2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இந்தியா, நியூசிலாந்து ஒ.நா.ச.போ தொடர் முன்னோட்டம்

Shanmugan Murugavel   / 2016 ஒக்டோபர் 15 , பி.ப. 02:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ச.விமல்

இந்தியா, நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கிடையிலான ஒரு நாள் சர்வதேசப் போட்டித் தொடர், டெஸ்ட் தொடருக்கு பின்னதாக ஆரம்பிக்கவுள்ளது. டெஸ்ட் தொடர், இந்திய அணிக்கு வெற்றியினை கொடுத்த போதும் இலகுவான வெற்றி எனக் கூறிவிட முடியாது. இந்திய அணி போராடியே வெற்றியைப் பெற்றுக்கொண்டது.

ஆனால், ஒரு நாள் சர்வதேசப் போட்டித் தொடர் வித்தியாசமாக அமையும். ஆடுகள தன்மைகள், இங்கே முழுமை ஆதிக்கத்தை செலுத்தாது. எனவே நியூசிலாந்து அணியும் ஒரு நாள் சர்வதேசப் போட்டித் தொடரை விட்டுக் கொடுக்காது. பலமான பந்து வீச்சு நிச்சயம் இந்திய அணிக்கு சவாலாக அமையும்.  இரு அணிகளும் ஒரு நாள் சர்வதேசப்போட்டிகளில் சமபல அணிகள் என வர்ணிக்க முடியும். உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி அணி நியூசிலாந்து. அரையிறுதிப்போட்டி அணி இந்தியா. ஆக, அடுத்தடுத்த அணிகள் எனக்கூற முடியும். 

தரப்படுத்தல்களில் மூன்றாமிடத்தில்  நியூசிலாந்து அணி 113 புள்ளிகளுடனும், இந்திய அணி 110 புள்ளிகளுடன் நான்காமிடத்திலும் உள்ளன. எனவே இங்கேயும் அடுத்தடுத்த அணிகள். எனவே மூன்றாமிடத்தை உறுதி செய்யும் தொடராக இது அமையவுள்ள போதும் இரண்டாமிட வாய்ப்புகள் நியூசிலாந்து  அணிக்கு உள்ளது. நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றால், அவர்கள், தென்னாபிரிக்கா அணியை பின்தள்ளி இரண்டாமிடத்தைக் கைப்பற்ற முடியும்.  இந்தியா அணி, நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே நியூசிலாந்து அணியை முந்த முடியும். இல்லாவிட்டால் நியூசிலாந்து அணி தனது மூன்றாமிடத்தை தொடர முடியும்.

2016ஆம் ஆண்டு இந்திய அணிக்கு ஒரு நாள் சர்வதேசப்போட்டிகள் குறைவான ஒரு ஆண்டு. அவுஸ்திரேலியா அணியுடனான தொடரில் 1-4 என்ற தொடர் தோல்வி. சிம்பாப்வே தொடரில் 3-0 என்ற வெற்றி. ஆக போட்டிகள் குறைவு. ஆனால் நல்ல ஆண்டு எனக்கூற முடியாது. கடந்த வருடத்தில், 23 போட்டிகளில், 13 போட்டிகளில் வெற்றி பெற்று 9 போட்டிகளில் தோல்வியைசச்‌ சந்தித்துள்ளது. ஒரு போட்டி கை விடப்பட்டது. இந்த போட்டிகளில், தென்னாபிரிக்கா தொடர் மட்டுமே இந்தியாவில் நடைபெற்றது. இதிலும் இந்தியா 2-3 என தோல்வியை சந்தித்தது.

எனவே இந்திய அணிக்கு, இந்தத் தொடர் தங்கள், ஒரு நாள் சர்வதேசப்போட்டித் தொடரின் ஆதிக்கத்தை மீண்டும் பெற்றுக்கொள்ள ஏதுவாக இருக்குமென நம்பலாம். அணியின் தலைவர் தோணி, இப்போது தலைமைத்துவதிலிருந்து விலகலாம் என்ற பேச்சுக்கள் எழ இந்த முடிவுகளும் காரணம். இந்தத் தொடரை அவரும் குறி வைப்பார் இந்த விமர்சனங்களுக்கு பதிலடி வழங்க.

இந்தியா அணி, நியூசிலாந்து   அணிக்கெதிராக இதுவரை 93 போட்டிகளில் மோதியுள்ளது. இவற்றில் 46 வெற்றிகள், 41 தோல்விகள். ஒரு போட்டி சமநிலையில் நிறைவடைந்தது. ஐந்து போட்டிகள் கைவிடப்பட்டன. நியூசிலாந்து அணி 1987ஆம் ஆண்டு உலககிண்ண தொடருக்காகவே முதலில் இந்தியாவுக்கு ஒரு நாள் சர்வதேசப்போட்டிகளில் விளையாடச் சென்றது. பின்னர் 1988ஆம் ஆண்டு, முதலில் இந்தியாவுக்கு 4 போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாட சென்றது. நான்கு போட்டிகளையும் வென்றது இந்திய அணி.

2010 ஆண்டுக்கு பின்னர் இந்தியாவுக்கு செல்கின்றது நியூசிலாந்து அணி. 2011ஆம் ஆண்டு உலககிண்ண தொடருக்கு பின்னர் சென்றிருந்தது. அப்போதிருந்த அணிகளிலும் பார்க்க பலமான நிலையில் தற்போதுள்ள நியூசிலாந்து அணியுள்ளது. எனவே நியூசிலாந்து அணியின் கடந்த காலத்தை வைத்து இந்தத் தொடரை கணிப்பிட முடியாது. டெஸ்ட் தொடரில் அவர்கள் தோல்வியை சந்தித்தாலும் அவர்கள் காட்டி வரும் திறமை வெளிப்பாடுகள் ஒரு நாள் சர்வதேசப் போட்டித் தொடரில் மாற்றத்தை ஏற்படுத்தும் எனக் கூறக்கூடியதாக உள்ளது.

நியூசிலாந்து அணி, இந்த வருடம் 7 போட்டிகளில், நியூசிலாந்தில் மட்டுமே விளையாடி 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அவுஸ்திரேலிய அணியிடம் ஒரு தோல்வி. அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுடன் தலா இரு வெற்றிகள். இலங்கை அணியுடன் ஒரு வெற்றி. ஒரு போட்டி கைவிடப்பட்டது. ஆகவே வெளிநாட்டுத் தொடர்கள் இவர்களுக்கு இல்லை. இந்த வருடத்தின் முதல் சோதனை என்றும் கூற முடியும்.

கடந்த வருடத்தில் 32 போட்டிகளில் நியூசிலாந்து அணி விளையாடியது. 21 போட்டிகள், இவற்றில் வெற்றி. 10 போட்டிகளில் தோல்வி. ஒரு போட்டி கைவிடப்பட்டது. ஆகச் சிறந்த ஒரு வருடம். ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது நியூசிலாந்து அணி மிகப்பலமான அணி என வர்ணிக்க முடியும். அவர்களின் கிரிக்கெட் வரலாற்றில் கடந்த இரண்டு வருடங்களிலேயே மிகுந்த உச்ச நிலையில் உள்ளனர் என வர்ணிக்கப்படுகின்றது. எனவே இவர்கள் இந்தியாவில் வைத்து ஏதாவது ஒரு மாற்றத்தை செய்வார்கள் என நம்பலாம். ஆனால் இவர்களது முக்கிய வீரர்கள் சிலரின் உபாதை டெஸ்ட் தொடரில் இவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. ஒரு நாள் சர்வதேசப்போட்டிகளுக்கு சில வீரர்கள் மீண்டு வந்துள்ளமை இவர்களுக்கு பலமாக அமையும் என நம்பலாம்.

இந்தியா அணி தனது முக்கியமூன்று  பந்து வீச்சாளர்களுக்கு ஓய்வை வழங்கி விளையாடுகிறது. அஷ்வின், ஜடேஜா, ஷமி  ஆகியோருக்கு முதல் மூன்று  போட்டிகளிலும் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.  முதல் மூன்று போட்டிகளிலும் இந்தியா அணி வெற்றி பெறுமானால் மூவரும் தொடர் முழுவதும் ஓய்வை பெறுவார்கள். இந்த தொடரின் பின்னர் 5 டெஸ்ட் போட்டிகள் அடங்கிய இங்கிலாந்து தொடர் ஆரம்பிக்கவுள்ளது.எனவேதான் இந்த ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

இந்திய அணிக்குள் மீண்டும் சுரேஷ் ரெய்னா உள்வாங்கப்பட்டுள்ளார். துடுப்பாட்ட வரிசையில் ஷீகர் தவான் அணியில் இல்லாமையினால், அஜிங்கையா ரஹானே ஆரம்ப வீரராக களமிறங்க வாய்ப்புகள் உள்ளன. மத்திய வரிசையில், மனிஷ் பாண்டே இடத்தைப் பெறுவார் என நம்பலாம். அவுஸ்திரேலியாவில் வைத்து அடித்த சதம் அவருக்கான வாய்ப்புகளை அதிகரிக்கச் செய்துள்ளது. பந்து வீச்சுப் பக்கமாக இந்திய அணிக்கு சிக்கல்கள் உள்ளன. பந்து வீச்சு வரிசை பலமானது என கூற முடியாத நிலை உள்ளது.

ஜஸ்பிரிட் பும்ரா, உமேஷ் யாதவ் ஆகியோர் முழு நேர வேகப்பந்து வீச்சாளர்கள். ஜடேஜா இல்லாத நிலையில் ஹர்டிக் பாண்ட்யா, சகலதுறை வீரராக அணியில் நிச்சயம் இடம்பிடிப்பார். சுழற்பந்து வீச்சாளர்களில் அமித் மிஷ்ரா, அக்ஸர் பட்டேல் ஆகியோர் விளையாடுவாரக்ள். சுரேஷ் ரெய்னா சகலதுறை வீராகவே விளையாடுவார். சில புதிய வீரர்கள் அணிக்குள் உள் வாங்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான விளையாடும் வாய்ப்புகள் குறைவு எனக்கூற முடியும்.

இந்தத் தொடர் மஹேந்திர சிங் டோணி, சுரேஷ் ரெய்னா ஆகியோருக்கு முக்கியமானதாக அமையவுள்ளது. தோனிக்கு அண்மைக்கால தொடர்கள் துடுப்பாட்டத்தில் சிறப்பாக அமையவில்லை. ஓட்டங்களை குவிக்க வேண்டும். மீண்டும் சிறப்பாக முடித்து வைப்பவர் என்ற பெயரை பெற வேண்டும். இவர் மீது அண்மைக்காலமாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. கோலி டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக, தலைவராக செயற்பட்டு வருகின்றமை இவரின் தலைமைத்துவத்துக்கு அழுத்தங்களை கொடுக்க ஆரம்பித்துள்ளது. இந்தத் தொடரில் இவற்றை இவர் உடைத்தெறிவார் என நம்பலாம்.

சுரேஷ் ரெய்னா மீண்டும் வாய்ப்பை பெற்றுள்ளார். சரியாக மீண்டும் ஒரு வருடத்தின் பின்னர் ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் களமிறங்கவுள்ளார். இவர் இந்தத் தொடரில் ஓட்டங்களை பெறத் தவறும் பட்சத்தில், இவருக்கு அணியில் இடம் கேள்விக்குறியாக மாறும். ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில், ரஹானேக்கு இந்தத் தொடர் முக்கியமானதாக அமையவுள்ளது. இவருக்கு அணியில் தொடர்ச்சியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. டெஸ்ட் போட்டிகளில் அபார போர்மில் உள்ள இவர் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக, ஓட்டங்களை குவித்தால் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக நிரந்தர இடம் பிடிப்பார். 

அணி விபரம்

இந்திய அணி

மஹேந்திர சிங் டோகணி  (தலைவர் ), ரோஹித் ஷர்மா, அஜிங்கையா ரஹானே, விராட் கோலி, மனிஷ்  பாண்டே, சுரேஷ் ரெய்னா, ஹர்டிக்  பாண்ட்யா , அக்ஸர் பட்டேல் , ஜெயந்த் யாதவ், அமித் மிஷ்ரா, ஜஸ்பிரிட் பும்ரா, தவால் குல்கர்னி, உமேஷ் யாதவ், மந்தீப் சிங், கேதார் ஜாதவ்

நியூசிலாந்து அணி

கேன் வில்லியம்ஸன் (தலைவர்), கொரே அன்டர்சன், ட்ரெண்ட் போல்ட், டவ் பிரேஸ்வெல், அன்டன் டேவிச், மார்ட்டின் கப்தில், மற் ஹென்றி, டொம்  லதாம், ஜேம்ஸ் நீஷம், லூக் ரொங்கி, மிட்செல் சான்ட்னர், இஷ் சோதி, டிம் சௌதி, றொஸ் டெய்லர், பிரட்லி வட்லிங்

போட்டி அட்டவணை

ஒக்டோபர் 16 - தரம்சாலா - பிற்பகல் 1.30

ஒக்டோபர் 20 - டெல்லி  - பிற்பகல் 1.30

ஒக்டோபர் 23 - மொஹாலி  - பிற்பகல் 1.30

ஒக்டோபர் 26 - ராஞ்சி - பிற்பகல் 1.30

ஒக்டோபர் 29 - விசாகப்பட்டினம்  - பிற்பகல் 1.30


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .