2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

சிறுமியைக் காப்பாற்றிய கடைசி நாள் ஒளிப்பதிவு

Princiya Dixci   / 2016 செப்டெம்பர் 28 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

’வாடி கெதியா, எரும மாடு... வாடி கெதியா... கெதியா வா, தேவடியாள்’, கையில் நீண்ட தடியுடன், உரத்த குரலில் அந்தச் சின்னஞ்சிறுமியை நோக்கி அள்ளி வீசப்பட்ட அந்தவார்த்தைகளால், உள்ளங்கி மட்டுமே அணிந்திருந்த நிலையில், சற்றுத் தூரத்திலிருந்து நடுநடுங்கிக்கொண்டு வந்த அந்தச் சிறுமியின் முடியைப் பிடித்து பந்தாடிய சம்பவம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பரவி, அந்த வீடியோவைப் பார்த்த சகலரின் கண்களையும் ஒருகனம் நனைத்துவிட்டது.  

சுமார் 4 நிமிடங்கள் 41 வினாடிகளுக்குள் காட்சிகளை அடக்கிக்கொண்ட அந்த வீடியோவிலிருந்து ‘அடியே உனக்கு அம்மாவ பற்றி விளங்காது. சரியா?... அவள் மாதிரி நினைக்காத... நினைக்காத... கெதியா வா... யாரும் இல்ல... கெதியா வா... உன்ன பிடிக்கிறத்துக்கு ஆக்களில்ல. கெதியா வா. சொன்னா கேக்கனும். கெதியா வா...’ எனக் கடுந்தொனியில் அந்தப் பெண், தான் நின்றிருந்த இடத்துக்கு குறித்த 9 வயதுடைய சிறுமியை அழைக்கின்றார்.  

இழுத்து வாராத தலைமுடியுடன், உள்ளங்கி மாத்திரம் அணிந்து கொஞ்சத்தூரத்தில் நின்றிருந்த மெலிந்த உடல் கொண்ட அச்சிறுமியும், தனது கைகளின் விரல்களைப் பிசைந்தபடியே, மெது மெதுவாக, நடக்கப் போகும் விளைவை எதிர்கொள்ளத் தயாரானவளாக அப்பெண்ணுக்கு அருகில் செல்ல முயற்சிக்கின்றாள். காட்சியின் கொடூரம் நடந்தேறுகின்றது.

உச்சக் கோபத்தில், மதியிழந்துக் காணப்பட்ட அப்பெண், சிறுமிக்கு அருகில் சென்று, குளித்த நிலையில் தண்ணீரில் பாதி நனைந்த உடலுடன் நின்ற அச்சிறுமியின் கைகளைப் பிடித்து முறுக்கி, பற்றைத்தரையில் தள்ளி, ‘உன்ர தடிப்பு உன்னோட இருக்கனும். ஓடுவியா? ஓடுவியா?’ எனக் கேட்டு, தலைமுடியைப் பிடித்து இழுத்து தலையில் குட்டுவதுடன் காதைத்திருகி, அடி வயிற்றில் அல்லது தொடைகளில் கொடூரமாகக் கிள்ளுகிறார். தொடர்ந்து, சிறுமியின் மீது சரமாரியாக மூர்க்கத்தனமான தாக்குதல்களை, அப்பெண் மேற்கொள்ளும் காட்சிகள், அந்த ஒளிப்பதிவில் பதிந்தன.

யாழ்ப்பாணம், நீர்வேலிப் பகுதியிலுள்ள வீட்டுக் காணியொன்றில் கடந்த 22ஆம் திகதி வியாழக்கிழமை காலை 6 மணியளவில் நடந்த சம்பவம் தொடர்பில், அன்றைய தினமே பேஸ்புக்கில் பதிவேற்றப்பட்டு, வைரலாகப் பரவிய ஒளிப்பதிவில், காட்சியாகப் பார்க்கப்பட்டவையே இவையாகும்.

இந்த வீடியோவை இலட்சம் பேர் பார்வையிட்டும் 30,000க்கும் மேற்பட்ட சமூக ஆர்வலர்கள் பகிர்ந்ததன் எதிரொலியாக இச்சிறுமியும் சிறுமியின் சகோதரர்கள் மூவர் என நான்கு சிறார்கள், மீட்கப்பட்டு, சிறுவர் இல்லத்தில் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த வீடியோ வெளியாகிய அன்றைய தினம் மாலை வேளையே இக்கொடூரத்தைப் புரிந்த பெண், கோப்பாய் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார். கோப்பாய் பிரதேச செயலக சிறுவர் நன்னடத்தைப் பிரிவு அதிகாரி, கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததன் பிரகாரம், அவர் கைதுசெய்யப்பட்டார்.  

மறுநாள் 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை, யாழ். நீதவான் நீதிமன்றத்தில் குறித்த பெண்ணை, கோப்பாய் பொலிஸார் ஆஜர்படுத்திய போது, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

ஐக்கிய நாடுகள் சிறுவர் உரிமைகள் சமவாயத்தின் உறுப்புரிமை 6க்கு அமைய 18 வயதுக்கு உட்பட்ட ஒவ்வொரு பிள்ளைகளும் உயிர்வாழும் உரிமையுடையவர்கள். கருத்துச் சுதந்திரம், கூடும் சுதந்திரம், அந்தரங்கத்தைப் பேணல், பொருத்தமான தகவல்களைப் பெறல், இம்சை மற்றும் புறக்கணிப்பு ஆகியவற்றிலிருந்து பாதுகாப்புப் பெறல், கல்வி கற்கும் உரிமை உட்பட எல்லா உரிமைகளும் சிறுவர்களுக்கும் உள்ளது என்ற ஐக்கிய நாடுகளின் சாசனத்தை, இலங்கை உட்பட உலக நாடுகள் அனைத்தும் உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளன.

இந்த உரிமைகள் அனைத்தும் வயது, பால், இனம், நிறம், சாதி, மொழி மற்றும் மத வேறுபாடுகளின்றி வழங்கப்பட வேண்டும். சிறுவர்களை எல்லா வகையான பாகுபாடுகளிலிருந்தும் பாதுகாப்பதுடன் அவர்களின் உரிமைகளைப் பரப்புவதற்கு அனைத்து அரசாங்கங்களும் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

சிறுவர்கள் தொடர்பான சகல செயற்பாடுகளும் முடிவுகளும் அவர்களின் சிறந்த நலன்களைக் கருத்தில் கொண்டே மேற்கொள்ளுதல் வேண்டும் என்பது ஐக்கிய நாடுகள் சாசனத்தின் விதிமுறைகளாகும்.  

எனினும், இவை எந்தளவுக்கு சாத்தியம் என்பதும் இந்த உரிமைகள் அனைத்தும் சிறுவர்களுக்கு முழுமையாக வழங்கப்படுகின்றனவா என்பதும் இலங்கை போன்ற நாடுகளில் கேள்விக்குறியே.  

மூன்று தசாப்தங்களைக் கொண்ட போர்ச்சூழலும் ஓர் ஒழுங்கமைப்பைக் கொண்டிராத சமூகப் பின்னணிக் காரணங்களும், பின்தங்கிய பொருளாதார நிலைமைகளும் இவற்றையெல்லாம் இன்று பின்தள்ளச் செய்துள்ளன. இதனால் நம் நாட்டில் சிறுவர்களுக்கான உரிமைகள் மறுக்கப்படும் சந்தர்ப்பங்கள் தாராளமாக மலிந்து கிடக்கின்றன.

யுத்தம் காரணமாகக் கணவனை இழந்த மனைவியோ, மனைவியை இழந்த கணவனோ, தமது இறுதிக் காலத் தனிமையைப் போக்குவதற்காகவும் முதல் வாழ்க்கைத் துணையின் பிள்ளைகளைப் பொறுப்பாகவும் பாதுகாப்பாகவும் வளர்க்கும் பொருட்டும் மறுமணம் புரிகின்றனர். எனினும், மறுமணத்தின் போது வாழ்க்கைத் துணையாக வருபவர், முதல் வாழ்க்கைத் துணையின் பிள்ளைகளை ‘மாற்றான் பிள்ளைகள்’ என நோக்கி, அவர்களுக்கே வினையாக மாறும் போது அவ்விடத்தில் அப்பிள்ளைகளுக்கான பல உரிமைகள் மறுக்கப்படுகின்றன. இதுவே இந்தச் சிறுமி விடயத்திலும் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.  

‘ஓட மாட்டேன்’ எனக் கூறிய சிறுமியிடம் ‘எவ்வளவு கத்துக் கத்தினேன்’ எனக் கேட்டு அப்பெண், பக்கத்தில் நின்றிருந்த சிறுவன் வைத்திருந்த கூறிய கத்தியொன்றைப் பறித்து, ‘பரதேசி’ எனச் சிறுமியை விளித்து முதுகில் பலமாகத் தாக்குகின்றார். அவ்வேளையில் சிறுமி எழுப்பிய அபயக் குரலை வீடியோவில் கேட்டுக் கண்கள் கலங்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அந்த அபயக் குரலையும் பொருட்படுத்தாத அப்பெண், சிறுமியின் தலைமுடியைப் பிடித்து இழுத்து ஷம்போவை ஊற்றி முகத்தில் தேய்ப்பதுடன், முதுகு மற்றும் கன்னத்தில் பலமாக அறைகின்றார். அத்துடன், அந்த ஒளிப்பதிவும் முற்றுப்பெறுகின்றது.  

இது குறித்த வழக்கு விசாரணையின் போது, சிறுமி தனது பிள்ளையெனவும் முன்பு எப்போதும் பிள்ளையை அடித்ததில்லையெனவும் பெண் தெரிவித்திருந்தார். இது தொடர்பாகத் தந்தையிடம் நீதவான் வினவியபோது, தனக்கு 3 மனைவிகள் எனவும் இதில் ஒருவர் இறந்து விட்டதாகவும் மற்றையவர் தம்மைவிட்டுப் பிரிந்து வாழ்வதாகவும் தற்போதுள்ளவர் மூன்றாவது மனைவியெனவும் தெரிவித்தார்.

இதேவேளை, பாதிக்கப்பட்ட சிறுமி சார்பாக 6 சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்ததுடன், அவர்கள் குறித்த தாய், அச்சிறுமியின் தாயில்லையெனவும் முதற்தாரத்தின் பிள்ளையே அச்சிறுமி எனவும் வாதிட்டனர்.  

வழக்கை விசாரித்த யாழ். நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் க. அருமைநாயகம், சிறுமியைத் தாக்கிய பெண்ணை, விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். அத்துடன், குறித்த சிறுமியின் தந்தையையும் விசாரணை செய்து மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.  

மேலும், வீடியோவின் உண்மைத் தன்மை மற்றும் சிறுமியைத் தாக்குவதற்காகப் பயன்படுத்தப்பட்ட கத்தி தொடர்பான உண்மைத் தன்மை ஆகியவற்றை உறுதிப்படுத்த அவற்றை மொரட்டுவைப் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைக்குமாறும் நீதவான், பொலிஸாருக்கு உத்தரவிட்டார். 

வீடியோ வெளியாகி சில மணித்தியாலங்களில் அது குறித்து யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதையடுத்து, அச்சிறுமியைப் பாதுகாக்குமாறு உரிய அதிகாரிகளுக்கும் பொலிஸாருக்கும், நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். எனினும், பாதிப்புக்கு உள்ளாகியிருந்த சிறுமி இருக்கும் இடம் நீர்வேலி எனும் தகவலைத் தவிர துல்லியமான தகவல்கள் எதுவும் ஆரம்பத்தில் கண்டறியப்படவில்லை. இதனையடுத்து, பொலிஸாரும் சிறுவர் நன்னடத்தைப் பிரிவு அதிகாரிகளும் இணைந்து, நீர்வேலி கிராம சேவகர் பிரதேசம் முழுவதிலும் தேடுதல் நடத்தி, வீடியோவில் காணப்பட்ட சிறுமி உட்பட சம்பந்தப்பட்ட நபர்களை அடையாளம் கண்டுள்ளனர்.

சமூக வலைத்தளங்களின் பொறுப்பான செயற்பாடும் நீதிமன்றத்தின் துரித செயற்பாடும் ஒரு சிறுமியைக் கொடுமையிலிருந்து பாதுகாக்கப் பேருதவியாக அமைந்திருந்தது.

இதேவேளை, குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பெண்ணைத் திருமண பந்தத்தில் இருந்து ஒதுக்கி விடுவதோடு, எந்தக் குழந்தையையும் வளர்ப்பதற்கோ அல்லது பராமரிப்பதற்கோ அனுமதிக்கக் கூடாது என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.  

திருமண பந்தத்தில் இணைந்து வாழும் கணவன் - மனைவிக்கு இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டு, அவர்கள் பிரிந்து வாழும் சந்தர்ப்பங்களில் அவர்களின் பிள்ளைகள் சுதந்திரமாக வாழும் உரிமை மறுக்கப்படுகின்றது. பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள குடும்பங்களின் தாய் - தந்தை வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்புத் தேடிச் செல்கின்றனர். இதனால் இவர்களின் பிள்ளைகளின் பாதுகாப்பு உரிமை, மூச்சற்றுப் போகின்றது.

இவ்வாறு நம் நாட்டைப் பொறுத்தவரையில் இன்றுவரை கணிசமானளவு சிறார்கள் தமக்கான அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் உயிர்வாழ்கின்றனர்.  

‘வாழ்வதற்குத் தகுதியற்ற உயிர்கள் நீடிப்பதில் பலனில்லை’ எனக் கூறிய சர்வாதிகாரியான ஹிட்லரை, ஒரு கொடூரனாக வரலாறுகள் காட்டிய போதும் அவன், குழந்தைகள் மீது மிகுந்த பிரியம் கொண்டவன் எனக் கூறப்படுகின்றது. எனினும், சிறுவர்கள் தொடர்பில் அன்றாடம் வெளிவரும் செய்திகள் நெஞ்சத்தைப் பதறச் செய்கின்றன. மனிதநேயம் துளி கூட அற்றுப்போன அரக்கர் சமூகத்தில்தானா நாம் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம் என எண்ணத் தோன்றுகின்றது.

பாதுகாக்கப்பட வேண்டியவர்களாலேயே சிறுவர்கள் வன்புணர்வுக்கும் துஷ்பிரயோகத்துக்கும் உள்ளாக்கப்படுதல், அச்சுறுத்தல், அடித்தல், உதைத்தல், கொலை முயற்சி, கொலை செய்தல், உரிமைகள் அனைத்தும் மறுக்கப்படல், பெற்றோரே விஷம் வைத்தல் மற்றும் ரயிலின் முன் தள்ளிவிடுதல் எனச் சிறுவர்கள் குறித்தான கொடூரச் செய்திகள் ஏராளம் ஏராளம். நம் கண்களுக்கு அப்பால் சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள், வன்முறைகள் தினந்தோறும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இந்த அவலங்கள் களையப்பட வேண்டும். தனி மனிதனாக இணைந்து சமூகமாகிய நாம் இவற்றை இல்லாதொழிப்பதற்கான வழிவகைகளைக் கையாள வேண்டும்.

பாடசாலை செல்லாமையினாலேயே குறித்த சிறுமியைத் தாக்கியதாக சிறுமியைத் தாக்கிய பெண், நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். ஆக, கண்டிப்பு எனும் பெயரிலேயே இந்தக் கொடூரத்தை இவர் புரிந்துள்ளார். சிறுவர்களைக் கண்டித்தல் என்பது வேறு. தாக்குதல் என்பது வேறு. அன்பான சொற்களால் கூடச் சிறுவர்களைக் கண்டிக்கலாம். ஆனால், சிறுவர்கள் மீதான தாக்குதல்களை ஏற்றுக்கொள்ள முடியாது.  

இந்த வீடியோவை பேஸ்புக்கில் பதிவேற்றியிருந்த நபர், ‘இந்தச் சிறுமி தாக்கப்படும் கடைசி நாள் இன்றாகத்தான் இருக்க வேண்டும் எனக் கருதியே அங்கு நடப்பவை அனைத்தையும் ஒளிப்பதிவு செய்தேன்’ எனக் குறிப்பிட்டிருந்தார். சிறுமி கடைசியாகத் தாக்கப்பட்ட இந்த ஒளிப்பதிவே இன்று அச்சிறுமிக்கு விடுதலையைப் பெற்றுக்கொடுத்துள்ளது.

இச்சிறுமியைப் போன்றே இன்னும் இன்னும் எத்தனையே இளம் சமூகத்தினர் எம்மால் பாதுகாக்கப்படுவதற்காகக் காத்துக்கிடக்கின்றனர். 

எனவே, சமூக வலைத்தளங்களை தினம் தினம் சித்திரவதைகளை அனுபவித்துக்கொண்டிருக்கும் சிறார்களைப் பாதுகாப்பதற்கும் அவர்களின் வாழ்வில் ஒளியூட்டுவதற்கும் பயன்படுத்துவது வரவேற்கத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .