2026 ஜனவரி 02, வெள்ளிக்கிழமை

'தனிநாடாக தமிழீழம் அங்கிகாரம்'

Gavitha   / 2016 செப்டெம்பர் 13 , மு.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறைக்குத் தள்ளி, தன்னை வளர்ப்புப் பிராணியாக்க முடியாதென்றும் பேய்க்குப் பயந்தால், மயானத்தில் ஒருபோதும் வீடமைக்கப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ள பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளரும் ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில, 'சிது' தொலைக்காட்சித் தொடரில் வரும் சரண என்றழைக்கப்படும் பூனையைப் போன்றவனே இந்தக் கம்மன்பில என்றும் கூறினார்.

'சிறைக்குத் தள்ளினாலும், கம்மன்பிலவின் வாய்ப்பேச்சுக் குறையவில்லை என்று, அமைச்சரொருவர் தெரிவித்துள்ளார். 

நானும், அதையே சொல்கிறேன். சிறைக்குள் தள்ளி, என்னுடைய வாயை அடைத்துவிட முடியாது. அப்படி நினைத்தால், அது வெறும் கனவு மாத்திரமே. பேய்க்கு பயமில்லாததால் தான், மயானத்தில் வீடமைத்துக்கொண்டு இருக்கின்றோம்' என்றும், கம்மன்பில கூறினார்.

கொழும்பில் நேற்றுத் திங்கட்கிழமை (12) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது கருத்துரைக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது,

'டென்மார்க் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தினால் விசா அனுமதிப்பத்திரம் வழங்கும் போது, தன்னுடைய சொந்த நாட்டைக் குறித்துக்காட்டும் நாடுகளின் பட்டியலில் தமிழீழம் என்ற பெயரையும் இணைத்துள்ளது. தமிழீழத்தை, தனியொரு நாடாகவே, டென்மார்க் அரசாங்கம் அங்கிகரித்துள்ளது.

இதற்கு முன்னரும், அவுஸ்திரேலியாவின் புள்ளிவிவரத் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போதும், தாங்கள் பிறந்த நாட்டின் பட்டியலில், தமிழீழம் இணைக்கப்பட்டிருந்தது. இது தொடர்பில், தூதுவராலயத்தினால் எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை.

அந்நாட்டில் வசித்த இலங்கையர்களால் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழீழம் என்ற சொல், அப்பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது.

இந்த அரசாங்கம் பயந்துகொண்டிருந்தாலோ அல்லது தொடர்ந்தும் மௌனியாக இருந்தாலோ, பிரிவினைவாதிகளின் ஈழக் கனவு, கட்டாயம் நிறைவேறிவிடும். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம், இலங்கையில் தோற்கடிக்கப்பட்டுள்ள போதிலும், அவ்வியக்கத்தின் ஈழக் கனவுக்கு, சர்வதேச ரீதியில் பெரும் வரவேற்பு காணப்படுகின்றது.  

இதற்காக, கள்ளத்தனமான முறையில், இராஜதந்திர நடவடிக்கையொன்றும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.                                                              

இரா. சம்பந்தன் மற்றும் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோரும், இந்த நடவடிக்கையில் பங்காளர்களாக உள்ளனர். இந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் பதவியை வீ.ருத்ரகுமாரனே வகித்து வருகின்றார்' என்றும் கம்மன்பில சுட்டிக்காட்டினார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X