2026 ஜனவரி 17, சனிக்கிழமை

ஜேர்மனியில் வைத்து சிரியர்களால் பிடிக்கப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் சந்தேகநபர்

Shanmugan Murugavel   / 2016 ஒக்டோபர் 11 , பி.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மனியில் தாக்குதல்களை நடத்துவதற்காகத் திட்டமிடப்பட்டிருந்த சிரியாவைச் சேர்ந்த நபரொருவர், நேற்றுதத் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அவரைக் கைது செய்வதற்கு, சக சிரியர்களே உதவியதாக அறிவிக்கப்படுகிறது.

ஜாபெர் அல்பகர் என்ற 22 வயதான குறித்த நபர், அவரது வீட்டில் கடந்த சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் 1.5 கிலோகிராம் வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்ட போதிலும், பொலிஸாரிடமிருந்து தப்பியிருந்தார்.

கண்டெடுக்கப்பட்ட வெடிபொருட்கள், வெடிக்க வைப்பதற்குத் தயாரான நிலையில் காணப்பட்டதாகக் குறிப்பிடும் பொலிஸார், தற்கொலை அங்கியொன்றைத் தயாரிக்க, அவர் முயன்றிருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில், இரண்டு நாட்களாக அவரைத் தேடிய பொலிஸார், கிழக்கு நகரமான லெய்ப்ஸிக்கில் வைத்து, அவரைக் கைது செய்தனர். அவ்வாறு அவர் கைது செய்யப்படுவதற்கு, சிரியாவைச் சேர்ந்த மூவரே உதவியதாகத் தெரிவித்தனர்.

அல்பகரின் புகைப்படத்தை அலைபேசியில் கொண்டு, பொலிஸ் நிலையத்துக்கு வந்த ஒருவர், தனது வீட்டில் தன்னோடு இருப்பவர்கள், அந்தப் புகைப்படத்தில் இருப்பவரை மடக்கிப் பிடித்துள்ளதாகவும், அவரது வீட்டுக்கு, பொலிஸார் வர வேண்டுமெனவும் கோரியுள்ளார்.

நகரத்தின் ரயில் நிலையத்தில் அம்மூவரையும் சந்தித்துள்ள அல்பகர், அவர்களோடு இணைந்து, வீட்டில் இருப்பதற்கு உதவி கோரியுள்ளார். அவரை வீட்டுக்கு அழைத்துச் சென்ற அம்மூவரும், அதன் பின்னரே, பொலிஸாரால் அவர் தேவைப்படும் விடயத்தை அறிந்துள்ளனர்.

"அவர் எங்களுக்கு, இலஞ்சம் தர முயன்றார். ஆனால், எவ்வளவு பணத்தை அவர் தந்தாலும், அவரை விடப் போவதில்லையென நாம் தெரிவித்தோம். அதன் பின்னர், மின்சாரக் கம்பியொன்றை எடுத்து, அவரைக் கட்டிவைத்து விட்டு, பொலிஸார் வரும்வரை காத்திருந்தோம்" என்று தெரிவித்த அம்மூவரில் ஒருவரான, மொஹமட் ஏ என மாத்திரம் அடையாளங்காணப்பட்ட நபர், "அவருடன் நான் மிகவும் கோபமாக இருந்தேன். இதைப் போன்றதொன்றை, என்னால் அனுமதிக்க முடியவில்லை. குறிப்பாக, எங்களுக்கான கதவுகளைத் திறந்த ஜேர்மனியில் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை" எனவும் குறிப்பிட்டார்.

இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணைகளின் படி, ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவுடன், அல்பகருக்குத் தொடர்பிருப்பதாகக் கருதப்படுகிறது. ஆனால், அவரது இலக்கு என்ன என்பது தொடர்பாக, உறுதியான எவ்விடயத்தையும் காண முடியவில்லையென, பொலிஸார் மேலும் குறிப்பிடுகின்றனர்.

ஐ.எஸ்.ஐ.எஸ் போன்ற இஸ்லாமிய ஆயுதக்குழுக்களுக்கு, முஸ்லிம்களிடமிருந்து போதிய எதிர்ப்பு வெளிப்படுவதில்லையென்ற குற்றச்சாட்டு, பொதுவாகக் காணப்படுவதோடு, நேற்று இடம்பெற்ற ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலிலும், அதேபோன்றதொரு கருத்து, டொனால்ட் ட்ரம்ப்பால் முன்வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சக முஸ்லிம்களாலேயே, அல்பகர் மடக்கிப் பிடிக்கப்பட்டு, பொலிஸில் ஒப்படைக்கப்பட்டமை, கவனிக்கத்தக்க ஒரு விடயமாக அமைந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X