2024 மார்ச் 28, வியாழக்கிழமை

நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியும் புதிய அரசியலமைப்பும்

Thipaan   / 2016 செப்டெம்பர் 19 , மு.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்.கே.அஷோக்பரன் LLB (Hons)

 

 

தமிழ்மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி -58)

சன்சொனி ஆணைக்குழு அறிக்கை 

1978 பெப்ரவரி எட்டு முதல் 1979 ஒக்டோபர் 12 வரை இடம்பெற்ற சன்சொனி ஆணைக்குழுவின் அமர்வுகள் முன்பதாக பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சிகள் உள்ளிட்டதாக 952 பேர் சாட்சியமளித்தனர். 275 பேர் சத்தியக்கடதாசி ஊடாக சாட்சியமளித்தனர்.  

சில நிறுவனங்கள் சட்டத்தரணிகளினூடாக தமது சாட்சியத்தைப் பதிவுசெய்தன. 277 பக்கங்களைக் கொண்டிருந்த சன்சொனி ஆணைக்குழுவின் அறிக்கையானது நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். சன்சொனி ஆணைக்குழு அறிக்கை 1977 கலவரத்திற்கான அடிப்படைக்காரண கர்த்தாவாக தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியைக் குறிப்பிடும் வகையில் அமைந்தது.  

தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி மீது வளர்த்துவரும் வெறுப்புணர்வும் எதிர்ப்புணர்வும்தான் இந்தக் கலவரத்துக்கு அடிப்படை என்று சன்சொனி ஆணைக்குழு அறிக்கை குறிப்பிட்டது. மேலும், 1977 ஓகஸ்ட் 13 முதல் செப்டெம்பர் 15 வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற சம்பவங்களினால் கடும் பாதிப்புக்களைச் சந்தித்த மக்களுக்கு அவர்களது பாதிப்புக்குரிய நட்டஈடு முழுமையாக வழங்கப்பட வேண்டும் என சன்சொனி ஆணைக்குழு தனது அறிக்கையில் பரிந்துரையை முன்வைத்தது.  

ஆனால், சன்சொனி ஆணைக்குழு பரிந்துரைத்த நட்டஈடு பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைக்கவேயில்லை. ஜே.ஆர், சன்சொனி ஆணைக்குழுவை ஒரு கண்துடைப்பாகவே உருவாக்கியிருக்க வேண்டும் என்பதையே இது புலப்படுத்துகிறது.  

மறந்துபோன தேர்தல் வாக்குறுதி 

1977 இனக்கலவரம் தமிழ் மக்களின் 'தனிநாட்டுக்' கோரிக்கையை வலுப்படுத்தியது என்பதுதான் உண்மை. ஆயுதக்குழுக்கள் மீதான தமிழ் இளைஞர்களின் ஆர்வமும் அதிகரிக்கத் தொடங்கியிருந்தது. தமிழ் மக்களை அணைத்துச் செல்ல வேண்டிய ஒரு காலகட்டத்தில் தமிழ்மக்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டமையானது, பிரிவினைக்கு வலுச்சேர்ப்பதாகவே அமைந்தது. ஐக்கியத் தேசியக் கட்சி தன்னுடைய தேர்தல் வாக்குறுதியிலிருந்தும் விலகிச் செயற்பட்டது என்பதுதான் நிதர்சனம்.  

தமிழ்மக்கள் இந்த நாட்டில் சில பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள், தாம் ஆட்சிக்கு வந்ததும் அவற்றைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜே.ஆர் தலைமையிலான ஐக்கியத் தேசியக் கட்சித் தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது, ஆனால், அதற்கு முற்றிலும் முரணான விடயங்களே உண்மையில் நடைபெற்றன.  

சிறிமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சிக்காலத்தில் தமிழர்கள் சந்தித்த இன்னல்களைவிடப் பாரதூரமான இன்னல்களை ஜே.ஆரின் ஆட்சி தொடங்கிய ஒரு மாதகாலத்திலேயே தமிழர்கள் அனுபவிக்க வேண்டி வந்தது.  

நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி 

ஆனால், இவற்றைப்பற்றிச் சிந்திக்க ஜே.ஆருக்கு நேரம் இருந்திருக்க வாய்ப்பில்லை, அவர் தன்னுடைய 'கனவை' நனவாக்குவதில் முனைப்போடு இருந்தார். ஒரு பெருங்கலவரம் இருவார காலமளவுக்கு நடந்து ஓய்ந்திருந்த சில நாட்களிலேயே, 1977 செப்டெம்பர் 22ஆம் திகதி ஜே.ஆரின் 'கனவான' நிறைவேற்று ஜனாதிபதி முறையை அறிமுகப்படுத்துவதற்கான அரசியலமைப்புத் திருத்தத்தின் இரண்டாம் வாசிப்பு தேசிய அரசுப் பேரவையில் முன்வைக்கப்பட்டது.   

1972ஆம் ஆண்டு முதலாவது குடியரசு யாப்பின் செல்லுபடித் தன்மை பற்றிய வாதப்பிரதிவாதங்கள் நிறையவே இருந்தன. ஆனால், அந்தச்சிக்கலுக்குள் போக ஜே.ஆர் முனையவில்லை. மாறாக 1972 ஆம் ஆண்டு அரசியல்யாப்புக்கு தனது 5{6 பெரும்பான்மை பலத்தைக்கொண்டு திருத்தங்களை முன்வைப்பதனூடாக தன்னுடைய நிறைவேற்று அதிகாரம்  கொண்ட ஜனாதிபதி 'கனவை' ஜே.ஆர் நிறைவேற்ற விளைந்தார்.  

1972ஆம் ஆண்டு முதலாம் குடியரசு யாப்பில் குறித்த யாப்பை திருத்துதல் அல்லது குறித்த அரசியல் யாப்புக்குப் பதிலாக புதிய அரசியல் யாப்பொன்றை அறிமுகப்படுத்துவது தொடர்பிலான ஏற்பாடுகள் காணப்பட்டன.  

இதன்படி முதலாம் குடியரசு யாப்புக்கு செய்யப்பட்ட இரண்டாவது திருத்தத்தினூடாக நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி அறிமுகப்படுத்தப்பட்டதுடன் 1978 பெப்ரவரி 4ஆம் திகதி, இலங்கையின் சுதந்திரதினத்தன்று இலங்கையின் முதலாவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறைவேற்று அதிகாரங்கொண்ட ஜனாதிபதியாக ஜே.ஆர் பதவியேற்பதற்கான அரசியலமைப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டதுடன் பதவிக்காலம் 1978 பெப்ரவரி 4ஆம் திகதி முதல் 6 வருடங்களுக்கு நீடிப்பதாக அமைக்கப்பட்டது.  

புதிய அரசியலமைப்பு 

தொடர்ந்து அரசியலமைப்பை மாற்றியமைக்கும் தனது அடுத்தகட்ட நகர்வை ஜே.ஆர் முன்னெடுத்தார். 1977 ஒக்டோபர் 20ஆம் திகதி தேசிய அரசுப்பேரவையானது (நாடாளுமன்றம்) அரசியலமைப்பையும் வேறு எழுதப்பட்ட சட்டங்களையும் திருத்துவதற்கான ஒரு குழுவொன்றை அமைக்கவும் அதற்கான தவிசாளரை நியமிக்குமதிகாரத்தையும் சபாநாயகருக்கு வழங்கும் தீர்மானமொன்றை நிறைவேற்றியது.  

அரசியலமைப்பையும் சட்டங்களையும் திருத்துவதற்கான குறித்த குழுவானது 1977 நவம்பர் மூன்றாம் திகதி சபாநாயகரால் அறிவிக்கப்பட்டது. குறித்த குழுவின் தவிசாளராக பிரதமர் ஜே.ஆர்.ஜெயவர்த்தன அறிவிக்கப்பட்டதுடன், குழுவின் அங்கத்தவர்களாக ஐக்கிய தேசியக்கட்சியைச் சார்ந்த ரணசிங்ஹ பிரேமதாஸ, றொனி டிமெல், லலித் அதுலத் முதலி, காமினி திசாநாயக்க, கே.டபிள்யு.தேவநாயகம், எம்.எச்.எம்.நய்னாமரிக்கார் ஆகியோரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சார்ந்த சிறிமாவோ பண்டாரநாயக்கவும் மைத்ரிபால சேனநாயக்கவும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸைச் சேர்ந்த சௌமியமூர்த்தி தொண்டமானும் அறிவிக்கப்பட்டனர்.  

தமிழர் ஐக்கிய விடுதலைக்கூட்டணி குறித்த குழுவில் அங்கத்துவம்பெற மறுத்துவிட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஏனெனில், ஐக்கியத் தேசியக் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளில், ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியமைக்குமானால், இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் ஆராய சர்வகட்சி மாநாடு கூட்டப்படும் என்று அறிவித்திருந்தது.  

ஆனால், தேர்தல் வெற்றியின் பின்பு சர்வகட்சி மாநாட்டைக் கூட்டுவதில் ஐக்கிய தேசிய கட்சி முனைப்புக் காட்டவில்லை. மாறாக தமிழ் மக்களுக்கான தீர்வு அரசியலமைப்பு திருத்தத்தினூடாக வழங்கப்படும் என்றும் அதற்கான நாடாளுமன்றக் குழுவில் அங்கம் வகிக்குமாறும் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கு அழைப்பு விடுத்திருந்தது.  

ஐக்கிய தேசியக் கட்சி தன்னுடைய தேர்தல் வாக்குறுதியை மீறியிருந்தமையால், நாடாளுமன்றக்குழுவில் அங்கம் வகிக்க ஐக்கிய தேசியக் கட்சி விடுத்த கோரிக்கையை தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி நிராகரித்திருந்தமை  குறிப்பிடத்தக்கது.  

கொள்கை ரீதியில் இந்த நிராகரிப்பை தமிழர் ஐக்கிய விடுதலைக்கூட்டணி நியாயப்படுத்தினும், இலங்கையின் இரண்டாவது குடியரசு யாப்பின் உருவாக்கத்திலும் தமிழர்களின் பிரதிநிதிகள் பங்குபற்றாத நிலை உருவாகியிருந்தமை இங்கு முக்கியமாகக் கருத்தில் கொள்ளப்படவேண்டிய ஒரு விடயமாகும்.  

முதலாவது குடியரசு யாப்பு உருவாக்கத்திலும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளின் பங்களிப்பு இருக்கவில்லை. அதுபோலவே, இரண்டாவது குடியரசு யாப்பு உருவாக்கத்திலும் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் பங்கு பற்றாத சூழல் உருவாகியிருந்தது.  

தமிழ் மக்களின் பிரதிநிதிகள் பங்கு பற்றியிருந்தால் மட்டும் தமிழ்மக்களுக்குரிய தீர்வுகள் கிடைத்திருக்கும் என்றும் சொல்லிவிடமுடியாது. எது எவ்வாறெனினும், சௌமியமூர்த்தி தொண்டமான் மிகுந்த முனைப்புடன் அரசியலமைப்பு உருவாக்கத்தில் பங்கு பற்றியிருந்தார்.  

மொழிகள், குடியுரிமை, மனித உரிமைகள் ​தொடர்பில் குறித்த குழுவில் தனது நிலைப்பாட்டை தொண்டமான் சமர்ப்பித்திருந்தார். குறிப்பாக இலங்கையில் காணப்பட்ட பாரம்பரிய குடிமக்கள், பதிவுசெய்யப்பட்ட குடிமக்கள் என்ற வேறுபாடு இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அவர் முக்கியமாக முன்வைத்தார். 

1977 டிசெம்பர்  

தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் பொத்துவில் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான கனகரத்தினம், 19ஆம் திகதி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையிலிருந்து, ஆளுங்கட்சி வரிசைக்கு சென்றமர்ந்தார். இதன்பின் அவர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்ததன்படி, ஏற்கெனவே மிகப்பெரும் பெரும்பான்மையைக் கொண்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் பெரும்பான்மைப்பலம் 141 ஆக அதிகரித்தது. 

1978 பெப்ரவரி 4ஆம் திகதி இலங்கைக்குடியரசின் இரண்டாவது ஜனாதிபதியாகவும் முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகவும் ஜே.ஆர் ஜெயவர்த்தன பதவியேற்றுக்கொண்டதுடன், இதற்கு முன்பதாக தேசிய அரசுப்பேரவை உறுப்பினர் பதவியை துறந்திருந்தார்.  

ஜே.ஆர் ஜெயவர்த்தன பாதுகாப்பு அமைச்சையும் திட்ட அமுலாக்கல் அமைச்சையும் தன்னகத்தே கொண்டிருந்தார். ஜே.ஆர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவியேற்றதைத் தொடர்ந்து ரணசிங்ஹ பிரேமதாஸ பிரதமராக நியமிக்கப்பட்டதுடன், உள்ளூராட்சி, வீடமைப்பு மற்றும் கட்டுமான அமைச்சராகவும் தொடர்ந்தார். அத்துடன் அரசியலமைப்பையும் வேறு எழுதப்பட்ட சட்டங்களையும் திருத்துவதற்கான நாடாளுமன்றக் குழுவுக்கு புதிய தவிசாளராக பிரேமதாஸ சபாநாயகரால் நியமிக்கப்பட்டார்.  

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவும் மைத்திரிபால சேனநாயக்கவும் அரசியலமைப்பையும் வேறு எழுதப்பட்ட சட்டங்களையும் திருத்துவதற்கான நாடாளுமன்றக் குழுவில் அங்கத்தவர்களாக பங்கேற்றிருந்தார்கள். ஆரம்பத்தில் குறித்த குழுவானது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஆட்சியில் உருவாக்கப்பட்டிருந்த 1972ஆம் ஆண்டு முதலாவது குடியரசு யாப்புக்கு திருத்தங்களை முன்மொழியும் குழு என்ற எண்ணப்பாடே நிலவியது. அந்த வகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இதில் பங்குபற்றியது. ஆனால், காலவோட்டத்தில் ஜே.ஆர் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் முற்றிலும் புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்கும் எண்ணம் புரியவந்ததும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் குறித்த குழுவில் பங்குபற்றுவதிலிருந்து விலகியது.  

1978 மே 19ஆம் திகதி ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்த்தனவுக்கு எழுதிய கடிதத்தில் 'நாங்கள் உருவாக்கிய அரசியலமைப்புக்கு பதிலாக புதிய அரசியலமைப்பொன்றைக்கொண்டுவரும் இந்தச் செயற்பாட்டில் நாம் பங்குபற்றுவது அர்த்தமற்றதாகும்' என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி குறிப்பிட்டிருந்ததுடன் குறித்த குழுவில் பங்குபற்றுவதிலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விலகியது. ஏற்கெனவே பிரதான எதிர்க்கட்சியான தமிழர் ஐக்கிய விடுதலைக்கூட்டணி குறித்த குழுவில் பங்குபற்றியிராத நிலையில், தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் குறித்த குழுவிலிருந்து விலகியிருந்தது. இந்நிலையில், புதிய அரசியலமைப்பை உருவாக்கிக்கொண்டிருந்த நாடாளுமன்றக்குழுவில் ஐக்கிய தேசியக் கட்சியினரும், தொண்டமானுமே காணப்பட்டனர். 1978 செப்டெம்பரில் தொண்டமானும் அரசாங்கத்துடன் இணைந்து கிராமப்புறக் கைத்தொழில் அமைச்சராக பதவியேற்றுக்கொண்டதை கருத்திற்கொண்டால், 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பு என்பது தனியே ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட ஓர் அரசியலமைப்பு என்பது வெள்ளிடைமலை.  புதிய அரசியலமைப்புக்கான முயற்சியில் ​ஜே.ஆர் மும்முரமாக இருந்த வேளையில், தமிழ் மக்கள் தாம் ஜே.ஆர் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியினால் ஏமாற்றப்பட்டு விட்டதாக உணர்ந்தனர். இது ஏற்கெனவே ஆயுத வழியை நாடியிருந்த தமிழ் இளைஞர்களை மேலும் கிளர்ந்தெழச் செய்தது. 

(அடுத்த வாரம் தொடரும்) 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X