Gavitha / 2016 செப்டெம்பர் 12 , மு.ப. 03:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ப. பிறின்சியா டிக்சி
பம்பலப்பிட்டி தொடர்மாடிக் கட்டட விவகாரம் தொடர்பில், ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் அனுப்பி வைக்கவுள்ள மகஜருக்கு கையொப்பங்களைத் திரட்டிக்கொள்வது தொடர்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டம், எவ்விதமான முடிவுகளும் எட்டப்படாத நிலையில் கடும் வாக்குவாதங்களுடன் நிறைவடைந்தது.
பம்பலப்பிட்டி தொடர்மாடிக் கட்டட நலன்புரிச் சங்கத்தினரால், சனசமுக நிலைய மண்டபத்தில் இந்தக் கூட்டம், நேற்று ஞாயிற்றுக்கிழமை (11) மாலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பம்பலப்பிட்டி தொடர்மாடிக் கட்டடத்தை இடித்துவிட்டு, அதே இடத்தில் கட்டப்படவுள்ள 60 மாடிகளைக் கொண்ட கட்டடத்துக்குச் செல்வதற்கு விரும்பவில்லை என்பதனையே, கூட்டத்தில் பங்கேற்ற பலர் சுட்டிக்காட்டினர். இன்னும் சிலர், 60 வருடங்கள் பழமைவாய்ந்த கட்டடத்திலிருந்து புதிய கட்டடத்துக்குச் செல்வதையே விரும்பியிருந்தனர்.
எனினும், புதிய கட்டடத்துக்குச் செல்வதற்கு விருப்பமில்லை என்பதை வலியுறுத்தி, ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் மகஜரொன்றை அனுப்புவதற்கான கையெழுத்தைப் பெற்றுக்கொள்ளல், இந்த விவகாரம் தொடர்பில் நலன்புரிச் சங்கத்தினால் முன்னெடுக்கவுள்ள அடுத்த கட்ட நடவடிக்கை, நீதிமன்ற நடவடிக்கையை நாடுவதாயின் அதற்குத் தேவையான நிதியைத் திரட்டிக்கொள்ளல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்காகவே, நேற்றையக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்து.
எனினும், கூட்டத்தில் பங்கேற்றவர்களில் பலர், மகஜரில் கையொப்பமிடுவதற்கு மறுத்துவிட்டனர். இன்னும் சிலர், தங்களுடைய வீடுகளுக்கு வந்து பெற்றுக்கொள்ளுமாறு கோரிநின்றனர்.
இந்தப்பிரச்சினை பொதுப் பிரச்சினை என்பதனால், வீடுகளுக்குச் சென்று கையொப்பங்களைப் பெறுவது உசித்தமற்றது என்று ஏற்பாட்டாளர்கள் மறுத்துவிட்டனர். இதனால், இந்த விடயத்தில் கருத்து முரண்பாடுகள் தோற்றின.
மாலை 4. 15க்கு ஆரம்பமான கூட்டம், எவ்விதமான இணக்கப்பாடும் இன்றி மாலை 5.30க்கு நிறைவடைந்தது.
சுமார் 300 குடும்பங்கள் வசித்து வரும் பம்பலப்பிட்டி தொடர்மாடிக் கட்டடத்தை இடித்துவிட்டு, அதே இடத்தில் 60 மாடிகளைக்கொண்ட கட்டடத்தைக் கட்டுவதற்கு அமைச்சரவை 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2ஆம் திகதியன்று அங்கிகாரமளித்திருந்தது. இந்நிலையில், அந்தப் புதிய கட்டடத்தில் குறித்த தொகை மக்கள் குடியமர்த்தப்படுவர் என்று, தேசிய வீடமைப்பு அதிகார சபையின் பிரதிப் பொது முகாமையாளர் சரத் குமார் அண்மையில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல்
பம்பலப்பிட்டி தொடர்மாடிக் கட்டட விவகாரம் தொடர்பில், செய்தி சேகரிக்கச் சென்றிருந்த டெய்லி மிரர் பத்திரிகையின் பெண் ஊடகவியலாளர், அங்கிருந்த பெண்ணொருவரால் மிரட்டப்பட்டார்.
பம்பலப்பிட்டி விவகாரம் தொடர்பிலான கூட்டம், பம்பலப்பிட்டி தொடர்மாடிக் கட்டட நலன்புரிச் சங்கத்தினரால், சனசமுக நிலைய மண்டபத்தில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (11) மாலை நடத்தப்பட்டது. இதுதொடர்பிலான செய்திகளைச் சேகரிக்குமாறு ஊடக நிறுவனங்களுக்கு அழைப்பிதழும் அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், செய்திகளைச் சேகரிக்கச் சென்றிருந்த ஊடகவியலாளர்கள் அதனை ஒலிப்பதிவு செய்துகொண்டனர்.
இதன்போது, கூட்டத்துக்கு வருகைதந்திருந்த குறித்த தொடர்மாடியை வசிப்படமாகக் கொண்ட பெண்ணொருவர், 'உன்னை யார் வரச்சொன்னது', 'ஒலிப்பதிவை அழி', 'எங்களுடைய விடயங்களில் தலையிடுவதற்கு நீங்கள் யார்?' உள்ளிட்ட கேள்விகளைக் கேட்டு மிரட்டியுள்ளார். எனினும், அங்குசென்றிருந்த ஊடகவியலாளர்கள் நிலைமையை மிக நிதானமாக அவதானித்துவிட்டு அங்கிருந்து திரும்பிவிட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .