2024 மே 03, வெள்ளிக்கிழமை

ஊழலாகிவிட்ட ஊழல் ஒழிப்புப் போர்

Thipaan   / 2016 ஒக்டோபர் 25 , பி.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

குற்ற விசாரணை நிறுவனங்களான இரகசியப் பொலிஸ், நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் இலஞ்ச ஆணைக்குழு ஆகியவை அரசியல் மயமாக்கப்பட்டுள்ளதாகக் கூறி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த 12 ஆம் திகதி இலங்கை மன்றக் கல்லூரியில் ஆற்றிய உரையினால் நாட்டில் பாரியதோர் சர்ச்சை உருவாகியிருக்கிறது. அத்தோடு அரசாங்கத்தின் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளும் பெரும் நெருக்கடியை எதிர்நோக்கியிருப்பதோடு அதன் உண்மையான நிலைமையும் நாட்டுக்கு அம்பலமாகி விட்டது. 

தமது அரசியல் எதிரிகளான முன்னாள் ஜனாதிபதியும் அவரது ஆதரவாளர்களும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கும் வகையிலும் தம்மைப் பதவியில் அமர்த்தப் பாடுபட்ட ஐக்கிய தேசிய கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியும் சிவில் சமூக அமைப்புக்களும் கொதித்தெழும் வகையிலும் தாமே நாட்டு மக்களுக்கு உத்தரவாதமளித்து ஆரம்பித்த ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகள் மேலும் சீர்குலையும் வகையிலும் ஜனாதிபதி ஏன் அந்த உரையை ஆற்றினார் என்ற கேள்விக்கு இன்னமும் சரியான பதில் கிடைக்கவில்லை. 

கடந்த புதன்கிழமை அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான டாக்டர் ராஜித்த சேனாரத்ன, ஜனாதிபதியின் உரையினால் ஜனாதிபதிக்கு ஏற்பட்ட அசௌகரியங்களைப் போக்கும் வகையில் கருத்து வெளியிட்டார்.  

ஜனாதிபதி ஒருபோதும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கொட்டாபய ராஜபக்ஷவையோ ராஜபக்ஷ குடும்பத்தினரையோ பாதுகாக்கும் நோக்கத்தில் எதனையும் பேசவில்லை என்றும் முன்னாள் கடற்படைத் தளபதிகள் நீதிமன்றத்துக்கு அழைத்து அவமதிக்கப்பட்டதைப் பற்றியே ஜனாதிபதி குறிப்பிட்டார் என்றும் அமைச்சர் கூறினார். 

இலஞ்ச ஆணைக்குழு உள்ளிட்ட இந்த நிறுவனங்கள் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் இடம்பெற்ற பாரிய நிதி மோசடிகளை விட்டுவிட்டு சிறிய குற்றங்கள் பின்னால் அலைவதாகவும் அதனாலேயே ஜனாதிபதி இந்த நிறுவனங்கள் மீது கோபம் கொண்டுள்ளார் என்றும் அமைச்சர் மேலும் கூறினார். 

ஜனாதிபதி உண்மையிலேயே அதனைத்தான் மனதில் வைத்துப் பேசினாரா? அல்லது மோசடிகளைப் பற்றி விசாரணை செய்யும் நிறுவனங்களைத் தாக்கிப் பேசிய ஜனாதிபதி அதன் மூலம் ஊழல்ப் பேர்வழிகளைப் பாதுகாக்க முற்படுகிறார் என்ற குற்றச்சாட்டு வரும் போது அமைச்சர் இப்போது இவ்வாறு கூறுகிறாரா? என்பது நாள் போகப் போகத்தான் தெரியவரும். 

ஆனால், ஜனாதிபதியின் உரை ஐ.தே.க தலைமையை நிச்சயமாகச் சினம்கொள்ளச் செய்திருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. ஏனெனில் ஜனாதிபதி, முன்னாள் கடற்படைத் தளபதிகள் மூவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்ததை விமர்சித்தார்; அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் செய்ததை தமக்கு அறிவிக்கவில்லை என அதிகாரிகளை விமர்சித்தார்; ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தல் வழக்கில் சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இராணுவ அதிகாரிகளை 16 மாதங்களாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையை விமர்சித்தார்.  

இவை எல்லாவற்றோடு இவற்றைச் செய்யும் நிறுவனங்கள் அரசியல் நிகழ்ச்சி நிரலொன்றின்படி செயலாற்றுவதாகவும் அவர் கூறினார். எனவே, அது யாருடைய அரசியல் நிகழ்ச்சி நிரல் என்ற கேள்வி எழுவது இயல்பாகும். வேறு விதமாகக் கூறுவதாயின் இந்த நிறுவனங்கள் ஐ.தே.கவின் நிகழ்ச்சி நிரலின்படி செயலாற்றுவதாகவே ஜனாதிபதி கூறியிருக்கிறார். அது தற்போதைய கூட்டு அரசாங்கத்துக்குள் அதிர்வை ஏற்படுத்தக் கூடிய கருத்தாகும். ஆனால், எப்போதும் அமைதியாகவே காரியங்களைச் சாதிக்கும் பிரதமரின் அந்த அமைதி மனப்பான்மை நிலைமையை மேலும் சீர்குலையாமல்த் தடுத்துவிட்டது. 

கோட்டாபயவையோ அல்லது முன்னாள் கடற்படைத் தளபதிகளையோ இந்த நிறுவனங்கள் தாமாக முன்வந்து விசாரிக்கவில்லை. அவர்களுக்கு எதிராகச் சிலர் அந்த நிறுவனங்களிடம் முறைப்பாடு செய்ததை அடுத்தே அவர்கள் விசாரிக்கப்பட்டு, நிதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்கள். முன்னாள் கடற்படைத் தளபதிகள் பதவியில் இருக்கும்போது, அரசாங்கத்துக்கு பல நூறு கோடி ரூபா நட்டம் ஏற்படும் வகையில் ‘அவன்காட்’ நிறுவனத்துக்கு சலுகைகளை வழங்கிவிட்டுப் பின்னர் தாம் ஓய்வு பெற்றதையடுத்து, அதே நிறுவனத்தில் சேர்ந்து 30 லட்சம் ரூபாய், 20 லட்சம் ரூபாய், 10 லட்சம் ரூபாய் எனச் சம்பளம் பெற்றுள்ளனர் எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது..  

முறைப்பாடுகள் செய்யப்பட்டு இருந்தால் அவை தொடர்பான பூர்வாங்க விசாரணைகளின் போது, அவை உண்மையெனத் தெரிய வந்தால், இவர்கள் பாதுகாப்புத்துறையில் உயர் பதவிகளை வகித்தார்கள் என்பதனாலோ போரின் போது பெரும் சேவையை ஆற்றினார்கள் என்பதற்காகவோ அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யாமல் இருக்க முடியுமா? இது அரசியல் நோக்கத்தில் செய்ததாக எவ்வாறு கூற முடியும்? முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா போர் வெற்றிக்குக் காரணமாக இருந்தார் என்பதற்காக மஹிந்தவின் அரசாங்கம் அவருக்கு எதிராக வழக்காடாமல் இருந்துவிட்டதா? 

நீதிமன்றங்களினதோ அல்லது சுயாதீன ஆணைக்குழுக்களினதோ விவகாரங்களில் தாம் தலையிடுவதில்லை என ஜனாதிபதி பல முறை கூறியிருக்கிறார். அவ்வாறாயின் இந்த மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்போவதை ஜனாதிபதிக்கு அறிவிக்க வேண்டும் என எவரும் கூற முடியாது. ஏனெனில் அதுவும் தலையீடாகவே அமையும். எனவே, அந்த நால்வரைப் பற்றி ஜனாதிபதிக்கு அறிவிக்காமையில் அரசியல் நோக்கம் இருப்பதாகக் கூற முடியுமா? 

எக்னெலிகொட கடத்தல் மற்றும் காணாமற்போகச் செய்தமை தொடர்பான வழக்கு விசாரணை நீடிப்பதற்கு முக்கிய காரணம் இரகசியப் பொலிஸார் இராணுவத்தினரிடம் கோரிய தகவல்களை வழங்க இராணுவம் நீண்ட காலம் எடுத்தமையே ஆகும். இராணுவம் இன்னமும் சில தகவல்களை வழங்கவில்லை; அவ்வாறு இருக்க அவர்கள் தொடர்பான வழக்கு விசாரணையை ஜனாதிபதி கூறுவதைப் போல் துரிதப்படுத்துவது எவ்வாறு? அரசியல் நோக்கத்துடனேயே அந்த வழக்கு துரிதப்படுத்தப்படுவதில்லை என எவ்வாறு கூற முடியும்? முப்படைகளின் பிரதம தளபதியான ஜனாதிபதி நினைத்தால் இராணுவத் தளபதி மூலம் இந்த வழக்குகளைத் துரிதப்படுத்தலாம். 

மூத்த அரசியல்வாதியான அமைச்சர் ஏ.எச்.எம். பவுஸி விசாரிக்கப்பட்டமையினால் ஜனாதிபதி கோபம் கொண்டிருப்பதாகவும் அமைச்சர் ராஜித்த கூறினார். மூத்த அரசியல்வாதி என்பதற்காகக் குற்றம் சாட்டப்பட்டாலும் விசாரிக்கப்படக் கூடாது எனக் கூறுவது நல்லாட்சிக்கு அழகாகுமா ? ஆனால், விசாரணைத்துறையில் பயிற்சி பெறும் அதிகாரிகளாலும் அந்த மூத்த அரசியல்வாதி விசாரிக்கப்பட்டார் எனக் கூறப்படுகிறது. இது பொருத்தமற்ற அவமானகரமான செயலாகும். அதற்காக ஜனாதிபதி கோபம் கொள்வதாக இருந்தால் நியாயம்தான். ஆனால், அதனை அரசியல் நோக்கத்துடன் செய்ததாக எவ்வாறு கூற முடியும்? 

மொத்தமாக, ஜனாதிபதி குத்திக் காட்டிய விடயங்களைப் பார்க்கும்போது அவை, அனைத்தும் பாதுகாப்புத்துறையினர் தொடர்பானதாகவே இருக்கிறது. இதன் மூலம் முன்னாள் மற்றும் தற்போதைய பாதுகாப்புப் படை அதிகாரிகள் விடயத்தில் ஜனாதிபதி மிகக் கவனமாக இருப்பதாகத் தெரிகிறது. பல நாடுகளில் இடம்பெறும் சம்பவங்களைப் பார்க்கும்போது, ஜனாதிபதி அந்த விடயத்தில் கவனமாக நடந்து கொள்வது நியாயம்தான். ஆனால், அதற்காக அவர் குற்ற விசாரணைத்துறையினர் மனமுடைந்து செல்லும் வகையில் நடவடிக்கை எடுத்தமை சரியெனக் கூற முடியாது. 

பாரிய ஊழல் குற்றச்சாட்டுக்களை விட்டுவிட்டு, சிறிய குற்றச்சாட்டுக்கள் பின்னால் விசாரணை நிறுவனங்கள் அலைவதாகவும் அதுவே ஜனாதிபதியின் கோபத்துக்குக் காரணமெனவும் ராஜித்த கூறியிருந்தார். ஜனாதிபதி உண்மையிலேயே பாரிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகள் மந்த கதியில் நகர்வதைக் கண்டு கோபம் கொண்டுள்ளார் என்று ராஜித்த கூறுவது உண்மையா? அல்லது ஜனாதிபதியின் உரையினால் ஊழல் தொடர்பான விசாரணைகளுக்குக் குந்தகம் ஏற்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டிலிருந்து ஜனாதிபதியை விடுவிப்பதற்காக ராஜித்த அவ்வாறு கூறுகிறாரா என்பது தெளிவாகவில்லை.  

ஆனால், பாரிய குற்றச்சாட்டுக்கள் மீதான விசாரணைகள் இழுத்தடிக்கப்படுகின்றன என்பது உண்மையே. அது மட்டுமல்லாது, பொதுவாக ஊழல்கள் தொடர்பான விசாரணைகள் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றன என்பது பொதுவான மக்கள் அபிப்பிராயமாகும். இது தொடர்பாகக் கடந்த வருடம் முதல் ஊடகவியலாளர்கள், அமைச்சர்களிடம் வினவுகின்றனர். கடந்த அரசாங்கத்தைப் போல் சந்தேகநபர்களை ஆதாரமில்லாமல் இழுத்துக் கொண்டு வர முடியாது. அது நல்லாட்சியின் நடைமுறையல்ல என்று அப்போதெல்லாம் அமைச்சர்கள் கூறி வந்துள்ளனர். இப்போது அதே அமைச்சர்கள் பாரிய ஊழல்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் விசாரணை நடத்தவில்லை எனக் குற்றம்சாட்டுகின்றனர். 

மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் தலைவர்கள் பல்லாயிரம் கோடி ரூபா பணத்தை சீசெல்ஸ் நாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்துள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகப் பதவியேற்று 10 நாட்களில், அதாவது 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19 ஆம் திகதி அப்போதையத் திட்டமிடல் மற்றும் பொருளாதார பிரதி அமைச்சராகவிருந்த கலாநிதி ஹர்ஷ டி சில்வா கூறினார்.  

இதனை அடுத்து, அதே மாதம் 23 ஆம் திகதி தமது அரசாங்கம் அது தொடர்பான விசாரணைகளுக்குப் பூரண ஒத்துழைப்பை வழங்கும் என சீசெல்ஸ் அரசாங்கம் தெரிவித்தது. ஆனால், அரசாங்கம் அப்பணம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டதாகத் தெரியவில்லை. 

பின்னர், ஹர்ஷவை மேற்கொள் காட்டி, ‘இகொனொமிக் டைம்ஸ்’ பத்திரிகையும் கடந்த வருடம் மார்ச் 21 ஆம் திகதி, இது போன்றதோர் செய்தியை வெளியிட்டு இருந்தது. அதன்படி மஹிந்த குடும்பத்தினர் டுபாய் வங்கிகளில் மூன்று கணக்குகளில் இரண்டு பில்லியன் டொலர் (சுமார் 30,000 கோடி ரூபா) பணத்தை பதுக்கி வைத்துள்ளதாக அச்செய்தி கூறியது. அதற்கு பிரத்தியேகமாக சென் மாட்டின் தீவுகள், ஹொங்கொங், மகாஉ மற்றும் சீசெல்ஸ் ஆகிய நாடுகளில் உள்ள வங்கிகளிலும் மஹிந்த குடும்பத்தினர் பெருமளவில் பணத்தைப் பதுக்கி வைத்துள்ளதாகவும் பிரதி அமைச்சர் கூறினார்.  

கடந்த வருடம் மே மாதம் ஏழாம் திகதி வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர, ஊடகவியலாளர் மாநாடொன்றின்போது, மற்றுமொரு முக்கிய தகவலை வெளியிட்டார். ராஜபக்ஷ குடும்பத்தினர் வெளிநாடுகளில் 18 பில்லியன் டொலர் பணத்தைப் பதுக்கி வைத்துள்ளதாக அரசாங்கம் நம்புவதாகவும் அது தொடர்பாக விசாரணையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.  

18 பில்லியன் டொலர் என்றால் சுமார் 150,000 கோடி ரூபாவாகும். அடுத்த வருடத்துக்கான வரவு செயவுத் திட்ட மதிப்பீடுகளின் பிரகாரம் அடுத்த வருடத்துக்கான இலங்கையின் மொத்தச் செலவு 181,900 கோடி ரூபாவாகும். அதாவது மங்கள கூறுவது உண்மையாயின் மஹிந்த வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள பணத்தைக் கண்டு பிடித்தால் வேறு எந்த வருமானமும் இல்லாமல் அந்தப் பணத்தின் மூலம் மட்டும் 10 மாதங்கள் அரசாங்கத்தை நடத்தலாம்.  

அமைச்சர்கள் ஏதோ ஆதாரம் இருப்பதைப் போல் இவற்றைக் கூறினார்களேயல்லாது அவற்றைப் பற்றி விசாரணைகளை முடுக்கிவிட்டதாக தெரியவில்லை. அவர்களிடம் ஆதாரம் இருந்திருக்கலாம்; ஆனால் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதே உண்மை.  

உண்மை என்னவென்றால், மக்கள் விடுதலை முன்னணியும் ஜாதிக்க ஹெல உருமயவும் ஆதாரங்களைத் திரட்டி மஹிந்தவின் அரசாங்கத்தின் தலைவர்களின் ஊழல், மோசடிகளைப் பற்றி இலஞ்ச ஆணைக்குழுவுக்கும் இரகசிய பொலிஸூக்கும் முறைப்பாடு செய்தார்களேயல்லாது மஹிந்தவின் ஆட்சி கவிழ்ந்ததை அடுத்து அரசாங்கத்தைப் பொறுப்பேற்ற ஐ.தே.கவோ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மைத்திரி அணியினரோ அவ்வாறு செய்யவில்லை. பாரிய குற்றங்கள் தொடர்பாக விசாரணைகள் நடைபெறுவதில்லை என ஜனாதிபதி இப்போது கூறினாலும் அவரது அணியினரோ அல்லது ஐ.தே.கவோ அதற்கான நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லை. 

அதேவேளை, நீதிமன்றத்துக்கு அழைத்ததன் மூலம் அவமானப்படுத்தப்பட்டார்கள் என்று ஜனாதிபதி கூறிய முன்னாள் கடற்படைத் தளபதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டு பாரிய ஊழலொன்றான ‘அவன் காட்’ விவகாரம் தொடர்பானதே. பாரிய குற்றச்சாட்டுக்கள் விசாரிக்கப்படுவதில்லை என்று கூறுவதானது ஜனாதிபதி அவர்களுக்காகத்தான் பரிந்து பேசுகிறார் எனப் பொருள் கொள்ளலாம்.  

இப்போது அரசாங்கம் மற்றொரு சிக்கலிலும் சிக்கிக் கொண்டுள்ளது. அதுதான் மத்திய வங்கி பிணைமுறி விவகாரம். மைத்திரிபால பதவிக்கு வந்து சில வாரங்களில் இடம்பெற்ற மத்திய வங்கிப் பிணைமுறி வர்த்தகத்தின் போது கொள்வனவாளர்களில் ஒருவரான தமது மருமகனுக்குச் சாதகமான தகவல்களை வழங்கி, அதன் மூலம் அவர் பல நூறு கோடி ரூபா இலாபம் பெற வாய்ப்பளித்ததாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டது. 

அரசாங்கத்தில் பலர் அதனை மறுத்தனர். ஆனால் இப்போது பிணைமுறி வர்த்தகத்தில் ஈடுபட்ட மகேந்திரனின் மருமகனின் நிறுவனம் ஒருபோதும் இல்லாதவாறு கடந்த வருடம் 1000 கோடி ரூபா இலாபம் ஈட்டியுள்ளதாக இப்போது தெரிய வந்துள்ளது.  

இது தொடர்பாக கோப் என்றழைக்கப்படும் நாடாளுமன்றத்தின் பொது நிறுவனங்கள் தொடர்பான குழு விசாரணை செய்தது. குழுவின் பெரும்பான்மையினர் இந்த விடயத்தில் மகேந்திரன் குற்றவாளியென ஏற்றுக் கொண்டுள்ள போதிலும் அதிலுள்ள ஐ.தே.க உறுப்பினர்கள் அதனை ஏற்றுக் கொள்வதில்லை. எனவே குழுவின் தலைவரும் மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துன்னெத்தி குழுவின் திங்கட்கிழமைக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார்.  

இது கோப் குழுவின் வரலாற்றில் முதற்தடவையாகத்தான் நடைபெற்றுள்ளது. இந்த விடயம் தொடர்பாகக் குழுவுக்குள் உடன்பாடு இல்லாதததால் குழுவிடமிருந்து இந்த விடயம் தொடர்பாக ஒன்றுக்கு மேற்பட்ட அறிக்கைகள் வெளியிடப்படலாம் எனக் கூறப்படுகிறது. அவ்வாறு நடைபெற்றால் அதுவும் வரலாற்றில் முதல் தடவையாகத்தான் நடைபெறப் போகிறது.  

இது ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துக் கொண்டும் ஊழல்பேர் வழிகளைச் சட்டத்தின் முன் கொண்டு வருவதாகக் கூறிக் கொண்டும் நல்லாட்சியை நிறுவுவதாகக் கூறிக் கொண்டும் பதவிக்கு வந்த அரசாங்கம் வெட்கித் தலை குனிய வேண்டிய விடயமாகும். 

இவை அனைத்தும் மைத்திரியின் தலைமையில் இந்த அரசாங்கம் ஊழல் மோசடிகளை முறியடிக்கும் என எதிர்ப்பார்த்த மக்களின் அந்த எதிர்ப்பார்ப்புக்களைத் தகர்த்தெறியும் சம்பவங்களேயாகும். பாரிய குற்றச் செயல்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என விசாரணை நடத்தும் நிறுவனங்களைத் திட்டிய ஜனாதிபதியும் தமது அரசியல் வரலாற்றில் ஒரு போதும் பொதுச் சொத்தை திருடினார் என்ற குற்றச்சாட்டுக்காவது இலக்காகாத பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இந்த விடயத்தில் என்ன செய்யப் போகிறார்கள் என்பது இப்போது நாட்டின் முன்னுள்ள கேள்வியாகும்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .