2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

எழுந்து நிற்கிறது எழுக தமிழ்!

Thipaan   / 2016 செப்டெம்பர் 26 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

முருகவேல் சண்முகன்

தமிழரின் தாகம் தணிவதில்லை, அடி மனத்தின் கோடியில் அது குடிகொண்டிருக்கிறது. தேவையேற்படும் சந்தர்ப்பங்களில், அது தீயாக எழும் என்பதற்குச் சான்றாக, சனிக்கிழமை (24) இடம்பெற்ற எழுக தமிழ்ப் பேரணி அமைந்திருந்தது. சுயபாதுகாப்பு முறையில் உறங்குநிலையில் இருந்த தமிழர்களின் சாத்வீக போராட்டக் குணத்தைத் தூண்டி விட்டிருக்கிறது. அதுவும், இப்போதைய காலவோட்டத்தை உள்வாங்கி, அதற்கேற்ற வகையில் தமிழர்களைத் தயார்படுத்துவதற்கான ஆரம்பக் கட்டமைப்பையும் ஏற்படுத்திச் சென்றிருக்கிறது.  

தமிழ் மக்கள் பேரவை ஆரம்பிக்கப்பட்டபோது, களத்திலிருக்கும் மக்களை பிரதிபலிக்காது, வாக்கு வங்கி அரசியலையும் தமது பதவிகளைத் தக்க வைத்துக் கொள்வதும் மத்திய அரசாங்கத்துக்கு வளைந்து நெளிந்து கொடுக்கக்கூடியதாக மட்டுமே இருந்த தமிழரசுக் கட்சியிலான தமிழ்க் கூட்டமைப்புக்கு, மக்களிடையேயான விருப்பங்கள் தொடர்பான அழுத்தத்தை வழங்குவதற்குரிய சக்தியொன்றாக கட்சிகளைத் தாண்டியே அமைக்கப்பட்டிருந்தது.  

இந்நிலையில், தான் ஆரம்பிக்கப்பட்ட நோக்கத்தை தமிழ் மக்கள் பேரவை, பற்றிப் பிடித்து ஓட்டமெடுக்கத் தொடங்கிய புள்ளியாகவே எழுக தமிழாவை நோக்க வேண்டியுள்ளது. தமிழ் மக்கள் பேரவையில் உள்ளவர்களின் கட்சியை முன்னிலைப்படுத்தி, எழுக தமிழ் முன்னெடுக்கப்பட்டிருக்குமானால் நிச்சயம் பிசுபிசுத்துப் போயிருக்கும். ஆனால், கட்சிகளையும் பொதுஅமைப்புகளையும் சேர்த்துக் கொண்டு பொதுவான ஒரு நோக்கத்தோடு மக்களிடம் சென்றமையாலேயே எழுக தமிழ் வெற்றி பெற்றிருக்கிறது.  

எழுக தமிழ் தொடர்பிலான உரையாடல்கள், தமிழர் தரப்புக்களின் பல்வேறு மட்டங்களிலும், எதிர்பார்த்ததை விட அதிகமாக இடம்பெற்றதைத் தொடர்ந்து, தமக்கு இருப்புக்கு ஆபத்து என, தேர்தல் காலங்களில் தமிழ்க் கூட்டமைப்பு என்று வருகின்ற தமிழரசுக் கட்சி கருதியிருந்தது.  

இதனையடுத்து, 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர், தமிழரசுக் கட்சியின் பிரதானியாக அடையாளப்படுத்தப்படுபவராலும், அக்கட்சியின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிரேஷ்ட தலைவராலும் ஏனையவர்களும் எழுக தமிழை முடக்குவதற்கு முழு அளவில் பின்னணியில் வேலை செய்திருந்தார்கள். எழுக தமிழ் பேரணியானது, நல்லூர் ஆலய முன்றலிலும் யாழ். பல்கலைக் கழகத்திலிருந்தும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் ஆரம்பித்து வைக்கப்பட்டு, யாழ். முற்றவெளியைச் சென்றடைந்திருந்த நிலையில், எழுக தமிழுக்கு முதல் நாள், தாமும் கூட்டுப் பேரணி நடத்தித்துவதாக சுவரொட்டிகளையொட்டி, எழுக தமிழன்று, தியேட்டருக்கு முன்னால் கூட்டத்தைக் கூட்டிய வீணைக் கட்சியின் நாயகம், வீரசிங்கம் மண்டபத்துக்கு முன்னால் நின்றிருந்த நிலையில், எழுக தமிழ் பேரணியானது, தபாலகத்துக்கு முன்னால் இருந்த சுற்றுவட்டத்தால் திசைதிருப்பப்பட்டு கோட்டையைச் சுற்றி, பொதுக்கூட்டம் இடம்பெற்ற முற்றவெளிக்குச் சென்றிருந்த நிலையில், தாடிக்கார ஐயாவும் மூக்குடைபட்டிருந்தார்.  

எழுக தமிழில் முன்வைக்கப்பட்டிருந்த பிரகடனங்கள் பல ஏற்கெனவே கூறப்பட்டிருந்தாலும், 2009ஆம் ஆண்டு ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர், ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி முதற்தடவையாக கோரிக்கைகளை முன்வைக்கின்றார்கள் என்று நிச்சயம் பல இடங்களிலும் அவதானிக்கப்பட்டிருக்கும்.  

அதுவும் 2009ஆம் ஆண்டுக்கு முன்னரே, எதிர்த்தரப்பின் நடவடிக்கைகளுக்கு தந்திரோபாய பின்வாங்கல்களையே மேற்கொண்டிருந்த நிலையில், எழுக தமிழ் என்ற மக்கள் போராட்டத்தின் மூலம் முன்னோக்கி காலை எடுத்து வைத்துள்ள நிலையில், இதற்கு நிச்சயம் ஒரு பிரதிபலிப்பு இருக்கும். தாமே முன்னெடுப்புகளை மேற்கொண்ட தரப்புகள், தாம் பிரதிபலிப்புகளை ஆற்ற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.  

எவ்வாறெனினும், எழுக தமிழின் வெற்றியை, தமிழ் மக்கள் பேரவையிலுள்ளவர்கள், தமது தனிப்பட்ட அரசியலுக்காக பாவிப்பார்களானால், எழுக தமிழின் பிரவாகமானது முற்றவெளிக்குள்ளேயே மண்ணாகிவிடும்.  

எனவே, தமிழ் மக்கள் பேரவைக்கு, எழுக தமிழின் மூலம் கிடைத்திருக்கும் ஆணையை, தமிழ் மக்கள் பேரவை சரியாக பயன்படுத்த வேண்டும். முன்னைய காலங்களில், எந்தத் தரப்பை நோக்கி கைகாட்டப்படுகின்றதோ, அத்தரப்புக்கே மக்கள் வாக்களித்திருந்தார்கள். ஆகவே கட்சிகளைத் தாண்டி, மக்கள் நலன்சார்ந்த போராட்டங்களை முன்னெடுத்தார்களோ, அவர்களின் பின்னாலேயே மக்கள் அணி திரண்டிருந்தார்கள்.  

ஆகவே, தற்போதைய காலகட்டத்துக்கேற்றவாறு போராட்ட வடிவம், அஹிம்சை வழியிலான மக்கள் போராட்ட வடிவமாக மாறியிருக்கிறது. அதுவும் அஹிம்சை வழியிலான போராட்டத்தை மேற்கொண்டு உயிர்நீத்த தியாகதீபம் திலீபன் உண்ணாவிரதமிருந்த காலத்தில் எழுக தமிழ் பேரணி இடம்பெற்று வெற்றியடைந்துள்ளது.  

எனவே கட்சிகளைத் தாண்டி, மக்கள் மயப்படுத்தப்பட்ட போராட்டங்களை யார் முன்னெடுக்கிறார்களோ, அவர்களின் பின்னால் தற்போதும் மக்கள் அணி திரண்டிருக்கிறார்கள். இதைச் சரியாகப் பயன்படுத்தி, அடுத்த கட்டத்தை அர்ப்பணிப்புடன் தமிழ் மக்கள் பேரவை எடுத்துச் செல்ல வேண்டியுள்ளது.  

அடுத்து, எழுக தமிழ் வெற்றி பெற்றால், தென் பகுதிகளில் இது அதிர்ச்சியை ஏற்படுத்தும். இதனால் அரசியல் தீர்வுத் திட்டம் தொடர்பாக சிக்கல் தோன்றும். எனவே, எழுக தமிழா நடத்தப்பட்ட இச்சந்தர்ப்பம் சரியானதா என்று கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. இது ஓரளவுக்கு நடைமுறைச் சாத்தியமானதும் கூட.  

எனினும், உரிமைகளைப் பெறுவதற்காக தொடங்கப்பட்ட ஆயுதப்போராட்டமானது மௌனிக்கப்பட்ட பின்னர், தற்போதும் உரிமைகளுக்கான தாகமானது அப்படியே இருக்கையில், தொடர்ந்தும் உறங்கு நிலையில் இருக்காது, அஹிம்சை வழியிலான மக்கள் போராட்ட முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கான ஆரம்பப் புள்ளியே எழுக தமிழ் ஆகும்.  

தவிர, எழுக தமிழில் உரையாற்றிய, வட மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன் கூறியது போன்று, மத்திய அரசாங்கத்தையோ, சிங்கள சகோதர சகோதரிகளையோ, பௌத்த சங்கத்தினரையோ அல்லது தமிழரசுக் கட்சியையோ எதிர்த்து நடாத்தப்படவில்லை.  

நாடாளுமன்றத்துக்கு தெரியப்படுத்துவதாலோ, மாகாண சபைகளுக்கு தெரியப்படுத்துவதாலோ வென்றெடுத்து கொள்ள முடியாதுள்ள தமிழ் மக்களின் உரிமைகளை, கரிசனைகளை, கவலைகளை ஆகக்கூடியது கண்டனங்களை வெளிப்படுத்தி விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தவே எழுக தமிழ் பேரணி நடாத்தப்பட்டிருந்தது.  

இது தவிர, முதலமைச்சர் குறிப்பிட்டிருந்தது போல, தமிழ் பேசும் பிரதேசங்களிலுள்ள பொலிஸ் நிலையங்களில், இன்னமும் சிங்கள மொழியிலேயே முறைப்பாடுகள் எழுதிக் கொள்ளப்படுகின்றன. வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு, வெளியிலிருந்து வருவோருக்கு சகல வசதிகளும் செய்து கொடுக்கப்படுகின்றன போன்ற நடைமுறை விடயங்களையும் வெளிப்படுத்தும் இடமாக எழுக தமிழ் அமைந்திருந்தது.  

மேலும், வடக்கு, கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தில், சிங்கள மயமாக்கலை நிறுத்தி தமிழின அடையாளத்தை காக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது. தவிர, வடக்கு, கிழக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுமாறும் தமிழ் மக்களின் காணிகளை கையகப்படுத்துவதை நிறுத்துமாறும் கூறப்பட்டிருந்ததோடு, இறுதிக் கட்ட போரின்போது இழைக்கப்பட்ட யுத்த குற்றங்களுக்காக, வெளிநாட்டு நீதிபதிகள் அற்ற உள்ளகப் பொறிமுறையை மட்டுமே முன்வைக்கின்ற நிலையில், தமிழ் மக்களின் ஏகோபித்த நிலைப்பாடான சர்வதேச விசாரணையை எழுக தமிழ் வலியுறுத்தியிருந்தது.  

மேற்குறிப்பிட்டவை தவிர, பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் உடனடியாக விலக்கிக் கொள்ளப்பட வேண்டுமெனவும் இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகள் அனைவரும் நிபந்தனையின்றி உடனடியாக விடுவிக்கப்பட வேண்டுமெனவும் எழுக தமிழ் வலியுறுத்தியதுடன் கடத்தப்பட்ட, சரணடைந்த பின்னர் காணாமல் போகச்செய்யப்பட்ட ஒவ்வொரு தமிழருக்கும் என்ன நடந்தது என கண்டறியப்பட்டு பகிரங்கப்படுத்தப்பட வேண்டுமெனவும் எழுக தமிழ் வலியுறுத்தியிருந்தது.  

இவை தவிர, தெற்குப் பகுதி மீனவர்கள், வடக்கு, கிழக்கு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைவது மட்டுமின்றி, நிரந்தர தங்குமிடங்களை அத்துமீறி அமைப்பதனால், தமது சொந்த மீன்பிடி இடங்களில் இருந்தே விரட்டப்படும் நிலை உருவாவதாகவும் இவ்வாறான நடவடிக்கைகளை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு எழுக தமிழ், அரசாங்கத்தை வலியுறுத்துவதுடன், இந்திய மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடி முறைகளால், தமிழ் மீனவர்களின் கடல்வளங்கள், அத்துமீறி, சட்டத்துக்கு புறம்பாக சூறையாடப்படுவதையும் எழுக தமிழா வன்மையாகக் கண்டித்திருந்தது.  

இது தவிர, ஆழமான இராணுவ கண்காணிப்புக்குள் வைக்கப்பட்டிருக்கின்ற வடக்கு, கிழக்கில், பெருமளவான போதைப்பொருட்கள் பரவுவதுடன், மதுப் பாவனை ஊக்கப்படுத்தப்படுவதாகவும், இளம் சந்ததியின் எதிர்காலத்தை திட்டமிட்டு அளிக்கும் இந்நடவடிக்கைகளை நிறுத்தவும் கட்டுப்படுத்துவதுக்குமான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும் எனவும் எழுக தமிழ் வலியுறுத்தியிருந்தது.  

இதேவேளை, புதிய அரசியலைமைப்பானது, தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற வேண்டும் என எழுக தமிழ் வலியுறுத்தியதோடு, ஒற்றையாட்சிக்குள் அரசியல் தீர்வு எந்த வடிவத்திலும் சாத்தியம் இல்லை என்று கூறியிருந்தது. தமிழர்களை, இலங்கையின் வடக்கு, கிழக்கில் ஒரு தேசமாக, அவர்களது சுயநிர்ணய உரிமையை மதிக்கும், தன்னளவில் இறைமை கொண்ட சுயாட்சி ஒன்றை நிறுவும் அரசியலமைப்பு ஏற்பாடுகள் மூலமாகவே தேசிய இனப்பிரச்சினைக்கான நடைமுறைச் சாத்தியமான தீர்வு அடையப்படும் எனவும் கூறியிருந்தது.  

மேற்குறிப்பிட்ட கோரிக்கைகள் அனைத்தும், தமிழ்த் தேசியத்தால் முன்வைக்கப்படும் அடிப்படைக் கோரிக்கைகளே, இவற்றினையே மீளவும் மக்கள் உறுதிப்படுத்தியுள்ளார்கள். மக்களும் மக்கள் பிரதிநிதிகளும் இணைந்து கோரிக்கைகளை முன்வைக்கும்போது கிடைக்கும் அதியுச்ச வீச்சம் எழுக தமிழுக்கு கிடைத்திருக்கிறது.  

மேற்குறித்த வீச்சமானது, தமிழரசுக் கட்சிக்கு, நிச்சயம், பெரியதோர்  அடியே ஆகும். எழுக தமிழில் திரண்டிருந்தவர்களில் பெரும்பாலோனோர், தமிழரசுக் கட்சிக்கு, தேர்தலில் வாக்களித்தவர்களே ஆவர். ஆக தேர்தல்கால அரசியலையும் தாண்டி, தம்மைப் பிரதிபலிக்கின்ற அரசியல் நோக்கத்துக்காக, கட்சியையும் தாண்டி மக்கள் ஒன்றிணைவார்கள் என்ற யதார்த்தத்தை உணர வைத்ததுடன், தமது வாக்கு வாங்கிகளில் வீழ்ச்சி ஏற்பட்டுவிடுமோ, தமது பதவிகளுக்கு ஆப்பு வைக்கப்படுமோ என்று சந்தேகம் ஏற்பட்டிருக்கும்.  

எனவே, அதிகாரங்கள் குவிந்துள்ளமை காரணமாக தான்தோன்றித் தனமாகச் செயற்படும் தமிழரசுக் கட்சிக்கான பாடமாக எழுக தமிழ் இருக்கும் என்பதோடு, தாம் விடும் பிழைகள் கணக்கில் எடுக்கப்படாது, தம்மிடையே பேசித் தீர்மானித்து விட்டு மக்களிடையே திணிக்கலாம் என்ற செயற்பாடுகள் நிறுத்தப்படும்.  

ஆகையால், இனி வரும் காலங்களில், மக்களுடன் தமிழரசுக் கட்சி நெருங்கிச் செயற்பட வேண்டும். மக்களின் மனவோட்டங்களைப் புரிந்து கொண்டு, அதற்கேற்றவாறு செயலாற்ற வேண்டும் என்றவாறான அழுத்தங்களை தமிழரசுக் கட்சிக்கு எழுக தமிழ் வழங்கியிருக்கின்றது.  

இவற்றைப் புரிந்து கொள்ள மறுத்து, தேர்தல் கால அரசியலை மட்டுமே முன்னெடுத்தால், உடனடியாக இல்லாவிடினும், படிப்படியாக மக்களால் நிராகரிக்கப்பட்டு, தூக்கியெறியப்படும் சந்தர்ப்பம் நிச்சயம் வரலாம். ஆக மொத்தத்தில், எழுக தமிழ், அனைவரையும் எழ வைத்திருக்கிறது. எழுந்து கொண்டவர்கள் முன்னே பயணிக்கலாம். எழ மறுப்பவர்கள் ஏறி மிதிக்கப்படலாம்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .