2024 மே 02, வியாழக்கிழமை

மீள்குடியேற்றம்: அடுத்தது என்ன?

George   / 2016 செப்டெம்பர் 13 , பி.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

'மீள்குடியேற்றம்', இந்த வார்த்தைதான் 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் அதிகமாக பேசப்பட்டு வரும் முக்கிய வார்த்தையாக இருக்கும். 3 தசாப்த காலமாக வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் வாழ்க்கையை புரட்டிப்போட்ட அல்லது தடம்மாற்றிய இடப்பெயர்வுகள் எண்ணிலடங்காதவை.

வடக்கு, கிழக்கில் தலைதூக்கியிருந்த விடுதலைப் புலிகளை அழிக்க வேண்டும் என அரசாங்கமும் தனிநாட்டைப் பெற்று, உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என்ற முனைப்புடன் புலிகளும் சண்டையிட்டுக் கொண்டிருந்த காலத்தில், இருதரப்புக்கும் இடையில் சிக்கிக்கொண்டு தமது பூர்வீக மண்ணையும் சொத்துக்களையும் சொந்தங்களையும் விட்டு உயிரை மட்டுமே காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற முனைப்புடன் ஒடிக்கொண்டிருந்த மக்களுக்கு 'இடம்பெயர்ந்தோர்' என்ற ஒற்றை வார்த்தையால் பெயர்சூட்டிவிட்டு, இருதரப்பினரும் யுத்தத்தை முன்னெடுத்திருந்தனர்.
அன்று தமது சொந்த இடங்களை விட்டு இடம்பெயர்ந்த அந்த மக்களின் நிலை, இன்று என்ன என்பது குறித்து தேடிப்பார்ப்பதும் முக்கியமாகும்.

 

 

யுத்தத்தின் போது இடம்பெயர்ந்த மக்களின் நிலங்களில், யுத்தம் நிறைவடைந்த பின்னர் உயர்பாதுகாப்பு வலயங்கள் என்ற பெயரில் முகாம்கள் அமைக்கப்பட்டன. அவ்வாறு இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட தமது நிலங்களை விடுவிக்க வேண்டும் என மக்கள், நீண்டகாலமாக பல போராட்டங்களை முன்னெடுத்தும் கோரிக்கைகளை விடுத்தும் வந்திருந்தனர்.

இந்நிலையில், இராணுவத்தால் வசப்படுத்தப்பட்ட நிலங்களை படிப்படியாக விடுவிக்க கடந்த அரசாங்கம் முடிவெடுத்த நிலையில், சில பகுதிகளை மாத்திரம் விடுவித்திருந்தது. இறுதி யுத்தத்தில், மனித உரிமைகள் மீறப்பட்டதாக  இலங்கைக்கு எதிராகக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு, அதிலிருந்து இலங்கை மீண்டுவருவதற்கான பிரயத்தனங்களை ஒருபுறத்தில் எடுத்து வர, மறுபக்கம் தமது நிலங்களை விடுவித்து மீள்குடியேற்றம் செய்யுமாறு மக்கள் முன்னெடுத்த போராட்டங்கள், முன்னைய அரசாங்கத்துக்கு  தலைவலியை கொடுத்தது.

அதனையடுத்து, நிலங்கள் விடுவிக்கப்பட்டு, மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டு வந்தாலும், அது சிறியளவிலேயே மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்நிலையில், நல்லாட்சி அரசாங்கம், கடந்த வருடம் ஆட்சிக்கு வந்ததையடுத்து, வடக்கில் படையினர் வசமிருந்த பெருமளவான நிலங்கள் விடுவிக்கப்பட்டு வருகின்றன.

படையினர் வசமிருந்த 11,629.72 ஏக்கர் அளவிலான நிலத்தில், இன்னும் 4,418.74 ஏக்கர் அளவிலான நிலம் மாத்திரமே விடுவிக்கப்பட வேண்டியுள்ளதாக படைத்தரப்பு தெரிவிக்கின்றது. 7,210.98 ஏக்கர் நிலப்பகுதி விடுவிக்கப்பட்டுள்ளதாக, அதாவது 62 சதவீதமான காணிகள் விடுவிக்கப்பட்டு விட்டதாக, யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மகேஸ் சேனாநாயக்க தெரிவிக்கின்றார். அதிலும், 2.7 சதவீதமான நிலப்பரப்பிலேயே இராணுவம் உள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த நேரத்தில், யாழ்;. குடாநாட்டில் 2,293 குடும்பங்கள் இடம்பெயர்ந்து, நலன்புரி நிலையங்களில் வசிக்கத் தொடங்கினர். இதில் முற்று முழுதாக இடம்பெயர்ந்த மக்களும் உள்ளடங்குகின்றனர். இதில், 971 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் 31 நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டனர்.

இந்த 971 குடும்பங்களில் 289 குடும்பங்கள், தமது நிலத்தை இழந்திருந்தார்கள். ஏனைய 682 குடும்பங்களுக்கு நிலங்கள் சொந்தமானதாக இருக்கவில்லை.

1990ஆம் ஆண்டுக் காலப்பகுதியில், யாழ். குடாநாட்டில் 159 நலன்புரி நிலையங்கள் இருந்த நிலையில், 2009ஆம் ஆண்டு ஆகும்போது, அதன் எண்ணிக்கை, 64 ஆக குறைவடைந்ததுடன் 2016இல் தற்போது வரையில், 31 நலன்புரி நிலையங்களே உள்ளன. இதில் 971 குடும்பங்களைச் சேர்ந்த 3,388 நபர்கள் தங்கியுள்ளனர். 1990ஆம் ஆண்டுக் காலப்பகுதியில், 9,555 குடும்பங்களைச் சேர்ந்த 38,282 பேர், நலன்புரி முகாம்களில் தங்கியிருந்தனர். 1991, 1992 ஆம் ஆண்டுகளில் ஆகக்கூடியதாக 30,164 குடும்பங்களைச் சேர்ந்த 1,18,367 பேர், 233 முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கோணபுலம் முதல் காங்கேசன்துறை வரையுள்ள 31 நலன்புரி நிலையங்களில், 971 குடும்பங்களைச் சேர்ந்த 1,612ஆண்கள், 1,776 பெண்கள் என 3,388 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்கள், இனிவரும் காலங்களில், அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்பட வேண்டியவர்கள்.

இந்நிலையில், விடுவிக்கப்பட்ட பகுதிகளில் மக்களை குடியேற்ற, இராணுவம் தமது பாரிய பங்களிப்பை செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். அதனை வலிறுத்துவது போல, கீரிமலை பிரதேசத்தில் சுமார் 100 வீடுகளைக் கட்டிக்கொடுக்கும் நடவடிக்கையில், இராணுவம் ஈடுபட்டுள்ளது.

இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் வசிக்கும் 133 குடும்பங்களுக்கு வீடுகளை அமைக்க, மீள்குடியேற்ற அமைச்சு நடவடிக்கை எடுத்த நிலையில், அரச காணியில் இராணுவத்தினர் வீடுகளை அமைக்கும் பணிகளை முன்னெடுத்துள்ளனர். முதற்கட்டமாக, 100 குடும்பங்களுக்கான வீடுகளும் இரண்டாம் கட்டமாக, 33 குடும்பங்களுக்கான வீடுகளும் நிர்மாணிக்கப்படவுள்ளன.

வீடுகளை அமைப்பதற்கு இடம் தேவைப்பட்ட போது, யாழ். மாவட்டச் செயலகம், கீரிமலை பிரதேசத்தில் 47 ஏக்கர் நிலப்பரப்பை பெற்றுக்கொடுத்துள்ளது. ஒவ்வொரு வீடும் நிர்மாணிக்கப்படும் நிலத்தின் பெறுமதி, சுமார் 20 இலட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளதுடன், அதனை அமைப்பதற்கான செலவுகளுடன் சேர்த்து, வீடொன்றின் பெறுமதி 4,362,240 ரூபாய் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

வீடமைப்புப் பணிகளில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதால், சுமார் 122 மில்லியன் ரூபாய் பணத்தை சேமிக்க முடிந்துள்ளமை இந்தத் திட்டத்தின் சிறப்பம்சமாகும். முற்றும் முழுதாக, இராணுவத்தின் கைதேர்ந்த பொறியியலாளர்களினால், யாழ். மக்களின் பாராம்பரியத்துடன் கூடிய, சகல வசதிகளையும் கொண்டதாகவே, இந்த வீடுகளுக்கான திட்டம் வரைந்து கொடுக்கப்பட்டு, நிர்மாணப் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த வீட்டு திட்டத்துக்காக வரையப்பட்ட திட்டங்களில், பொதுமக்களுடன் கலந்துரையாடி, பிரதேச செயலகத்தினால் ஒப்புதல் அளிக்கப்பட்ட வீட்டுத் திட்டமே, நிர்மாணப் பணிகளுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு உள்ளதாக, இராணுவத்தினர் குறிப்பிடுகின்றனர். 

45 நாட்களில், இந்த வீட்டுத் திட்டத்தை நிறைவு செய்யத் தீர்மானித்த போதும், வீடுகளுக்கான நிர்மாணப் பொருட்களை, யாழ்ப்பாணத்திலிருந்துப் பெற்றுக்கொள்ள எடுத்த முயற்சி, பொருட்களுக்கு யாழில் ஏற்பட்ட தட்டுபாடு, வானிலையில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக, சுமார் 3 மாதங்களுக்கும் அதிகமாக, இவ்வீட்டுத்திட்டம் தாமதடைந்து வருவதாக, திட்ட அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

யாழ். மக்களுக்காக மேற்கொள்ளப்படும் இந்த வீட்டுத் திட்டத்தினால் கிடைக்கும் இலாபத்தை,  அந்த மக்களுக்கே பெற்றுக்கொடுத்து, வருமானம் பெற வழிசெய்ய வேண்டும் என்பதற்காக, நிர்மாணத்துக்கான கட்டுமானப் பொருட்களை, யாழ். வர்த்தகர்களிடமிருந்தே பெற்றுக்கொள்வதற்கு  இராணுவம் தீர்மானித்தமை சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.

இரண்டு அறைகள், விறாந்தை, தனியான சமையலறை மற்றும் குளியலறை, மலசலக்கூடம் போன்ற வசதிகளுடனேயே, இந்த வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் இந்த வீடமைப்புத் திட்டத்தில், தனியான பாதை வலையமைப்பு, விளையாட்டு மைதானம், பாலர் பாடசாலை,  பொலிஸ் நிலையம், சனசமூக நிலையம், மருத்துவ விடுதி, தண்ணீர் வசதி, மின்சாரம் என்பவை உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படுகின்றன.

இது இவ்வாறிருக்க, தற்போது சொந்த இடத்தில் மீள்குடியேற்றப்பட்டுள்ள வீமங்காமம் மற்றும் இடம்பெயர்ந்து 26 வருடங்களாகியும் மீள்குடியேற்றப்படாத கண்ணகிபுரம், சபாபதி பிள்ளை நலன்புரி நிலையங்களைச் சேர்ந்த மக்களை சந்திக்கும் சந்தர்ப்பம், எமக்கு கிடைத்தது.

கடந்த 1990 - 1996ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், ஜே 246 (மயிலிட்டி), ஜே 247 (தையிட்டி), ஜே 249 (தையிட்டி கடற்கரை) ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் இடம்பெயர்ந்து, சபாபதி நலன்புரி நிலையத்தில் தங்கவைக்கப்பட்டதுடன், பின்னர், அருகிலேயே கண்ணகிபுரம் நலன்புரி நிலையமும் உருவாக்கப்பட்டுள்ளது.

சுமார் 136 குடும்பங்களைச் சேர்ந்த 596 பேர், 117 தற்காலிக வீடுகளில், கடந்த 26 வருடமாக கண்ணகிபுரம் நலன்புரி நிலையத்தில் வசித்து வருகின்றனர். இவ்விரு நலன்புரி நிலையங்களிலும், 160 வீடுகளில் 230 குடும்பங்கள் என்ற அடிப்படையில் வசித்து வருகின்றனர்.

கண்ணகிபுரம் நலன்புரி நிலையத்தில், பாலர் பாடசாலை ஒன்றும் உள்ளது. அங்கு இரண்டு முன்பள்ளி ஆசிரியர்கள் கல்விகற்றுக் கொடுப்பதுடன், அவர்களுக்கு மாதாந்தம், 4,000 ரூபாய் மாத்திரமே கொடுப்பனவாக வழங்கப்படுகின்றது. பாரிய கஷ்டங்களுக்கு மத்தியிலேயே, தாம் கல்விகற்றுக் கொடுப்பதாக, அவர்கள் கூறுகின்றனர். குறித்த நலன்புரி நிலையங்களில் உள்ள மக்கள், தம்மை தமது சொந்த இடங்களான மயிலிட்டி, தையிட்டி, தையிட்டி கடற்கரை பிரதேசங்களில் மீள்குடியமர்த்துமாறு வேண்டுகோள் விடுகின்றனர்.

'கடந்த 26 ஆண்டுகளாக, இங்கேயே இருக்கின்றோம். இப்போது, அப்போது என்று சொல்கின்றனர். ஆனால், மீள்குடியேற்றம் செய்யவில்லை. எங்களது சொந்த இடங்களுக்கு சென்றுவிட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு' என, 31 நலன்புரி நிலையங்களினது சங்கத்தின் பொது நிர்வாகக்குழுத் தலைவர் அன்டனி கூறுகிறார்.

இதேவேளை, 'சாப்பாட்டுக்கே வழியில்லை, அன்றாட வாழ்க்கையை கொண்டு செல்வது மிகவும் சிரமாக உள்ளது. மயிலிட்டியில் எனக்கு நிறைய காணிகள் சொந்தமாக உள்ளன. அவை விடுவிக்கப்படாததால், 26 வருடங்களாக இந்த நலன்புரி நிலையத்தில் தங்கியுள்ளேன். என் இரண்டு பிள்ளைகளும் திருமணம் முடித்து, வேறு இடங்களில் உள்ளனர். என்னை கவனிப்பதற்கு யாரும் இல்லை. இந்த வயதிலும் கூலி வேலைக்கு சென்று கஷ்டப்படுகிறேன்' என தனது சோகத்தை நம்முடன் பகிர்ந்துக் கொள்கிறார், தனது பேரப்பிள்ளையுடன் வசிக்கும் 68 வயதான செல்வராசா பரஞ்சோதி என்ற வயோதிபப் பெண்.

இதேவேளை, 'தேர்தல் காலத்தில் மட்டும் வந்து வாக்குறுதிகளை வாரி வழங்கும் வள்ளலான அரசியல்வாதிகள், அதன் பின்னர் எம்மை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. சொந்த இடங்களுக்கு எங்களை அனுப்பி வைத்தால் மாத்திரமே எங்களால் மகிழ்ச்சியுடன் வாழ முடியும். இங்கு தொழிலும் இல்லை. கூலி வேலைக்கே செல்ல வேண்டியுள்ளது' என்கிறார் சபாபதி முகாமின் தலைவர் நேசன்.

அவர்களைப் போலவே, இந்த நலன்புரி நிலையத்தில் வாழும் ஒவ்வொருவரும், தமது மனதில் பெரும் சோகத்தையும் சொந்த மண்ணில் என்றாவது ஒருநாள் மீள்குடியேற்றப்படுவோம் என்ற நம்பிக்கையிலும், தமது வாழ்நாளை, பல கஷ்டங்களுக்கு மத்தியில் நடத்திச் செல்கின்றனர்.

இதேவேளை, மழைக் காலங்களில், வெள்ளத்தில் தாம் அவதியுறும் போது, இராணுவத்தினர் ஓடி வந்து உதவி செய்வதாகவும் தேவையான உணவுகளை அவர்களால் முடிந்தளவு பெற்றுக் கொடுப்பதாவும் இந்த மக்கள் கூறுகின்றனர். அத்துடன், இராணுவத்தினரால் தமக்கு அச்சுறுத்தலோ தொல்லைகளோ இப்போது இல்லை எனவும் அச்சமின்றி தாம் வாழ்வதாகச் சுட்டிக்காட்டும் அந்த மக்களின் ஒரே எதிர்பார்ப்பு, மீள்குடியேற்றம் மட்டுமேயாகும்.

இது இவ்வாறிருக்க, மீள்குடியேறியுள்ள வீமங்காமம் மக்கள், தமக்கான அடிப்படை வசதிகள் செய்துகொடுக்கப்பட்ட போதும், அதில் நிறைவுத் தன்மை இல்லை என்றும் தொழிவாய்ப்பு தான், பாரிய பிரச்சினையாக உள்ளது என்றும் கூறுகின்றனர்.

வீமங்காமம் மக்களின் நிலங்கள், 2015ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டு, அதே ஆண்டின் செப்டெம்பர் மாதமளவில் குடியேற்றப்பட்டுள்ளனர். இங்கு, 65 குடும்பங்களைச் சேர்ந்த 500 பொதுமக்கள் வசிப்பதுடன், 65 வீடுகள் - மலசலகூட வசதியுடன் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளதாகவும் பொதுக் கிணறுகள் இரண்டு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த மக்கள் குறிப்பிட்டுள்ளனர். உரும்பிராய், அளவெட்டி போன்ற தற்காலிக முகாம்களில் இடம்பெயர்ந்து இருந்த மக்களே இங்கு மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

இம்மக்களுக்கான வீடுகள் அமைக்க, அரசாங்கத்தால் கட்டம் கட்டமாக பணம் வழங்கப்பட்டபோதும், அவை உரிய காலத்தில் ஒழுங்காக வழங்கப்படவில்லை எனவும், பொருட்களின் விலைவாசி அதிகரித்துள்ள நிலையில், வீடுகளைப் பூர்த்திச் செய்ய முடியாமல் திண்டாடுவதாகவும், அந்த மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்;.

இடம்பெயர்ந்து வாழும் மக்கள், தமக்கான சகல வாயப்புகளையும் இழந்துவிட்ட நிலையிலேயே, நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டனர். இப்போது, மீள்குடியேற்றம் செய்த நிலையில், அவர்களால் பொருளாதார நெருக்கடியைச் சந்திக்க வேண்டி ஏற்படுவது தவிர்க்க முடியாதது. எனினும், அந்த மக்களின் வாழ்க்கை சீராக அமைய, மீள்குடியேற்றப்பட்டுள்ள இடங்களில் தொழிவாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டியது மிகவும் அவசியத் தேவையாகவுள்ளது.

மயிலிட்டி விடுவிக்கப்படாமையால், தொழில் தேடி தினமும் யாழ்ப்பாணம் வரை கூட, கூலி வேலைக்குச் செல்வதாக இந்த மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே, தமக்கான தொழிவாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்பதே, இந்த மக்களின் எதிர்பார்ப்பாகும். 'மீளக் குடியேற்றியதுடன், அரசாங்கத்தின் கடமை முடிந்துவிட்டதா? அடுத்து என்ன?' என்பதே அந்த மக்களின் மனதிலுள்ள ஒரே கேள்வியாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .