2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

'யுத்தம் காரணமாக கிழக்கு மாகாணம் 50 வருடங்கள் பின்நோக்கியுள்ளது'

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 28 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

கல்வி, விளையாட்டு, பொருளாதாரம் என எந்தத் துறையை எடுத்தாலும் கிழக்கு மாகாணம் யுத்தத்தின் காரணமாக 50 வருடங்கள் பின்னோக்கிச் சென்றிருப்பதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

ஏறாவூர் அலிகார் தேசியக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற முதலமைச்சர் சவால் கிண்ணம் விளையாட்டு நிகழ்வை ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து வைத்து உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்தார்,

தொடர்ந்து உரையாற்றிய அவர், 'யுத்தம் 30 வருடங்கள் நடந்திருந்தாலும் யுத்தத்தின் பின்விளைவுகளால் கிழக்கு மாகாணம்  உயிர், உடமை இழப்புக்களைச் சந்தித்துள்ளதோடு பின்னடைவையும் எதிர்நோக்கியுள்ளது.
இலங்கையின் 9 மாகாணங்களில் கிழக்கு மாகாணம் கல்வியிலும் விளையாட்டுத்துறையிலும் 9வது இடத்திற்குப் பின்தள்ளப்பட்டுள்ளது.

இது கவலைக்குரிய விடயமாகும். ஆனால், சில அரசியல்வாதிகள் இந்தப் பின்னடைவு நிலைமையிலேயே கிழக்கு மாகாணத்தை தொடர்ந்து வைத்திருக்க விரும்புவது போல் தெரிகிறது. ஏனென்றால் அப்பொழுதுதான் இந்தப்பாதிப்புக்களையே மூலதனமாக வைத்து அவர்களால் தொடர்ந்து அரசியல் பிழைப்பு நடத்த முடியும். அதனால்தான் அபிவிருத்தி செய்வதற்கும் பல்வேறு தடைகளைப் போடுகின்றார்கள். ஆனாலும், இந்த சவால்களையெல்லாம் நாங்கள் முறியடிப்போம். மாகாணத்துக்கென மத்திய அரசினால் வழங்கப்பட்ட அதிகாரங்கள் அனைத்தையும் பெறும் வரை ஓயமாட்டோம்.

இப்பொழுது ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் என எல்லோரும் இந்த நாட்டிலே உண்மையான சமாதானத்தை நிலைநாட்ட வேண்டும் என்பதற்காக பல விட்டுக் கொடுப்புகளைச் செய்து தங்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்த வேளையிலே ஐக்கியப்பட்ட இனங்கள் வாழும் இந்தக் கிழக்கு மாகாணத்தை முன்னேற்றி இந்த உலகத்திற்கு எடுத்துக் காட்டும் பொறுப்பை எங்களுடைய தோள்களில் சுமந்திருக்கின்றோம். எமது மாகாண சபையிலுள்ள அமைச்சர்கள், உறுப்பினர்கள், தமிழரோ முஸ்லிமோ, சிங்களவரோ அவர்கள் ஊழலற்ற நிர்வாகத்திற்காகப் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இந்த வெளிப்படைத் தன்மையை எப்பொழுதும் பரிசீலிக்கலாம். அரசியலில் ஒட்டிக் கொண்டிருப்பதற்காக அபிவிருத்திகளைத் தடை செய்து கொண்டு மக்களையும் பிரதேசங்களையும் பிரித்தாளும் தேவை எமக்கில்லை.' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .