2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தலைவர்களை நினைவுகூரும் அரசியலின் பின்னால்

Thipaan   / 2016 ஓகஸ்ட் 30 , மு.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெய்வீகன்

'1977 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று எதிர்க்கட்சித் தலைவராக வந்த அமிர்தலிங்கம் அவர்கள், ஜே.ஆரால் கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காது மௌனம் காத்த காரணத்தினால் இந்த நாட்டின் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் கைதாகி சிறைசென்று சித்திரவதைகளை அனுபவித்து படுகொலையாகி, ஏன் இன்னமும் பலர் அந்த சட்டத்தின் சரித்திரத் தவறினால் சிறைவாசம் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்களே'

'அந்த அரசியல் கைதிகளின் விடுதலைக்காக முடிவெடுக்க வேண்டும்ƒ அவர்களின் விடிவுக்காகத் தடைநீக்க வேண்டும் என்றெல்லம் வீர முழக்கமிட்டுக்கொண்டு, இது போதாதென்று அந்தக் கைதிகளை நேரில் சென்று சந்தித்தும் விடுதலைக்காகப் பாடுபடுவேன் என்று உறுதியளித்துவிட்டு'

'இவற்றுக்கெல்லாம் முழுமுதற் காரணமான தமிழர் விடுதலைக் கூட்டணியின் மறைந்த தலைவர் அமிர்தலிங்கம் அவர்களின் 89 ஆவது பிறந்த தின நிகழ்வில் கலந்து கொண்டு அவர் ஒரு சிறந்த தலைவர் என்றும் அவரது அரசியல், தமிழர்களது மீட்சிக்கு வழிகோலியது என்றும் அப்படிப்பட்ட ஒரு தலைவரை தமிழினம் இழந்துவிட்டமை துரதிஷ்டவசமானது என்றும் பேசுவதற்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களுக்கு எவ்வாறு மனசாட்சி இடமளித்தது'

- என்று கேள்வியெழுப்பும் கடிதம் ஒன்று அண்மையில் அமிர்தலிங்கம் அவர்களின் பிறந்த தின ஞாபகார்த்த நிகழ்வில் பேசிய பின்னர் முதலமைச்சர் அவர்களிடம் ஊடகவியலாளர் ஒருவரால் கையளிக்கப்பட்டது.

தமிழ் கட்சியின் தலைவர் ஒருவரால் கையளிக்கப்பட்ட இந்தக் கடிதத்தை வாங்கிப்படித்த முதலமைச்சரின் முகம் கறுத்துப் போனது. அந்தக் கேள்விக்குத் தான் பதிலளிக்கப் போவதில்லை என்று மறுத்தார்.

அமிர்தலிங்கம் அவர்களின் பிறந்த தின ஞாபகார்த்த நிகழ்வினையொட்டி நடைபெற்ற பல சுவாரஸ்யமான சம்பவங்களில் இதுவும் ஒன்று.

தமிழினத்தின் விடுதலைக்காகப் போராடிய தலைவர்களை அவர்களின் பிழை சரிகளுக்கு அப்பால் நினைவு கூருவது என்பது வரலாற்று ரீதியலான தேவை என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்துக்கள் இல்லை. அவ்வாறான ஓர் அரசியல் பண்பினை தமிழர் அரசியல் இன்று பெற்றுவருகிறது என்றால் அது வரவேற்கப்பட வேண்டிய ஒன்றே ஆகும்.

இது ஒரு புறமிருக்க‚ இந்த ஞாபகார்த்த விவகாரம் ஏற்படுத்தியுள்ள இன்னொரு விடயம்தான் இங்கு விரிவாக பேசப்படவேண்டியது.

அதாவது,காலஞ்சென்ற தமிழ் அரசியல் தலைவர்களின் நினைவுப்பகிர்வை தற்போதைய அரசியல்வாதிகள் எப்படியான ஒரு வியூகத்துக்குள் உட்படுத்துகிறார்கள் என்பதுதான் இங்கு மிகுந்த விமர்சனத்துக்கும் விசனத்துக்கும் உள்ளாகும் விடயமாக கருதவேண்டியுள்ளது.

இம்முறை அமிர்தலிங்கம் அவர்களின் பிறந்ததினத்தை நினைவு கூரும் நிகழ்வை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் பேச்சுப்போட்டி ஒன்று நடத்தப்பட்டது. அதில் வெற்றிபெற்றவர்களுக்கு ஞாபகார்த்த நிகழ்வில் பரிசில் வழங்கப்பட்டது. அன்றைய நிகழ்வில் வெற்றிபெற்ற மாணவர்கள் தமது பேச்சினை மீண்டும் மேடையில் பேசிக் காட்டினார்கள். இம்முறை வெற்றிபெற்ற மாணவி அப்படியே அந்தக்காலத்தில மங்கையற்கரசி பேசியதுபோலவே அச்சொட்டாகப் பேசினார் என்று நிகழ்வுக்குப் போனவர் ஒருவர் கூறிச் சிலாகித்தார்.

அரசியல் தலைவரின் ஞாபகார்த்த நிகழ்வினையொட்டி பேச்சுப்போட்டி நடத்துவது என்பது அமிர்தலிங்கம் காலத்து நடைமுறை. ஆனால், இன்றும் நாங்கள் அவ்வாறான ஒரு வழிமுறையைத்தான் பின்பற்றவேண்டுமா? இப்படியான பேச்சுப்போட்டி மூலமான நினைவுகூரல்களின் ஊடாக இந்த நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் சாதித்திருப்பது என்ன?

அமிர்தலிங்கம் அவர்களது பெயரால் போரினால் பாதிக்கப்பட்ட ஒரு கிராமத்தை முழுமையாக பொறுப்பெடுத்து அதன் அபிவிருத்தியை நடத்திக் காண்பிக்க முடியாதா?

அமிர்தலிங்கம் அவர்களின் பெயரால் போரினால் பாதிக்கப்பட்ட விதவைகளை ஒன்று சேர்த்து 'மாதிரி தொழிற்பேட்டை' ஒன்றை நடத்த முடியாதா?

அமிர்தலிங்கத்தின் பெயரால் போரினால் அநாதையான குழந்தைகள் வாழும் ஓர் இல்லத்தை முழுமையாகப் பொறுப்பெடுத்து நடத்த முடியாதா?

அமிர்தலிங்கத்தின் பெயரால் மாவீரர் குடும்பங்களுக்கு நலத்திட்டம் ஒன்றை உருவாக்க முடியாதா?

அமிர்தலிங்கத்தின் பெயரால் முதலீட்டுத் திட்டம் ஒன்றை உருவாக்கி அதிலிருந்து பெறும்பயனை சுழற்சி முறையில் விசேட தேவைக்கு உட்பட்டவர்களுக்கு உதவமுடியாதா?

இதனைச் சிந்திப்பதற்கு இந்த நிகழ்வின் ஒருங்கமைப்பாளர்களுக்கு ஏன் முடியாமல்போனது?

நீலன் திருச்செல்வம் ஞாபகார்த்த இன்ஸிரியூட் என்று கொழும்பிலேயே செயற்பாட்டு மையம் உள்ளபோது யாழ்ப்பாணத்தில் இன்னமும் பேச்சுப்போட்டிக்குள்தான் நாங்கள் நிற்கிறோமா?

அமி;ர்தலிங்கம் அவர்களது நினைவு நிகழ்வை மாத்திரம் இங்கு குறிப்பிடவில்லை. எல்லா தமிழ் அரசியல் - முன்னாள் போராளிக் குழுக்களின் உறுப்பினர்களும் ஏற்பாடு செய்யும் நிகழ்வுகள் மீதான பொதுவிமர்சனம்தான் இது.

பேச்சுப்போட்டி நடத்தி நான்கு மாணவர்களுக்கு பரிசில் வழங்குவதும், தலைவர்களின் படங்களுக்கும் உருவச்சிலைகளுக்கும் மாலை அணிவிப்பதும்தான் இந்தத் தலைவர்களிற்கு தாங்கள் செலுத்தும் உயரிய மரியாதை என்று இவர்கள் எண்ணுகிறார்களா? அல்லது அப்படியான ஓர் அரசியலைத்தான் இந்தத் தலைவர்கள் தங்களுக்கு சொல்லிக்கொடுத்துவிட்டு சென்றதாக இவர்கள் நினைவுகூருகிறார்களா?

போர் முடிவுற்றபின்னர் வடக்கில் ஏட்டிக்குப்போட்டியாக நடைபெறும் சகல அரசியல் நினைவு நிகழ்வுகளையும் அவதானித்தால் ஒன்றை மட்டும் தெளிவாகக் காணலாம்.

அதாவது, முன்னாள் தலைவர்களது பெயரிலும் அவர்களது சர்ச்சைகள் மிகுந்த போராட்ட பாதையிலும் இப்போதைய தலைவர்கள் குளிர்காய்வதற்குத்தான் அதிகம் விரும்புகிறார்கள். அந்தப் பாதையில் பயணம் செய்வதாகக் கூறிக்கொண்டு அதன் நிழலில் எவ்வாறு அரசியல் செய்வது என்ற சூட்சுமத்தை கண்டறிவதிலேயே சிரத்தையுடன் செயற்படுகிறார்கள். இந்தத் தலைவர்களின் போராட்ட நிழலில் தங்களது தனிஅரசியலை எவ்வளவு செறிவுடன் முதலீடு செய்யலாம் என்பதிலேயே குறிக்கோளாக இருக்கிறார்கள்.

தலைவர்களை துதிபாடும் இந்த நினைவுகூரல்கள் அவர்கள் மீதான அபிமானத்தின் நேர்த்திகளை பறைசாற்றும் உணர்வு வெளிப்பாடாக அமையுமே தவிர, அவர்களின் போராட்ட வாழ்க்கை முறையை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்லும் பயனுள்ள படிமுறையாக அமையாது. இப்படியான வழிபாட்டு முறைகள் இந்த தலைமுறையுடன் அவர்களது செயற்றின்களை குழிதோண்டி புதைத்துவிடும். அநேகமாக அடுத்த தலைமுறையுடன் அவர்களின் பெயரையும் மறந்துவிடச்செய்யும்.

அரசியல் தலைவர்களை நினைவு கூருவது என்பது அமைச்சுப் பணத்தில் கூடிக்கோலாகலம் செய்யும் 'வழித் தேங்காயை எடுத்து தெருப்பிள்ளையாருக்கு அடிக்கும்' ரக நிகழ்வாக அமையாது அவற்றை அர்த்தபூர்வமாக மாற்றி அமைக்க வேண்டும்.

வெளிநாடுகளில் பார்த்தால், முன்னாள் போர் வீரர்கள், மறைந்த அரசியல் தலைவர்கள் ஆகியோரை விசாலமான மண்டபங்களிலும் பொதுவெளிகளிலும் அல்லது அவர்களின் தூபிகளுக்கு முன்னால் சென்றும் ஒரு சில மணிநேரம் நினைவுகூர்ந்துவிட்டு சென்றுவிடுகிறார்கள். அவர்களுக்கு அது ஒரு சம்பிரதாயபூர்வமான நிகழ்வு அவ்வளவே.

ஆனால், தமிழினம் அவ்வாறான 'சல்யூட்' அடித்துவிட்டு செல்லும் நினைவுகூரல் முறைக்கு இன்னமும் பழக்கப்பட்டுவிடவுமில்லை; பருவமடையவுமில்லை. வரலாற்றின் ஒவ்வொரு சம்பவங்களையும் தலைமுறைகளின் வழியாக எடுத்துச் செல்லவேண்டிய மிக முக்கிய காலகட்டத்தில் வாழ்த்து கொண்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல், இதற்கு எதிராகச் செயற்பட்டுக் கொண்டிருக்கும் பாரிய சக்தி ஒன்றுக்கு எதிராகவும் இந்த முயற்சியை மேற்கொள்ள வேண்டிய கடப்பாட்டில் இருக்கிறது. இத்தனை ஆயுதக்குழுக்கள் தங்கள் தலைவர்களையும் போராளிகளையும் நினைவுகூரும்போது பொங்காத சமூக பிரக்ஞை இப்போது எங்கிருந்து வந்தது என்று கேட்கலாம்.

முதலமைச்சர் என்பவர் வடக்கு மக்களின் ஏகபோக ஆணையுடன் தெரிவுசெய்ப்பட்ட ஒருவர். தமிழினத்தின் பெரும்பான்மை ஆணையுடன் கோலோச்சிக் கொண்டிருக்கும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பெருந்தலைர்களில் ஒருவர். ஆகவே, வரலாற்றின் முக்கிய திருப்பங்களுக்கான சிக்னல்களை அவரது விரலிடுக்குகளில் தேடுவதுதான் பொருத்தமாக இருக்கும். அவரது வழியில் ஏனையோர் பயணப்படுவதற்கும் அது பெருந்துணையாக இருக்கும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .