Thipaan / 2016 செப்டெம்பர் 14 , மு.ப. 04:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த 4ஆம் திகதி, குருநாகலில் நடைபெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 65ஆவது மாநாடும் கடந்த 10 ஆம் திகதி சனிக்கிழமை, கொழும்பு கெம்பல் பார்க்கில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் 70 ஆவது மாநாடும், இதற்கு முன்னர் கடந்த ஆறு தசாப்தங்களில் நடைபெற்ற அக்கட்சிகளின் மாநாடுகளைப் பார்க்கிலும் வித்தியாசமானவையாக இருந்தன.
இதற்கு முன்னர், இவ்விரு கட்சிகளில் ஒரு கட்சியின் மாநாட்டில் மற்றைய கட்சியின் தலைவர்கள் கலந்து கொள்ளவில்லை. ஒரு கட்சியின் மாநாடு மற்றைய கட்சியைத் திட்டித் தீர்க்கும் தளமாகவே இருந்தது. ஆனால் இம்முறை, ஒரு கட்சியின் மாநாட்டில் மற்றைய கட்சியின் தலைவர்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக, ஐ.தே.க மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவும் கலந்து கொண்டிருந்தமை, ஒரு வித விசித்திரமான காட்சியாகவே தோன்றியது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, சந்திரிகா, ஐ.தே.கவுடன் கூட்டுச்சேர முன் அவர் , அக்கட்சியின் பரம எதிரியாகவே இருந்தார். அவர் பதவியில் இருக்கும் போது, ஊழல் நிறைந்த கொடுங்கோல் ஆட்சியை நடத்திய கட்சியாகவே ஐ.தே.கவை வர்ணித்தார். அது மட்டுமல்லாது, அவருக்கு தனிப்பட்ட முறையிலும் அக்கட்சியுடன் கடுங்கோபம் இருந்தது. தாம் கொழும்பு ரோயல் கல்லூரிக்குச் சிறிது தூரத்தில் வாழ்ந்தாலும், ஐ.தே.க ஆட்சிக் காலத்தில் தமது மகனுக்கு அக்கல்லூரியில் அனுமதி கிடைக்கவில்லை என்றும் ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே அதற்குக் காரணமெனவும் அவர் அக்காலத்தில் கூறிக் கொண்டிருந்தார்.
2014 ஆம் ஆண்டு, மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்திலிருந்து பிரிந்த ஜாதிக ஹெல உறுமய, ஆரம்பத்தில் ஐ.தே.கவுடன் கூட்டுச்சேர முன் வரவில்லை. ஏனெனில், ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை அக்கட்சி ஏகாதிபத்தியவாதிகளின் அடிவருடியாகவும் தமிழீழத்துக்கு ஆதரவான சிங்கள மக்களின் எதிரியாகவுமே கருதியது. அவர்கள் இப்போது ஒன்று சேர்ந்து ஒரே அரசாங்கமாக ஆட்சியை நடத்துகின்றனர்.
ஐ.தே.கவுக்கான மாற்றுக் கட்சியாகக் கருதப்படும் ஸ்ரீல.சு.கவின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் ஐ.தே.க மாநாட்டில் கலந்து கொண்டிருந்தார். ஆனால், கடந்த வாரம் நடைபெற்ற ஸ்ரீல.சு.க மாநாட்டின் போது, அடுத்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐ.தே.கவுக்கு எதிராக ஸ்ரீல.சு.க, கைச் சின்னத்தில் போட்டியிடும் எனக் கூறியிருந்தார்.
பரம எதிரிகளாக இருந்த இவர்களை எந்தச் சக்தி ஒன்று சேர்த்தது? முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே அவர்களை ஒன்று சேர்த்தார் எனச் சிலர் வாதிடலாம். அதிலும் உண்மை இல்லாமல் இல்லை. ஏனெனில், இவர்கள் அனைவரினதும் அரசியல் அபிலாஷைகளுக்கு எதிராகவே மஹிந்த செயற்பட்டார். மஹிந்த, ஸ்ரீல.சு.க யாப்பை மாற்றி சந்திரிகாவை அக்கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து நீக்கினார். மைத்திரியின், பிரதமராகும் நியாயமான நோக்கத்துக்கு எதிராகச் செயற்பட்டார். ஐ.தே.கவுக்கு பதவிக்கு வர இடமளிக்காது, ரணிலின் அபிலாஷைகளுக்கு எதிராகச் செயற்பட்டார். அதாவது, உண்மையிலேயே அதிகார ஆசையே அவர்களை ஒன்று சேர்த்தது.
மக்களின் நலனுக்காக அரசியலில் ஈடுபடுவதாக, அரசியல்வாதிகள் மேடைகள் தோறும் கூறித் திரிந்தாலும் அதிகாரத்துக்கான சண்டையே அரசியல் என, மாக்ஸியவாதிகள் கூறுகின்றனர். நாட்டில் நடப்பவற்றைப் பார்த்தால், அது உண்மை என்றே தோன்றுகிறது. கடந்த கால சம்பவங்களை உற்று நோக்கினால், அதிகாரத்துக்காக அரசியல்வாதிகள் எந்தளவு தாழ்ந்து போயுள்ளனர் என்பது தெளிவாகிறது.
ஐ.தே.கவின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, அக்கட்சியிலிருந்தே அரசியலை ஆரம்பித்தார். அக்கட்சியின் மேம்பாட்டுக்காகப் பெரும் தியாகத்துடன் செயற்பட்டவர். அக்கட்சி, தேர்தல்களில் தோல்விக்கு மேல் தோல்வியடையும் போதும் கட்சியை விட்டுச் செல்லாது கட்டிக் காத்தவர். ரணில், சஜித் பிரேமதாஸ ஆகியோரிடையே கட்சித் தலைமைக்காகப் பெரும் மோதல் நடைபெற்ற போது, அவர்களை ஒற்றுமைப்படுத்தியவர் திஸ்ஸவே. ஆனால், கட்சியைப் பதவிக்குக் கொண்டு வந்த கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, அப்போதைய ஆளும் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு அவர் தாவினார்.
தொடர்ச்சியான தோல்விகளினால் விரக்தியடைந்திருந்த திஸ்ஸ, இம்முறையும் ஐ.தே.க தோல்வியடையும் என நினைத்தே கட்சி தாவினார். அதாவது அவர் பதவி தேடியே, மஹிந்தவின் பேச்சைக் கேட்டு, அவ்வளவு காலமும் தாம் உழைத்த கட்சியை விட்டு மஹிந்தவுடன் இணைந்து கொண்டார். அது மட்டுமல்லாது, மஹிந்தவின் அரசியலுக்குப் பொருத்தமான வகையில் இனவாதத்தைத் தூண்டும் ஆவணமொன்றையும் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது வெளியிட்டார். அதற்காக கடந்த வாரம் அவருக்கு எதிராக, சட்டமா அதிபர் வழக்குத் தாக்கல் செய்தார். அதிகார மோகமே அவரை அந்த நிலைக்கு ஆளாக்கியது.
மற்றவர்களிடம் இருக்கும் அதிகார ஆசையும் அதிகாரத்துக்கு இருக்கும் பயமும் காரணமாகவே, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலம் இல்லாமலும் ஐ.தே.க கடந்த வருடம் பதவிக்கு வந்தது. மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகப் பதவியேற்கும் போது, மஹிந்தவின் தலைமையிலான ஐ.ம.சு.கூவுக்கே, நாடாளுமன்றத்தில் சுமார் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் இருந்தது. ஐ.தே.கவுக்கு ஏறத்தாழ 40 ஆசனங்கள் மட்டுமே இருந்தன. ஆனால், மைத்திரிபால, தாம் ஜனாதிபதியானவுடன் கடந்த வருடம் ஜனவரி மாதம் 9ஆம் திகதி, ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமர் பதவிக்கு நியமித்தார்.
நாடாளுமன்றத்தில், பெரும்பாலானவர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர் எனத் தாம் நினைப்பவரையே, ஜனாதிபதி, பிரதமராக நியமிக்க வேண்டும் என, அரசியலமைப்பு கூறுகிறது. நாடாளுமன்றத்தில், 225 ஆசனங்களில் 40 ஆசனங்களை மட்டும் வைத்திருக்கும் ஐ.தே.க தலைவரே பெரும்பாலானவர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர் என நினைக்க, மைத்திரி ஒன்றும் பைத்தியக்காரர் அல்ல.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலத்தை வைத்திருக்கும் மஹிந்தவின் தலைமையிலான ஐ.ம.சு.கூ, தாம் நியமிக்கும் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றைக் கொண்டு வந்தால், அவர் தோல்வியடைவார் என்பது அப்போது சிறு பிள்ளைக்கும் தெரிந்த விடயமாகும். ஆனால், நிறைவேற்று ஜனாதிபதிக்கு எதிராக அவ்வாறானதொரு நடவடிக்கையை எடுக்க, ஸ்ரீல.சு.க தலைவர்கள் அஞ்சினர். மறுபுறத்தில், புதிய ஜனாதிபதியை அணுகிப் பட்டம் பதவி பெற வேண்டும் என்ற ஆசையும் பலர் மனதில் தோன்றியது. அரசியல்வாதிகளிடம் உள்ள இந்த அதிகார மோகமும் சந்தரப்பவாதமும் அதிகாரத்துக்கான பயமும் காரணமாக, அவர்கள், பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணைகொண்டு வர மாட்டார்கள் என்பது மைத்திரிக்குத் தெரியும். எனவே, அந்த மோகத்தின் மீதும் அச்சத்தின் மீதும் சந்தர்ப்பவாதத்தின் மீதும் நம்பிக்கை வைத்து, அவர், ரணிலை பிரதமராக நியமித்தார்.
அது பலித்தது. மஹிந்தவின் இனவாதக் கொடுங்கோல் ஆட்சி வீழ்த்தப்பட்டது. அதை விட ஒரு படி, சிறந்த அரசாங்கமொன்று பதவிக்கு வந்தது. அதாவது, அதிகாரத்துக்கான ஆசையும் அதிகாரத்துக்கான பயமும் நன்மைக்காகப் பாவிக்கப்பட்டது.
மைத்திரிக்கு, ஸ்ரீல.சு.கவின் தலைமைப் பதவி கிடைத்ததும், அரசியல்வாதிகளின் பதவி ஆசையினதும் பதவிக்கான பயத்தினதும் காரணமாகவே, மைத்திரி ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படும் போது, கட்சிக்கு எதிராக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டமைக்காக, அவரது ஸ்ரீல.சு.க உறுப்புரிமை இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்தது. அவர், வெளிநாட்டு சக்திகளின் கையாள் என்றும் தமிழ் பிரிவினைவாதிகளின் முகவர் என்றும், ஸ்ரீல.சு.க தலைவர்கள் தேர்தலின் போது கூறித் திரிந்தனர். ஆனால், அவர் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற உடன் நிலைமை முற்றாக மாறிவிட்டது.
அவர் ஜனாதிபதியாகப் பதவியேற்று ஒரு வாரத்தில், ஏகாதிபத்தியவாதிகளின் அடிவருடி என்றும் புலிகளின் முகவர் என்றும் தாமே கூறியவருக்கு, தமது கட்சியின் தலைவர் பதவியை வழங்க ஸ்ரீல.சு.க முன்வந்தது. ஸ்ரீல.சு.க யாப்பின் படி, கட்சி உறுப்பினரொருவர் ஜனாதிபதியானால் அவர் கட்சித் தலைவராகிறார். இது, தாம் ஜனாதிபதியானவுடன், சந்திரிகாவிடமிருந்து கட்சித் தலைமையைப் பறிக்க மஹிந்த கட்சி யாப்பில் சேர்த்த ஒரு திருத்தமாகும்.
ஆனால், மைத்திரிக்கு கட்சித் தலைமைப் பதவியை வழங்காதிருக்க ஸ்ரீல.சு.கவுக்கு எவ்வளவோ சந்தர்ப்பம் இருந்தது. அவரது கட்சி அங்கத்துவம் அப்போது இடைநிறுத்தம் செய்யப்பட்டு இருந்தது. அந்த நிலையில், அவருக்குக் கட்சித் தலைவர் பதவியை வழங்கத் தேவையில்லை. மாறாக, அவருக்கு எதிராக ஒழுங்கு விசாரணை செய்து, கட்சியின் மத்திய குழுவில் இருந்த மஹிந்த ஆதரவாளர்களின் பெரும்பான்மைப் பலத்தைக் கொண்டு மைத்திரியை கட்சியிலிருந்து நீக்கியிருக்கலாம்.
அல்லது, மத்திய குழுவில் மஹிந்த ஆதரவாளர்களின் பெரும்பான்மையைப் பாவித்து, கட்சி உறுப்பினர் ஜனாதிபதியானால், அவர் கட்சித் தலைவராகவும் இருக்க வேண்டும் என்று யாப்பிலுள்ள வாசகத்தைத் திருத்தியிருக்கலாம். ஆனால், ஸ்ரீல.சு.க அவற்றில் எதனையும் செய்யாது அந்த ‘ஏகாதிபத்தியவாதிகளினதும் புலிகளினதும் அடிவருடிக்கு’ கட்சியின் தலைவர் பதவியை வழங்கியது. இதற்குக் காரணம் என்ன? ஒரு புறம் ஸ்ரீல.சு.க தலைவர்கள், மைத்திரியிடம் சென்றடைந்துள்ள நிறைவேற்று ஜனாதிபதி அதிகாரங்களைக் கண்டு பயந்தனர். ஏனெனில், ஒரு நிறைவேற்று ஜனாதிபதிக்கு என்னென்னவெல்லாம் செய்யலாம் என்பதை, ஏற்கெனவே முன்னாள் ஜனாதிபதிகளான ஜே.ஆர். ஜயவர்தனவும் ரணசிங்க பிரேமதாஸவும் மஹிந்தவும் எடுத்துக் காட்டியிருந்தனர்.
மக்களின் பிரச்சினைகளைச் சுட்டிக் காட்டியும் இனவாதத்தைத் தூண்டியும் பதவிக்கு வர முயற்சித்தாலும், இந்தப் பதவி, அதிகார மோகமே ஏறத்தாழ சகல அரசியல்வாதிகளையும் அரசியல்வாதிகளாக்கியுள்ளது. அவர்கள், தமக்குக் கிடைக்கும் சம்பளத்தையும் வாகனத்தையும் ஓய்வூதியத்தையும் கருத்திற்கொண்டு அரசியலில் ஈடுபடவில்லை. அரசியலின் உண்மையான பெறுபேறுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது, அவை மிகவும் அற்பமானவையாகும்.
நாட்டிலுள்ள சாதாரண குடும்பங்களில் ஓர் இலட்சம் ரூபாய்க்கு அதிகமான மாத வருமானத்தைப் பெறுவோரை எங்கும் காணக்கூடியதாக இருக்க, நாட்டின் ஜனாதிபதிக்கே இன்னமும் ஓர் இலட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுவதில்லை. அரசியல்வாதிகளுக்கு வழங்கப்படும் தீர்வையற்ற வாகனமும் நிரந்தரமானதல்ல. ஆனால், அரசியலோடு ஒட்டி வரும் அதிகாரமானது, எந்தவோர் அரசியல்வாதியையும் சிறிது காலத்தில் கோடீஸ்வரனாக்கிவிடுகிறது. அது, பொது மக்களின் கண்ணில் படாத ஓர் இரகசியமாகும்.
நாடாளுமன்றத்துக்குச் சைக்கிளில் வந்தவர்களும் உள்ளனர். அவர்கள், இன்று பல நூறு அல்லது ஆயிரம் கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்கு உரிமையாளர்களாக இருக்கின்றனர். சில வருடங்களுக்கு முன்னர் ஓர் அரசியல்வாதி, ஊழல் குற்றச்சாட்டொன்றிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக ஒரு வருடம் வெளிநாட்டில் வாழ்ந்தார். இதற்கு எவ்வளவு பணம் தேவைப்பட்டு இருக்கும்? முன்னாள் அரசியல்வாதிகள் இருவருக்குச் சாரதிகளாக இருந்த இருவர், இப்போது அரசியல்வாதிகளாக இருக்கின்றனர். அவர்களும் இப்போது நாட்டில் பெரும் செல்வந்தர்களாக இருக்கின்றனர். இவையெல்லாம் சம்பளத்தினால் பெற்றவையல்ல. அதிகாரத்தினால் பெற்றவை.
கடந்த பொதுத் தேர்தலின் போது, வேட்பாளரொருவர் பிரசார வேலைகளுக்காகச் செலவழித்த மிகக்குறைந்த தொகை ஒரு கோடி ரூபாய்க்கு மேலாகும். பலர், சுமார் பத்து கோடி ரூபாய் செலவழித்திருந்தனர். ஒரு இலட்சம் ரூபாயாவது இல்லாத சம்பளத்துக்காகவா இவர்கள் தேர்தலின் போது இவ்வளவு பணத்தை அள்ளி வீசுகிறார்கள்?
எஸ்.பி. திஸாநாயக்கவுக்கு, ஹங்குரங்கெத்தவில் பாரியதோர் மாளிகை இருக்கிறது. அவர், 2001ஆம் ஆண்டு சந்திரிகாவின் அரசாங்கத்தை விட்டு ஐ.தே.கவுக்குத் தாவிய போது அவர் அந்த வீட்டை நிர்மாணிக்க எங்கிருந்து பணத்தைப் பெற்றார் என்ற கேள்வியை, சந்திரிகாவின் அரசாங்கம் எழுப்பியது. தமது நண்பர்கள் தமக்கு அதற்காக உதவியதாக அவர் கூறினார். யார் அந்த நண்பர்கள்? நிச்சயமாக அவரது அதிகாரத்தினால் பயன்பெற்றவர்களாகவே தான் இருக்க வேண்டும்.
தியாகம் என்பார்கள், இலட்சியம் என்பார்கள், தேசப்பற்று என்பார்கள், சமூகப்பற்று என்பார்கள், ஆனால், அரசியல்வாதிகளின் உண்மையான பற்று எங்கே இருக்கிறது என்பது இதன் மூலம் தெரிகிறது. இதனை அறியாத, அல்லது அறிந்தும் பொருட்படுத்தாத சாதாரண மக்கள் கட்சிகளாகப் பிரிந்து தேர்தல் காலங்களில், ஒருவரை ஒருவர் கொலை செய்யவும் துணிந்துவிடுகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .