2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மாநில சட்டமன்றத்துக்கும் உச்சநீதிமன்றத்துக்கும் பனிப்போர்

Thipaan   / 2016 செப்டெம்பர் 26 , மு.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

“காவிரி நீர்ப் பிரச்சினை” கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களின் இதயத்தில் தைத்த முட்களாக மாறி விட்டது.  

 காவிரி நடுவர் மன்றம், கால் நூற்றாண்டுகளுக்கு முன்பு இடைக்காலத் தீர்ப்பை அளித்த போது ஏற்பட்ட கலவரம், இன்று தண்ணீர் திறந்து விட உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்குப் பின்னர் இடம்பெற்றுள்ளது. “தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும்” என்று கோரிக்கை வைத்து தமிழகம், உச்சநீதிமன்றத்தை நாடிய பின்னர், செப்​டெம்பர்- 2, 5, 12, 20 ஆகிய திகதிகளில், நான்கு முறை இந்தப் பிரச்சினை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஷ்ரா மற்றும் யு. யு. லலித் ஆகியோர் முன்பு வந்து விட்டது. மூன்று முறை தண்ணீர் திறந்து விட உத்தரவு பிறப்பித்து விட்டார்கள். முதல் முறை, தினமும் 15 ஆயிரம் கன அடி, அடுத்த முறை தினமும் 12 ஆயிரம் கன அடி, இறுதியாக மூன்றாவது முறை தினமும் 6 ஆயிரம் கன அடி தண்ணீரை தமிழகத்தின் சம்பா சாகுபடிக்குத் திறந்து விட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருக்கிறது. முதல் இரு உத்தரவுகளை “எதிர்ப்புடன்” நிறைவேற்றிய கர்நாடக அரசு, மூன்றாவது உத்தரவை ஏற்க மறுத்திருக்கிறது. 

இந்த மூன்றாவது உத்தரவில் தண்ணீர் திறப்பதை விட கர்நாடக மாநிலத்துக்கு தலைவலி தந்தது “ நான்கு வாரத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம்” அமைக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற கெடுதான். ஏற்​கெனவே 1991 வாக்கில் இடைக்காலத் தீர்ப்பினை அமல்படுத்த “காவிரி நதிநீர் அதிகாரசபை” அமைந்தது. அதற்காக அப்போது இருந்த பிரதமர் வாஜ்பாய் பெரும் முயற்சி எடுத்துக் கொண்டார். அதன் விளைவாக அமைக்கப்பட்ட அந்த காவிரி நதிநீர் அதிகாரசபைக்கு தலைவராக பிரதமரும், தமிழகம், கர்நாடகம், கேரளம், பாண்டிச்சேரி முதலமைச்சர்கள் உறுப்பினர்களாகவும் இந்த ஆணையத்துக்கு உதவி செய்ய இந்த நான்கு மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் மத்திய நீர் வளத்துறை செயலாளர் தலைமையில் ஒரு கண்காணிப்புக் குழுவும் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் 7 முறையும், கண்காணிப்பு குழு 32 தடவையும் கூடியிருந்தாலும், தமிழகத்துக்கு பலனளிக்கும் முடிவினை எடுக்க முடியவில்லை என்ற குற்றச்சாட்டு தமிழக விவசாயிகள் மத்தியில் இருக்கிறது. ஆனால், இறுதித் தீர்ப்பின் படி இப்போது உச்சநீதிமன்றம் அமைக்கச் சொல்லும் “காவிரி மேலாண்மை வாரியமும்” “காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவும்” தண்ணீர் தாவா சட்டப்படி அதிகாரம் உள்ள அமைப்புகளாக இருக்கும் என்ற கவலை கர்நாடகாவுக்கு இருக்கிறது. அதனால்தான் இந்த 6,000 கன அடி தண்ணீர் திறந்து விடுவதை விட, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற உத்தரவு கர்நாடக மாநிலத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. 

ஆனால், இரு மாநிலங்களுக்கு இடையில் உள்ள நதி நீர்ப் பிரச்சினையில் இப்படி உச்சநீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்ற மறுப்பது புதிதல்ல. குறிப்பாக, தமிழகம் இது போன்ற தருணங்களை ஏற்​கெனவே சந்தித்துள்ளது. காவிரி நடுவர் மன்றம் இடைக்காலத் தீர்ப்பு வழங்கியது. அதில் தமிழகத்துக்கு 205 ரி.எம்.சி தண்ணீர் கொடுக்க வேண்டும் என்றும், அதை மாதந்தோறும் எப்படி வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

அந்த இடைக்காலத் தீர்ப்பை எதிர்த்து “கர்நாடக விவசாய நிலங்களை பாதுகாக்கும் சட்டம்” பிறப்பித்தது கர்நாடக மாநிலம். அந்தச் சட்டத்தை உச்சநீதிமன்றம் பின்னர் இரத்துச் செய்து, இடைக்காலத் தீர்ப்பு அரசிதழில் இடம்பெற வழி வகுத்தது. இதே போல் முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அப்போது கேரள மாநில அரசு “அணைகள் பாதுகாப்புச் சட்டம்” ஒன்றைக் கொண்டு வந்து, முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் 136 அடி மட்டுமே என்று வரையறுத்தது. இந்தச் சட்டத்தையும், உச்சநீதிமன்றம்தான் செல்லாது என்றும், இந்திய அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்றும் தீர்ப்பளித்தது.

இது கடந்த கால வரலாறு. ஆனால், காவிரியில் இடைக்காலத் தீர்ப்பின்படி கிடைத்த தமிழக உரிமையை “அவசரச் சட்டம்” மூலம் பறிக்க கர்நாடக அரசு முயன்றது. அப்போது இருந்ததும் காங்கிரஸ் அரசாங்கம். 2007இல் வெளிவந்த இறுதித் தீர்ப்பில், தமிழகத்துக்கு 419 ரி.எம்.சியும் (இதில் கர்நாடக மாநிலம் காவிரியிலிருந்து வர வேண்டிய தண்ணீர் 192 ரி.எம்.சி), கேரளாவுக்கு 30 ரி.எம்.சி.யும், கர்நாடக மாநிலத்துக்கு 270 ரி.எம்.சி.யும், பாண்டிச்சேரிக்கு 7 ரி.எம்.சி.யும் வழங்க உத்தரவிட்டது. இந்த இறுதித் தீர்ப்பின்படி, உச்சநீதிமன்றம் அளித்த மூன்றாவது உத்தரவை (செப்​டெம்பர் 20 ஆம் திகதி வெளியானது) ஏற்க மறுத்துள்ளது. இப்போது இருப்பதும் காங்கிரஸ் அரசாங்கம்.  

இந்த முறை கர்நாடக மாநிலம் இப்பிரச்சினையை “நீதிமன்றத்துக்கும்- சட்டமன்றத்துக்குமான” மோதலாகக் கொண்டு செல்வது அரசியல் சட்ட நிபுணர்களைக் கவலையடைய வைத்துள்ளது. கர்நாடக சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை செப்​டெம்பர் 23ஆம் திகதி நடத்தி, இரு அவைகளிலும், “கர்நாடக மாநிலத்தின் குடிநீர்த் தேவை தவிர வேறு எதற்காகவும் காவிரி தண்ணீர் திறப்பதில்லை” என்று தீர்மானம் போடப்பட்டுள்ளது. தமிழக விவசாயத்துக்குத் தண்ணீரைத் திறந்து விட உத்தரவிட்ட உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்க மறுத்துள்ளது கர்நாடக அரசு.  

 ஏற்​கெனவே உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் நாடாளுமன்றம் நிறைவேற்றிய “தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம்” (National Judicial Appointment Commission) அமைக்கும் சட்டத்தை உச்சநீதிமன்றம் இரத்துச் செய்து விட்டது. அதைத் தொடர்ந்து நீதிபதிகள் நியமனத்தில் உருவாக்க வேண்டிய நடைமுறைகள் விடயத்தில் உச்சநீதிமன்றத்துக்கும் மத்திய அரசுக்கும் ஒரு பனிப்போர் நடைபெற்று வருகிறது. இதனால் நீதிபதிகள் நியமனம் தாமதம் ஆகிக் கொண்டிருக்க, பிரதமர் நரேந்திரமோடி அமர்ந்திருந்த மேடையிலேயே உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர் “நீதிபதிகள் நியமனத்தை உடனே செய்ய வேண்டும்” என்று கண்ணீர் மல்கக் கோரிக்கை வைத்தது பத்திரிகைளிலும் தொலைக்காட்சிகளிலும் தலைப்புச் செய்தியானது. இது போன்றதொரு “நீதிமன்றத்துக்கும் நாடாளுமன்றத்துக்கும்” ஒரு பனிப்போர் அகில இந்திய அளவில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நேரத்தில், காவிரிப் பிரச்சினையில் “சட்டமன்றத்துக்கும் உச்சநீதிமன்றத்துக்கும்” இடையில் மோதல் ஏற்பட்டிருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்ற முடியாது என்று வெளிப்படையாக ஒரு சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது நீதிமன்றத்துக்கும், மக்கள் மன்றத்துக்குமான போட்டியாக மாற்றப்படுகிறது.  

கர்நாடக மாநிலத்தின் பிரதான் எதிர்கட்சியாக இருக்கும் ஐக்கிய ஜனதா தளத்தின் சார்பில் பேசிய முன்னாள் முதல்வர் குமாரசாமி, “உச்சநீதிமன்றத்துக்கு ஓர் அதிகாரம் இருக்கிறது என்றால், சட்டமன்றத்துக்கும் அதிகாரம் இருக்கிறது. சட்டமன்றம் தண்ணீர் கொடுக்கக் கூடாது என்று தீர்மானம் போட்டால் அதை எப்படி மீற முடியும்” என்றே கேள்வி எழுப்பினார். முன்னாள் பிரதமராக இருந்த தேவகவுடா, “காவிரி பிரச்சினையில் உச்சநீதிமன்றம் வரம்பு மீறி நடந்து கொள்கிறது” என்றே கூறியிருக்கிறார். கர்நாடக முதலமைச்சர் சித்தாரமைய்யாவோ, “உச்சநீதிமன்றத் தீர்ப்பு, கர்நாடகத்துக்கு அநீதி இழைத்து விட்டது” என்றே பேட்டியளித்துள்ளார். இன்னும் சொல்லப்போனால் மத்திய அமைச்சர்களாக இருக்கும் பா.ஜ.கவைச் சேர்ந்த அனந்தகுமார், சதானந்த கவுடா போன்றோரும் உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரான கருத்துக்களைக் கூறியிருக்கிறார்கள். மத்திய அமைச்சர் சதானந்த கவுடாவோ, “உச்சநீதிமன்றம் கூறியுள்ள காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக் கூடாது” என்றே இந்திய நீர் வளத்துறை அமைச்சர் உமாபாரதியை சந்தித்து முறையிட்டுள்ளார். இத்தனைக்கும் 81 ஆயிரத்து 155 சதுர கிலோமீற்றர் காவிரிப் படுகையில் 44 ஆயிரத்து 16 சதுர கிலோமீற்றர் தமிழகத்துக்குள் காவிரி பாய்ந்தும் இப்படியொரு தடையை ஏற்படுத்துகிறது கர்நாடக அரசாங்கம். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக ஒரு மாநிலமே கச்சை கட்டி நிற்பது இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.  

“மத்திய, மாநில அரசாங்கங்களின் உறவு” ஏற்​கெனவே பல்வேறு உரசல்களை சந்தித்துள்ளது. பிரதமர் நரேந்திரமோடி மாநில முதல்வராக இருந்தவர். ஆகவே “கூட்டுறவு கூட்டாட்சி” என்ற தத்துவத்தை போதித்து வருகிறார். இதற்கிடையில் ஒரு மாநில அரசே உச்சநீதிமன்றத்துடன் பனிப்போர் நடத்துகிறது. “நாடாளுமன்றம் உச்சநீதிமன்றம்” என்ற நிலையைத் தாண்டி இப்போது “சட்டமன்றம் உச்சநீதிமன்றம்” என்ற அரசியல் சட்ட சிக்கல் காவிரி விவகாரத்தில் முளைத்துள்ளது. எப்படி இதை உச்சநீதிமன்றம் சமாளிக்கும் என்பது வருகின்ற செப்​டெம்பர் 27ஆம் திகதியன்று “காவிரி வழக்கு” விசாரணையில் தெரியும் என்றாலும் இப்படிப்பட்ட மோதல்கள் தவிர்க்கப்படுவதே முதிர்ந்த இந்திய ஜனநாயகத்துக்கு வலுச் சேர்க்கும் என்பதே அனைவரின் விருப்பமாக இருக்கிறது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .