2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஆயுதப் போராட்டமும் புதிய அரசியலமைப்பும்

Thipaan   / 2016 செப்டெம்பர் 26 , மு.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்.கே.அஷோக்பரன் LLB (hons)

 

 

 

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 59)

ஆயுதக் குழுக்களின் தாக்குதல்கள்

“துரோகி” முத்திரை என்பது இலங்கையில் தமிழ் அரசியலைப் பொறுத்தவரை புதியதொரு விடயமல்ல. இலங்கை அரசியலிலும் ஆயுதப் போராட்டத்திலும் மாற்றுக்கருத்துக் கொண்டவர்கள், மிக இலகுவாக துரோகிகளாக முத்திரை குத்தப்பட்டதுடன், அவர்கள் உயிர் வாழத் தகுதியற்றவர்களாக கருதப்பட்டு, ஆயுதம் கொண்டு கொல்லப்பட்டதும் வரலாறு. அல்ப்றட் துரையப்பாவில் ஆரம்பித்த இந்த கொலைக் கலாசாரம் முடிவின்றி தொடர்ந்துகொண்டுதான் இருந்தது. 1976-1977 காலப்பகுதியில் வடக்கு-கிழக்கில் அதிலும் குறிப்பாக வடக்கில் ஆயுதக் குழுக்களின் எழுச்சியை கட்டுப்படுத்துவதில் முன்னைய சிறிமாவோ அரசாங்கம் மட்டுமல்லாது, தொடர்ந்து வந்த ஜே.ஆர். அரசாங்கமும் தீவிரம் காட்டியது. அதன் விளைவாக வடக்கில் பொலிஸ் அணிகள் ஆயுதக் குழுக்களை சுற்றிவளைப்பதில் ஈவிரக்கமின்றி செயற்பட்டுக்கொண்டிருந்தன. இந்தத் தமிழ் இளைஞர்களின் ஆயுதக் குழுக்களை அடக்கும் பணியில் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களான பத்மநாதன், பஸ்தியாம்பிள்ளை உள்ளிட்டோர் ஈடுபட்டிருந்தனர்.

குறித்த ஆயுதக்குழுக்கள் தமக்கான அடிப்படைப் பொருளாதார வளத்தை வங்கிகளை கொள்ளையடிப்பதன் மூலம் பெற்றுக்கொண்டன. இந்த வங்கிக் கொள்ளை வழக்குகளை பொலிஸ் பரிசோதகர் பத்மநாதன் தலைமையிலான குழு விசாரித்துக்கொண்டிருந்தது. இந்தப் பொலிஸ் அதிகாரியை அன்றைய தமிழரசுக் கட்சியின் தளபதியாக’இருந்த அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் துரோகி என்று பொதுவில் விமர்சித்திருந்தார். சில காலத்தின் பின்பு பொலிஸ் பரிசோதகரான பத்மநாதன் வீடு திரும்பிக்கொண்டிருந்த சந்தர்ப்பமொன்றில் ஆயுதம் தாங்கிய இளைஞர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். சில காலம் பின்பு, 1977 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஓய்வுபெற்ற பொலிஸ் பரிசோதகரான குமார், வங்கிக் கொள்ளை வழக்கு விசாரணையில் மீள இணைந்துகொண்டதைத் தொடர்ந்து சுட்டுக்கொல்லப்பட்டார்.

1977ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் வங்கிக் கொள்ளை வழக்கு விசாரணைக் குழுவிலிருந்த இன்னொருவரான பொலிஸ் கான்ஸ்டபிள் கருணாநிதியும் பொலிஸ் சாஜன்ட்களான சண்முகநாதன் என்ற ஒரே பெயரைக் கொண்ட இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்தக் கொலைகள் பொலிஸ் திணைக்களத்தை ஆட்டம் காணச் செய்ததுடன், ஆயுதக்குழுக்களை இரும்புக்கரம் கொண்டேனும் அடக்கிவிட வேண்டும் என்று துடித்த இலங்கை அரசாங்கத்துக்கும் பேரிடியாக அமைந்தது. வடக்கில் ஆயுதக்குழுக்களை அடக்குவதில் மும்முரமாக இருந்த இன்னொரு பொலிஸ் அதிகாரி பஸ்தியாம்பிள்ளையாவார். குற்றப்புலனாய்வு பொலிஸ் பரிசோதகரான பஸ்தியாம்பிள்ளை ஆயுதக்குழுக்கள் பற்றிய விசாரணைகளை தீவிரமாக முன்னெடுத்துக்கொண்டிருந்தார்.

குறித்த விசாரணைகளில் கொடூரமான வழிகளைக் கையாண்டார் என்று பரவலான குற்றச்சாட்டை தமிழ்த் தரப்பிலிருந்து எதிர்கொண்டவர். 1978ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7ஆம் திகதி அன்று, பொலிஸ் பரிசோதகர் பஸ்தியாம்பிள்ளை தலைமையிலான சிறு குழுவொன்று, மன்னார் மாவட்டத்தின் மடு பிரதேசத்தில் காட்டுக்குள் தமிழ் இளைஞர் ஆயுதக்குழு ஒன்றினது பயிற்சி முகாமை சுற்றிவளைத்தது. இந்நிலையில் அங்கிருந்த தமிழ் இளைஞர் போராளியொருவர் பொலிஸாரின் ஆயுதத்தைப் பறித்து அதன் மூலம் தாக்குதல் நடத்தியதில் குற்றப்புலனாய்வு பொலிஸ் பரிசோதகர் பஸ்தியாம்பிள்ளை, உதவிப் பொலிஸ் பரிசோதகர் பேரம்பலம், பொலிஸ் கான்ஸ்டபிள் பாலசிங்கம் மற்றும் ஓட்டுனர் சிறிவர்த்தன ஆகியோர் கொல்லப்பட்டனர். ஆயுதக்குழுக்களை அடக்கும் முயற்சி தொடர்ந்து தோல்வியைச் சந்திப்பது அரசாங்கத்துக்கு பேரிடியாகவே அமைந்ததுடன், ஆயுதக் குழுக்களின் எழுச்சி பெரும் சவாலாக வளர்ந்து வருவதையும் அரசாங்கம் உணர்ந்தது.  

விடுதலைப்புலிகள்

இந்த நிலையில், ஒரு விடயத்தைக் குறிப்பிடுதல் அவசியமாகிறது. எழுச்சி கண்டுகொண்டிருந்த தமிழ் இளைஞர்களின் ஆயுதக்குழுக்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவதில் அரசாங்கம் காட்டிய அக்கறையையும் மும்முரத்தையும் இலங்கையிலுள்ள இனப்பிரச்சினையைத் தீர்ப்பதில், அதற்கான நிரந்தர அரசியல் தீர்வு ஒன்றை முன்வைப்பதில் காட்டியிருந்தால், ஆயுதக்குழுக்களுக்கான தேவை தானாகவே இல்லாதுபோயிருக்கும். ஆனால், இலங்கை அரசாங்கம் அதனைச் செய்யவில்லை. அடிப்படைப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக ஆயுதக்குழுக்களைக் காரணங்காட்டி தமிழ் மக்கள் மீதான வெறுப்பை விதைப்பதில் பேரினவாத சக்திகள் போட்டிபோட்டுக்கொண்டு மும்முரம் காட்டின.  

இந்நிலையில், 1978ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25ஆம் திகதியிடப்பட்ட பாயும் புலிச்சின்னமும் தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற பெயரும் கொண்ட கடிதத் தலைப்பில், “கரிசனமுள்ளோருக்கு” என விழிக்கப்பட்டு ஒரு கடிதம் வீரகேசரி பத்திரிகையில் பிரசுரமானது. இந்தக் கடிதத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு பின்வரும் கொலைகளுக்கு தாம் பொறுப்பேற்பதாக அறிவித்தது. 

அல்ப்றட் துரையப்பா (யாழ். நகரபிதா, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வடபிராந்திய அமைப்பாளர்), என். நடராஜா (ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கோப்பாய் அமைப்பாளர்), ஏ.கருணாநிதி (பொலிஸ்), சண்முகநாதன் (பொலிஸ்), சண்முகநாதன் (பொலிஸ்), தங்கராஜா (ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அருளம்பலத்தின் செயலாளர்), பஸ்தியாம்பிள்ளை (பொலிஸ்), பேரம்பலம் (பொலிஸ்), பாலசிங்கம் (பொலிஸ்) மற்றும் சிறிவர்த்தன (பொலிஸ்). 

“எம்மைச் சுற்றிவளைக்க எமது பயிற்சி முகாமொன்றுக்கு வந்த பஸ்தியாம்பிள்ளை தலைமையிலான குழுவினரை தமிழீழ விடுதலைப்புலிகளான நாம் சுட்டுக்கொன்றோம். இந்தக் கொலைகளுக்கு வேறு அமைப்புக்களோ தனிநபர்களோ உரிமை கோர முடியாது. எம்மைத் தவிர இவற்றுக்கு உள்நாட்டிலோ வௌிநாட்டிலோ உரிமை கோருவோர் யாராயினும் அவர்களுக்கெதிராக தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு முன்பு நடந்த எந்த வகையான கொள்ளைச் சம்பவத்துக்கும் நாங்கள் பொறுப்பல்ல” என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.  

இலங்கையில் இதுபோன்று ஓர் ஆயுதக்குழு தனது படுகொலைகளுக்கு பகிரங்கமாக உரிமைகோரியமை பெரும் பரபரப்பானது. இந்தக் கடிதம் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மக்கள் மத்தியில் தமிழீழ விடுதலைப்புலிகளின் பெயர் பிரபலமடைந்தது. 1978ஆம் ஆண்டு மே மாதம் இலங்கைப் பொலிஸ், வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்ளிட்ட 38 பேரை பொலிஸாரால் தேடப்படுவோர் பட்டியலில் வௌியிட்டது. 

மேற்சொன்ன கடிதம் பற்றிய இன்னொரு செய்தியும் உண்டு. இலங்கை அரசியல் மற்றும் போராட்ட வரலாற்றை எழுதிய சிலர், குறித்த கடிதமானது அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் அலுவலகத்திலேயே அமிர்தலிங்கத்துக்கு தெரியாமலே தயாரிக்கப்பட்டதாகக் குறிப்பிடுகிறார்கள். ஏற்கெனவே தமிழ் இளைஞர் ஆயுதக்குழுக்களுக்குப் பின்னணியில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி இருப்பதாக பேச்சுக்கள் எழுந்த நிலையில், இந்தச் செய்தி அந்த பேச்சுக்கு வலுச்சேர்ப்பதாக அமைந்தது. ஆனால், இந்த செய்தியின் உண்மைத் தன்மை உறுதிசெய்யப்படவில்லை. 

அதிகரித்த இராணுவப் பிரசன்னம்

ஆயுதக் குழுக்களை அடக்க அரசாங்கம் எடுத்த முயற்சிகள் தோல்வி கண்ட நிலையில், வடக்கில் இராணுவப் பிரசன்னத்தை அதிகப்படுத்தியதுடன், 1978ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் திகதி இலங்கை அரசாங்கம் தமிழீழ விடுதலைப்புலிகளையும் அதனையொத்த இயக்கங்களையும் ஓராண்டுக்குத் தடைசெய்யும் மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. ஆனால், தமிழ் இளைஞர்களின் ஆயுதக் குழு நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தப் போதுமானதாக இருக்கவில்லை. இதுவரை வடக்கில் மட்டும் நடந்துகொண்டிருந்த தாக்குதல்கள் தெற்கை நோக்கி நகரத் தொடங்கின. 

புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்டது

இந்நிலையில், நாம் மீண்டும் அரசியல் களத்தை நோக்குதல் அவசியமாகிறது. புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்கும் ஜே.ஆர் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் முயற்சியில், தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி பங்கேற்க மறுத்திருந்த வேளையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி குறித்த குழுவிலிருந்து விலகியிருந்த வேளையில், ஐக்கிய தேசிய கட்சியும் சௌமியமூர்த்தி தொண்டமானும் புதிய அரசியலமைப்பின் வரைவினை உருவாக்கும் நாடாளுமன்றக் குழுவில் மும்முரமாகச் செயற்பட்டனர். குறித்த நாடாளுமன்றக் குழுவின் தலைவரும் பிரதமருமான ரணசிங்ஹ பிரேமதாஸ, 1978ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25ஆம் திகதி புதிய அரசியலமைப்புக்கான வரைவினை தேசிய அரசுப் பேரவையில் (நாடாளுமன்றத்தில்) சமர்ப்பித்தார்.

1972ஆம் ஆண்டின் முதலாவது குடியரசு அரசியலமைப்புக்கு திருத்தமொன்றை மேற்கொள்வதனூடாக புதிய அரசியலமைப்பைக் கொண்டு வருவதே ஜே.ஆரின் நோக்கம். நாடாளுமன்றத்தில் வரலாறு காணாத 5/6 பெரும்பான்மையைக் கொண்டிருந்த ஜே.ஆர் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சிக்கு இதனைச் செய்வது மிக இலகுவாக இருந்தது. தமது பெரும்பான்மைப் பலத்தைக் கொண்டு வெறும் ஆறு வார காலத்துக்குள் புதிய அரசியலமைப்பை தேசிய அரசுப் பேரவையில் நிறைவேற்றினர். 1978ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 16 ஆம் திகதி எதிர்க்கட்சிகள் புறக்கணித்திருந்த நிலையில், இறுதி வாசிப்பின்போது 137 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்து, எதிராக ஒரு வாக்குமின்றி 1978ஆம் ஆண்டின் இரண்டாவது குடியரசு யாப்பு நிறைவேற்றப்பட்டது.

1978ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 31ஆம் திகதி சபாநாயகர் ஆனந்ததிஸ்ஸ டி அல்விஸ், புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்டதை உறுதிப்படுத்தினார். புதிய அரசியலமைப்பின் 172ஆவது சரத்து, புதிய அரசியலமைப்பு நடைமுறைக்கு வரும் நாளை ஜனாதிபதி தீர்மானிப்பார் என்று வழங்கியது. அந்த வகையில், ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன, “ 1978ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 7ஆம் திகதி புதிய அரசியலமைப்பு நடைமுறைக்கு வரும்” என்று அறிவித்தார். 1978ஆம் ஆண்டு செப்படெம்பர் மாதம் ஏழாம் திகதி நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற நிகழ்வில் புதிய அரசியலமைப்பை நடைமுறைக்குக் கொண்டுவந்ததுடன், புதிய அரசியலமைப்புக்கான தனது விசுவாசத்தை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன பதிவு செய்தார்.  

“எயார் சிலோன்” விமான தாக்குதல்

1978ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ஏழாம் திகதி புதிய அரசியலமைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஒரு கொண்டாட்ட மனநிலை தெற்கில் குறிப்பாக, ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியினரிடம் காணப்பட்டது. இந்நிலையில் அதே தினம் இரத்மலானையில் அமைந்துள்ள கொழும்பு விமானநிலையத்தின் ஓடுபாதையில் நின்ற இலங்கையின் தேசிய விமானசேவையான “எயார் சிலோன்”ற்குச் சொந்தமான அவ்ரோ விமானமொன்று விடுதலைப்புலிகளால் வெடிக்கவைக்கப்பட்டது. கொண்டாட்ட மனநிலை ஒரேயடியாக மாறியிருந்தது. அச்சமும் பீதியும் பரவத்தொடங்கியது. இதன் விளைவாக தெற்கிலும் இராணுவம், பொலிஸ் பிரசன்னம் அதிகரித்ததுடன், ஆயுதக்குழுக்களுடன் தொடர்புள்ளோர் என்ற சந்தேகத்தில் தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்படுவதும் தடுத்துவைக்கப்படுவதும் அதிகரித்தது. பல இடங்களிலும் பொலிஸ் சோதனைகள் நடத்தப்பட்டன என்று அசோக பண்டாரகே தன்னுடைய “இலங்கையின் பிரிவினைவாத பிரச்சினை: தீவிரவாதம், இனம், அரசியல், பொருளாதாரம் (ஆங்கிலம்)” என்ற நூலில் குறிப்பிடுகிறார். “அரசாங்கத்தின் இந்தக் கெடுபிடிகள் யாவும் தமிழ் மக்களை துன்பத்துக்குள்ளாக்கும் செயல்கள்” என, அமிர்தலிங்கம் தனது கண்டனத்தை பதிவுசெய்தார். 

1978ஆம் ஆண்டு யாப்பின் சட்டபூர்வத் தன்மை

1978ஆம் ஆண்டின் இரண்டாவது குடியரசு யாப்பானது, 1972ஆம் ஆண்டின் முதலாவது குடியரசு யாப்புக்கு திருத்தமொன்றைச் செய்ததனூடாக முன்வைக்கப்பட்டது. இந்த இரண்டு அரசியலமைப்பின் உருவாக்கத்திலும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளின் பங்களிப்பு இருக்கவில்லை. ஆகவே, ஆட்சியிலிருந்து பெரும்பான்மை அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்புக்களாகவே இவை இருந்தன. 1972ஆம் ஆண்டின் முதலாவது குடியரசு அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டபோது, அது சட்டபூர்வத் தன்மை பற்றி, தமிழ் அரசியல் தலைமைகள் கேள்வி எழுப்பியிருந்தன. ஏனெனில், அதற்கு முன்பு நடைமுறையிலிருந்த சோல்பரி அரசியலமைப்பு சிறுபான்மையினருக்கு வழங்கியிருந்த எவ்வகையிலும், மாற்றப்படமுடியாது பாதுகாப்பு உரிமைகளை மீறி அது உருவாக்கப்பட்டதனால், அதன் சட்டபூர்வத் தன்மை பற்றிய கேள்வி எழுப்பப்பட்டது. 1972ஆம் ஆண்டு யாப்புக்குத் திருத்தமாக 1978ஆம் ஆண்டு யாப்பு அறிமுகப்படுத்தப்பட்டதால், 1972ஆம் ஆண்டு யாப்பிலிருந்த அதே சட்டபூர்வத் தன்மை பற்றிய கேள்வி, 1978ஆம் ஆண்டு யாப்புக்கும் பொருந்தும், என சிலர் தமது கருத்துக்களை முன்வைத்தனர். ஆனால், இந்தக் கருத்துக்களோ, தமிழ் மக்களின் எதிர்ப்போ, 1978ஆம் ஆண்டு யாப்பு நடைமுறைப்படுத்தப்படுவதை தடுக்கவல்லதாக இருக்கவில்லை. 1978ஆம் ஆண்டின் இரண்டாவது குடியரசு யாப்பானது இலங்கையின் அரசியல் முறைமையில் முக்கிய சில மாற்றங்களைக் கொண்டுவந்தது. ஆனால், பேரினவாத அடிப்படைகளை அது மாற்றவில்லை.  

( அடுத்த வாரம் தொடரும் ) 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .