2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

1977 இனக்கலவரத்தின் விளைவுகள்

Thipaan   / 2016 செப்டெம்பர் 12 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்.கே.அஷோக்பரன் LLB (Hons)

 

 

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 57)

இலங்கை முழுவதும் தமிழ் மக்கள் பாதிப்பு

1958 இனக்கலவரத்துக்கு பின்பு இலங்கையில் இடம்பெற்ற மிகப் பாரதூரமான இனக்கலவரம் 1977 இனக்கலவரமாகும். ஸ்ரீமாவோவின் கொடுமையான ஆட்சியிலிருந்து மாற்றம் கிடைக்காதா என்று நினைத்தவர்களுக்கு, ஐக்கிய தேசியக் கட்சி கொடூரமான மாற்றத்தைத் தந்தது. 1977 ஓகஸ்ட் 15-16 ஆம் திகதிகளிலிருந்து இரண்டு வார காலங்களுக்கு நீண்ட இந்தக் கலவரத்தில் இலங்கையின் பலபாகங்களிலும் வாழ்ந்த தமிழர்கள் உயிரிழப்புக்கள் உள்ளிட்ட பாரதூரமாக பாதிப்புக்களைச் சந்தித்தனர். இந்தக் கலவரம் எதிர்பார்க்கப்படாததல்ல என்று வோல்டர் ஷ்வார்ஸ் குறிப்பிடுகிறார்;. 'இலங்கையில் இனங்களுக்கிடையேயான உறவு கடும்சிக்கலான நிலையை அடைந்திருந்தது. அது எத்தகைய உரு எடுக்கும் என்பதுதான் கேள்வி' என்று அவர் எழுதினார். இனங்களுக்கிடையேயான முறுகல் நிலை இனக்கலவரம் என்ற உருவைப் பெற்றது.

'முன்பு இடம்பெற்றவை போன்று இது சிங்கள - தமிழ் மக்களிடையேயான இனக்கலவரம் அல்ல, மாறாக தமிழ் இனத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட இனவழிப்புத் தாக்குதல். சில சிங்கள மக்களும் இதில் பாதிப்படைந்திருந்தாலும், பெருமளவுக்கு உயிரிழப்புக்களையும் படுகாயங்களையும் கடும் பாதிப்புக்களையும் அடைந்தவர்கள் தமிழ் மக்களே! பரவலாக நடைபெற்ற கொள்ளைச் சம்பவங்களிலும் பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்களே! தமது வீடுகளையும் கடைகளையும் இழந்தவர்களில் பெருமளவானவர்கள் தமிழர்களே! மிகப் பெரும் இழப்பைச் சந்தித்தவர்கள் தமிழர்களே. ஏறத்தாழ 75இ000 பேரை அகதிகளாக்கிய 1977 இனக்கலவரத்தின் பெருமளவில் பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்களே! இதில் இந்திய வம்சாவளி தமிழர்களும் உள்ளடக்கம்' இவ்வாறு 1977 கலவரம் பற்றி தனது 'தமிழருக்கெதிரான பயங்கரவாதத்திற்குப் பின்னால்: இலங்கையின் தேசியப் பிரச்சினை' (ஆங்கிலம்) என்ற நூலில் எட்மண்ட் சமரக்கொடி குறிப்பிடுகிறார்.

அக்கறையற்றிருந்த அரச இயந்திரம்

கலவரங்களைத் தடுக்க பொலிஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பொதுவாக இதுபோன்ற பாரதூரமான கலவரம் நாட்டில் ஏற்படும்போது அரசாங்கம் தாமதிக்காது உடனடியாக அவசரகாலச்சட்டத்தை நடைமுறைப்படுத்தும். ஆனால் ஜே.ஆர் உடனடியாக அவரசரகாலச் சட்டத்தை அமுல்படுத்த விரும்பவில்லை; அது தமது கொள்கைகளுக்கும் ஜனநாயக விழுமியங்களுக்கும் விரோதமானது என்ற கருத்தினை முதலில் முன்வைத்தார். சிறிமாவோவின் ஆட்சிக்காலத்தின் பெரும்பகுதி அவசரகாலச் சட்டத்தின் கோரப்பிடியிலேயே கழிந்தது.

ஆகவே தாம் அதனைச் செய்யப்போவதில்லை என்று அவர் அதற்கு காரணம் கற்பித்தார். பின்னர் அரசாங்கம் ஊரடங்குச் சட்டத்தை அறிவித்தது. அத்தோடு அவசர காலநிலையும் பிரகடனப்படுத்தப்பட்டது. ஆனால் கலவரத்தில் ஈடுபட்டவர்களால் அது கவனத்திற்கொள்ளப்படவில்லை, ஊரடங்குச் சட்டத்தை அமுல்ப்படுத்த வேண்டிய பொலிஸாரும் பராமுகமாக இருந்தனர். இதற்கு இராணுவமும் பொலிஸாரும் பெருமளவு சிங்களவர்களைக் கொண்டிருந்தமை முக்கிய காரணமாக இருக்கலாம் என தமது 'இலங்கை: பயங்கரத் தீவு' (ஆங்கிலம்) என்ற நூலில் ஈ.எம்.தோன்டனும் ஆர். நித்தியானந்தனும் குறிப்பிடுகிறார்கள். மேலும், பொலிஸ் மற்றும் இராணுவம் ஏறத்தாழ முற்றுமுழுதாக சிங்களவர்களையே கொண்டமைந்தது என்றும் இதற்கு 'தனிச்சிங்களச்' சட்டம் முக்கிய காரணம் என்றும் குறிப்பிடுகிறார்கள்.

கொழும்பு மாவட்டத்தில் வாழ்ந்துவந்த தமிழர்கள் கடும் பாதிப்புக்களை எதிர்கொண்டனர். தமது வீடுகளை, வியாபார ஸ்தலங்களை தாக்குதல்களுக்கு இரையாக்கிவிட்டு நிர்க்கதியாக நின்ற இந்தத் தமிழ் மக்கள் கொழும்பில் அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டார்கள். பின்னர் கப்பலில் ஏற்றப்பட்டு வடமாகாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். இலங்கை ஒரு நாடு; ஒரு தேசம் என்று சொல்வதில் இலங்கை அரசாங்கம் ஒரு போதும் பின்னின்றதில்லை, அதுபோல வடக்கு-கிழக்கு தமிழர்களின் தாயகம் என்பதை ஒருபோதும் இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்டதுமில்லை. ஆனால் கொழும்பிலே வாழ்ந்து வந்த தமிழ் மக்கள், கலவரத்தில் பாதிக்கப்பட்டு நிர்க்கதியாக நின்றபோது, அவர்களை கப்பலிலேற்றி வட மாகாணத்திற்கே இலங்கை அரசாங்கம் அனுப்பி வைத்தது. இது வரலாற்றின் பிற்பகுதியில் கலவரங்கள் ஏற்பட்ட வேளைகளிலும் பின்பற்றப்பட்டது.

பாதிப்பைச் சந்திந்த இந்திய வம்சாவளித் தமிழர்கள்

இதேவேளை சிங்கள மக்கள் பரந்து வாழ்ந்த பகுதிகளில் வாழ்ந்துவந்த இந்திய வம்சாவளி தமிழ் மக்களும் இந்தக் கலவரத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்கள். காலங்காலமாக மலையகத்தில் வாழ்ந்து வந்த அம்மக்கள், இந்தக் கலவரத்தினால் நிர்க்கதியாக நின்றபோது அவர்களையும் வவுனியா மற்றும் திருகோணமலைக்கு இலங்கை அரசாங்கம் அனுப்பி வைத்தது. இதைப்பற்றி பேனாடீன் சில்வா பின்வருமாறு எழுதுகிறார்: '1977 இனக்கலவரத்தின்போது ஒரு புதிய விடயம் முன்நிற்கிறது. இருவாரங்கள் நடந்த இந்தக் கலவரம் தமிழர் மற்றும் சிங்களவரிடையே பெரும் கசப்புணர்வைத் தோற்றுவித்துள்ளது. இம்முறை பெருமளவிலான தமிழர்கள் மீண்டும் மேல், மத்திய மற்றும் தென்மாகாணங்களிலுள்ள தமது வாழ்விடங்களுக்குத் திரும்ப விரும்பவில்லை; அல்லது அஞ்சுகிறார்கள். இலங்கைப் பிரஜாவுரிமை பெற்ற ஒரு சில இந்திய வம்சாவளியினர் கூட அதனை மறுதலித்துவிட்டு இந்தியா செல்ல முயலத்தொடங்குகிறார்கள், மற்றைய இந்திய வம்சாவளியினர் கூட சிங்களப் பிரதேசங்களைத் தவிர்த்து வடக்கு மற்றும் கிழக்கில் குடியேற விரும்புகிறார்கள். அங்குதான் தமக்குப் பாதுகாப்பு என்று அவர்கள் உணர்கிறார்கள்'.

ஓகஸ்ட் 29 ஆம் திகதி அரசாங்க பத்திரிகையான டெய்லி நியூஸ் இந்தக் கலவரத்தில் அதுவரை ஏறத்தாழ 112 தமிழர்கள் கொல்லப்பட்டதாகவும் 25,000 வீடற்றவர்களாக ஆக்கப்பட்டதாகவும் ஏறத்தாழ 1,000 மில்லியன் பெறுமதியான சொத்துக்கள் அழிக்கப்பட்டதாகவும் கொள்ளையடிக்கப்பட்டதாகவும் நாடுமுழுவதும் கலவரங்கள் தொடர்பில் கிட்டத்தட்ட 4,000 பேர் கைது செய்யப்பட்டு, ஏறத்தாழ 2,500 பேர் நாடுமுழுவதுமுள்ள சிறைகளில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியது. அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படும் பத்திரிகை என்பதால் எண்ணிக்கைகள் குறைத்துக் காண்பிக்கப்பட்டதாகவும் உண்மையான பாதிப்பு இதைவிட அதிகம் எனவும் சிலர் சுட்டிக்காட்டுகிறார்கள்.

1977 கலவரம் பற்றி பாதிரியார் திஸ்ஸ பாலசூரிய இப்படி குறிப்பிடுகிறார்: '1977 ஓகஸ்ட் மாதத்தின் இறுதிப் பகுதியில் பெருமளவான இலங்கையர்கள் துன்பம்தரும் நாட்களை எதிர்கொண்டனர், களவு, கொள்ளை, தீமூட்டல் மற்றும் சட்டவிரோத செயல்கள் அனைத்தும் பரவலாக நடைபெற்றன. காடையர்கள் அப்பாவிகள் மீது வன்முறைத் தாக்குதல் நடத்தினர், இதனால் உயிர்கள் பலியானதோடு, மிகக்கொடூரமான காயங்களுக்கும் மக்கள் ஆளானார்கள். இவையெல்லாம் வெளிப்படையில் இனவாதத்தின் விளைவுகளே. உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி ஏறத்தாழ 100 பேர் உயிரிழந்துள்ளனர். ஏறத்தாழ 50,000 பேர் தமது வாழ்விடங்களை இழந்து வடமாகாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். வீடுகள், வியாபார ஸ்தலங்கள் என்பன முதலில் கொள்ளையடிக்கப்பட்டு, பிறகு தீக்கிரையாக்கப்பட்டன. இனரீதியான பிரிவினை மக்களின் மனங்களுக்குள் மீண்டும் ஊடுருவி விட்டது. அப்பாவிக் குழந்தைகள் தமது தாயையோ, தந்தையையோ இழந்துள்ளனர். பல்லாயிரம் தோட்டத்தொழிலாளர்களும் இந்தப் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்'.

சர்வதேச குரல்கள்

இதேவேளை இலங்கைத் தமிழர்களைக் கடுமையாகப் பாதித்த 1977 இனக்கலவரத்திற்கு எதிராக தமிழ்நாட்டில் குரல்கள் எழத்தொடங்கின. திராவிட முன்னேற்றக் கழகம் 1977 இனக்கலவரத்திற்கு எதிராக பொது எதிர்ப்பை வெளிப்படுத்தியதுடன், தமிழக சட்டப்பேரவையில் 1977 கலவரத்தை கண்டிக்கும் தீர்மானமொன்றை நிறைவேற்றியதுடன், பாரதப் பிரதமரிடம் இந்த இனக்கலவரம் பற்றி விசாரிக்க இலங்கைக்கு ஓர் இந்தியக் கபினட் அமைச்சரை அனுப்பி வைக்குமாறும் கேட்டுக் கொண்டது. இலங்கைத் தமிழர்கள் பாதிக்கப்படும் வேளைகளில் தமிழ்நாட்டில் குரல்கள் எழுவது சகஜம். ஆனால் திராவிட முன்னேற்றக் கழகம் போன்ற கட்சிகள் இலங்கைவாழ் தமிழர்கள் மீது காட்டும் அக்கறையானது அவர்களது அரசியல் இலாபம் சார்ந்தது என்ற விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன.

இந்தக் கலவரம் மீது இந்தியாவினது மட்டுமல்ல உலகினது கவனமும் திரும்பியது. 1977 செப்டெம்பர் 27 அன்று லண்டன் ரைம்ஸ் பத்திரிகையில் சேர்.ஜோன் ‡பொஸ்டர், டேவிட் அஸ்டர், லுயி ப்ளொம் கூப்பர், டிங்க்ள் ‡புட், றொபேட் பேர்லி, ஜேம்ஸ் போஸெட்,

மைக்கிள் ஸ்கொட் ஆகியோர் 'இனவெறிக்கு எதிரான விழிப்புணர்வு மேற்குலகத்தில் ஏற்பட்டுவரும் நிலையில், தமிழருக்கெதிராக இன ஒடுக்குமுறை தொடர்பில் நாம் பாராமுகமாக இருந்துவிட முடியாது. இதற்கெதிராக குரல் எழுப்ப வேண்டிய விசேட கடப்பாடு பிரித்தானியருக்கு உண்டு. ஏனெனில் பிரித்தானியாவே இம்மக்களை முப்பது வருடங்களுக்கு முன்பு அவர்களது அயலவர்களின் தயவில் விட்டுவிட்டு வந்தது. அம்மக்களுக்கு எமது அக்கறையும் ஆதரவும் தேவை' என்று குறிப்பிட்டார்கள்.

சன்சொனி ஆணைக்குழு

நிலைமை முற்றியிருந்த வேளையில் பிரதமர் ஜே.ஆர்.ஜெயவர்த்தன முன்னாள் பிரதம நீதியரசரான மிலானி க்ளோட் சன்சொனியைச் சந்தித்து, 1977 இனக்கலவரம் பற்றிய விசாரணைகளை தனிநபர் விசாரணை ஆணைக்குழுவாக இருந்த விசாரித்துத் தர வேண்டினார். விசாரணையின் முடிவுகளுக்கேற்ப நடவடிக்கைகள் எடுப்பதாகவும் உறுதியளித்தார். இதற்காக முன்னாள் பிரதம நீதியரசர் சன்சொனியைத் தேர்ந்தெடுத்தமைக்கு முக்கிய காரணங்களுள் ஒன்று அவர் பறங்கியர் இனத்தைச் சேர்ந்தவர் என்பதனாலாகும். அதாவது சிங்களவர் தரப்புக்கோ, தமிழர் தரப்புக்கோ பக்கம் சாராது அவர் நடுநிலையாக விசாரணைகளை மேற்கொள்வார் என்ற எண்ணத்திலேயாகும். ஆனால் உத்தியோகபூர்வமாக இந்த விசாரணை ஆணைக்குழு சற்று தாமதமாகவே அமைக்கப்பட்டது. 1977 நவம்பர் 9ம் திகதி அன்றைய ஜனாதிபதி வில்லியம் கொபல்லாவ விசாரணை ஆணையாளர் சட்டத்தின் கீழ் 1977 ஓகஸ்ட் 13 முதல் செப்டம்பர் 15 வரை நாடுமுழுவதும் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் பற்றி விசாரிக்க முன்னாள் பிரதம நீதியரசர் சன்சொனியை ஆணையாளராக நியமித்தார். இந்த ஆணைக்குழு நடைமுறையில் 'சன்சொனி ஆணைக்குழு' என்று அறியப்பட்டது. இந்த ஆணைக்குழு தன்னுடைய விசாரணைகளை 1978 பெப்ரவரி 8ம் திகதி ஆரம்பத்தது. மொத்தம் 298 அமர்வுகளின் பின்னர் 1979 ஒக்டோபர் 12ம் திகதி ஆணைக்குழு தனது விசாரணைகளை முடித்துக் கொண்டது.

ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியை ஏற்றதும் தமிழ் மக்களுக்கு இனப்பிரச்சினை தொடர்பில் ஆக்கபூர்வமானதொரு தீர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், உண்மையில் ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சி தமிழ் மக்களுக்கு முன்பிருந்ததை விட பாரதூரமான ஒரு நிலையை உருவாக்கிக் கொண்டிருந்தது. ஏறத்தாழ 19 வருடங்களின் பின் மீண்டும் ஓர் இனக்கலவரம் நாடுமுழுவதும் முன்னெடுக்கப்பட்டது மட்டுமல்லாது, தமிழ் மக்களின் தீர்வு பற்றிய எந்தக் கரிசனமுமின்றி ஜே.ஆரின் ஆட்சி சென்று கொண்டிருந்தது. பிரதமர் ஜே.ஆர். ஜெயவர்த்தனவைப் பொறுத்தவரையில் அவரது முதல் கரிசனையாக இருந்தது, புதிய அரசியலமைப்பு ஒன்றின் மூலம் நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதி முறையை இலங்கையில் அறிமுகப்படுத்தலாகும். மற்றப்படி கலவரத்தில் பாதிக்கப்பட்டோருக்கான நீதி என்பது அன்றளவில் சன்சொனி ஆணைக்குழுவோடு நின்றுவிட்டது. சன்சொனி ஆணைக்குழுவின் அறிக்கை கூட நாடாளுமன்றத்தில் முழுமையான விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை என்பது, ஜே.ஆர் அரசாங்கம் தமிழர்கள் மீது கொண்டிருந்த அக்கறைக்கு மிகப்பெரிய சான்றாகும்.

(அடுத்த வாரம் தொடரும்)

 


You May Also Like

  Comments - 0

  • Jagapriyan Tuesday, 13 September 2016 04:03 AM

    அப்போது அவசர கால சட்டம் பிறப்பிக்காமைக்கு காரணம் ராணுவத்திற்கு அதிக அதிகாரங்களை வழங்குவது சிறிமாவோவிற்கு விசுவாசமான ராணுவ அதிகாரிகளின் மூலம் ஆட்சிக்கவிழ்ப்பிற்கு வழிவகுக்கலாம் என்ற அச்சம் காரணமாகவே என்று சொல்லப்படுகின்றதே.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X