2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘கூட்டமைப்பு இடமளியாது’

Niroshini   / 2016 ஒக்டோபர் 17 , மு.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

“பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பான வரைபைக் காணாமலேயே, அதன் தன்மை தொடர்பாகக் கேள்விப்பட்டவுடன், அறிக்கை விட்டிருந்தேன். அதன் பின்னரே, அந்த வரைபை, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் அதனை இரு மேற்பார்வைக் குழுக்களுக்கு வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. எவ்வாறாயினும், அதனை நிறைவேற்ற நாங்கள் விடமாட்டோம்.

நல்லாட்சி அரசாங்கத்துக்கு எதிராகச் செயற்பட்டு, மஹிந்த ராஜபக்ஷவை  அரியாசனத்தில் ஏற்றும் வேலையைச் செய்யமாட்டோம்” என, யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

வவுனியாவில் இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் மக்கள் சந்திப்பில், பல்வேறான கேள்விகள், மக்கள் மத்தியில் இருந்து எழுப்பப்பட்டன. இவற்றுக்கு, நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன் பதிலளித்தார்.

அவரது பதிலில் தெரிவிக்கப்பட்டதாவது,  

“அரசியலமைப்புப் பேரவையில் நாமும் உள்ளோம். வழிகாட்டல் குழுவில் நாங்களும் இருக்கின்றோம். எங்களுடைய சம்பந்தம் இல்லாமல், ஒரு தீர்வு திட்டம் முன்வைக்க முடியாது. காணாமல் போனோர் தொடர்பான முதலாவது வரைவு வந்தபோது, நாங்கள் அதனை குப்பைத்தொட்டியில் போடுங்கள் என்றே சொன்னோம். அது சரிவராது என்று கூறினோம். அதனை முற்றாக மாற்றி அமைத்தோம்.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பான வரைவைக் காணாமலேயே, அதன் தன்மை தொடர்பாக கேள்விப்பட்டவுடன், அறிக்கை விட்டிருந்தேன். அதன் பின்னரே, அந்த வரைவை, நாடாளுமன்றததில் சமர்ப்பிப்பதற்கும் அதனை மேற்பார்வை குழுக்கள் இரண்டுக்கும் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எவ்வாறாயினும், அதனை நிறைவேற்ற நாங்கள் விடமாட்டோம். மக்களுக்கு எங்கள் மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். ஆனால், சில சில நடவடிக்கைகளை வைத்து, நம்பிக்கை வரவேண்டும். சில சில அடிப்படை விடயங்களில், நாங்கள் தகர்ந்து போகமாட்டோம். முதலாவது வரைவை அப்படிச் செய்துவிட்டார்கள் என்பதற்காக, அரசாங்கத்துக்கு எதிராகச் செயற்பட்டு மஹிந்த ராஜபக்ஷவை அரியாசனத்தில் ஏற்றும் வேலையைச் செய்யமாட்டோம்.

அரசியல் கைதிகள் தொடர்பாக, கடந்த நவம்பர் 7ஆம் திகதிக்கு முன்பாக முடிவு கொடுக்கப்படும் என்று வாக்குறுதி கொடுக்கப்பட்டு, அது அரசியல் கைதிகளுக்கும் சொல்லப்பட்டு, உண்ணாவிரதம் கைவிடப்பட்டமை, எல்லோருக்கும் தெரியும். அரசாங்கம் கொடுத்த வாக்குறுதியின் படி நடக்கவில்லை.

இது தொடர்பாக, அரசாங்கம் எம்மை ஏமாற்றி விட்டதாக, நாடாளுமன்றத்தில் பேசியிருந்தேன். அப்போது பலர் கேட்டார்கள், ஏன் அப்படிப் பேசுகின்றீர்கள், என்று. ஆனால் நான், உண்மையைச’ சொல்கின்றேன் எனத் தெரிவித்தேன்.

217 பேராக இருந்தவர்கள், இன்றைக்கு 96 பேராகக் குறைக்கப்பட்டுள்ளனர். அரசியல் கைதிகளுடன் கதைத்து, அவர்களின் தீர்மானத்தின் அடிப்படையில் தான், புனர்வாழ்வு கோரப்பட்டது. தாம் குற்றத்தை ஒப்புக்கொண்டு, புனர்வாழ்வுக்குச் செல்வதற்கு தயார் என, 99 பேர் கையொப்பமிட்டு கொடுத்துள்ளதாகத் தெரிவித்தனர். அப்போது நான், இது சட்டவிரோதமான செயற்பாடு என்று கூறியது மட்டுமல்லாது, அதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகளையும் தாக்கல் செய்துள்ளேன். தற்போது, பலருடன் கலந்துரையாடி, மீண்டும் புனர்வாழ்வுக்கு செல்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளோம்” என்று, சுமந்திரன் எம்.பி, மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .