2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

சிறுவர் பராமரிப்பு நிலையங்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

Kogilavani   / 2016 செப்டெம்பர் 30 , மு.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

மலையகத்தில் இதுவரை இருந்த சிறுவர் பராமரிப்பு நிலையங்களுக்கு பதிலாக, தலா 40 பேர்ச் காணியில் 70 இலட்சம் ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் கூடிய சிறுவர் அபிவிருத்தி நிலையங்களை அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் கூறினார்.

உலக வங்கியின் நிதியில், மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் ஊடாக இந்நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.

லிந்துலை லெமிலியர் தோட்டத்தில்  அமைக்கப்படவுள்ள சிறுவர் அபிவிருத்தி நிலையத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில், பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'மலையகத்தில் ஆரம்ப காலங்களில் பிள்ளைகளை பராமரிக்க பிள்ளை மடுவங்கள் இருந்தன. பின்னர் அவை பிள்ளைக் காம்பிராக்கள் என்று அழைக்கப்பட்டன. தொடர்ந்து சிறுவர் காப்பகங்கள், சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் என பல பெயர்களில் அழைக்கப்பட்டன. இன்று சகல நவீன வசதிகளுடன் கூடிய 'சிறுவர் அபிவிருத்தி நிலையங்கள்' அமைக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு நிலையமும் தலா 70 இலட்சம் ரூபாய் செலவில் 40 பேர்ச் காணியில் அமைய உள்ளன.

இவ்வாறு அமைக்கப்படும் புதிய சிறுவர் அபிவிருத்தி நிலையங்களில் பிள்ளைகள் உறங்குவதற்கும், விளையாடுவதற்கும், உணவு உண்பதற்கும், தாய்மார் அமர்ந்து பாலூட்டவும், கலந்துரையாடவும் தனித்தனியாக அறைகள் அமையவுள்ளன.

அத்தோடு இந்த நிலையத்தைச் சுற்றி, பாதுகாப்பு வெளி அமைக்கப்பட்டு சிறுவர் பூங்காவும் அமைக்கப்படவுள்ளது. இவை தவிர இந்த நிலையத்தில் பாலர் பாடசாலையும், நவீன குடிநீர் வசதி மற்றும் மலசல கூடங்களும் ஏற்படுத்தப்படவுள்ளன.

எனவே, சிறுவர்களாக இருக்கும்போதே முன்பள்ளிக் கல்வியையும் பெற்றுக் கொள்ள வசதியும் ஏற்படுத்தப்படும்' என்றார்.

'முன்னர் எந்தவிதமான பயிற்சியும், கல்வியறிவும் இல்லாத பெண்களே, சிறுவர்களை பராமரித்து வந்தார்கள். ஆனால், இன்று நிலைமை அவ்வாறல்ல. அனைத்து நிலையங்களிலும் கல்வி கற்ற, பயிற்சி பெற்ற யுவதிகள் ட்ரஸ்ட் நிறுவனத்தின் மூலம் நியமிக்கப்படுவதுடன் அவர்கள் பிள்ளைகளை உரிய முறையில் பராமரித்து வருகின்றனர்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .