செயல்களை வீரர்கள் செய்யக் கூடாது என்று சொல்கிறது. இதன்படி இவரது வெள்ளிப் பதக்கம் மீளப்பெறப்பட வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன. விளையாட்டில் அரசியல் கலக்கக்கூடாது என்பது இவர்களின் வாதமாக இருக்கிறது. ஆனால், அரசியல்தான் விளையாட்டை, அதன் தன்மையைப் பல சந்தர்ப்பங்களில் தீர்மானிக்கிறது என்பதை இவர்கள் வசதியாக மறந்து விடுகிறார்கள். 

நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டிகளின் நாயகன், 5,000 மற்றும் 10,000 மீற்றர் போட்டிகளில் இரண்டாவது முறையாகத் தங்கம் வென்ற மொகமட் பராவோ அல்லது குறுந்தூர தடகள ஓட்டத்தில் யாருமே எட்டமுடியாத சாதனைகளை உரிமைகளாக்கி விடைபெற்ற உலகின் அதிவேக மனிதன் உசைன் போல்ட்டோ அல்லƒ தனது உயிரைத் துச்சமாக மதித்து தனது குடும்பத்தினரின் எதிர்காலம் குறித்தும் அஞ்சாது நாட்டில் நடக்கும் அநியாயங்களை உலகறியச் செய்வதற்காகவும்  நியாயத்துக்காகப் போராடும் ஒடுக்கப்பட்டவர்களின் குரலாகவும் தனது சைகையால் செய்தி சொன்ன பெயிசா லிலீசாதான் றியோ ஒலிம்பிக் போட்டிகளின் நாயகன். உலகெங்கும் ஒடுக்கு முறைக்குள்ளாகும் இலட்சோபலட்சம் மக்களின் தனித்த பிரதிநிதியாகச் சொன்ன செய்தியின் பெறுமதியை மதிப்பிடவியலாது.     

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .