2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘இனவாதத்தை கக்குவோரின் பின்னால் அலைமோத வேண்டாம்’

Princiya Dixci   / 2016 செப்டெம்பர் 30 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியல் இருப்புக்காக இனவாதத்தையும் விஷங்களையும் கக்கிவரும் அரசியல்வாதிகளுக்குப் பின்னால் அலைந்து திரிந்து, எதிர்காலத்தையும் நலன்களையும் வீணடிக்க வேண்டாம் என்று, மக்கள் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில், வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்தார். 

அமைச்சின் ஒதுக்கீட்டில், வடபிராந்திய தேசிய இளைஞர் சேவைகள் மன்றப் பணிப்பாளர் முனவ்வரின் தலைமையில், மன்னார் மாவட்ட இளைஞர் கூட்டுறவுச் சங்கத்தினால் (நிஸ்கோ), இளைஞர்களுக்கு சுயதொழில் திட்டங்களுக்கான காசோலை வழங்கும் நிகழ்வில், பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.  

மன்னார் நகரமண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை (29) இடம்பெற்ற இந்நிகழ்வில், அவர் தொடர்ந்து கூறியதாவது,  

“அபிவிருத்திகளையும், நலனோம்புத் திட்டங்களையும் நாம் அரசியலுக்காக மேற்கொள்ளவில்லை. மக்களிடமிருந்து வாக்குக் கிடைக்குமென்ற நப்பாசையிலும் செய்யவில்லை. மனிதாபிமான அடிப்படையில், இந்த மண்ணில் பிறந்தவன் என்ற உரிமையிலேயே மக்களோடு மக்களாக நின்று, அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் உதவிகளை மேற்கொண்டிருக்கின்றேன்.  

மன்னார் மாவட்டத்துக்குப் புதிதாக இறக்குமதி செய்யப்பட்ட, அரசியலில் கத்துக்குட்டியான, வியாபாரத்தை நோக்கமாகக் கொண்டு, இங்கு வந்து குடியேறியிருக்கும் ஓர் அரசியல்வாதி, என்னையும் எனது செயற்பாடுகளையும், எனது முயற்சிகளையும் எப்போதும் கறுப்புக் கண்ணாடி கொண்டு பார்த்து, மிகமோசமாக விமர்சித்து வருகின்றார்.  

இவர், பொய்யை மீண்டும் மீண்டும் கூறி, அதை உண்மைப்படுத்தும் ஒரு உபாயத்தைக் கைக்கொண்டு வருகின்றார். இவரின் தந்திரோபாய முயற்சிகளுக்கு நீங்கள் இரையாக மாட்டீர்கள் என, நான் பரிபூரணமாக நம்புகின்றேன்.  

இவ்வாறானவர்களைப் போன்று தென்னிலங்கையிலும், சிங்கள இனவாதிகளும், முஸ்லிம் கட்சியைச் சார்ந்த காழ்ப்புணர்வு கொண்டோரும் என்னைத் தொடர்ச்சியாகக் குறிவைத்து தாக்குகின்றனர். ஆக, மும்முனைகளிலும் என்மீது கல்லெறிகின்றார்கள்.  

மன்னார் நகரை அழகுபடுத்த வேண்டும் என்றும், அதனை நவீனமயப்படுத்த வேண்டும் என்றும், நான் மேற்கொண்ட முயற்சிகளுக்கு, சில அரசியல் குரோத சக்திகள் தடையாக இருந்தன என்பதை, நான் மிகவும் வேதனையுடன் கூற விரும்புகின்றேன் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .