2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இரண்டு மரணங்களும் தமிழ்ச் சூழலில் சாதியமும்

Thipaan   / 2016 செப்டெம்பர் 22 , மு.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகலிங்கம் கோபிகிருஷ்ணா  

உலகம் முழுவதிலுமுள்ள தமிழ்ச் சூழலில், சாதியம் என்பது அதன் அண்மைக்கால வரலாற்றில் முக்கியமானதோர் அம்சமாக மாறிவிட்டுள்ளது. இந்து சமயத்தால் புகுத்தப்பட்டதாகக் கருதப்படும் சாதியக் கட்டமைப்புகள், பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு வடிவங்களில் தமிழ்ச் சமுதாயத்தில் தாக்கத்தைச் செலுத்தியிருக்கின்றன. நவீன காலத்தில், நேரடியான பாகுபாடு அல்லது நேரடியான சாதியப் பிரிவினையென்பது பெரும்பாலான பகுதியில் இல்லாது போயிருந்தாலும், மறைமுகமான சாதியமென்பது இன்னமும் உயிர்வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.  

அதேபோல், சாதி விட்டு சாதி மாறித் திருமணம் முடிப்பவர்கள், குடும்பங்களால் ஒதுக்கப்படும் சம்பவங்கள், பரவலாக அறியப்படும் ஒன்று தான். குடும்பங்களால் கொல்லப்படுவது, இடைக்கிடை அறியப்படும் ஒன்று தான். இவ்வாறு, சாதியத்திலிருந்து விடுபடுவதற்கு, தமிழ்ச் சமூகத்தால் முடிந்திருக்கவில்லை. சில தருணங்களில், அதிலிருந்து விடுபடுவதற்கான முழுமையான முயற்சிகளை அச்சமூகம் எடுத்திருக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.  

இவ்வாறான நிலையில் தான், இந்தியாவின் தமிழ்நாட்டில், அண்மைக்காலத்தில் இடம்பெற்ற இரண்டு மரணங்கள், சாதியம் சம்பந்தமான கேள்விகளை மீண்டும் எழுப்பிவிட்டுச் சென்றிருக்கின்றன.  

தமிழ்நாட்டைச் சேர்ந்த மென்பொருள் பொறியியலாளரான சுவாதி என்ற பெண், நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து, கழுத்தறுத்துக் கொல்லப்பட்டார். அந்தப் பெண்ணைக் கொன்றார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சந்தேகநபரான ராம் குமார், மின்சாரக் கம்பியைக் கடித்து, கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று தற்கொலை செய்துகொண்டதாக, பொலிஸாரால் அறிவிக்கப்பட்டது. சாதாரணமான வகையில் பார்த்தால், இந்த இரண்டு சம்பவங்களுமே சாதாரணமாகத் தெரியலாம். ஆனால், இவையிரண்டும் ஏற்படுத்தியிருக்கும் அதிர்வுகள், தமிழ்நாட்டில் முக்கியமான பேசுபொருளாக மாறியிருக்கின்றன.  

ஆரம்பத்தில் வெளியிடப்பட்ட தகவல்களின் அடிப்படையில், கொல்லப்பட்ட சுவாதியோடு பேஸ்புக் மூலமாகப் பழக்கத்தை ஏற்படுத்திய சந்தேகநபர், அவரைப் பின்தொடர்ந்ததாகவும் அவரது காதலை வெளிப்படுத்தியதாகவும் அதை சுவாதி மறுக்க, இறுதியில் சுவாதியைக் கொலை செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இது, இந்தியாவிலும் இலங்கையிலும் சில பகுதிகளில் நடக்கும் ஒன்று தான். ஆனால், கொல்லப்பட்ட பெண், பிராமண சாதி வகுப்பைச் சேர்ந்தவர் என்பது வெளிப்படுத்தப்பட்டதுடன் சந்தேகநபராக அறிவிக்கப்பட்ட ராம்குமார், ஒரு தலித் என வெளிப்படுத்தப்பட்டது. இது, இந்த விவகாரத்தைத் தலைகீழாகத் திருப்பியது.  

அதுவரை காலமும் சுவாதியின் கொலைக்கெதிராக அணிசேர்ந்திருந்தவர்களில் ஒரு பிரிவினர், இந்த வழக்கில், வேண்டுமென்றே ராம்குமார் சிக்க வைக்கப்பட்டுள்ளதாகவும் சுவாதியின் சாதி வகுப்புக் காரணமாக, பொலிஸார் பக்கச்சார்பாக நடந்துகொள்வதாகவும் குற்றஞ்சாட்ட ஆரம்பித்தனர். இவ்வாறு ஆரம்பித்த இந்தக் குழப்பம், மிகவும் கேவலமான பக்கமாகத் திரும்பின.  

தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல் தலைவரான தொல். திருமாவளவன், இவ்விவகாரத்தைக் கையிலெடுத்துக் கொண்டார். சுவாதி, இஸ்லாமிய மதத்துக்கு மாறவிருந்ததாகவும், எனவே அதை ஏற்றுக் கொள்ளாத அவரது குடும்பத்தினரால் ஆணவக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற வாதத்தை முன்வைத்தார். அதைத் தொடர்ந்து, சுவாதியைப் பற்றிய வதந்திகள் பரவத் தொடங்கின. சுவாதியும் ராம்குமாரும் முன்னரே காதலித்ததாகவும் அதனால் அவரது குடும்பத்தினரால் சுவாதி, ஆணவக் கொலை செய்யப்பட்டதாகவும் இன்னொரு தகவல் வெளியானது. அதற்கான ஆதாரமெனத் தெரிவித்து, சுவாதியும் ராம்குமாரும் எடுத்ததாகத் தெரிவிக்கப்பட்ட “செல்பி” ஒன்றும் பகிரப்பட்டது. ஆனால், அது போலியான புகைப்படமென நிரூபிக்கப்பட்டது. இவ்வாறு, சுவாதியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் முயற்சிகள் இடம்பெற்றன.  

இந்த நிலையில் தான், சிறைக்கூடத்துக்குள் வைத்து, ராம்குமார் தற்கொலை செய்துகொண்டதாக அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இவ்விவகாரம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, சமூக ஊடக இணையத்தளங்களில், இந்த இரண்டு மரணங்கள் தொடர்பாகவும் அதிகளவில் பகிரப்படுகின்றன. சுவாதியின் நடத்தை குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றன.  

எல்லாவற்றுக்கும் முதலாக, ஒரு விடயத்தைத் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். சுவாதியின் கொலையை ராம்குமார் செய்தாரா, இல்லையா என்பதைத் தாண்டி, ராம்குமாரின் மரணம் என்பது தவிர்த்திருக்கப்பட வேண்டியது. சிறைச்சாலைக்குள் தற்கொலை செய்வதென்பது, அங்கு காணப்பட்ட வசதிகளில் ஏதோ குறைபாடுகள் காணப்படுகின்றன என்பதைக் காட்டுகிறது. எனவே, கைதி ஒருவரால் மின்சாரக் கம்பியை எவ்வாறு கடிக்க முடியும், அதற்கான சந்தர்ப்பம் எவ்வாறு அமையப்பெற்றது, அதை ஏன் தடுத்திருக்கவில்லை, இடறு ஆழிகள் செயற்படவில்லையா போன்றன, பொலிஸார் பதிலளிக்க வேண்டிய விடயங்களாகும். அது குறித்த விசாரணைகள் இடம்பெறுமென எதிர்பார்ப்போம்.  

அடுத்ததாக, ராம்குமாரின் மரணம் என்பது எவ்வளவு துரதிர்ஷ்டவசமானதோ, அதை விட, சுவாதியின் மரணம் துரதிர்ஷ்டவசமானது. அவர் பெண் என்பதற்காக அன்று. மாறாக, காதலை ஏற்காத பெண்கள் மீது அமிலத் திராவகம் வீசுவதும் அவர்களைத் துன்புறுத்துவதும் கொலை முயற்சிகளை மேற்கொள்வதும் கொலை செய்வதும், ஓரளவு வழக்கமென்ற நிலைமைக்கு மாறியிருக்கிறது. கடந்த செவ்வாய்க்கிழமை கூட, டெல்லியின் வைத்துப் பெண்ணொருவர், நடுவீதியில் வைத்துக் குத்திக் கொலை செய்யப்பட்டார். இருவருக்குமிடையிலான பிரச்சினை? அந்தப் பெண்ணை அவர் விரும்பியிருக்கிறார். அதை அப்பெண் ஏற்றிருக்கவில்லை. தொடர்ந்தும் பின்தொடர்ந்திருக்கிறார். அதற்கெதிராக பொலிஸ் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இறுதியில், பொதுமக்கள் பார்க்க, நடுவீதியில் வைத்துக் கொல்லப்பட்டிருக்கிறார். ஆகவே, சுவாதியின் மரணமொன்றும், தனித்த ஒன்று எனக் கருதிவிட முடியாது.  

அடுத்ததாக, ராம்குமாரால் அந்தக் கொலை மேற்கொள்ளப்பட்டதோ, இல்லையோ என்பதைத் தாண்டி, அவர் மீது கொலைக் குற்றச்சாட்டுச் சுமத்தப்பட்டது. அந்தப் பெண்ணை, அவர் பின்தொடர்ந்ததாக, சாட்சிகள் கூறியிருக்கின்றனர். சுவாதி கொல்லப்படும் போது, அந்த ரயில் நிலையத்தில் இருந்தோர், ராம்குமாரை அடையாளம் காட்டியிருக்கின்றனர். வெளியிடப்பட்ட கண்காணிப்புக் கமெராக் காட்சிகளில், கொலை நடைபெற்ற சிறிது நேரத்தில், அந்த ரயில் நிலையத்திலிருந்து ராம்குமார் வெளியேறியமை பதிவாகியிருக்கிறது. ராம்குமாரின் வீட்டிலிருந்து மீட்கப்பட்டதாகக் கூறப்பட்ட அவரின் மேலாடையில் காணப்பட்ட இரத்தம், சுவாதியின் இரத்தத்தோடு ஒத்துப் போனதாக, மரபணுப் பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆகவே, இக்கொலைக்கும் அவருக்குமிடையில் சம்பந்தமேயில்லை என்று பொத்தாம்பொதுவாகக் கூறிவிட முடியாது.  

ஆனால் மறுபக்கமாக, தமிழ்நாட்டில் சாதியப் பிரச்சினைகளே இல்லை அல்லது தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் அல்லது வறுமையானவர்கள் வேண்டுமென்றெ சிக்கவைக்கப்படுதலே இல்லையென்றும் கூறிவிட முடியாது. உயர்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்தோர், இன்னமும் ஆதிக்கம் செலுத்துகின்ற ஒரு நிலை காணப்படுகிறது. அதேபோல், தலித்கள் மீதான ஒடுக்குமுறை அல்லது பாகுபாடு, இன்னமும் நீடிக்கிறது. ஆகவே, ராம்குமாரின் ஆதரவாளர்கள் தெரிவிப்பதைப் போன்று, இந்த வழக்கில் அவர் வேண்டுமென்றே சிக்க வைக்கப்பட்டிருக்கலாம் என்பதற்கான சாத்தியக்கூறுகளும் இல்லாமலில்லை. அதேபோல், அவரது ஆதரவாளர்கள் சொல்வதைப் போல, உண்மைகளை மறைப்பதற்காகவும் பண முதலைகளைக் காப்பாற்றுவதற்காகவும் சிறைச்சாலைக்குள் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்பதற்கும் சாத்தியங்கள் இல்லாமலில்லை.  

ஆனால், அதற்கான ஆதாரங்கள் என்ன? ஆதாரங்களே இல்லாமல், ராம்குமார் மீது குற்றமேதும் கிடையாது என்று சொல்வது தவறானது. அவர், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதற்காக மாத்திரம், அவ்வாறான அணுகுமுறை காணப்படுமாயின், அதுவும் ஒரு வகையான சாதிய முன்னிறுத்தலே. அரசியல் கட்சிகள் பல, ராம்குமாருக்கு ஆதரவாக, ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்கின்றன. தலித் அமைப்புகளும் அதில் இணைந்திருக்கின்றன. இது, சாதியத்தை முன்னிறுத்தும் அரசியலாக மாறியிருக்கிறது என்ற கருத்தையே அவை தருகின்றன.  

அதேபோல், பிராமணியச் சமூகத்தில் பிறந்தார் என்பதற்காக மாத்திரம், சுவாதி இலக்கு வைக்கப்படுவாராக இருந்தால், அதுவும் தவறானதே. தமிழ்நாட்டில் பிராமணர்கள் மீதும், இந்தியாவில் ஒரு பிரிவினரால் இந்துக்கள் மீதும், ஒரு வகையான வெறுப்புப் பிரயோகிக்கப்படுவது, அண்மைக்காலத்தில் அவதானிக்கப்படும் ஒன்று தான். இந்துக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகத் தெரிவிக்கும் ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகளின் அடிப்படைவாதக் கொள்கைகள் மறுக்கப்பட வேண்டுமென்பதில் கேள்வியேதும் கிடையாது. ஆனால், ஹோலி பண்டிகையின் போதும் விநாயகர் சதுர்த்தி மீது மாத்திரம் சுற்றாடல் பற்றிய கேள்விகளை எழுப்பிவிட்டு, ஏனைய மதங்களைச் சேர்ந்தவர்களின் சூழலை மாசுபடுத்தக்கூடிய கொண்டாட்டங்கள் பற்றிப் பேசாமலிருப்பது, தவறானதே. அவ்வாறே, சாதிய அடிப்படை ஒழிக்கப்பட வேண்டுமாயின், அந்தக் கோட்பாட்டில் உயர்ந்த நிலையிலிருப்பதாகச் சொல்லப்படுகின்ற பிராமணர்களின் பக்கத்தில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும். ஆனால், பிராமணராகப் பிறந்ததற்காக, ஒவ்வொரு தனிநபர் மீதான வெறுப்பும் அவர் மீதான அவதூறுகளும், ஏற்றுக் கொள்ளப்படக்கூடியன அல்ல.  

இந்த கொலைச் சம்பவம், தமிழ்நாட்டில் பொலிஸார் மீது காணப்படும் அவநம்பிக்கையளவை வெளிப்படுத்தியதோடு மாத்திரமல்லாது, தமிழ்ச்சமூகத்தில் இன்னமும் காணப்படுகின்ற சாதியக் கட்டமைப்பின், புதிய பரிணாமமொன்றை வெளிக்காட்டியிருக்கிறது போன்ற நிலைமை தான், இன்னமும் வருத்தத்தைத் தெரிவிப்பதாக அமைந்திருக்கிறது.      


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .